காட்டுமிராண்டிக் கல்லூரி

படம் நன்றி: தினத்தந்தி

இரான், ஆப்கனிஸ்தான் போன்ற தேசங்களில் கல்லால் அடித்து, உடல் உறுப்புகளை வெட்டி எடுத்து தண்டனை நிறைவேற்றப்பட்ட சில சம்பவங்கள் நடந்தபோது காட்டுமிராண்டிகள் என்றும் நாகரிகம் அறியாத அடிப்படைவாத அயோக்கியர்கள் என்றும் நாம் உள்பட உலகமே கண்டனம் தெரிவித்த சம்பவங்கள் அனைவருக்கும் நினைவிருக்கலாம்.

நேற்றைக்கு, சென்னை சட்டக்கல்லூரி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற கலவரத்தின் சில காட்சிகளை வீடியோ படமாகப் பார்த்தபோது, நமது  இளைஞர்கள் ஒன்றும் பெரிய நாகரிக வளர்ச்சியடைந்துவிடவில்லை என்று தோன்றியது.

தனியாக மாட்டிக்கொண்ட ஒரு மாணவனை கல்லூரி வாசலில் அடித்துத் தாக்கி, கீழே வீழ்த்தி மாற்றி மாற்றி நான்கைந்து மாணவர்கள் உருட்டுக் கட்டையால் அடி அடி என்று அடித்து, அவன் மயங்கிவிட்ட பின்பும் நிறுத்தாமல் ரத்தம் பெருக்கெடுக்குமளவுக்குத் தாக்கித் தம் வெறியைத் தீர்த்துக்கொண்டதும், இதனைச் சற்றுத் தள்ளி இருந்து காவல் துறையினர் வெறுமனே பார்த்துக்கொண்டு நின்றதும் மிகுந்த அருவருப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது.

தாக்குதலுக்கு உள்ளான மாணவர்களில் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள்.

இனி இது தொடர்பாகச் சில கண் துடைப்பு விசாரணைகள், கோஷங்கள் இருக்கும். பின்பு மறக்கப்பட்டுவிடும். ஆனால் இப்படியொரு அருவருப்பான சம்பவம் சட்டம் படிக்கும் மாணவர்களிடையே நடந்தேறியிருப்பதற்கு மாநிலமே வெட்கித் தலைகுனிய வேண்டும். நமது கல்வித்திட்டங்கள் மாணவர்களைக் கொண்டு சேர்க்கும் எல்லை இதுதானா?

இந்த மட்டரகமான சம்பவத்துக்கான சரியான காரணம் இன்னும் யாராலும் சொல்லப்படவில்லை. சட்டக்கல்லூரி மாணவர்களிடையே அடிக்கடி மோதல்கள் நடப்பதும் அதற்கு உள்ளுரை காரணமாக சாதி அரசியல் இருப்பதும் அனைவருக்கும் தெரிந்த விஷயம். இம்முறையும் சம்பவத்துக்கு ஏதோ சாதீயக் காரணம்தான் என்று சொல்லப்படுகிறது.

வருத்தத்துக்குரிய விஷயம், இப்படியொரு அதிர்ச்சிகரமான சம்பவம் இரண்டு மணிநேரம் இடைவிடாமல் நடந்து, தொலைக்காட்சிகள் விதவிதமான கோணங்களில் நிறுத்தி நிதானமாகப் படம் பிடித்திருக்கின்றன. சும்மா வேடிக்கை பார்க்கும் போலீசாரையும் சேர்த்தேதான் அவர்கள் படம் பிடித்திருக்கிறார்கள். குறைந்தபட்சம் கேமராவுக்காவது முகத்தை மறைத்துக்கொள்ள எந்தப் போலீசாரும் முயற்சி செய்யவில்லை.

என்றால் என்ன அர்த்தம்? திட்டமிட்டு, முன்னேற்பாடுகளுடன், ஒரு முடிவுடன் இந்தச் சம்பவம் நடந்தேற அவர்கள் உதவி செய்திருக்கிறார்கள் என்பதைத் தவிர வேறென்ன? கேட்டால், யாரும் புகார் கொடுக்கவில்லை, கொடுத்தால்தானே தடுக்கமுடியும் என்று வேறு கேட்டிருக்கிறார்கள்.

ஒப்புக்கு இரண்டு காவல் துறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்திருக்கிறது தமிழக அரசு. வேறு சில சம்பந்தப்பட்ட காவலர்களை  பாதுகாக்கும் பொருட்டு அவசர அவசரமாக வேறு இடங்களுக்கு மாற்றல் அளித்திருக்கிறார்கள்.

முற்றிலும் அருவருப்பான, வெறுக்கத்தக்க, அயோக்கியத்தனமான, காட்டுமிராண்டித்தனமான, கேவலமான, இந்தச் சம்பவத்துக்குக் காவல் துறை துணை போயிருப்பது வெட்டவெளிச்சமாக இருக்கும் நிலையில், காவல் துறையின் முகத்துடன் தமிழக அரசேதான் இதனை நடத்தியிருக்குமோ என்றும் சந்தேகிக்கத் தோன்றுகிறது.

உடனடியாக ஒட்டுமொத்த கல்லூரி நிர்வாகத்தையும், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளையும் பணிநீக்கம் செய்து, சம்பந்தப்பட்ட மாணவர்களிடையே உரிய விசாரணை நடத்தி, விவரங்களை வெளிப்படையாக அறிவிப்பதன் மூலமும், இன்னுமொரு முறை சட்டக்கல்லூரி வளாகத்தில் இப்படியொரு சம்பவம் நிகழாத வண்ணம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமும் மட்டுமே தமிழக அரசு தன்மீது ஏற்பட்டிருக்கும் சந்தேகத்தைத் துடைக்க இயலும்.

தொடர்புடைய பிற பதிவுகள்: வினவு குழுமம் | ஆர். முத்துக்குமார் | இட்லிவடை

24 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற