காக்கை வளர்ப்பு

அந்தக் காகம் எப்போதிருந்து சிநேகமானது என்று சரியாக நினைவில்லை. எனக்கு மிகவும் பிடித்தவர்களாக இருந்து, இறந்துபோன என் தாத்தா அல்லது மாமனார் இருவரில் ஒருவராக அது இருக்கலாம் என்று என்றோ ஒருநாள் தோன்றியது. மறு பிறவியில் நம்பிக்கையில்லாதவன்தான். ஆனாலும் சமயத்தில் இப்படியும் தோன்றுவது, என்னைக் கேட்டுக்கொண்டல்ல.

சமையல் அறையை ஒட்டிய சிறு பால்கனியின் கைப்பிடிச் சுவரில் வந்து உட்காரும். எனக்குப் புரியாத மொழியில் ஒருசில வரிகள் பேசும். பசிக்கறதா என்று கேட்பேன். ஒருவேளை தாகமெடுக்கிறதோ என்றும் நினைப்பேன். ஒரு கரண்டி சாதம் எடுத்துச் சென்று கைப்பிடிச் சுவரின் ஓரத்தில் வைக்கப்போனால், தொடக்கத்தில் சட்டென்று பறந்து சன் ஷேடில் ஏறி உட்கார்ந்துகொள்ளும். நான் நகர்ந்த பிறகு வந்து சாப்பிடும். கதவருகே நின்று பார்ப்பேன்.

சில நாள்கள் ஆனபிறகு எனக்கு அந்த நடைமுறை கொஞ்சம் கோபம் தந்தது. ஒருநாள் சத்தம் போட்டேன். ‘உனக்காகத்தானே எடுத்துண்டு வரேன்? கிட்ட வரப்ப நகர்ந்துபோனா என்ன அர்த்தம்? என்னை என்ன வேலவெட்டி இல்லாதவன்னு நெனச்சியா?’

என் மகள் சிரித்தாள். ‘ஐயே, காக்காக்குப் போய் நீ பேசறது புரியுமா?’

‘புரியணும்’ என்றேன், அதற்கும் கேட்கும்படியாக. ‘தபார், இதான் உனக்கு லாஸ்ட் வார்னிங். இன்னொருவாட்டி நான் கிட்ட வரப்ப நகர்ந்துபோனன்னா, அதோட போயிடு. வேளைக்கு என்கிட்ட சாதம் எதிர்பார்க்காத.’

காக்கைக்குப் புரியும் என்று நான் நினைத்தது பிழையல்ல. அதற்குப் புரிந்தது! அடுத்தமுறை நான் சாதம் எடுத்துச் சென்றபோது அது பயந்து பறக்கவில்லை. அமர்ந்த இடத்திலேயே இருந்தது. நான் சாதத்தை அதன்முன் வைத்தேன். ‘சாப்பிடு’ என்று அன்போடு சொன்னேன். சாப்பாட்டு வேளையல்லாமல், மற்ற நேரங்களில் வந்து அமர்ந்தாலும், நான் கிட்டே போய் நின்றால் நகராது. அந்நியன் என்னும் அச்சம் காட்டாது.

என் மகளுக்கு இக்காட்சி வியப்பாக இருந்தது. ஓரிரு நாள்களில் அவளும் காகத்துடன் பேசத் தொடங்கினாள். அது வந்து உட்கார்ந்து ஒரு சத்தம் போட்டதும், ‘அம்மா, காக்காக்கு பசி வந்துடுத்து’ என்று அறிவிப்பாள்.

காகத்துக்கு சாதம் வைப்பது என்பது எல்லார் வீடுகளிலும் செய்வதுபோன்ற சம்பிரதாய ஒரு கரண்டி வெள்ளைச் சோறல்ல என் வீட்டில். நான் சாப்பிடுகிற அனைத்தும் அதற்கும் உண்டு என்று யாரும் அறிவிக்காமலேயே ஏற்பாடானது. குழம்பு, ரசம், பொறியல், கூட்டு, பச்சடி, குடைமிளகாய் சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், மாம்பழம், வாழைப்பழம், சுண்டல், மசால்வடை – இன்னதுதான் என்றில்லை. மாவா தவிர மற்ற அனைத்தும் அதற்கும் உண்டு. ரேஷன் கார்டில் பெயர் சேர்ப்பது ஒன்றுதான் இன்னும் மிச்சம்.

பிராந்தியத்தில் உலவும் ஏழெட்டு காகங்களில் எங்கள் காகத்தை என்னால் மிகச் சுலபமாக அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது இப்போதெல்லாம். அது வந்து உட்காருவதில் காட்டுகிற சுவாதீனம் மற்ற காகங்களிடம் இருப்பதில்லை. நம்ம வீடுதான், சங்கோஜப்படாம வாங்க என்று அது மற்றவர்களிடம் சொல்லி அழைத்துவரும் என்று நினைக்கிறேன். நாலைந்து நண்பர்களுடன் அது சாப்பிட்டு முடிக்கும்போது, ‘நல்லாருந்ததா?’ என்று நான்   கேட்கத் தவறுவதில்லை. ஓ சூப்பர் என்று கத்திவிட்டுப் பறந்து போக அதுவும் தவறுவதில்லை.

நேற்றுத்தான் கவனித்தேன். பால்கனியில் ஒரு குட்டி பக்கெட் நிறைய நீர் நிறைத்து வைக்கப்பட்டிருந்தது. அட என்றேன், வியப்பாக. ‘தெரியாதா? வெயில் காலம். தாகம் எடுத்தா அது இங்கதான் வரும்’ என்றாள் மனைவி.

சொல்லிவைத்த மாதிரி அடுத்த ஐந்து நிமிடத்தில் காகம் வந்துவிட்டது. கல் போட்டு மேலெழுப்ப அவசியமில்லாமல், நிரம்பித் ததும்பும் பக்கெட் தண்ணீர். விளிம்பில் உட்கார்ந்துகொண்டு ஆனந்தமாக அது தண்ணீர் குடிப்பதைப் பார்க்கவே சந்தோஷமாக இருந்தது. வரும்போது மூக்கில் ஒரு பெரிய குச்சியைக் கவ்வி எடுத்து வந்திருந்ததை கவனித்தேன். அதைக் காலடியில் இடுக்கிக்கொண்டுதான் தண்ணீர் குடித்துக்கொண்டிருந்தது.

‘அதென்ன குச்சி?’ என்றேன்.

‘வீடு கட்டப்போறது போலருக்கு. இடம் தேடிண்டிருக்கு. டெய்லியே ஒரு குச்சியோடதான் இப்பல்லாம் வருது’ என்றாள் என் மனைவி.

என் தாத்தாவோ, மாமனாரோ இறுதிவரை தமக்கென்று சொந்தமாக ஒரு வீடு கட்டாமலேயே போய்ச் சேர்ந்துவிட்டார்கள். இது கட்டி கிரகப்பிரவேசம் செய்தால் கண்டிப்பாக எனக்கு அதைச் சுட்டிக்காட்டாமல் இராது என்று உறுதியாகத் தோன்றியது.

மறுபிறவி குறித்த என் சந்தேகம் அல்லது அவநம்பிக்கை அன்று நிச்சயமாகத் தீர்ந்துவிடும். எப்படியும் ஆடி முடிந்துதான் நாள் குறிக்கும் என்று நினைக்கிறேன்.

45 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற