கோடம்பாக்கத்துக்குப் போன கோயிஞ்சாமி

ஒரு வழியாகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை குரோம்பேட்டையிலிருந்து இடம் பெயர்ந்து கோடம்பாக்கத்துக்குக் குடிவந்து சேர்ந்தேன். வீடு மாற்றியதற்கு முன் தினம் பேட்டையில் முழு நாள் மின்சாரம் கிடையாது. காலை ஆறு மணிக்குப் போன கரெண்ட், நள்ளிரவு பன்னிரண்டுக்கு வந்தது. எல்லா வேலைகளும் எனக்காக நாளெல்லாம் காத்திருந்து உறங்கத் தொடங்கியபோது, தட்டி எழுப்பி, மூட்டை கட்ட ஆரம்பித்தேன்.

என் நேரம். ஞாயிறு அதிகாலை இடியுடன் கூடிய பெருமழை பிடித்துக்கொண்டது. சரி, வருவது வரட்டும் என்று துணிந்து இறங்கி என் புத்தக அடுக்குகளின் அருகே சென்றபோது மலைப்பாக இருந்தது.

என்னிடம் சுமார் மூவாயிரம் புத்தகங்கள் இருந்தன. அரசியல், வரலாறு, இலக்கியம் மிகுதி. தத்துவம், ஆன்மிகம் கொஞ்சம். நண்பர்கள் அனுப்புவது, தெரிந்தவர்கள் தருவது, கவிஞர்கள் தலையில் கட்டுவது என்று ஒன்றிரண்டு வரிசைகள். சில மாதங்கள் முன்பு உள்ளுணர்வு எச்சரிக்கை செய்தபடியால், நான் படித்து முடித்த, திரும்பப் படிக்க விரும்பாத புத்தகங்களை மட்டும் தனியே எடுத்து, அவற்றை விரும்பிய சில நண்பர்களுக்கு அளித்துவிட்டிருந்தேன்.

அந்த வகையில் சுமார் ஆயிரம் புத்தகங்களைக் குறைத்திருந்ததால், மிச்சமிருந்தவற்றைச் சேர்த்துக் கட்டும் சுமை அதிகமில்லை.

மறுபுறம் என் மனைவி தனது பன்னிரண்டு வருடகால சேமிப்புகளை மூட்டை கட்டிக்கொண்டிருந்தாள். துணிமணிகள், பாத்திரங்கள், வீட்டு உபயோகப் பொருள்கள். பெரிய பெரிய பெட்ஷீட்டுகளில் வீட்டைப் பகுதி பகுதியாகத் திணித்து இழுத்து மூட்டை கட்டி உருட்டியபோது உண்மையிலேயே மிகுந்த மலைப்பாக இருந்தது. குழந்தையின் பொம்மைகள், விளையாட்டுச் சாமான்கள் மட்டுமே நான்கைந்து மூட்டைகள் ஆகிவிட்டன. ‘அவ கேக்கறதையெல்லாம் வாங்கிக் குடுக்காதிங்கன்னு சொன்னத கேட்டாத்தானே?’ என்று அலுப்பில் குற்றம் சுமத்தத் தொடங்கியவளிடம் ஒரு சிறு சண்டை போட்டிருக்கலாம். கேள்வியைத் திருப்பிப் போட்டால் தீர்ந்தது விஷயம். ஆனால் எனக்கும் அலுப்பாக இருந்தது.

குவிந்த பொருள்களின் எதிரே உட்கார்ந்து சற்றே யோசித்தால் ஓர் உண்மை தெரிகிறது. வாழ்வில் நாம் ஆர்வமுடன் சேகரிக்கும் பெரும்பாலான விஷயங்கள் ஒரு கட்டத்துக்குமேல் வேண்டாதவையாகி விடுகின்றன. நிரந்தர விருப்பத்துக்குரியவை வெகு சொற்பம். அதனாலென்ன? அந்தந்தக் கணங்களிலும் வாழ்ந்துதான் ஆகவேண்டியிருக்கிறது.

புது வீட்டில் [என்றுதான் சொல்லவேண்டும். பதினாறு வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட ஃப்ளாட்.] எனது புத்தகங்களை ஒழுங்காக, துறை வாரியாக அடுக்கித் தரும் பொறுப்பை என் நண்பன் கண்ணன் எடுத்துக்கொண்டான். ஒரே இரவு. மாயாஜாலம் மாதிரி முழு வீட்டில் என் ஓர் அறை மட்டும் அதன் பூரணத்துவத்தை எய்திவிட்டது. மற்ற இடங்களெல்லாம் எடுத்து வந்த மூட்டைகளால் நிரம்பியே இருந்தன. என் மனைவிக்குச் சற்று பொறாமை கலந்த வருத்தம்தான். இப்படியொரு தோழமை தனக்கில்லையே என்று எண்ணியிருக்கலாம். ஆயினும் இந்த நான்கு தினங்களில் ஓரளவு சரி செய்ய உதவியிருக்கிறேன். இன்னும் ஒன்றிரண்டு நாள் பிடிக்கும் என்று நினைக்கிறேன். கண்ணன் அளவுக்குச் செய்நேர்த்தி எனக்குக் கிடையாதென்றாலும் ஓரளவுக்கு சீரான ஒழுங்கு கடைப்பிடிக்க நினைப்பவன்தான் நானும்.

இன்னும் டெலிபோன் கனெக்‌ஷனுக்கு ஏற்பாடு செய்யவில்லை. பேப்பருக்குச் சொல்லவேண்டும். பாலுக்குச் சொல்லவேண்டும். இண்டர்நெட் இல்லை. கேபிள் டிவி மட்டும் இன்று காலை வந்துவிட்டது. போகோவும் டோராவும் இல்லாவிட்டால் குழந்தைக்கு இட்லி இறங்காது என்கிறபடியால்.

நேற்று மாலை பிராந்தியத்தில் ஒரு சிறு உலா சென்று வந்தேன். நல்ல, வசதியான இடம்தான். கைக்கெட்டும் தூரத்தில் எல்லாம் கிடைக்கிறது. ஐந்து கிலோ மீட்டர் நெருக்கத்தில் அலுவலகம் அடைந்துவிட முடிகிறது. குழந்தைக்குப் பள்ளிக்கூடமும் பக்கத்திலேயே அமைந்தது இன்னோர் அதிர்ஷ்டம். இவற்றின்மூலம் மிச்சம் பிடிக்கும் நேரத்தில் இன்னும் உருப்படியாக ஏதேனும் செய்ய முடிந்தால் சரி.

இப்போதைக்குத் துணி உலர்த்த பிளாஸ்டிக் கயிறு வாங்கவேண்டும். சமையல் எரிவாயு கைவசம் இருப்பது தீர்வதற்குமுன்னால் ஏஜென்சி மாற்ற ஏற்பாடு செய்யவேண்டும். குளியலறையில் வேலை செய்யாத ஹீட்டரை அதன் டாக்டரிடம் காட்டவேண்டும். அவசரத்தில் கட்டிப் பரணில் ஏற்றிய மூட்டைகளில் ஒன்றில் கேஸ் அடுப்பு லைட்டரும் ஷேவிங் ரேசரும் கலந்துவிட்டிருக்கின்றன. அவற்றைக் கண்டுபிடித்து எடுக்கவேண்டும். யார் யாருக்கு முகவரி மாற்றம் தரவேண்டுமென்று யோசித்துப் பட்டியல் போட்டு வங்கி தொடங்கி ரேஷன் அலுவலகம் வரை அலையவேண்டும்.

தீபாவளி வருகிறது, பாண்டிபஜார் போகவேண்டும் என்று மனைவி நினைவூட்டுகிறாள். பக்கத்திலிருக்கும் சேகர் எம்போரியமெல்லாம் கூடாதாம். ஐயோ, மீண்டும் துணி என்று அந்தராத்மா அலறுகிறது. மூட்டையில் திணிக்க இன்னும் கொஞ்சம்.

ஆனாலும் அந்தந்தக் கணங்களிலும் வாழ்ந்துதான் ஆகவேண்டியிருக்கிறது.

16 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற