சினிமாவும் நானும்

ஐகாரஸ் பிரகாஷ் கேட்டுக்கொண்டபடி அவர் தொடுத்த வினாக்களும் என் விடைகளும் இங்கே.

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

 • வயது ஐந்து அல்லது ஆறு இருக்கலாம். கோவூரில் அப்போது குடியிருந்தோம். ஊருக்கே புதிதாக பக்கத்து வீட்டில் டிவி பெட்டி வர, அவர்கள் வீட்டு மொட்டை மாடியில் பத்து பைசா வசூலித்துக்கொண்டு பார்க்க அனுமதித்தார்கள். படம் ஆட்டுக்கார அலமேலு. ஸ்ரீப்ரியாவைக் காட்டிலும் அந்த ஆடு நன்றாக நடித்ததாக உணர்ந்தேன்.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

 • சுப்பிரமணியபுரம். நீண்ட நாள்களுக்குப் பிறகு மிகவும் ரசித்து, லயித்துப் போய்ப் பார்த்தேன். இதற்குமுன் தியேட்டரில் இப்படி என்னை மறந்து பார்த்த படம் – வெகு நாள்களுக்கு முன்னர் முதல் மரியாதை.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

 • நேற்று டிவியில் கில்லி. எத்தனை முறை பார்த்தாலும் இந்தப் படத்தின் வேகம் எனக்கு வியப்பூட்டுவது. படம் பார்த்துப் பார்த்து, காட்சிவாரியாக ஒன்லைன் எழுதி வைத்து திரைக்கதையைப் பல சமயம் ஆராய்ந்திருக்கிறேன்.

4. மிகவும் தாக்கிய தமிழ் சினிமா?

 • நந்தா. அந்தப் படத்தின் திரைக்கதையில், நானெழுதிய ‘அலை உறங்கும் கடல்’  நாவலின் தாக்கம் பல இடங்களில் இருந்தபடியால். [நந்தா வெளிவருவதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்னர் கல்கியில் தொடராக வந்தது அது.]

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா-அரசியல் சம்பவம்?

 • அப்படியேதும் இல்லை. இத்தகைய விஷயங்கள் பொதுவாக என்னை பாதிக்காது.

6. தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

 • கண்டிப்பாக மாட்டேன். குறிப்பாக எப்போதாவது வரும் நல்ல படங்களைப் பற்றி சிற்றிதழ்கள் வெளியிடும் ஒரு முழு ஃபாரம் அளவுக்கான ஆராய்ச்சி/விமரிசன/கண்டன/பாராட்டு/துதிக் கட்டுரைகள் பக்கம்கூடப் போகமாட்டேன். தமிழில் யாருக்கும் சினிமா அப்ரிஸியேஷன் பயிற்சி இல்லை என்பது என் அபிப்பிராயம்.

7.தமிழ் சினிமா இசை?

 • இளையராஜாவில் ஆரம்பித்து இளையராஜாவில் முடிகிறது. இது என் தனிப்பட்ட அபிப்பிராயம் மட்டுமே. நான் கண்மூடித்தனமான ரசிகன் இல்லை. யாருக்குமே இல்லை. ஆனாலும் திரை இசையில் இளையராஜா செய்திருப்பதன் அருகே கூட வேறு யாரும் இங்கே வரவில்லை என்று நினைக்கிறேன். இதனை ஒற்றை வரி ஸ்டேட்மெண்டாக அல்லாமல் உட்கார்ந்து விவாதித்து என் தரப்பை நிரூபிக்கவும் என்னால் இயலும்.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

 • ஒரு காலத்தில் நிறைய பார்த்திருக்கிறேன். திரைப்பட விழாக்களில் தவறாமல் கலந்துகொண்டிருக்கிறேன். இரானியப் படங்கள் மிகவும் பிடிக்கும். மோஷன் மக்மல்பஃபின் அனைத்துப் படங்களையும் வரிசையாகப் பார்த்திருக்கிறேன். ஒரு தில்லி திரைப்பட விழாவில் மக்மல்பஃபை நேரில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தும் பேச முடியாமல் போய்விட்ட வருத்தம் [அப்போது எனக்கு ஆங்கிலத்தில் சுத்தமாகப் பேச வராது என்பதுதான் காரணம்] இப்போதும் உண்டு.

பொதுவாக எனக்கு அமெரிக்கப் படங்கள் பிடிக்காது. பார்க்கக் கூட விரும்பமாட்டேன். இதற்கு சரியான காரணம் சொல்லத் தெரியவில்லை. பார்த்த சில படங்கள் உண்டாக்கிய மோசமான தாக்கம் ஓரெல்லை வரை காரணமாக இருக்கக்கூடும். பிரெஞ்சுப் படங்கள், ஹங்கரி மொழிப் படங்கள் சில இன்னும் நினைவில் இருக்கின்றன. சமீபத்தில் பார்த்த ஹங்கரி மொழிப்படம் Gloomy Sunday நன்றாக இருந்தது.

இந்திய மொழிகளில் மலையாளப் படங்கள் எனக்கு விருப்பமானவை. அடூர் கோபாலகிருஷ்ணனைப் பிடிக்கும். அரவிந்தன் பிடிக்கும். வங்காளத்தில் சத்யஜித் ராயின் அனைத்துப் படங்களையும் பார்த்திருக்கிறேன். ம்ருணாள் சென் பிடிக்கும்.

நல்ல சினிமா என்பது லத்தீன் அமெரிக்க தேசங்களிலிருந்தும் மத்தியக் கிழக்கு தேசங்களிலிருந்தும்தான் அதிகம் வர வாய்ப்புண்டு. வாழ்க்கை பிரச்னைக்குரியதாக இருக்கும் இடங்களில்தான் கலை தன் ஜீவத் துடிதுடிப்பு குன்றாமல் மலரும்.

9. தமிழ் சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

 • எனக்கு சினிமாத் தொடர்புகள் உண்டு. பலகாலமாகவே. சினிமாவில் நண்பர்கள் உண்டு. பல திரைப்படங்களின் கதை விவாதங்களில் கலந்துகொண்டிருக்கிறேன். சமீபகாலமாகத்தான் நேரடியாக ஈடுபடத் தொடங்கியிருக்கிறேன். கனகவேல் காக்க – நான் வசனம் எழுதி வெளிவரவிருக்கிற முதல் படம். இன்னும் சில படங்களுக்கும் எழுதும் வாய்ப்பு வந்திருக்கிறது. இரண்டு படங்களுக்கு ஒப்புக்கொண்டும் இருக்கிறேன்.

தமிழ் வெகுஜன சினிமா என்பது இன்றைக்குப் பரீட்சைகள் செய்துபார்க்கும் களமல்ல. பொதுவாக அதற்கு அனுமதிக்கமாட்டார்கள். சில வெற்றி ஃபார்முலாக்களை வகுத்து வைத்திருப்பார்கள். அதற்குள் புதிய தோற்றத்தில் ஏதேனும் முயற்சி செய்ய முடியுமா என்பதுதான் கேள்வி. தவிர, தமிழ் சினிமா மேம்பட, உருப்பட, உலகின் உச்சிக்குச் செல்ல என்னைப் போன்ற எழுத்தாளர்களெல்லாம் விரும்பினால் போதாது. அது இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் கையில் இருக்கிறது. அந்த மாதிரி பிரமைகள், மயக்கங்கள் எனக்கு ஏதுமில்லை. எனக்கு எழுதத் தெரியும்.  நான் எழுதினால் தங்கள் படத்துக்கு நன்றாக இருக்கும் என்று யார் நினைக்கிறார்களோ, அவர்கள் அழைக்கிறார்கள். எனக்குத் திருப்தியாக இருக்கும் பட்சத்தில் எழுதுவேன். தொலைக்காட்சித் தொடர்கள் விஷயத்திலும் இதுதான் என் நிலை.

எழுத்தின் சகல சாத்தியங்களிலும் என்னால் செயல்பட இயலும் என்பதை எனக்கு நானே நிரூபித்துக்கொள்ள வேண்டிய அவசியம் எனக்கு இருக்கிறது. ஏனெனில், எழுத்தைத் தவிர வேறெதையும் என்னால் வாழ்வாக எண்ணிப் பார்க்க இயலாது.

10. தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

 • அதற்கென்ன, அமோகமாக இருக்கும். சமீப காலமாக நிறைய நல்ல படங்கள், நல்ல இயக்குநர்கள் தென்படத் தொடங்கியிருக்கிறார்கள். கதாநாயகர்களை அல்லாமல் கதையை நம்பி எடுக்கப்படும் திரைப்படங்கள் நிறைய வருகின்றன. அவை ஓடவும் செய்கின்றன. இது நிச்சயம் தயாரிப்பாளர்கள் தரப்பில் யோசிக்க வைக்கும். இன்றைய கதாநாயகர்களின் சம்பளத்தையெல்லாம் கேள்விப்பட்டால் ஒவ்வொருவருக்குத் தரும் பணத்தில் நாலு நல்ல படமெடுத்துவிடலாம் என்று தோன்றுகிறது.

சினிமா என்றல்ல, எந்தத் துறையிலுமே வீழ்ச்சி என்பது நிலையானதல்ல. தமிழ் சினிமா எத்தனைக்கெத்தனை மோசமான பாதாளங்களை நோக்கிச் சென்றதோ, அத்தனைக்கத்தனை உயரங்களுக்கும் செல்லும். இப்போதைய அமைப்பு, கட்டமைப்புகள், நம்பிக்கைகள், ஃபார்முலாக்கள் அனைத்துமே மாறக்கூடியவை. அவலங்களையும் தோல்விகளையும் வீழ்ச்சிகளையும் ஏமாற்றங்களையும் நிரந்தரம் என்று எண்ணி சோகப்பாடல் இசைத்துக்கொண்டிருப்பது என் இயல்பல்ல. அமீர், சசிக்குமார், மிஷ்கின், ராதாமோகன் போன்ற இன்றைய இயக்குநர்கள், ரஜினி, கமலைவிட முக்கியமான சினிமாக்காரர்கள் என்று எண்ணக்கூடிய ரசிகர்களும் உருவாகிவருவதை கவனியுங்கள்.

காலம் அனைத்தையும் மாற்றும். தமிழ் சினிமாவும் உலக சினிமாவுக்குச் சில உன்னதமான கொடைகளை வழங்கும். எனக்கு இந்த நம்பிக்கை நிச்சயம் உண்டு.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாசாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

 • பெரிய பாதிப்பு ஏதும் இராது என்றே கருதுகிறேன். முதலில் கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் பழகிவிடும். சினிமாவுக்கு அப்பாலும் மக்களுக்குப் பொழுதுபோக்கு அளிக்கும் சாதனங்கள் மிகுந்துவிட்டன. தவிரவும் சினிமா அலுத்துத்தான் ஒரு பெரும் கூட்டம் டிவி தொடர்களுக்கு மாறியது என்பதையும் நினைவுகூர்கிறேன்.

இதே வினாக்களை நான் மேலும் ஐவரிடம் எழுப்பவேண்டும் என்று பிரகாஷ் சொல்லியிருக்கிறார். எனவே அழைக்கிறேன்:

1. இட்லிவடை
2. ஜெயமோகன்
3. பத்ரி
4. நாராயணன்
5. எஸ். ராமகிருஷ்ணன்

18 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற