எப்படி இருக்கலாம், கல்வி? 5

சமச்சீர் கல்வி என்பது என்ன?

மிக எளிமையாக இப்படிப் புரிந்துகொள்கிறேன். தமிழ் நாட்டில் படிக்கிற மாணவர்கள் [சி.பி.எஸ்.சியில் படிப்போர் நீங்கலாக] அத்தனை பேருக்கும் ஒரே மாதிரியான, ஒரே சீரான தரத்திலான கல்வி.

அரசுப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள், ஓரியண்டல் பள்ளிகள் [சமஸ்கிருதம், உர்தூ இன்னபிற.] என்ற நான்கு விதமான கல்வி நிலையங்கள் இங்கே உள்ளன. இவற்றுள் ஆங்கிலோ இந்தியன் பாடத்திட்டமும் ஓரியண்டல் பாடத்திட்டமும் சிறுபான்மைத் திட்டங்கள். சமச்சீரை ஆதரிப்பதாகவோ எதிர்ப்பதாகவோ அவர்கள் குரல் ஒலிக்கவேயில்லை. அலறியடித்துக்கொண்டு எழுந்தது மெட்ரிக் பள்ளிகள்தாம். சதவீத அடிப்படையில் அவர்கள் அதிகம். அரசுப் பள்ளிகள் அளவுக்கு இல்லை என்றாலும் கணிசம்.

சி.பி.எஸ்.சிக்குப் போகாத பெற்றோர்கள் அரசுப் பள்ளிகளைவிட மெட்ரிக் பாடத்திட்டத்தை அதிகம் விரும்புவது இங்கே வழக்கம். காரணம், அங்கே அரசுப் பாடத்திட்டங்களைவிட தரமான கல்வி வழங்கப்படுகிறது என்னும் எண்ணம். இந்த எண்ணத்தை அந்தப் பள்ளிக்கூடங்கள் வசூலிக்கும் கட்டணங்களும் ஓரெல்லைவரை உண்டாக்குகின்றன. முற்றிலும் புறந்தள்ளிவிட இயலாது என்றாலும் மெட்ரிக் பாடத்திட்டம் நிச்சயமாக அரசுத் திட்டத்தைவிடத் தரமானதுதான் என்பதில் சந்தேகமில்லை.

இந்நிலையில் அரசுப் பள்ளிகள் என்றாலே கீழ்த்தரம் என்னும் எண்ணத்தை நீக்கவும், அனைத்து விதமான பள்ளிகளிலும் ஒரே பாடங்கள்தான் என்பதை நிறுவவும் இதன்மூலம் மாணவர்கள் மத்தியில் கல்வி சார்ந்த பேதங்கள், உயர்வு/தாழ்வு மனப்பான்மை நீங்கவும் ஒரு நல்ல அரசு நினைக்குமானால் அது நல்லதுதான். இதற்கு முதற்கண் செய்ய வேண்டியது, மெட்ரிக், சிபிஎஸ்சி உள்ளிட்ட அனைத்து விதமான பாடத்திட்டங்களையும் ஆராய்ந்து, சற்றும் சமரசமற்ற, தரத்தில் குறைவற்ற, உயர்தரமான ஒரு பாடத்திட்டத்தை உருவாக்குவதும், அந்தப் பாடத்திட்டம் புழக்கத்தில் உள்ள மற்ற அனைத்துத் திட்டங்களைவிடவும் உயர்வானது என்னும் எண்ணத்தை இயல்பாகவே மக்கள் மனத்தில் பதியும்படிச் செய்வதும்தான்.

சிபிஎஸ்சி கஷ்டம், மெட்ரிக் கஷ்டம் என்பதெல்லாம் வெறும் பேச்சு. அந்தக் கல்வித்திட்டங்களில் பயிலும் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களையும் தேர்ச்சி விகிதங்களையும் பார்க்கும்போது, இதுநாள் வரை தமிழக அரசு, தனது பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர்களை வேண்டுமென்றே மாங்காய்களாக வைத்திருப்பதற்கான ஒரு பாடத்திட்டத்தையே வழங்கிவந்திருக்கிறது என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. இளம் வயதில் அதிக சுமையைத் திணிக்கிறார்கள் என்று சில சநாதனவாதிகள் இது பற்றிச் சொல்லுவார்கள். இதுவும் புறந்தள்ளவேண்டிய கருத்தே. மாறும் உலகில் எத்தனை படித்தாலும் போதாது, அறிதலுக்கான வாழ்நாள் நேரம் மிகக் குறைவானது என்பதற்கு நேர் நிகராக, மாணவர்களின் கற்றல் திறனும் வளர்ந்துகொண்டேதான் இருக்கிறது. நமக்கு முந்தைய தலைமுறையினரைக் காட்டிலும் நாம் கூடுதலாகவே அறிந்திருக்கிறோம் என்பதை விருப்பு வெறுப்பற்று யோசித்தால் புரிந்துகொள்ள இயலும். நமக்கு அடுத்தத் தலைமுறை நம்மைவிடவும் அதிக அறிதல் திறன் கொண்டிருப்பதும் இங்கு இயல்பானதே.

எளிமையான பாடங்கள் என்பது ஒரு ஏமாற்று வேலை. எளிமையான எழுத்து மொழி, எளிமையான போதனை மொழி என்பதற்கு வேண்டுமானால் மெனக்கெடலாம். பாடங்களில் எளிமை, கடுமை என்று என்ன இருக்கிறது? எது தெரியவேண்டுமோ அது தெரிந்திருக்க வேண்டும். எப்போது தெரியவேண்டுமோ, அப்போது தெரியப்படுத்தியாக வேண்டும்.

இந்த வகையில் தமிழ்நாட்டு மாணவர்கள் அத்தனை பேருக்கும் ஒரே சீரான பாடத்திட்டம் – ஆனால் உயர்ந்த தரத்திலான பாடத்திட்டம் என்று சமச்சீர் கல்வி அமையுமானால் அதை முழு மனத்தோடு நான் வரவேற்கவே செய்வேன். நான் என்ன? அத்தனை பெற்றோரும் அவசியம் வரவேற்பார்கள். காசைக் கொட்டிக்கொடுத்து தனியார் பள்ளிகளில் கொண்டு சேர்த்துவிட்டு அவஸ்தைப்பட அவர்களுக்கென்ன தலையெழுத்தா?

புதிதாக ஒன்றும்கூடச் செய்யவேண்டாம். இன்றைய சிபிஎஸ்சி சிலபஸை எடுத்துவைத்துக்கொண்டு அந்தத் தரத்தில் பாடத்திட்டம் உருவாக்கினால் போதும். அதையே வழிமொழிந்தால்கூட எனக்கு ஆட்சேபணை இல்லை.

மெட்ரிக் பள்ளிகள் ஏன் இதற்கு அலறுகின்றன என்றால், அவர்கள் தம் பாடத்திட்டம் உயர்ந்தது, அதனால் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று காட்டிப் பணம் பிடுங்கிக்கொண்டிருந்தவர்கள். ஐயோ அதற்கு இனி வழியற்றுப் போனதே என்னும் அடி வயிற்று ஓலம்தான் அவர்களுடைய எதிர்ப்பு. புதிய அரசு தானாகவே அரசியல் காரணங்களுக்காக சமச்சீர் கல்வியைத் தூக்கிப் போட்டதா, மெட்ரிக்காரர்கள் சாமதானபேத தண்டங்களைப் பிரயோகித்து இதனைச் செய்யவைத்தார்களா என்றுகூட விவாதங்கள் நடக்கின்றன.

இவை இங்கே முக்கியமில்லை. அதிமுக அரசு சமச்சீர் கல்வித் திட்டத்தை இந்த ஆண்டு ரத்து செய்ததன் அரசியல் காரணங்கள் வேறு. அந்தப் பாடத்திட்டத்தின் அபத்தங்களை, குறைகளை, பிழைகளை, அருவருப்பூட்டக்கூடிய குணாதிசயங்களைக் கண்டே அதை நீக்கியது சரி என்று நான் நினைத்தேன்.

இந்த அரசு திரும்பவும் சமச்சீரைச் சீர் செய்து வேறு வடிவில் அடுத்த ஆண்டு மறு அறிமுகப்படுத்தலாம். வேறு பெயரில் அது வரலாம். திரும்பவும் மெட்ரிக் பள்ளிகள் அலறலாம். அப்போதும் பாடங்கள் இதே வடிகட்டிய மோசமான தரத்தில் இருக்குமானால் எதிர்க்கவே செய்வேன். சமச்சீரே கிடையாது, பழைய பாடங்கள்தான், சிபிஎஸ்சி, மெட்ரிக் கல்வித் திட்டங்களுக்கு அடுத்து மூன்றாம் படியிலேயே அரசுக் கல்வித்திட்டம் இருந்தால் போதும் என்பார்களேயானால் அரசுப் பள்ளிகளுக்கு எக்காலத்திலும் விடிவு என்பதே இருக்காது. சற்றும் செலவு செய்ய வழியற்றவர்களின் இறுதிச் சரணாலயமாக – இவர்களே பெரும்பான்மையினர் – ஒரு மாபெரும் சராசரிகளின் கூட்டத்தை உருவாக்கும் கேந்திரங்களாக அரசுப் பள்ளிகள் தொடர்ந்து விளங்கும். அப்படிப்பட்ட தலைமுறைகள் தொடர்ந்து உருவாகிக்கொண்டிருப்பதுதான் தமது எதிர்காலத்துக்கு நல்லது என்று இந்த திராவிடக் கட்சிகள் நினைக்குமானால் தமிழக மாணவர்களுக்குக் கதிமோட்சமே கிடைக்காது.

கல்வித் திட்டத்தின் தரமின்மை குறித்துச் சொன்னேன். அரசுப் பள்ளிகளில் சில நல்ல அம்சங்களும் உள்ளன. அதையும் சொல்லித்தான் தீரவேண்டும். நான் அரசுப் பள்ளிகளில்தான் படித்தேன். ஏராளமான நண்பர்கள் எனக்கு அப்போது இருந்தார்கள். விதவிதமான குணாதிசயங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளவும் பழகவும் எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. பேச்சு, எழுத்து, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டங்கள், விளையாட்டு எதிலும் குறைவே இருந்ததில்லை. பதின்ம வயதுகள் எப்படிக் கழியவேண்டுமோ அப்படிக் கழிந்தது. ஒரு ஆளுமை உருவாக்கப் பணியில் கல்வி நீங்கலாக பிற அனைத்து அம்சங்களும் மிகச் சரியாக இருப்பது அரசுப் பள்ளிகளில் மட்டும்தான் என்பது என் கருத்து.

ஆனால் இன்றைய மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்சி பள்ளிகளில் பிள்ளைகள் வாய் திறந்து பேசுவதுகூடக் கிடையாது. என் மகளிடம் உனது நண்பர்கள் யார் யார் என்று கேட்டால் ஒன்றிரண்டு பெயர்களுக்கு மேல் அவளால் சொல்ல முடிவதில்லை. அதையேகூட யோசித்துத் தான் சொல்கிறாள். ஒருவாரம் விட்டுத் திரும்பக் கேட்டால் பெயரை மாற்றிவிடுகிறாள். ‘ஏன், போனவாரம் சின்ன சாமுவேல் உன் ஃப்ரெண்டுன்னு சொன்ன? இப்ப என்ன ஆச்சு? அவம்பேர சொல்லலியே?’ என்றால், ‘நாங்க ரெண்டு பேரும் க்ளாஸ்ல பேசினோம்னு மிஸ் எங்களை இடம் மாத்திட்டாங்கப்பா. இப்ப சஞ்சனாதான் என் பக்கத்துல இருக்கா. அதனால அவதான் ஃப்ரெண்ட்’

எத்தனை அவலமான சூழல் இது. பிள்ளைகள் பேசக்கூடாது. வகுப்பு நேரத்தில்தான் என்றில்லை. வகுப்புகள் முடிந்து பள்ளி விடும்போதும் ராணுவ அணிவகுப்பு மாதிரி வரிசையில்தான் அவர்கள் வரவேண்டும். அப்போதும் பேசக்கூடாது. விளையாட்டு வகுப்புகளில் ஒன்றிரண்டு சொற்கள் பேசிக்கொள்வார்களோ என்னவோ. ஆனால் ஸ்போர்ட்ஸ் மிஸ் மீதான அச்சம், பிற ஆசிரியைகளிடம் இருப்பதைக் காட்டிலும் என் மகளுக்குச் சற்று அதிகமே. ஏழெட்டு வயதுக் குழந்தைகளுக்கே இந்த விதமான அமைப்பு என்றால் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புப் பிள்ளைகளின் கதியை நினைத்துப் பார்க்கிறேன்.

சற்று யோசித்துப் பாருங்கள். வாரம் ஐந்து நாள்கள், தினசரி ஆறு மணிநேரம் ஒரு வார்த்தை கூட வாய் திறந்து பேச வழியில்லாத ஓரிடத்தில், கல்வி நன்றாயிருக்கிறது என்னும் ஒரே காரணத்தால் கொண்டு சேர்க்கிறோம். கல்வியில் பழுதில்லைதான். ஆனால் உறவுகளுக்கு அங்கே இடமில்லை. சொல்லப்போனால் அதை மிதித்துக்கொண்டுதான் மேலே எழுவதற்குச் சொல்லிக் கொடுக்கிறார்கள்.

என் மகளிடம் ஒருநாள், ‘க்ளாஸ்ல ஒரு வார்த்த கூட பேசமாட்டிங்களா?’ என்று கேட்டேன். ‘ம்ஹும். மிஸ் திட்டுவா.’ ‘அப்ப எங்கதான் பேசுவிங்க? எப்படி ஃப்ரெண்ட் ஆவிங்க?’ ‘அதுக்கு ஒரு வழி இருக்கு. ஆனா சொல்லமாட்டேன். ரகசியம்.’ ‘எங்கிட்ட மட்டும் சொல்லிடுடா கண்ணு. அப்பா யார்கிட்டயும் சொல்லமாட்டேன்.’

என் மகள் சொன்ன பதில்: ‘பாத்ரூம் போறப்ப சீக்கிரம் போயிட்டு அங்கயே நின்னு ஒரு நிமிஷம் பேசிடுவோம். அப்படியே ஃப்ரெண்ட் ஆயிடுவோம்’

இந்த அவலம் சத்தியமாக எந்த அரசுப் பள்ளியிலும் கிடையாது என்று அடித்துச் சொல்வேன். வகுப்பறை வாழ்வின் அனைத்து இன்பங்களையும் திகட்டத் திகட்ட அனுபவித்தவன் நான். என் மகளுக்கு அது அவளது முதல் வகுப்பிலிருந்தே முற்றிலும் மறுக்கப்பட்டிருக்கிறது. சிபிஎஸ்சி சிலபஸ் சிறந்த சிலபஸ். அதில் சந்தேகமில்லை. ஆனால் சிபிஎஸ்சி பள்ளிகள் சிறந்த பள்ளிக்கூடங்கள் இல்லை. எட்டாம் வகுப்பு வரை நல்ல கல்வியின் பொருட்டு என் மகளை சிபிஎஸ்சியில் படிக்க விட்டு, ஒன்பது, பத்துக்கு அரசுப் பள்ளியில் மாற்றிவிடலாம் என்றுதான் யோசித்துக்கொண்டிருக்கிறேன். படிப்பின் ருசி இப்போது சரியாகப் புகட்டப்பட்டுவிட்டால், பின்னர் ஆசிரியர்கள் சரியாக உதவாவிட்டாலும் அவளாகவே படித்துவிட முடியுமல்லவா?

என் கருத்து இதுதான்: உயர்ந்த, சிறந்த கல்வித்திட்டம் ஒன்றை உருவாக்குவது. அதைத் தமிழ்நாட்டு மாணவர்கள் அத்தனை பேருக்கும் பொதுவாக, இலவசமாக வைப்பது, கல்வி வியாபாரிகளுக்கு நிச்சயமாகப் பேரிடியாக இருக்கும். ஆனால் தமிழ்நாட்டுப் பெற்றோர்கள் அத்தனை பேரும் கைதட்டி வரவேற்பார்கள். தமது குழந்தைகளை ஆசை ஆசையாக அரசுப் பள்ளிகளில் கொண்டு சேர்ப்பார்கள். மிகத் தரமான பயிற்சியளிக்கப்பட்ட சரியான ஆசிரியர்களும், பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கைக்கு உதவக்கூடிய சரியான பாடத்திட்டமும் எந்த ஆட்சியாளரால் வழங்கப்படுகிறதோ, அவரை நிச்சயம் நாற்காலியை விட்டு நகர்த்தாமல் வைத்திருப்பார்கள். மாறாக, ஒரு மட்டரகமான கல்வித்திட்டத்தை அனைவருக்கும் பொது என்று கட்டாயப்படுத்தினால் அத்தனை பேரும் சிபிஎஸ்சிக்குத்தான் ஓடிப்போவார்கள்.

[முற்றும்]

48 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற