இரண்டாம் பாகம் முற்றும்

நண்பர்களுக்கு வணக்கம். செய்தியாக நான் சொல்லவேண்டியதை வதந்தியாகச் சிலர் முந்திக்கொண்டு வெளிப்படுத்திவிடத் துடிப்பதை ஒருபுறம் ரசித்தபடி இதனை எழுதத் தொடங்குகிறேன். மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை. அவை இயல்பானவை, இயற்கையானவை. ஆம். கிழக்கில் நாளை முதல் நான் இல்லை. பரஸ்பர நட்புணர்வு, புரிந்துணர்வு எதற்கும் பங்கமின்றி, இன்று விலகினேன்.

சந்தேகமின்றி, கிழக்கு என் வாழ்வின் இரண்டாம் பாகம். சரியான இலக்கு, தெளிவான திட்டமிடல், சலிக்காத உழைப்பு, எடிட்டோரியலில் சற்றும் தலையிடாத நிர்வாகம் வாய்க்குமானால் எத்தனை விரைவில் பதிப்புத் துறையில் ஒரு பெரிய வெற்றியைக் காணலாம் என்பதற்கு கிழக்கு ஓர் உதாரணம். நூறு வருடங்கள் கடந்த நிறுவனங்கள் இங்கே இருக்கின்றன. எட்டு வருடங்களில் கிழக்கு பேசப்பட்டதுபோல் வேறு எந்த நிறுவனமும் பேசப்பட்டதில்லை. புனைவல்லாத எழுத்து என்னும் பிரிவில் நாங்கள் செய்து பார்த்த பரீட்சைகள் பெற்ற வெற்றிகள் மிகப் பெரியவை. பல தமிழ் பதிப்பாளர்களை இந்தப் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவை. தாமும் செய்யலாமே என்று எண்ண வைத்தவை.

என் எண்ணங்களுக்கு பத்ரி அளித்த ஆதரவும் என் சகாக்கள் கொடுத்த ஒத்துழைப்புமே இதற்கு மூலக்காரணம்.

தனிப்பட்ட முறையில் எனக்குச் சில இலக்குகள் இருக்கின்றன. சில பொறுப்புகளும். அவ்வண்ணமே, இன்னும் கைப்பிடித்துச் செல்லும் பருவத்தில் கிழக்கும் இல்லை. ஒரு புயலாகத் தமிழ் பதிப்புத் துறையில் நுழைந்த கிழக்கும் தனது அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர வேண்டிய தருணம் இது. இட மாற்றம் என்னும் மிகப்பெரிய, சிக்கல் மிக்க பணியில் கிழக்கு இருந்தபோது இழுத்து மூடிவிட்டார்கள் என்றே பேசுமளவுக்கு நல்லவர்கள் நிறைந்த தேசமாக இது இருக்கிறது. ஓர் இடைவெளிக்குப் பிறகு இன்று புதிய அலுவலகத்துக்குச் சென்றேன். பழைய அலுவலகத்தைக் காட்டிலும் அழகாக, கச்சிதமாக இருக்கிறது. புத்தகக் கிடங்கும் புதிய முகவரிக்கு மாறியிருக்கிறது. எதிர்வரும் ஜனவரி சென்னை புத்தகக் கண்காட்சியில் வழக்கமான துடிப்புடன் கிழக்கு இயங்கவே போகிறது.

அவ்வண்ணமே, நான் விலகுகிறேன் என்ற செய்தி பரவத் தொடங்கியதுமே, எனக்கும் பத்ரிக்கும் மூன்றாம் உலக யுத்தம் மூண்டுவிட்டதாகவும் பேசினார்கள். பதிப்புலகம், பத்திரிகை உலகம், மீடியா முழுதும் இது பேசப்பட்டபோது எனக்கு வியப்பாகத்தான் இருந்தது. யோசித்துப் பார்த்தால், இந்த எட்டாண்டு காலத்தில் ஒருமுறைகூட நாங்கள் முறைத்துக் கொண்டதோ, சண்டையிட்டுக்கொண்டதோ இல்லை. அபிப்பிராய பேதங்கள் உண்டு. ரசனை மாறுபாடுகள் உண்டு. விருப்பங்களும் தேர்வுகளும் முரண்பட்டதுண்டு. அவை எதுவும் நட்புக்கு இடையூறாக இருந்ததில்லை. இன்று அலுவலகம் சென்றபோதுகூட இந்த வதந்திகளைப் பற்றித்தான் வெகுநேரம் பேசினோம். என் நோக்கங்களும் செயல்பாடுகளும் இலக்கும் அவருக்குத் தெரியும். அவரது இலக்கு எனக்கும் தெரியும். நான் இல்லாவிட்டால் கிழக்கோ, கிழக்கு இல்லாவிட்டால் நானோ பெரிய பாதிப்புக்கு உள்ளாகப் போவதில்லை என்பது தெளிவாகத் தெரிந்ததால்தான் இம்முடிவு.

என் வாழ்வில் மறக்கவே முடியாத பல நல்ல நண்பர்களைக் கிழக்கு எனக்குக் கொடுத்திருக்கிறது. சேல்ஸ் மானேஜர் மணிவண்ணன், மார்க்கெடிங் பிரிவில் பிரசன்னா, மணிகண்டன் ஆகிய மூவரைக் குறிப்பாகச் சொல்லவேண்டும். ரசனையும் ஆர்வமும் துடிப்பும் மிக்க இந்நண்பர்கள் பல சந்தர்ப்பங்களில் என் தினங்களை வண்ணமயமாக்கியிருக்கிறார்கள். ஒரு சிறு வட்டத்துக்குள் பேசப்பட்டுக்கொண்டிருந்த என் புத்தகங்களை மிகப்பெரிய வாசகர் வட்டத்துக்கு இவர்கள் எடுத்துச் சென்றிருக்கிறார்கள். ஒரு சரியான எடிட்டர் என்றால் அவனுக்குள் முப்பத்தைந்து சதவீதம் ஒரு நல்ல விற்பனையாளனும் இருக்கவேண்டும் என்பார்கள். மக்களின் விருப்பத்தையும் விழைவையும் பொருட்படுத்தாமல், நான் கொடுப்பதே புத்தகம் என்று இருந்தால் ஒருபோதும் வெற்றி காண முடியாது. [இது படைப்பிலக்கியத்துக்குப் பொருந்தாத விதி.] அவ்வகையில் எனக்குக் களத்தில் மக்களின் விருப்பங்கள், தேவைகள், ஆர்வங்கள் எப்படி இருக்கின்றன என்று எடுத்துச் சொல்லிப் புரிய வைத்தவர்கள் இவர்களே.

ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. திடீரென்று ஒரு நாள் – அது ஒரு டிசம்பர் மாதம் – ஒரு மாதத்துக்குள் உங்களால் ஹிட்லரைப் பற்றி ஒரு புத்தகம் தர முடியுமா என்று மணிவண்ணன் கேட்டார். என்றோ செத்த கெட்டவனுக்கு இன்றென்ன வாழ்வு என்று எனக்குப் புரியவில்லை. உண்மையில், பெரிய விருப்பம் இல்லாமல், வேறு யாரையும் எழுதச் சொல்ல அவகாசமில்லாமல் நானே எழுதி முடித்தேன். சொல்லி வைத்த மாதிரி அந்த ஜனவரி புத்தகக் கண்காட்சியில் பிசாசு வேகத்தில் விற்றுத் தீர்ந்தது அப்புத்தகம். இன்றுவரை என்னுடைய சூப்பர் செல்லர்களுள் அது முதல் மூன்று இடங்களில் நிற்கிற புத்தகம். நன்றி, மணிவண்ணன்.

ஹிட் புத்தகங்களைப் பற்றிப் பேசும்போது சோம. வள்ளியப்பனையும் சொக்கனையும் குறிப்பிடாமல் இருக்க முடியாது. நூற்றுக்கணக்கான புதிய எழுத்தாளர்களைக் கிழக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் சிறந்தவர்கள். ஆனால் இந்த இரண்டு எழுத்தாளர்களும் ஒரு பத்திரிகையாளனுக்குரிய வேகமும் கூர்மையும் தீவிரமும் பெற்றவர்களாக அமைந்தது கிழக்குக்கு – குறிப்பாக, எனக்குக் கிடைத்த பெரிய வரம் என்பேன். எத்தனை கஷ்டமான சப்ஜெக்ட் என்றாலும் சரி. எத்தனை குறைவான கால அவகாசம் என்றாலும் சரி. அனைத்துப் பணிகளையும் தள்ளி வைத்துவிட்டு எழுத்தில் இவர்கள் காட்டிய தீவிரமும் அக்கறையும், நேர்த்திக்கு மெனக்கெட்ட பாங்கும் என்னால் மறக்க முடியாதவை. என்னைப் போலவே தொடக்க காலம் முதல் கிழக்குடன் சம்பந்தப்பட்டவர்கள் இவர்கள். என் பல யோசனைகளுக்குச் செயல்வடிவம் கொடுத்தவர்கள். நான் நன்றி சொல்லவேண்டிய மாபெரும் பட்டியலில் முதலில் இருப்பவர்கள். இவர்கள் இருவரையும் நான் எப்படியெல்லாம் பாடு படுத்தியிருக்கிறேன், கடிந்துகொண்டிருக்கிறேன், மிரட்டி வேலை வாங்கியிருக்கிறேன் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. என்பால் கொண்ட அன்பு மற்றும் நம்பிக்கையினால் மட்டுமே என்னோடு ஓடிவந்தவர்கள். நினைக்கும்போது நெகிழ்ச்சி மட்டுமே நிற்கிறது. இந்த இரண்டு பேருக்குச் சமமான ஆற்றல் மிக்க அபுனை எழுத்தாளர்கள் வருவார்களா என்பதுதான் ஒவ்வொரு புதிய ஆசிரியருடன் பணியாற்றும்போதும் என் ஒரே எதிர்பார்ப்பாக இருந்தது. நன்றி, இருவருக்கும் – மற்றவர்களுக்கும்.

இறுதியாக என் எடிட்டோரியல் நண்பர்கள். என்ன சொல்ல? ஒன்று சொல்லலாம். மருதன், முகில், முத்துக்குமார், கண்ணன் அளவுக்குத் தகுதியும் திறமையும் வாய்ந்த இளைஞர்கள் அநேகமாக இன்று தமிழ் பத்திரிகை உலகில் இல்லை. இயல்பான திறமையைப் படிப்படியாக வளர்த்துக்கொண்டு அமைதியாகச் சாதித்துக்கொண்டிருக்கிறார்கள். படித்தது என்னென்னவோ என்றாலும் எழுத்தார்வத்தால் இந்தத் துறைக்கு வந்தவர்கள். என்னை என் அத்தனை நிறைகுறைகளுடன் சகித்துக்கொண்டு, தொழில் கற்று, முன்னேறியவர்கள். இனி கைப்பிடித்து அழைத்துச் செல்ல அவசியமில்லை. அவர்களால் சுயமாக அனைத்தும் செய்ய முடியும். என்னை உருவாக்கி, ஆளாக்கியதில் என் ஆசிரியர் இளங்கோவனுக்கு எத்தனை பெருமிதம் இருந்திருக்கும் என்பதை இந்த நாலு பேரை நான் உருவாக்கியபோது மனப்பூர்வமாக உணர்ந்தேன். தெரிந்ததைச் சொல்லிக்கொடுப்பது ஒரு சுகம். சரியான மாணவர்கள் அமைவது கொடுப்பினை. நான் கொடுத்துவைத்தவன்.

கிழக்கின் முதல் ஊழியனாக, அதற்கு ஒரு முகமும் அகமும் வழங்கியதில் எனக்கு நியாயமான பெருமிதம் எப்போதும் இருக்கும். ஆனால் இதற்கு உறுதுணையாக இருந்த பத்ரிக்கும் பிற நண்பர்களுக்குமான எனது நிரந்தர நன்றிக்குப் பிறகுதான் அது.

அடுத்து என்ன செய்யப்போகிறேன் என்ற கேள்வி அனைத்துத் தரப்பிலிருந்தும் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. பதில் சொல்லச் சற்று அவகாசம் எடுத்துக்கொள்கிறேன். யோசிக்காமல் இல்லை. தீர்மானிக்காமல் இல்லை. என் மனைவி, மற்றும்  சில நெருங்கிய நண்பர்களுடன் விவாதிக்காமலும் இல்லை. சொல்வதற்கு மட்டுமே அவகாசம். இந்த சஸ்பென்ஸ் கூட இல்லாவிட்டால் வாழ்க்கையில் சுவாரசியம் ஏது?

நன்றி, அனைவருக்கும்.

67 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற