எனக்கு என்ன பிடிக்கும்?

தொலைக்காட்சிகளில் வரும் டாக் ஷோக்கள் எனக்கு மிகுந்த அலர்ஜி உண்டாக்கக்கூடியவை. நினைவு தெரிந்து எந்த ஒரு டாக் ஷோவையும் நான் முழுக்கப் பார்த்ததில்லை. அது என்னவோ தெரியவில்லை. இந்த டாக் ஷோக்களில் வரும் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் அநியாயத்துக்கு செயற்கையாகப் பேசுகிறார்கள். அராஜகத்துக்கு ஓர் அளவே இல்லாதபடிக்குத் தொண்டை கிழியக் கத்துகிறார்கள். புருஷன் பெண்சாதிச் சண்டைகளை மேடையில் நிகழ்த்திக் காட்டுகிறார்கள். இதுவெல்லாம் கூடப் பரவாயில்லை. வீட்டில்கூட அப்படிக் கொஞ்சிக்கொள்ள மாட்டார்கள்; கேமரா முன்னால் கொஞ்சிக் கூத்தடிக்கவும் இவர்கள் நாணுவதில்லை. நடைமுறை வாழ்க்கையில் ஒரு வினாடிகூட அவர்கள் அப்படி இருக்க மாட்டார்கள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. ஆனால் ஒரு டிவி வாய்ப்பு அவர்களின் அறிவுத்தளச் செயல்பாட்டை நசுக்கி எறிந்துவிடுகிறது. எந்த சானலிலாவது டாக் ஷோ வந்தால் ஐயோ dog show என்று அலறிக்கொண்டு ஓடிவிடுவது என் வழக்கம்.

ஆச்சா? என் மனைவி இந்த விஷயத்தில் எனக்கு நேரெதிர். தொலைக்காட்சி டாக் ஷோக்கள் எதிலாவது கணவன் மனைவி ஜோடியாகக் கலந்துகொண்டால் அவளுக்கு லட்டு. உட்கார்ந்துவிடுவாள். ஒரு சில நிமிடங்களில் சூழல் மறந்து தன்னைச் சர்க்கரைப் பாகாக உருக்கித் தன் மானசீகத்தில் தொலைக்காட்சிப் பெட்டிக்குள் அனுப்பத் தொடங்கிவிடுவாள். டாக் ஷோவைவிட, அது நடக்கும்போது என் மனைவியின் முகபாவங்களை கவனிப்பது எனக்கு விருப்பமான பொழுதுபோக்கு. ரொம்ப ரசமாக இருக்கும். திடீரென்று புன்னகை செய்வாள். திடீரென்று சத்தம் போட்டுச் சிரிப்பாள். திடீரென்று சீரியஸ் ஆகிவிடுவாள். இதோடு நிறுத்தினால் பரவாயில்லை. திடீரென்று, ஒரு நிமிஷம் இங்க வாயேன் என்று எனக்கும் ஒரு கட்டளை போட்டுவிடுவாள்.

அபாயம் அங்கேதான் இருக்கிறது. அநேகமாக அப்படியான தருணங்களில் மேற்படி டாக் ஷோவில் கலந்துகொள்ளும் கணவனும் மனைவியும் ஒருவரைப் பற்றி ஒருவர் தாம் அறிந்தவற்றை அம்பலப்படுத்திக்கொண்டிருப்பார்கள்.

‘அவளுக்கு வெண்டைக்காய் சாம்பார்னா ரொம்ப இஸ்டம்’ என்பார் கணவர். தொகுப்பாளர் இடைமறித்து எதிர்ப்பக்கம் இருக்கும் சம்பந்தப்பட்ட கணவரின் சம்பந்தப்பட்ட மனைவியிடம் ‘என்ன மேடம், உங்க ஹஸ்பெண்ட் சொல்றது கரெக்டா? உங்களுக்கு வெண்டைக்காய் சாம்பார்தான் ரொம்பப் பிடிக்குமா?’ என்று அதையே மறு ஒலிபரப்பு செய்வார். அந்தப் பெண்மணி [எந்தப் பெண்மணியானாலும் சரி.] சர்வநிச்சயமாக அதை மறுப்பார். ‘இல்லிங்க. எனக்கு வெங்காய சாம்பார்தான் பிடிக்கும்.’ என்று சொல்லிவிடுவார். கணவர் அசடு வழிவதை டைட் க்ளோசப்பில் காட்டுவார்கள். பதிவு செய்யப்பட்ட கைதட்டல் ஒலி அவர் முகத்தின்மீது ஓவர்லேப் செய்யப்படும்.

அடுத்தக் கேள்வி. வெளிய போறப்ப உங்க மனைவி பெரும்பாலும் என்ன கலர் புடைவை கட்ட விரும்புவாங்க?

பச்சை என்று பட்டென்று பதில் சொல்வார் கணவர். கரெக்ட்தானா? என்று தொகுப்பாளர் அந்தப் பக்கம் கால்வாய் வெட்டிவிடுவார். ‘இல்லிங்க. பொதுவா எனக்கு அவுட்டிங் போறப்ப சுடிதார் போடத்தான் பிடிக்கும். இன்ஃபேக்ட் என்கிட்ட பச்சைக்கலர் புடைவையே கிடையாது’ என்பார் தர்ம பத்தினி. மறுபடியும் க்ளோசப்பின் நேசப்பிணைப்பு. மறுபடியும் அசட்டுக் கைதட்டல்.

இப்படியே ஏழெட்டுக் கேள்விகளில் கணவனின் மானத்தை உருவியெடுத்துக் கூவமெனும் ஜீவநதியில் வீசியெறிந்துவிட்டு ஒரு விளம்பர இடைவேளை விடுவார்கள். பிறகு கணவரைப் பற்றி மனைவியிடம் கேட்க ஆரம்பிப்பார்கள்.

உங்க கணவருக்கு எதுக்குங்க ரொம்ப கோவம் வரும்? – இது கேள்வி.

‘காஃபி ரொம்ப சூடுன்னு சொல்லாம கையில குடுத்துட்டா, சுரீர்னு கோச்சிக்குவார்’

அநியாயத்துக்கு இந்த இடத்தில் ஒரு ரெக்கார்டட் கைதட்டல் போட்டுவிட்டு, அதன்பிறகு கணவரிடம் திரும்பி சரியா என்று கேட்பார் தொகுப்பாளர்.

ஆமாங்க என்பார். சரியான விடை!

‘கல்யாணம் ஆனதும் நீங்க அவருக்கு வாங்கிக்குடுத்த முதல் பரிசு எது?’ இது அடுத்தக் கேள்வி.

‘ரிஸ்ட் வாட்ச்’ என்பது சரியான பதில். ரெக்கார்டட் கைதட்டல். இன்னொரு ‘ஆமாங்க.’ லாஸ்டா உங்க கணவர் உங்களைக் கூட்டிக்கிட்டுப் போகாம அவர் மட்டும் தனியா போன படம் எது? ‘கோ. கூட்டிட்டுப் போறதா சொல்லி கடைசி வரைக்கும் ஏமாத்திட்டு ஃப்ரெண்ட்ஸோட போயிட்டார்.’ [இந்த பதிலை மனைவியாகப்பட்டவர் சிரித்தபடி சொல்வார்.] கரெக்டுங்களா என்று தொகுப்பாளர் திரும்புவதற்குள் கணவர் தம் தோல்வியைப் புன்னகையில் வெளிப்படுத்திவிடுவார். பின்னணியில் கைதட்டல்.

என்ன அக்கிரமம் இது? மிகப்பெரிய கூட்டுக்களவாணித்தனம் அல்லவா? ஆனால் கேட்கப்படாது. இல்லத்தரசிகளின் இதயம் கவர்ந்த நிகழ்ச்சிகள் இப்படித்தான் இருக்கும் போலிருக்கிறது.

இருந்துவிட்டுப் போகட்டும் என்று விட்டுவிடலாம். ஆனால் விதி என்ற ஒன்று இருக்கிறதல்லவா? நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருக்கும் என் மனைவி திடீரென்று கேட்பாள். ‘நீங்க சொல்லுங்க. எனக்கு ரொம்பப் பிடிச்சது என்ன?’

என்னைத்தான் பிடிக்கும் என்று சமத்காரமாக ஒரு பதில் சொல்லிச் சமாளித்துவிடவெல்லாம் முடியாது. கேட்பது உச்சநீதிமன்றம். ஒழுங்கான தரவுகளுடன் கூடிய பதிலாகப்பட்டது அவசியத்தேவை. இல்லாவிட்டால் பெயில் கிடைக்காது.

இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால், டிவி டாக் ஷோவின்போது மட்டும்தான் இக்கேள்வி எழும் என்பதில்லை. எங்காவது வெளியே போகும்போது – குறிப்பாக உனக்கு என்ன வேண்டும் என்று கேட்க நேரிடும் தருணங்களில் மாபெரும் அவஸ்தைக்கு உள்ளாக நேரிடும்.

என் மனைவிக்கு என்ன பிடிக்கும்? ஒரு சமயம் வெங்கட்ரமணா போளி ஸ்டால் வாசலில் நின்றபடி தீவிரமாக யோசித்து, மிகவும் சரி என்று எனக்குத் துல்லியமாகத் தோன்றியவண்ணம் சுடச்சுட மெது பக்கோடா ஒரு நூறு கிராம் வாங்கிக்கொண்டு பீடுநடை போட்டு வீடு திரும்பினேன்.

எடுத்து நீட்டியவுடன் முகம் சுளித்தாள். ‘உனக்குப் பிடிச்சத நீ திங்கவேண்டியதுதானே? எனக்கு எதுக்கு இது?’ என்று சொல்லிவிட்டாள். அதிர்ச்சியின் உச்சத்துக்கே போய்விட்டேன். ‘என்னது? பக்கோடா உனக்குப் பிடிக்காதா? ரொம்பப் பிடிக்கும் நினைச்சி வாங்கிட்டு வந்தேனே?’

முறைத்தாள். நீ என்னைத் தெரிஞ்சி வெச்சிருக்கற லட்சணம் இதுதான் என்றபடி உள்ளே போய்விட்டாள். மிகவும் குழம்பிப் போனேன்.

இன்னொரு சமயம், வாங்கிய சுடிதாரின் டிசைன் அவளைக் கவராமல் போக வாய்ப்பே இல்லை என்று தீர்மானமாக நம்பினேன். ‘ஐயே.. இந்த மாதிரி டிசைனெல்லாம் போட்டுட்டுப் போனா உங்கம்மாவே சிரிப்பா’ என்று சொல்லிவிட்டாள்.

உணவுப் பொருள்கள், ஆடைகள், வீட்டு உபயோகப் பொருள்கள் – அவற்றின் பிராண்டுகள், சினிமாக்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், கதைப் புத்தகங்கள் – எதாவது ஒன்றிலாவது அவளுக்கு இதுதான் பிடிக்கும் என்று என்னால் இன்றுவரை தீர்மானிக்க முடிந்ததில்லை. அல்லது என் தீர்மானங்கள் உடனுக்குடன் தள்ளுபடியாகிக்கொண்டே இருக்கின்றன. உண்மையிலேயே இத்தனை வருடங்களில் நான் என் மனைவியைப் புரிந்துகொள்ளவேயில்லையா? அவளது விருப்பங்கள், தேர்வுகள் எதில் என்னவாக இருக்கும் என்று அறிந்துகொள்ளாத வெறும் தத்திதானா?

இந்த டாக் ஷோக்களையே எடுத்துக்கொள்ளலாம். ரொம்பப் பிரபலமான ஒரு டாக் ஷோ. நிச்சயமாக என் மனைவிக்கு அது பிடிக்கும் என்று வெகுகாலம் நம்பிக்கொண்டிருந்தேன். ஊரெல்லாம் அதைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தார்கள். அந்நிகழ்ச்சியை நடத்துபவர், அந்த ஒரே நிகழ்ச்சியால் பெரும் புகழ் பெற்று ஒரு கார்ப்பரேட் சாமியார் அளவுக்குப் புகழும் செல்வாக்கும் அடைந்துவிட்டார். ஏதோ ஒரு சமயம் யாரோ நண்பரிடம் பேசும்போது என் மனைவிக்கு அந்த டாக் ஷோ மிகவும் பிடிக்கும் என்று சொல்லிவிட்டேன். சொன்னது சரியா என்று க்ராஸ் செக் செய்துகொள்வதற்காக அன்றிரவு அவளிடம் உனக்குப் பிடித்த நிகழ்ச்சி எது என்று இயல்பாகக் கேட்பது போலக் கேட்டேன். அவள் சற்றும் தயங்காமல் இன்னொரு சானலில் வரும் இன்னொரு ஷோவைச் சொல்லிவிட்டாள்.

அதிர்ந்தேவிட்டேன். ‘அதுவா? அப்படியொண்ணு வருதா என்ன? யார் பாக்கறாங்க?’

ஒரு ஜந்து மாதிரி என்னைப் பார்த்துவிட்டு, ‘ஒரு ப்ரோக்ராம் விடாம வீட்ல இருக்கற எல்லா பெண்களும் பாக்கற ஷோ இது’ என்று சொன்னாள். நான் நம்பிக் குறிப்பிட்ட டாக் ஷோவைப் பற்றி அவளுக்குப் பெரிய அபிப்பிராயமே இல்லை என்றும் தெரிந்தது.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு என் மனைவிக்கு என்னென்ன பிடிக்கும் என்று யோசித்துக் கணக்கிடும் வேலையை நான் அறவே விட்டுவிட்டேன். எனக்கான நீதி ஒன்றை நானே உருவாக்கிக்கொண்டேன்.

அதாகப்பட்டது, மனைவியைப் புரிந்துகொள்வது என்பது ஆண்களுக்கு இயலாத காரியம். ஒன்று செய்யலாம். அவ்வப்போது தவணை முறையில் தெரிந்து கொள்ளலாம்!

23 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற