எழில்மிகு சிங்காரம்

சென்னையை சிங்காரச் சென்னை என்று சொல்லக்கூடாது; எழில்மிகு சென்னை என்றுதான் சொல்லவேண்டும் என்று சமீபத்தில் சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா சொல்லியிருக்கிறார்.  இன்னும் கொஞ்சம் நல்ல தமிழ் என்ற வகையில் இதை வரவேற்பதில் யாருக்கும் பிரச்னை இருக்க முடியாது. ஆனால் இந்த சிங்காரம், எழில் போன்றவர்கள் சென்னையில் எங்கே வசிக்கிறார்கள் என்றும் சொல்லியிருக்கலாம்.

சமீபத்தில் ஓரிரு நாள்கள் விட்டுவிட்டுக் கொஞ்சம் மழை அடித்தது. ஓரிரு சமயங்களில் கொஞ்சம் நல்ல மழையே அடித்தது. சென்னையின் நூற்றாண்டுகாலச் சிறப்புகளில் ஒன்று, மழைக்கு முன் தினம் வரை சாக்கடைகள் ஒழுங்காக இருக்கும். மழை பிடித்துக்கொண்டதோ, உடனே தன் கதவுகளை இழுத்து மூடிக்கொண்டுவிடும். இதில் கவனிக்கவேண்டிய சங்கதி ஒன்று உண்டு.

ஒரு கதவு மூடினால், ஒரு ஜன்னல் திறக்கும் என்பது இயற்கை விதி. அவ்வகையில் ஒரு பக்கம் மூடிக்கொள்ளும் சாக்கடை, வேறு ஏதாவது ஒரு பக்கத்தில் பொத்துக்கொண்டு பாதாள லோகத்து சரஸ்வதி நதி மாதிரி பொங்கிப் பீறிட்டுவிடும். அவ்வமயம் பெய்யெனப் பெய்யும் மழையானது, இந்த ஜன்னல் வைத்த சாக்கடைகளுடன் இரண்டறக் கலந்து உள்ளே போக வழியற்று, சாலைப் பயணிகளை கதக்களி ஆடவைத்துவிடுவது வழக்கம்.

சென்றவாரம் அப்படியான ஒரு நல்ல மழை நாளில் தியாகராயநகர் ரங்கநாதன் தெருவில் இருந்தேன். எனக்கு நினைவு தெரிந்து அந்தப் பிரம்மாண்டமான வீதி என்றும் தார் கண்டதில்லை. ஆனால் சீர்மிகு சென்னையின் சரித்திரத்தில் அதற்கு ஒரு தனி அத்தியாயம் நிச்சயமாக உண்டு. எத்தனை பெரிய பெரிய கடைகள், எத்தனை சிறிய சிறிய வியாபாரங்கள், எத்தனை ஆயிரம் மனிதர்கள், எத்தனை கோடிப் பணம்!

அந்த வீதியில் நடப்போர் ஆளுக்கு ஒரு காசு போட்டால்கூட தங்கத்தால் பாதை போட்டுவிடலாம். ஆனால் நடக்குமோ? சத்தியமாக நடக்காது. எழில்மிகு சென்னையின் சிறப்பான அடையாளம், குளமாகும் சாலைகளும் வளமான சாக்கடையும்.

ஆச்சா? நான் ரங்கநாதன் தெருவில் நடந்துகொண்டிருந்தேன். சங்ககால மகளிர் மாதிரி குனிந்த தலை நிமிராமல், தரையில் எங்கெல்லாம் கால் வைக்க மண் திட்டுகள் இருக்கின்றன என்று பார்த்துப் பார்த்து ரைட்டா, ரைட்டு – ரைட்டா, ரைட்டு என்று பாண்டியாடிப் பறந்துகொண்டிருந்தேன் என்று சொல்வதுதான் நியாயம். ஒரு மண் திட்டுக்கும் அடுத்த மண் திட்டுக்கும் இடையே இருந்த மழைக்குளத்தில் விழுந்துவிடக்கூடாது என்பதில் மட்டுமே என் முழுக் கவனமும் இருந்தது. தவிரவும் அப்படி இசகு பிசகாக விழ நேர்ந்துவிட்டால், ஆர்க்கிமிடிஸ் தத்துவப்படி வெளியேறும் குளத்து நீர் அக்கம்பக்கத்தில் என்னைப் போல் டான்ஸ் ஆடிச் சென்றுகொண்டிருப்போர் அத்தனை பேர் மீதும் அபிஷேக தீர்த்தமாகப் பொழிந்துவிடும்.

சென்றிருக்கவேண்டாம்தான். ஆனால் வந்துவிட்டபிறகு இதையெல்லாம் எண்ணிக்கொண்டிருப்பது வியர்த்தம். எனவே, விழாமல் நடக்கவேண்டும் என்ற சிந்தனையை தியானமாக்கிக்கொண்டு, ஜிங்கு ஜிங்கென்று தரை தெரிந்த இடங்களிலெல்லாம் ஒரு டார்ஜான் போல் தாவித்தாவி நடந்துகொண்டிருந்தேன். ஒரு கையில் பெரிய பார்சல். மறு கையில் வண்டிச் சாவியும் ஹெல்மெட்டும். எனக்கும் என் வண்டிக்குமான தொலைவு சுமார் நூறு அடியாக இருக்கும் என்று நினைக்கிறேன். வெற்றிகரமாக இலக்கைத் தொட்டு வாகனத்தில் ஏறி அமர்ந்துவிட்டால், பிறகு பிரச்னை இராது. ஆனால் அதற்குள் ஏதும் ரசாபாசமாகிவிடாதிருக்க வேண்டும்.

சட்டென்று சட்டைப் பையில் இருந்த மொபைல் போன் அலறத் தொடங்கியது. அனிச்சையாக அதை எடுத்து, சூழல் மறந்து காதில் வைத்துவிட, வந்தது வினை.

‘அலோ?’

‘டே, நல்லாருக்கியா?’

டேயென்று கூப்பிடக்கூடியவர்கள் யார் யார் என்று யோசித்தேன். பரிச்சயமில்லாத எண்ணாகவும் இருந்தது.

‘நீங்க யார் பேசறிங்க?’

‘அடச்சே. நீயெல்லாம் ஒரு ஃப்ரெண்டாடா? கஷ்டப்பட்டு உன் நம்பரைக் கண்டுபிடிச்சி கூப்பிட்டிருக்கேன். நான் யாருன்னு சொல்லலன்னா நீ ஒரு நல்ல நண்பனே இல்லை.’

அடக்கடவுளே, இப்படியொரு சோதனையைக் கதக்களி மேடையிலா நீ எனக்கு வழங்கவேண்டும்?

‘சார், பார்த்துப் போங்க சார். பை இடிக்குது பாருங்க’ என்றார் பக்கத்தில் வந்துகொண்டிருந்த சக நர்த்தன வித்தகர்.

சட்டென்று சுதாரித்து, என் ஒரு கையில் இருந்த சுமை மிகுந்த பையை வேகமாக இழுக்க, எதிரே போய்க்கொண்டிருந்தவரின் முதுகில் பம்ம்மென்று ஒரு மோது.

அவர் திரும்பி முறைத்தார். ‘சாரி சார்’ என்றேன் பதற்றத்துடன். பதற்றத்தின் பின் இணைப்பாக அந்நேரம் என் இன்னொரு கையில் இருந்த ஹெல்மெட் சாலை நீரில் விழுந்து, ஒரு மூன்று சக்கரத் தள்ளுவண்டிக்காரன் அதன் ஒரு பக்கத்தில் ஓர் இடியும் கொடுத்து நகர்ந்துகொண்டிருந்தான்.

கணப்பொழுதுதான். ஹெல்மெட்டின் உள்புறம் தண்ணீர் பட்டுவிடக்கூடாதே என்ற பயத்தில் வேகமாகக் குனிந்து அதை எடுக்க, திரும்பவும் என் சுமைப்பை, முன்னால் சென்றவர் மீது ஒரு மோது மோதியது. நிச்சயமாகத் தமிழ் சினிமா காணாத சேற்றுச் சண்டைக் காட்சி ஒன்று அரங்கேறிவிடும் என்று தோன்றியது. பையைச் சரேலென்று இழுத்துத் தலைக்கு மேலே பிடித்துக்கொண்டேன். அவரிடம் திரும்பவும் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு, அவர் நாலு எட்டு போவதற்காக, நின்ற இடத்தில் அப்படியே ஒரு கோபிகை தயிர்க்குடத்துடன் நிற்பதுபோல் நின்றேன்.

இதற்குள் தொலைபேசியில் அழைத்த அந்த அடையாளம் தெரியாத வாடா போடா நண்பருக்குக் கோபம் வந்துவிட்டது. ‘ஏண்டா, நான் பேசிட்டே இருக்கேன், பதிலே சொல்லமாட்டேங்கற? அவ்ளொ பெரியவனாயிட்டியா நீ? நல்லதுப்பா. நாந்தான் பைத்தியக்காரன் மாதிரி பழைய ஃப்ரெண்ட் ஆச்சே, மறந்திருக்க மாட்டேன்னு நினைச்சிட்டேன்’ என்றெல்லாம் சுய இரக்கத்துடன் புலம்ப ஆரம்பித்திருந்தார்.

‘நீங்க யாருன்னு தெரியல. தயவுசெஞ்சு சொல்லிட்டுப் பேசுங்க. இல்லைன்னா, ஒரு அஞ்சு நிமிஷம் அவகாசம் குடுத்திங்கன்னா, நான் ஒரு பாதுகாப்பான இடத்துக்குப் போய் நின்னு பேசறேன்’ என்று சொன்னேன்.

சற்றும் எதிர்பாராவிதமாக ஒரு நல்ல கெட்டவார்த்தை சொல்லி போனை வைத்துவிட்டார் அந்த நண்பர்.

நான் அந்த நூறடி தூரத்தைக் கடந்து, என் வாகனத்தை அடைந்தபோது ஒரு போர்க்களத்திலிருந்து திரும்பிய உணர்வு ஏற்பட்டது. கால் சட்டையில் முக்கால் திட்டம் நனைந்திருந்தது. செருப்புக்குள் சேறு புகுந்துவிட்டிருந்தது. அது கருப்பாகவும் இருந்தது கலவரத்தைத் தூண்டியது. இதை மேற்கொண்டு அணிந்து செல்லலாமா, எங்காவது விட்டுவிட்டுப் போய்விடலாமா என்று யோசனை வந்தது. கழுவி அணிவதற்கான வசதி வாய்ப்புகள் ஏதும் இல்லாத பிரதேசம் என்பதால் அந்த யோசனை. அதுசரி. கழற்றி வீச மட்டும் இடமிருக்கிறதா என்ன?

கண்ணை மூடிக்கொண்டு வண்டியை ஸ்டார்ட் செய்து ஆக்சிலேட்டரை அழுத்தியதுதான் தாமதம்.

எதிரே கண்ணெட்டும் தொலைவு நிறைந்திருந்த நீர் நிலையில் சில பெரும்பள்ளங்களும் உண்டு என்பது சிற்றறிவில் அப்போது தட்டுப்பட்டிருக்கவில்லை. எனக்கு முன்னால் சென்றிருந்தவரிடம் நான் வாங்கியிருக்க வேண்டிய அடியை என் வண்டி இங்கே வாங்கியது.

பம்ம்ம்.

எப்படியும் அந்தப் பள்ளம் முக்கால் அடி ஆழத்துக்கு இருக்கும். முன் சக்கரம் விழுந்துவிட்டது. ஆக்சிலேட்டரைத் திருகி எழுப்பக்கூடியதாக இல்லை. இறங்கித்தான் இழுக்க வேண்டும்.

இறங்குவதற்குத் தரை வேண்டும். ஆனால் ஒரு சாண் உயரத்துக்குச் சாலை முழுதுமே சாக்கடை நீராக இருந்தது. அதிலும் சளைக்காமல் போக்குவரத்து நடைபெற்றுக்கொண்டுதான் இருந்தது. வேறு வழியில்லை. இறங்கி, வண்டியை இழுத்தேன். அதற்குள் பொறுக்காத வாகனாதி வல்லுநர்கள் பின்னாலிருந்து ஹார்ன் அடிக்க ஆரம்பித்தார்கள். நட்ட நடுச் சாலையில் சுமார் மூன்று நிமிடங்களுக்கு ஒரு மோனோ ஆக்டிங் போட்டி நடத்தி, நான் மட்டும் கலந்துகொண்டு தங்கக் கோப்பையைப் பரிசாகப் பெறுவதாக மனத்துக்குள் ஒரு காட்சி உதித்தது.

இந்தக் களேபரங்களில் வண்டியில் காலுக்கு அடியில் நான் வைத்திருந்த சுமைப் பை வேறு ஓரிருமுறை கீழே விழுவதுபோல் நடித்து என் பிழைப்பில் மண்போடப் பார்த்தது. ஒரு வழியாக வண்டியை வெளியே எடுத்து ஓரமாகத் தள்ளிக்கொண்டுபோய் ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி, பத்து நிமிடங்களுக்கு மூச்சு விட்டுக்கொண்டேன். யாரையாவது கண்டபடி திட்டித் தீர்த்தால் நன்றாயிருக்கும் என்று தோன்றியது. எழில் மிகு சென்னையில் யாரைத் திட்டுவது?

எனவே, என்னை போனில் அழைத்த அந்த அடையாளம் தெரியாத ஆசாமியின் எண்ணுக்கு டயல் செய்தேன். ஸ்விச்ட் ஆஃப் என்று பதில் வந்தது. திரும்பத் திரும்ப இரண்டு மூன்று முறை அழைத்தும் அதே அறிவிப்பு. திஸ் நம்பர் இஸ் ஸ்விட்ச்ட் ஆஃப்.

எனக்காகவே பிரத்தியேகமாக இம்மாதிரியான ஆசாமிகளைச் செய்து அனுப்புகிறானா எம்பெருமான் என்ற சந்தேகம் வந்தது. பிரச்னையில்லாத ஆசாமி. எனவே அவனையே நாலு திட்டு திட்டிவிட்டு வீடு போய்ச் சேர்ந்தேன்.

ஆடைகளைக் களைந்து, கழுவிச் சுத்தமாக்கி,  வேறு உடை அணிந்து அப்பாடா என்று உட்கார்ந்தபோதும் ஒரு மாதிரி சாக்கடை வாடை வீசுவதாகவே பட்டது. சந்தேகமாக இருந்தது. என் மனைவியிடம் கேட்டேன். காலையிலிருந்தே இந்தத் தொந்தரவு இருப்பதாக அவர் தெரிவித்தார்.

அடுக்குமாடிக் குடியிருப்பின் அனைத்துச் சாக்கடை வாசல்களும் அடைத்துக்கொண்டுவிட்டன. எனவே, இயற்கை விதிப்படி ஒரு புதிய வாசலைத் திறந்துகொண்டு கொஞ்சம் சாக்கடை வெளியேறியிருக்கிறது. பெய்த மழையுடன் செம்புலப் பெயநீராய்க் கலந்து அன்புடன் பிராந்தியம் முழுதையும் நறுமணம் கமழ்வித்துக்கொண்டிருக்கிறது. கார்ப்பரேஷனுக்கு போன் செய்திருக்கிறது. காலக்கிரமத்தில் ஆள் வரும். அதுவரை கதவு சன்னல்களைத் திறக்காதிருக்கும்படி காலனி செகரெட்டரி சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார்.

மாநகரில் இனி பாலம் கட்டி, அதன்மீது ப்ளாட் போட்டு விற்பனை செய்தாலொழிய யாரும் குடியிருக்க முடியாது போலிருக்கிறது.

சிங்காரச் சென்னை வாழ்க. எழில்மிகு சென்னையும் ஏகாந்தமாக வாழ்க.

25 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற