எல்.பி.ரோடில் அரிக்காமேடு

ராமன்

அவர் கூப்பிட்டுக்கொண்டேதான் இருந்தார். இதோ அதோ என்று இழுத்தே வருடம் ஒன்றுக்கு மேல் ஆகிவிட்டது. இன்று சந்திக்க நேர்ந்தது. அடையாறு எல்பி சாலையில் அவர் தனியே ஒரு அரிக்காமேடு வைத்திருக்கிறார். ஒரே வித்தியாசம். இங்கு நாம் தோண்டவேண்டாம். தோண்டி எடுத்து ஆராய்ச்சி செய்து அடிக்குறிப்புகளோடு அவர் தயாராக வைத்திருக்கிறார். தொன்மத்தில் ஆர்வமும் கொஞ்சம் கற்பனையில் மிதக்கும் வழக்கமும் இருந்தால் போதும். அவரது அபார்ட்மெண்டுக்குள் இருந்தபடியே ஆயிரம் வருஷங்களுக்கு முன்னோக்கி ஒரு காலப்பயணம் போய்விட்டு வந்துவிடலாம்.

பெட்டி பெட்டியாக ராமன் வைத்திருக்கும் பொக்கிஷங்களுக்கு விலை மதிப்பே சொல்ல முடியாது. அவை பல்லாண்டுகால அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பில் கிடைத்த புதையல்கள். சோழர்கள், பாண்டியர்கள் காலத்துக் காசுகள். மோதிரங்கள். முத்திரைகள். ஒவ்வொன்றுக்கும் பின்னால் இருக்கும் உயிரோட்டமான கதைகள்.

ஒரு சோழர் காலக் காசில் நரேந்திரன் என்று எழுதப்பட்டிருந்தது. இன்றைய பெயர். சோழர்கள் காலத்தில் யாருக்கு அந்தப் பெயர் இருந்திருக்கும்? அதுவும் காசில் எழுதப்படுமளவுக்கு? ஆராய்ச்சி அங்கே தொடங்குகிறது. ராஜராஜ சோழனின் மகள் வயிற்றுப் பேரனுக்கு நரேந்திரன் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. அவன் பிறந்த சந்தோஷத்தில், அன்று வெளியிட்ட நாணயத்தில் பெயரைப் பொறித்திருக்கிறார் ராஜா.

நாணயம் கிடைத்தது ஒரு பரவசம். அதிலுள்ள பெயர் ஒரு ஆச்சரியம். அதன் பின்னணி இன்னொரு சுவாரசியம்.

ராமன், உங்களுக்கொரு பொற்கிழி தர ஆசைப்படுகிறேன். துரதிருஷ்டவசமாக நான் ராஜராஜ சோழனாக இல்லை.

பொற்கிழிக்கென்ன, என்னிடம் இருக்கிறதே என்று எடுத்துக் காட்டுகிறார். படத்தைப் பார்க்கும் முன்னால் உங்கள் மனத்தில் பொற்கிழி

இதுதான் பொற்கிழி

என்றால் உடனே தோன்றுகிற பிம்பம் என்னவென்று ஒரு கணம் கண்மூடி சிந்தித்துப் பாருங்கள். பளபளவென்று பச்சை, நீலம், சிவப்பு கலரில் ஒரு மூட்டை. குலுக்கினால் உள்ளே தங்க நாணயங்கள் குலுங்கும் ஓசை. எனக்கு இதுதான் வரும். எப்போதும்.

ஆனால் ராமன் எடுத்துக் காட்டிய பொற்கிழி ஒரு குங்குமச் சிமிழைக் காட்டிலும் சற்றே பெரிய அளவில் உள்ளதாக இருக்கிறது. நல்ல உறுதியான, செப்பில் செய்யப்பட்டது. அடக்கடவுளே, இதில் எத்தனை பொற்காசுகள் போடமுடியும்? ஆயிரம் பொன்? அதுவல்லவா கதைகளில் வரும்? இதில் ஆயிரம் கொள்ளுமா?

கொள்ளுமே என்று கிழியில் போடப்படும் பொற்காசு ஒன்றை எடுத்துக் காட்டினார்.

ரங்கநாதன் தெரு பிளாட்பாரங்களில் விற்கும் ஸ்டிக்கர் பொட்டு அளவேயான தங்க நாணயம். நூறு ஆயிரமென்ன? எத்தனை வேண்டுமானாலும் கிழியில் இட்டுக் கிழிக்கலாம்.

ராமனிடம் சோழர்காலப் பொற்காசுகள் மட்டுமல்ல. செப்புக் காசுகள் ஏராளமாக வைத்திருக்கிறார். ஒவ்வொரு நாணயத்திலும் செதுக்கப்பட்டிருக்கும் சித்திரங்களும் சொற்களும் அவருக்குச் சரித்திரத்தைச் சொல்கின்றன. அதை அவர் நமக்குப் புரியும் மொழியில் அழகாக எடுத்துச் சொல்கிறார். மதுரையில், அரிக்காமேட்டில், தஞ்சையில் இன்னும் பல்வேறு

ஆவுடையுடன் கூடிய லிங்க மோதிரம்

இடங்களில் அகழ்ந்து எடுக்கப்படும் புதையல்களை ஆராய்வதே ராமனுக்கு முழுநேரப் பணியாக இருக்கிறது. ஏற்கெனவே பார்த்துக்கொண்டிருந்த உத்தியோகத்தை இந்த வேலைக்காகவே அவர் விட்டிருக்கிறார். சரித்திரத்தை அறியும் ருசி ஒரு சொட்டு இறங்கிவிட்டால் போதும். அது உங்களை விடாது என்பவர், இந்தத் துறையில் ஐராவதம் மகாதேவனின் சிஷ்யர்.

ராமனின் சேகரிப்பில் என்னைக் கவர்ந்தது ஒரு நூதனமான மோதிரம். பெரும்பாலும் சிவலிங்க டிசைன் உள்ள மோதிரங்கள்தாம். ஆனால் இந்த மோதிரம் சுண்டுவிரலின் நுனியளவே நுழையக்கூடியது. குழந்தைகளுக்கான மோதிரமா?
என்றால், இல்லை. அக்காலத்தில் ஒரே விரலில் நுனியில் ஒன்று, உள்ளே ஒன்று என இரண்டு மோதிரங்களை அணிவது ஃபேஷனாக இருந்திருக்கிறது. ஆதாரம்? ஒரு சோழர்கால சிற்பத்தின் புகைப்படத்தைக் காட்டுகிறார். விரல்களைக் கூர்ந்து பார்த்தால் இரண்டிரண்டு மோதிரங்கள்!

கழட்டி அடித்தால் முட்டியைப் பேத்துவிடுமளவுக்கு கனமான காதணிகள், பாம்பு உருவம் பொறித்த பாம்படங்கள், நெளி மோதிரங்கள், காசுகள், பொற்காசுகள், பொற்கிழிகள், சுடுமண் சிற்பங்கள், அகழ்வாராய்ச்சி தொடர்பான ஆய்வேடுகள், புத்தகங்கள் – ராமன் ஜிப்பா போட்ட ஆராய்ச்சித் தாத்தா இல்லை. ஜீன்ஸ் போடும் முதிரிளைஞர்தான். தமது கண்டுபிடிப்புகள் பற்றி ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டிருக்கிறார். தமிழில் எழுதப் பழகும்படி வற்புறுத்திவிட்டு வந்தேன்.

ஒரு வெண்பாப் புலியின் சகோதரராக இருந்துகொண்டு தமிழில் எழுதாவிட்டால் எப்படி?

15 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற