10 1/2 காதலெதிர்க் கவிழுதைகள்

வ்ரைட்டர்பேயோன் தனது தளத்தில் பதினைந்து காதல் கவிதைகள் எழுதியிருக்கிறார். இந்தரக டெம்ப்ளேட் கவிதைகள் எழுதுவது மிகவும் எளிது. [அவரும் அதை அறிந்தேதான் எழுதியிருக்கிறார்.] ஒரு வேகத்தில் 115 கவிதைகள் எழுதுகிறேன் என்று அவரிடம் சொல்லியிருந்தாலும் இப்போதைய வேலைகளுக்கு இடையில் என்னாலான கவிச்சேவை இந்த பத்தரை கவிதைகள்தான். மிச்சம் எங்கே என்று கேட்கமாட்டீர்கள் என்று திடமாக நம்புகிறேன். இது புறமுதுகிடுவதல்ல. எல்லாம் தேசநலன் கருதி செய்யப்படுவதுதான்.

பின் குறிப்பு: இந்த பத்தரை கவிதைகளை எழுத மொத்தமாக எனக்குப் பதினாறு நிமிடங்கள் பிடித்தன.

O

அதிகம் வேண்டாம்
ஒருநாளென்னைக் காதலித்தால்
போதும் நீ.
115 கவிதைகளுக்கு
அதுவே அதிகம்.

0

நீ அழகாயிருக்கிறாய்
நீ அழகாய்ச் சிரிக்கிறாய்
நீ அழகாய் வெட்கப்படுகிறாய்
நீ அழகாய்ச் சிணுங்குகிறாய்
என்றடுக்க
ஒரு வாய்ப்புமின்றி
என்ன வார்ப்பு நீ?

0

காதல் அல்லது கவிதை
இரண்டிலெதையும் தராத
பெண்ணாக நீ
இருப்பதனால்
கவிதையல்லது கவிதை
இரண்டிலொன்றைப் பரீட்சித்துப் பார்க்க
முடிவு செய்துவிட்டேன்.

0

ஒரு மொட்டுக்குள் ஒளித்துவைத்த
அசுரனின் உயிரொத்த என்
காதலை
சட்டெனக் கசக்கிக் கொன்றதுன்
சத்தம் சேர்ந்த கொட்டாவி.

0

உடைகளுக்கு நீ
தேர்ந்தெடுக்கும் வண்ணங்கள்
உன்னை எனக்குச் சொல்கின்றன.
அடிக்கும் சிவப்பில் சுடிதார்
அணியாதே
முட்டத்தான் தோன்றுகிறது.

0

கடற்கரையில் உன்
கைகோத்து நடக்க
கஷ்டமாயிருக்கிறது
மறுகைச்
சுண்டல் வீணாகிக்கொண்டிருக்கிறது.

0

படிப்பு வேலை சம்பளம்
இங்கிரிமெண்ட் இன்செண்டிவ்
போனஸ்
பிரமோஷன்
பிஎஃப் கிராஜுவிடி
கல்யாணம் பெண்டாட்டி
பிள்ளைக்குட்டி
பிக்கல் பிடுங்கல்
நடுவில் எங்கோ சிக்கிக்
கிழிந்து தொங்குகிறது
நீயுமுன் காதலும்.

0

காதலிக்க உன்னை
தேர்ந்தெடுத்து
சரித்திரப் பிழை செய்திருக்கிறேன்
படகு மறைவில் பேசுவதற்கு
பாலகுமாரன் கதைகள்தானா
கிடைத்தன உனக்கு?

0

உனக்கு உன்
புருஷனோடும்
எனக்கு என்
பெண்டாட்டியோடும்
நம் காதல்
நிச்சயம் வாழும்.

0

காதல் ஒரு வெட்டிவேலை
என்பது
காதலிக்கும்போது தெரியவில்லை
கவிதையெழுதும்போது
கண்டிப்பாகத்
தெரிகிறது.

0

கேவலம்
பத்து கவிதையைத் தாண்ட
உதவாத உன் காதல்
இருந்தென்ன செத்தென்ன…

O

22 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற