பேட்டை புராணம்

சில நடைமுறை வசதிகளை உத்தேசித்து என் இருப்பிடத்தை மாற்ற முடிவு செய்தேன். குரோம்பேட்டையிலிருந்து கோடம்பாக்கத்துக்கு. சம்பிரதாயங்கள்மீது மிகுந்த நம்பிக்கை கொண்ட என் பெற்றோர் உடன் வந்து பால் காய்ச்சி சர்க்கரை போட்டு எனக்கு ஒரு தம்ளர் கொடுத்துவிட்டு அவர்களும் ஆளுக்கொரு வாய் சாப்பிட்டுவிட்டு, ‘வீடு நல்லாருக்குடா’ என்று சொன்னார்கள்.[ஆனால் வாடகை அத்தனை நன்றாக இல்லை.] நான் பார்த்திருக்கும் வீட்டுக்கு வலப்பக்கம் நான்காவது வீட்டில் ஏ.ஆர். ரகுமான் இருப்பதறிந்து இன்னும் சந்தோஷப்பட்டார்கள். [ரகுமான் பெரும்பாலும் லண்டனில்தான் இருக்கிறார் என்று சொன்னதற்கு பதில்: ‘ஆனாலும் வீடு இங்கதானே?’]

தினசரி அலுவலகத்துக்குச் சென்று வருவதே நீதி கேட்டு நெடும்பயணம் மேற்கொள்வதுபோலிருந்தது. இருபதும் இருபதும் நாற்பது கிலோ மீட்டர்கள். இடையே நினைவு தெரிந்த நாளாக நடைபெற்று வரும் இரண்டு மேம்பாலப் பணிகள், அதன் பொருட்டு டிராஃபிக் ஜாம். கிண்டி மேம்பாலத்தின் வழக்கமான ஜாம், நந்தனம் ஜாம் அல்லது கோட்டூர்புரம் ஜாம் என்று ஒவ்வொரு நாளும் என் பயணம் ஜாம்ஜாமென்றுதான் நடந்துகொண்டிருந்தது. சற்றும் டிராஃபிக் சென்ஸ் இல்லாத, துளிக் கவனமும் காட்ட இயலாத, காட்டுத்தனமாக வண்டி ஓட்டும் என்னைப் போன்ற ஒரு இம்சை அரசனிடமிருந்து ஜி.எஸ்.டி. சாலை சாதுப் பயணிகளுக்கு இனி விடுதலை.

சகித்துக்கொள்ளக்கூடிய நெரிசல் மட்டுமே இருக்குமானால் மணிக்கு 40 கி.மீ. வேகத்தில், அலுவலகத்திலிருந்து என் வீட்டை அடைய 45 நிமிடங்கள் போதும். ஆனால் நினைவு தெரிந்து நான் 45 நிமிடங்களில் வீட்டையோ அலுவலகத்தையோ அடைந்ததில்லை. குறைந்தது ஒன்றரை மணி நேரம் ஆகும். அதிகபட்சம் ஒரே ஒருநாள் இரண்டே முக்கால் மணி நேரம் ஆகியிருக்கிறது. இனியும் நெரிசல் உண்டு, ஜாம் உண்டு என்றாலும் ஐந்தும் ஐந்தும் பத்து கிலோ மீட்டர்கள் மட்டுமே. கணிசமான நேரச் சேமிப்பு சாத்தியமாகிறது.

ஆனாலும் இருபத்தி மூன்று வருஷ குரோம்பேட்டை வாசத்தை முடித்துக்கொள்வதில் சற்று வருத்தம் இருக்கவே செய்கிறது.

1985 ஜனவரி 28ம் தேதி நாங்கள் குரோம்பேட்டைக்கு முதல் முதலில் குடி வந்தோம். மெயின் ரோடில் அப்போது கிரிக்கெட்டே ஆடலாம். எப்போதாவதுதான் பஸ் வரும். கண்ணுக்கெட்டிய தொலைவெல்லாம் முட்புதர்களாகவே இருக்கும். முட்புதர் இல்லாத இடங்களில் தோல் ஃபாக்டரிகள் இருக்கும். ஊரின் மணம் என்பது தோலின் மணம் மட்டுமே. நூற்றுக்கணக்கான சிறு தோல் தொழிற்சாலைகள் இருந்த இடமாக அது அப்போது இருந்தது. ஒவ்வொரு சாலை ஓரமும் தோல் கழிவு நீர் வண்ணமயமாக ஓடும். ஆரஞ்சு கலர் தண்ணீரையெல்லாம் பார்த்திருக்கிறேன். கிணறு தோண்டினால் கூட பாட்டா ஷோரூமில் உட்கார்ந்துகொண்டு தண்ணீர் குடிக்கிற எஃபெக்ட்தான் கிட்டும்.

மெயின் ரோடிலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் உள்ளே லட்சுமி புரம் என்னும் குடியிருப்புப் பகுதியில் என் அப்பா ஒரு வீடு கட்டினார். அவரது வாழ்நாள் சேமிப்பான அறுபதாயிரம் ரூபாயை அப்படியே போட்டு அரை கிரவுண்டில் சிங்கிள் பெட்ரூம் வீடு. அந்த வீட்டு கிரகப்பிரவேசத்தன்று நான் கீழே விழுந்து முகமெல்லாம் காயம் பட்டுக்கொண்டு அனுமார் மாதிரி காட்சியளித்தது நினைவுக்கு வருகிறது. அந்த வீட்டில் இருந்தபோதுதான் எஸ்.எஸ்.எல்.சி எழுதினேன். அங்கேதான் டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட் நண்பனுக்கு காதல் கவிதை எழுதிக்கொடுத்து மாட்டிக்கொண்டேன். அங்கேதான் முதல்முதலில் சிறுகதை, நாவல்களைப் படிக்கத் தொடங்கினேன். ஆர்.எச். குருமி புத்தக அட்டையை கடல்புறாவுக்குப் போட்டு நாளெல்லாம் உட்கார்ந்து வாசித்தேன்.

லீலா லெண்டிங் லைப்ரரி என்று ஒரு வாடகை நூலகம் அப்போது அங்கே இருந்தது. ஜானகிராமன் புத்தகங்களையெல்லாம் அங்கேதான் முதலில் பார்த்தேன். அசோகமித்திரனின் காலமும் ஐந்து குழந்தைகளும் புத்தகத்தைக் காட்டி, ‘படிச்சிப் பாரு. சுமாரா எளுதுவாரு இந்தாளு. செலபேருக்குப் பிடிக்கும்’ என்று அங்கிருந்த முதியவர் அறிமுகப்படுத்தியதுதான் என் வாசிப்பு ஆர்வத்துக்குக் கிட்டிய முதல் தீனியாக இருந்தது.

தினசரி ஓர் ஆங்கிலக் கட்டுரை எழுதி எடுத்துக்கொண்டு [கண்டிப்பாக யாருக்கும் புரியாத பத்து சொற்களாவது அதில் இருக்கவேண்டுமென்பது அவர் தமக்குத்தாமே விதித்துக்கொண்ட விதி] விடிந்ததும் எங்கள் வீட்டுக்கு வந்து அப்பாவிடம் பிளேடு போடும் சம்பத் ஐயங்கார் என்கிற ஒரு முதியவர், அப்பா, அம்மா, மகன்கள், மகள்கள் என்று மொத்தமாக வாசலில் உட்கார்ந்து சிகரெட் பிடிக்கும் ஓர் ஆங்கிலோ இந்தியக் குடும்பத்தினர், எப்போதும் ஜல்லிக் கரண்டியால் குழந்தைகளை அடித்துக்கொண்டே இருக்கும் எதிர்வீட்டுப் பெண்மணி, எடுத்ததற்கெல்லாம் வசூலில் இறங்கிவிடும் ஒரு பக்த ஜன சபா கோஷ்டிக்காரர்கள்… மிகச் சிறிய உலகம்தான். ஆனாலும் சுவாரசியமாகவே கழிந்ததாக இப்போது தோன்றுகிறது. பாலிடெக்னிக் முடித்துவிட்டு, ஒரு நிறுவனத்தில் எனக்கு வேலை கிடைத்துவிட்டதாக வீட்டில் பொய் சொல்லிவிட்டு தினசரி கன்னிமாரா நூலகத்துக்குச் சென்று நாளெல்லாம் படித்துக்கொண்டிருந்துவிட்டு மூன்று மாதங்கள் கழித்து குட்டு வெளிப்பட்டு அவமானத்தில் கதறி அழுததும் அங்கேதான். [154 கிலோபைட் நூலில் உள்ள ‘ஒரு நம்பிக்கை துரோகம்’ கட்டுரையில் இந்தச் சம்பவத்தை விரிவாக எழுதியிருக்கிறேன்.]

பிறகு அந்த வீட்டை விற்றுவிட்டு நியூ காலனியில் ஒரு ஃப்ளாட் வாங்கிக்கொண்டு வந்து சேர்ந்தோம். அறுபதாயிரத்தில் கட்டிய வீடு இரண்டரை லட்சத்துக்கோ மூன்று லட்சத்துக்கோ போனதாக நினைவு. அப்போது நியூ காலனி ஃப்ளாட்டும் அந்த விலைக்கே கிடைத்தது. இப்போது முப்பது லட்சத்துக்குக் கூட கிடைப்பது அரிது.

இந்த ஃப்ளாட் மெயின் ரோடுக்குச் சற்றே அருகில் அமைந்திருந்தது. புதிய குடியிருப்பு. ஒரு காலத்தில் ஏரியாக இருந்த இடம் என்று சொன்னார்கள். நாங்கள் குடிவந்த போது குப்பை மேடாக இருந்தது. ஆனால் தோல் வாசனை மட்டும் அப்படியே. மெல்ல மெல்ல பலபேர் அங்கே வீடு கட்டினார்கள். அக்கம்பக்கத்தில் குப்பை மேடுகளில் கொடி நட்டு, கொஞ்சநாள் காத்திருந்துவிட்டுப் பிறகு புதிய புதிய நகர்களை உற்பத்தி செய்தார்கள். ஊரின் பாதி ஜகத்ரட்சகனிடம் இருப்பதாகப் பலபேர் பேசிக்கொண்டார்கள். ஜகத்ரட்சகன் யார்? அப்பாவிடம் கேட்டேன். அவர் ஆழ்வார்களை ஆராய்ச்சி செய்கிற ஒரு பண்டிதர் என்று சொன்னார்.

இது மிகவும் குழப்பம் தந்தது. ஆழ்வார் ஆய்வாளர் நில வளைப்புகளில் ஈடுபடுவாரா? புரியவில்லை. ஆனால் விரைவில் ஜகத்ரட்சகன் ஓர் அரசியல்வாதியாகிவிட்டார். அவ்வப்போது ஆழ்வார்களுக்கும் சேவை செய்துகொண்டுதான் இருந்தார். பேட்டையில் அவரது பிரதிநிதியாக ஒருவர் பெரிய மாளிகை கட்டிக்கொண்டு குடிவந்தார். புதிய நகர்கள் வரத்து மேலும் அதிகரித்தது. ஜகத் ரட்சகன் பெயரிலேயே ஒரு அவென்யூ உற்பத்தியாகி, எங்களுடைய முதல் நியூகாலனி ஃப்ளாட்டை விற்றுவிட்டு அங்கே ஓரிடம் வாங்கி நாங்கள் அப்புதிய அவென்யூவில் முதல் வீடு கட்டிக்கொண்டு வரும் சூழலும் வந்தது.

நிறைய கடைகள் உதித்தன. முன்பெல்லாம் ஒரு கவுளி வெற்றிலை வாங்கவேண்டுமானாலும் ரயில்வே கேட் தாண்டி ராதாநகருக்குத்தான் போகவேண்டும். அது ஒரு பிரசித்தி பெற்ற மார்க்கெட். பூவும் மீனும் புடலங்காயும் புண்ணாக்கும் புழுங்கலரிசியும் புடைவையும் நகையும் – எல்லாம் கிடைக்குமிடம். தாம்பரம் சண்முகம் ரோடைவிடப் பிரபலமான மார்க்கெட்.

அந்த மார்க்கெட்டில்தான் முதல் முதலில் என்.ஆர். தாசனைப் பார்த்தேன். நல்ல எழுத்தாளர். இன்று பலருக்கு தாசன் பெயர்கூட நினைவிருக்குமோ என்னவோ? கொஞ்சம் புரியாமல் எழுதுவார் என்று பெயர். பெரிய கஷ்டமில்லை. கொஞ்சம் கூர்ந்து படித்தால் எளிதில் புரியவே செய்யும் அவருடைய எழுத்து.

அதே மார்க்கெட்டில்தான் கம்ப ராமாயண விற்பன்னர் ல. சண்முகசுந்தரம் எனக்கு அறிமுகமானார். அபாரமான ரசிகர். பிரமாதமாகப் பேசுவார். எழுதவும் செய்வார். ஆல் இந்தியா ரேடியோவில் பணிபுரி்ந்து வந்த மனசை ப. கீரன், தினமணி சிவகுமார், குமுதத்தில் பணியாற்றி வந்த மேஜர் தாசன், பாமா கோபாலன் என்று பலபேர் எனக்கு அறிமுகமானார்கள். பாமா கோபாலன் அப்போது குமுதத்தில் ‘பொழுதுபோகாத பொம்மு’ என்றொரு பகுதியை எழுதி வந்தார். ரொம்பப் பிரபலமான பகுதி அது. ஒருமணி நேரத்தில் குரோம்பேட்டை ரயில்வே கேட்டை எத்தனை ரயில்கள் கடக்கின்றன என்று ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை உட்கார்ந்து அவர் எண்ணி எழுதியதை அடுத்தவாரம் நான் எண்ணிச் சரிபார்த்தது நினைவுக்கு வருகிறது.

குரோம்பேட்டையுடன் தொடர்புடைய இன்னொரு குமுதக்காரர் உண்டு. கிருஷ்ணா டாவின்சி. குரோம்பேட்டை ஸ்டேஷனில் டிக்கெட் பரிசோதகராக கிருஷ்ணா அப்போது பணியாற்றிக்கொண்டிருந்தார். தாடியும் கருப்பு கோட்டுமாக அவர் எனக்கு முதல் முதலில் அறிமுகமானபோது கையில் ஒரு நாலுவாரத் தொடரின் கையெழுத்துப் பிரதியை வைத்திருந்தார். ‘மாயக்குதிரை’ என்று தலைப்பு. ‘இந்த வேலைய விட்டுடலாம்னு இருக்கேன். ஃபுல்டைம் ரைட்டராகணும். பெரிய ஜர்னலிஸ்டாகணும்’ என்று சொன்னார். கிட்டத்தட்ட நானும் அதே மனநிலையில் இருந்த காலம் அது. காலக்ரமத்தில் நான் கல்கிக்கும் அவர் குமுதத்துக்கும் போய்ச் சேர்ந்தோம். [மாயக்குதிரை கல்கியில் வெளியானது.] பிறகு குமுதத்தில் மீண்டும் சந்தித்துக்கொண்டோம்.

எப்படியோ பல எழுத்தாளர்கள் குரோம்பேட்டை தொடர்பு உள்ளவர்களாக இருந்திருக்கிறார்கள். அசோகமித்திரனுக்குக் கூட அந்தத் தொடர்பு உண்டு என்று நினைக்கிறேன். அவரது மகனோ மகளோ அல்லது வேறு யாரோ அங்கிருந்ததாகச் சொன்ன ஞாபகம். இன்றைக்கு அரசியல் தளத்தில் பிரபலமாக இருக்கும் கவிஞர் இளந்தேவன், கவிஞராக இருந்த காலத்தில் குரோம்பேட்டைக்குக் குடிவந்தவரே. கொஞ்சம் தள்ளி சானடோரியம் மலைப்பகுதியில் வீடு கட்டிக்கொண்டு வந்தார். அவர் வீட்டில் நடந்த ஒரு கவியரங்கத்துக்குப் போயிருக்கிறேன். ‘ஒன்று தெய்வம் ராமனே / உலகனைத்தும் கோயிலே / என்று வாழும் தேவனே / எங்கள் ஆஞ்சநேயனே’ என்று ஆரம்பித்து அவர் எழுதிய பாடல் இன்றுவரை எங்கள் வீட்டுக் குழந்தைகளால் பக்தியுடன் பாடப்பட்டு வருகிறது. யோசித்தால் இன்னும்கூடப் பலபேர் தட்டுப்படுவார்கள்.

அப்புறம், ஆர். வெங்கடேஷ். அவனும் குரோம்பேட்டைக்காரன்தான். ஆனால் கொஞ்சம் தள்ளி புருஷோத்தம நகரில் அவனுடைய வீடு இருந்தது. கணையாழி அலுவலகத்தில் தொடர்பு ஏற்பட்டு, நட்பாகி, கிட்டத்தட்ட நாங்கள் தினமும் சந்தித்துக்கொள்ளத் தொடங்கினோம். படிப்பு, எழுத்து, ஆர்வங்கள் ஒரே மாதிரி அமைந்தது தற்செயல். அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி என்று எங்களுடைய ஆதர்சங்களும் ஒரே மாதிரி அமைந்ததும் தற்செயல். அவனுக்கு ஆதவன் எழுத்துகள் மீது அளவுக்கதிகமான ஆர்வம் இருந்தது. ஏனோ என்னை அவர் அத்தனை கவரவில்லை. இத்தனைக்கும் எனக்குக் கதை எழுதச் சொல்லிக்கொடுத்த ம.வே. சிவகுமார் ஆதவனின் தாக்கம் அதிகமுள்ளவர்.

நான் அமுதசுரபியில் பணியாற்றத் தொடங்கிய காலத்தில் ரயிலில் ஒருநாள் ம.வே.சிவகுமாரைச் சந்தித்தேன். தாம்பரத்திலிருந்து அவர் சென்னை கடற்கரை வரை பயணம் செய்பவர். நான் இரண்டு ஸ்டேஷன்கள் தள்ளி ஏறுபவன். சிவகுமாருடனான நட்பு வலுப்பட்டபிறகு என் சீசன் டிக்கெட்டை தாம்பரத்திலிருந்து பீச் ஸ்டேஷனுக்கு வாங்கிக்கொண்டு குரோம்பேட்டையிலிருந்து தாம்பரம் சென்று ரயிலேறுவேன். ஒரு மணிநேரம் பேச்சு, பேச்சு, அப்படியொரு பேச்சு. ரயில் பயணம் அப்போது நெரிசலுடன் இருந்ததில்லை. இரண்டாம் வகுப்பே காலியாகத்தான் இருக்கும்.

கண்ணுக்குத் தெரியாமல் குரோம்பேட்டையில் மக்கள் குடியேற்றம் அதிகரிக்கத் தொடங்கியது தொண்ணூறுகளின் மத்தியில்தான். தோல் தொழிற்சாலைகளும் அப்போது மெல்ல விடைபெறத் தொடங்கியிருந்தன. நிறைய பள்ளிக்கூடங்கள் வந்தன. ஜகத்ரட்சகன் கல்லூரி கட்டினார். பொறியியல் கல்லூரி. மருத்துவக் கல்லூரி. இன்னும் என்னென்னவோ கல்லூரிகள் வந்தன. சி.எல்.சி. என்கிற க்ரோம் லெதர் கம்பெனி பிராந்தியத்தில் மிகப் பெரிது. ஒரு சாலை முழுதும் வியாபித்திருக்கும் அதன் சுற்றுச்சுவர் பிரம்மாண்டமானது. அதுவே பிறகு கல்லூரியாகிவிட்டது.

ஆனால் இப்போது யோசித்துப் பார்த்தால் மக்கள் தொகைப் பெருக்கம் என்பது தவிர, பேட்டையில் அத்தனை நெரிசல் உண்டானதற்கு வேறு பிரத்தியேகக் காரணங்கள் தெரியவில்லை. தோலுக்கு மாற்றாக வேறு தொழில் ஏதும் வந்ததா என்றால் கிடையாது. பெரிய பெரிய தனியார் நிறுவனங்களும் வரவில்லை. பக்கத்தில் சானடோரியத்திலும் பல்லாவரத்திலும் சில எக்ஸ்போர்ட் நிறுவனங்கள் தொடங்கப்பட்டதை ஒரு முக்கியக் காரணமாகச் சொல்லத் தோன்றவில்லை. மெப்ஸ் வந்ததெல்லாம் சமீபத்தில்தான்.

குரோம்பேட்டையின் சிறப்பு என்று யோசித்துப் பார்த்தால் உடனே தோன்றுவது, நகரின் [ஆம். இப்போது அது நகரம்தான். முன்பெல்லாம் மெயின் ரோடிலிருந்து வீட்டுக்கு டான்ஸ் ஆடிக்கொண்டே கூடப் போகலாம். இப்போது நியூ காலனி சாலைகளிலும் டிராஃபிக் ஜாம். கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முதல், அஞ்சப்பர் வரை, ஜெயச்சந்திரன் முதல் நாயுடு ஹால் வரை மாம்பலத்தில் உள்ள அனைத்தும் இங்கேயும் உண்டு.] அமைதி. நிச்சயமாக, பிற நகரங்கள் பொறாமைப்படத்தக்க அமைதி. கலவரம் கிடையாது. கடையடைப்பு, கல் வீச்சு, ரவுடிகள் அட்டகாசம், திருட்டு, வழிப்பறி, மோதல்கள், கொலை, கொள்ளை என்று பெரிய அளவில் எதுவும் நிகழ்ந்ததாக நினைவில்லை. அரசியல் கூட்டங்கள் கூட பேட்டைக்குள் நடக்காது. மெயின் ரோடோடு சரி. அதுவும் பெரும்பாலும் கம்யூனிஸ்டுகள்தான். தி.மு.க., அ.தி.மு.க.காரர்கள் பல்லாவரத்தில்தான் கூட்டம் போடுவார்கள். குரோம்பேட்டையில் கம்யூனிஸ்டுகள் மட்டுமே. ரொம்பக் கத்தமாட்டார்கள். ஐந்தாவது மெயின் ரோடில் என் வீட்டுக்குப் பக்கத்தில் குடியிருக்கும் சங்கரய்யாவே ரொம்ப அமைதியான மனிதர். இந்த இருபத்தி மூன்று வருடங்களில் [நியூ காலனிக்குக் குடிவந்து பதினைந்து வருடங்களாகின்றன.] அவரை நான் வீதியில் பார்த்த சந்தர்ப்பங்கள் மிஞ்சிப் போனால் பத்திருபது தேறாது. அவரது மகன் என்னுடைய நண்பர். அடிக்கடி சந்திப்போம். அவர் அங்கே ஒரு நகரமன்ற உறுப்பினர்.

ஏதோ ஒரு தேர்தல் நேரத்தில் சந்தானம் என்கிற கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நகரமன்ற உறுப்பினர் வேட்பாளர் தாக்கப்பட்டு பேப்பரில் எல்லாம் செய்தி வந்தது. ஹிந்துவுக்கு ரெகுலராக மக்கள் பிரச்னையை எழுதுபவர். பிராந்தியத்தில் சங்கரய்யாவைவிட அவர் மிகவும் பிரபலம். அந்தத் தாக்குதலுக்குத்தான் அவர் நன்றி சொல்லவேண்டும். நல்ல நண்பர் எனக்கு. தினசரி காலை வாங்கிங்கில் சந்தித்துக்கொள்வோம். வம்புக்காகவேனும் கம்யூனிஸ்டுகளைக் கிண்டல் செய்து சீண்டிப்பார்ப்பேன். சிரித்துக்கொண்டு பதில் சொல்வாரே தவிர சற்றும் கோபம் வராது. சாது கம்யூனிஸ்ட்.  என்றைக்காவது அவர் எம்.எல்.ஏ. ஆகவேண்டும் என்று எப்போதும் விரும்புவேன். பொதுச்சேவையில் ஆர்வம் அதிகம். தவிரவும் சுத்தமான ஆசாமி. ஆனால் என்ன பயன்? எங்கள் தொகுதியைப் பொருத்தவரை கம்யூனிஸ்டுகள் அவ்வப்போதைய தோழமை இயக்கங்களுக்குச் சேவகம் செய்யும் பணியை மட்டுமே மேற்கொள்ளமுடியும். சந்தானத்துக்கு சீட் கிடைக்கும் காலம் ஒன்று வருமானால் நிச்சயம் அவருக்கு அப்போது எண்பது வயதாகியிருக்கும்.

படிப்பு, உத்தியோகம், எழுத்து, திருமணம், குழந்தை, விருதுகள் என்று என் வாழ்வின் இதுவரையிலான அனைத்து முக்கிய நிகழ்வுகளும் குரோம்பேட்டை வாசத்தில் நிகழ்ந்திருக்கின்றன. என்னோடு சேர்ந்து நகரும் நிறையவே வளர்ந்திருக்கிறது. இடம்பெயர்வது குறித்து வருத்தமெல்லாம் எனக்கில்லை.

புறநகர் வாசத்தின் சிறப்பு அல்லது சிறப்பின்மை அதுதான் என்று தோன்றுகிறது. இடத்துடன் உணர்வு ரீதியிலான பிணைப்பு என்று ஏதும் சாத்தியமில்லை. என்னுடைய மதுரை – நெல்லை நண்பர்கள் பலர் அவரவர் ஊர் குறித்து மணிக்கணக்கில் பேசுவதைப் பல சமயம் வாய்பிளந்து கேட்டிருக்கிறேன். சு. வேணுகோபால் [நுண்வெளிக் கிரணங்கள்] அம்மாபட்டி குறித்துப் பேசத் தொடங்கினால் சங்கீதமாக இருக்கும். தி.க.சி. அவர்களுடன் அவரது சுடலைமாடன் வீதி வீட்டில் உட்கார்ந்து மணிக்கணக்கில் பேசியிருக்கிறேன். நெல்லையைப் பற்றி அவர் பேசிக் கேட்கவேண்டும்.

ஆனால் ஒரு பதிவுக்காகவேனும் குரோம்பேட்டையைப் பற்றி எழுதிவைக்கவேண்டும் என்று விரும்பி ஆரம்பித்தாலும் ஒரு செய்திக்கட்டுரை தொனியில்தான் இது சாத்தியமாகிறது. என்ன செய்ய?

ஒன்றும் பிரச்னையில்லை. ஓரெண்ணம் தோன்றுகிறது. யாராவது சொந்த ஊர் எது என்று இனி கேட்டால் தயங்காமல் குரோம்பேட்டை என்றுதான் சொல்வேன். அப்படிச் சொல்லிச் சொல்லியே கம்யூனிஸ்டு சந்தானம் எம்.எல்.ஏ. ஆகும் காலத்துக்குள் குரோம்பேட்டையை திருநெல்வேலி, மதுரை அளவுக்கு ‘ஃபேமஸ்’ ஆக்கிவிடவேண்டும் என்று தீர்மானம் செய்திருக்கிறேன்.

19 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற