ஆயிரம் அப்பள நிலவுகள்

கீதையிலே பகவான் சொல்கிறான், எது ருசியானதோ, அது உடம்புக்கு ஆகாது. எது எண்ணெயில் பொறிக்கப்பட்டதோ, அது கொழுப்பைக் கூட்டி, இடையளவை ஏடாகூடமாக்கும். நேற்று கடைக்காரனிடம் இருந்த அப்பளம் இன்று உன் வீட்டு வாணலியில் பொறிபடும். நாளை அது உன் வயிற்றில் ஜீரணமாகி, நாளை மறுநாள் டாக்டர் பாக்கெட்டுக்குப் பணமாக மாறிச் செல்லும். நீ உன் பெண்டாட்டியிடம் வாங்கிக் கட்டிக்கொண்டு, வயிற்றைக் கட்ட வழி தெரியாது விழிப்பது உலக நியதியாகும்.

இது எந்த கீதை, யார் இந்த உடான்ஸ் பகவான் என்று கேட்கப்படாது. ஆனால் மேற்சொன்ன கீதாசுலோகம் அல்லது சாதாசுலோகம் பரம சத்தியமானது. ஆனால் சத்தியமானதெல்லாம் சகாயமானதாகிவிடுமா என்ன?

எம்பெருமான், பூமியை நீரிலிருந்து கண்டெடுத்தான். பூமியைப் போலவே உருண்டையான தோற்றம் கொண்ட என்னை எண்ணெயில் கண்டெடுத்தான் என்று நினைக்கிறேன். சின்ன வயதிலிருந்தே இந்த வறுத்தது, பொறித்தது வகையறாக்களைக் கண்டால், பருத்தது மறந்து போய்விடும் எனக்கு. [ இடையில் கொஞ்சநாள் டயட் இருந்து இளைத்ததெல்லாம் கெட்ட கனவு.]

வாழைக்காய் அல்லது உருளைக்கிழங்கைப் பார்த்தால், அது காய் வகை, கிழங்கு வகை என்றே தோன்றாது. பஜ்ஜி வகை என்றுதான் புத்தி முதலில் சொல்லும். எங்காவது மாவு அரைபடும் சத்தம் கேட்டால், இட்லிக்கு அரைக்கிறார்கள் என்றுதான் சாதாரண மனிதர்களுக்குத் தோன்றும். எனக்கோ, யாரோ வடைக்கு அரைக்கிறார்கள் என்று அஞ்ஞான திருஷ்டி சொல்லும். அப்பளத்தைச் சுட்டு சாப்பிடலாம், ஒரு தப்புமில்லை என்று எத்தனையோ பேர், எத்தனையோ காலமாகச் சொல்லிவிட்டார்கள். உளுந்து உடம்புக்கு நல்லது. கேட்பேனா? வாணலியில் புத்தம்புது எண்ணெய் ஊற்றி, பளிச்சென்று பொறித்தெடுத்தால்தான் எனக்கு அப்பளம், அப்பளமாகும். குழம்பு சாதம், ரசம் சாதம், மோர் சாதம் என்று அனைத்துச் சாதங்களுக்கும் தலா இரண்டு அப்பளங்களை நொறுக்கிப் போட்டுச் சாப்பிட்டால்தான் சாப்பாடு இறங்கும்.

இதுதான் பிரச்னை என்றில்லை. மோர் பிடிக்காது. தயிர் பிடிக்கும். பால் பிடிக்காது. அதன்மீது படரும் ஏடு பிடிக்கும். வெண்ணெய் பிடிக்கும். நெய் அதைவிடப் பிடிக்கும். ஐஸ்க்ரீம், ரசமலாய், பால்கோவா, அல்வா, அப்பம், அதிரசம் – விதி பாருங்கள். கேக்குகள் பிடிக்காது; குலோப் ஜாமூன் பிடிக்கும், ஜாங்கிரி பிடிக்கும், ஜிலேபி பிடிக்கும். பட்டியல் போட்டால் ஒரு முழுப் பக்கத்துக்கு வந்துவிடும். சுருக்கமாகச் சொல்கிறேன். எண்ணெய் அல்லது நெய் சேர்த்த கெட்ட வஸ்துகள் உலகில் என்னென்ன உண்டோ, அனைத்தையும் விரும்பி சாப்பிடக்கூடியவனாகவே என் பாலகாண்டம் முதல் இருந்து வந்திருக்கிறேன்.

வீட்டின் ஒரே மூத்த பிள்ளை என்று, என்னைப் பெற்ற எம்பெருமாட்டி நான் ஆசைப்பட்டதையெல்லாம் உண்ணக் கொடுத்து, வஞ்சனையின்றி, பகையின்றி, சூதின்றி, வையக மாந்தரெல்லாம் பார்த்துக் கண்ணு போடுமளவுக்கு என் சுற்றளவைப் பெருக்கப் பண்ணிவிட்டாள். இது தர்மத்தின் தலைவிக்குப் பொறுக்குமோ?

திருமணமாகி வந்த நாளாக என் மனைவியின் மாறாத செயல் திட்டங்களுள் மிக முக்கியமான ஒன்றாக இருப்பது, என் ஆவலாதி ஆயில் பொருள்களுக்கு, சாத்தியமான சமயங்களில் எல்லாம் நூற்று நாற்பத்தி நான்கு போடுவதுதான். முடியவே முடியாது என்று சொல்லும் வழக்கமில்லை. ஆனால் நாக்கில் விட்ட சொட்டுத் தேனை நெஞ்சில் இறங்கவிடாமல் அணை போடுகிற அசாத்திய சாமர்த்தியசாலி.

ஓர் உதாரணம் சொல்லுகிறேன். தினசரி அப்பளம் சாப்பிட்டுக்கொண்டிருந்தவன் நான். ஒரு நல்ல முகூர்த்த நாள் பார்த்து, மனைவியாகப்பட்டவள், இனி வாரம்தோறும் பிரதி ஞாயிறு அன்று மட்டுமே அப்பளம் உண்டு என்று ஒரு புதிய சட்டத்திருத்தம் கொண்டுவரவே, வெலவெலத்துப் போனேன். அன்னா ஹசாரே மாதிரி உண்ணாவிரதம் இருந்து காரியம் சாதிக்கவெல்லாம் நமக்கு வக்கில்லை. எனவே கெஞ்சி, கொஞ்சி, கூத்தாடி, வாரமிருமுறைப் பத்திரிகைகள் வரும் நாள்களில் மட்டுமாவது அப்பளத்துக்கு அனுமதி வேண்டுமென்று கேட்டுக்கொண்டேன்.

ம்ஹும். ஒருநாளென்றால் ஒருநாள்தான். தீர்மானமான உத்தரவு அது.

வேறு வழியின்றி ஒப்புக்கொள்ளவேண்டியதானது. ஞாயிற்றுக்கிழமைக்காகத் திங்கள் முதல் காத்திருப்பது ஒரு சுகமாகத்தான் இருந்தது என்றாலும் பல சமயம் அப்பளமில்லாத வாழ்வு அர்த்தமில்லாததாகத் தோன்றியது. ஒழியட்டும், மற்றவற்றை வைத்து சமாளித்துக்கொள்ளலாம் என்று எண்ணினேன்.

என்ன அழிச்சாட்டியம்! அன்று முதல் திடீரென்று வீட்டில் எண்ணெய் டின் மாறிவிட்டது. ஒரு குட்டிக்குரா பவுடர் டின் உசரத்துக்கு இருந்த டப்பா அது. திடீரென்று சாஷே பாக்கெட்டைக் காட்டிலும் சற்றுப்  பெரிய அளவுக்கு வந்துவிட்டது. வாரம் கால் கிலோ வாங்கி வைக்கும் நெய்யெல்லாம் எங்கே போனதென்று தெரியவில்லை. அப்படீ போகிற வருகிற வழியில் தென்படும் பலகாரக் கடைகளில் பக்கோடா, மிக்சர், முறுக்கு என்று வாங்கி வந்து நிரப்பி வைக்கும் வழக்கம் சத்தமில்லாமல் வீட்டினின்று விடைபெற்றது. குர்குரே, பிங்கூ என்று குழந்தைக்காக எப்போதாவது வாங்கும் சிப்ஸ் வகையினங்களுக்கும் மறைமுகத் தடை உண்டாகியிருந்தது.

ஒருநாள், இரண்டு நாள், ஒருவாரம், ஒரு மாதம் – பத்னீ இதற்கு பதில் எனக்குப் பட்னி போடலாம் நீ என்று பரிதாபமாகப் பலமுறை பார்த்தும் பலனில்லை. என்ன செய்யலாம் என்று தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தேன்.

வீட்டுக்குச் சில விருந்தாளிகள் வந்தார்கள். என்னை திரேதா யுகத்திலிருந்தே நன்கறிந்தவர்கள் என்பதால் லக்ஷ்மி விலாஸ் ஒரிஜினல் திருநெல்வேலி அல்வா பாக்கெட் ஒன்றும் சுடச்சுட அப்போதுதான் வாணலியிலிருந்து எடுத்துக் கொட்டிய பக்கோடா பொட்டலம் ஒன்றும் வாங்கி வந்திருந்தார்கள்.

சொல்லும்போதே நெஞ்சடைக்கிறது. வந்த விருந்தாளிகள் விடைபெற்றுப் போன மறுகணம், என் கண் எதிரிலேயே வீட்டு வேலை செய்யும் பெண்மணியை அன்போடு அழைத்தாள் என் மனைவி. ‘லஷ்மிம்மா, இந்தாங்க. உங்க வீட்டுக்கு எடுத்துட்டுப் போய் பேரனுக்குக் குடுங்க. நீங்களும் சாப்பிடுங்க.’

எந்த வீட்டில் இப்படி பாக்கெட் பிரிக்காத திருநெல்வேலி அல்வா கொடுப்பார்கள்? அந்தப் பெண்மணி பரவசத்திலேயே பத்து சுற்று பருத்திருக்கவேண்டும். நான் தான் துக்கத்திலும் துயரத்திலும் துவண்டுபோய்ச் சுருண்டு கிடந்தேன். விதி விதி விதி மகனே, வேறெது சொல்வேன் அட மகனே என்று என் மனக்கண்ணில் மகாகவி பாரதி உருக்கமாகப் பாடிய பாடல் என் மனைவிக்குக் கேட்டிருக்க நியாயமில்லை.

அடுத்த வார ஞாயிற்றுக்கிழமை வந்தது. எனவே மதிய உணவில் அப்பளமும் இருந்தது. போந்தும் போதாததற்குப் பழைய பக்கோடா பாக்கெட்டிலும் கால்வாசி மிச்சமிருந்தது. [அதை என்னைத் தவிர உலகிலுள்ளோர் அனைவரும் ஒரு துளியாவது ருசித்திருந்தனர் என்பதைப் பதிவு செய்தே தீரவேண்டும்.]

பழகிய பாவத்துக்காவது ஒரு பிடி போடுவாள் என்று காலை முதல் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். உணவு நேரம் வந்ததும் முதலில் ஒரு கேள்விக்கணை வந்தது. ‘அப்பளம் இருக்கு, பக்கோடாவும் இருக்கு. ரெண்டுல எது வேணும்?’

நான் பதில் சொல்லவில்லை. எனவே தட்டில் ஒரே ஒரு அப்பளம் மட்டும் இரண்டாகத் துண்டிக்கப்பட்டு இரண்டு சாதங்களுக்கு ஒன்றாகப் போடப்பட்டது. இது மேலும் அதிர்ச்சியளித்தது.

இரண்டு அப்பளம் என்றிருந்தது ஒன்றானது எப்போது?

இன்று முதல் என்று பதில் வந்தது. ஓம் சாந்தி ஓம் சாந்தி என்று என்னை நானே அமைதிப் படுத்திக்கொண்டேன். கண்ணெதிரே ஒரு நிலவுக் குவியலாக ஏராளமான அப்பளங்கள். தட்டில் மட்டும் பிசுநாறித்தனம் மேலோங்கிய இரண்டு சிறு துண்டுகள். ஏதும் பேசவில்லை. அமைதியாகவே சாப்பிட்டுவிட்டு எழுந்துவிட்டேன்.

இதில் ஒரு சூட்சுமம் வைத்திருந்தேன். மிச்ச அப்பளங்கள் அப்படியே டப்பாவில்தான் இருக்கும். அது நமுத்துப் போக விடமாட்டாள் நல்ல பத்தினி. எனவே பரிதாபம் பார்த்தேனும் தினமும் இப்படி அரைத் துண்டு கிடைக்கும் அபார சாத்தியம் இதில் இருக்கிறது. கேட்டால்தானே வராது? இனி, கேளாமல் வரட்டும்.

ஆனால் மறுநாள் அப்பளம் வரவில்லை. அடுத்த நாளும் வரவில்லை. மூன்றாம் நாளும்.

நான் மறந்தே போய்விட்டேன். எல்லாம் பழக்கம்தான் காரணம். இப்போது அப்பளம் இல்லாமலும் உண்ணப் பழகிவிட்ட உன்னத புருஷன் அல்லவா?

அடுத்த வார சனிக்கிழமை மதிய உணவுக்குப் பிறகுதான் முதல் முதலாக அந்த விஷயத்தைப் பற்றிப் பேச்செடுத்தாள் என் மனைவி.

‘டப்பால அப்பளம் இருக்கு.’

உண்மையிலேயே எனக்கும் அப்போதுதான் அது நினைவுக்கு வந்தது.

‘சரி, இருந்துட்டுப் போகட்டும்’ என்றேன். இது நிச்சயம் நல்விளைவு உண்டாக்கும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை. குறைந்தபட்சம் மறுநாள் ஞாயிறு அல்லவா? மதிய உணவில் சற்று தாராள குணம் கடைப்பிடிக்கப்படக்கூடும்.

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏது இனி?

மறுநாள் உணவு வேளைக்குச் சரியாக நான் சாப்பிடச் சென்றபோது பக்கத்து வீட்டு ஆண்ட்டியுடன் என் மனைவி பேசிக்கொண்டிருந்தது காதில் விழுந்தது.

‘அவர் சுத்தமா ஆயில் ஐட்டம்ஸ் சாப்பிடறதை நிறுத்திட்டார் தெரியுமா? இனி நான் அப்பளம் வாங்கவே போறதில்லை.’

பகீரென்றது. பண்டைய பிரெஞ்சு கிரிமினல் சட்டங்களின்படி தீவாந்தர தண்டனை பெறும் அதிபயங்கரக் கைதிகளுக்கு இப்படித்தான் உணவைப் படிப்படியாகக் குறைத்துக்கொண்டே வந்து,  தப்பித்து ஓடச் சக்தியற்றுப் போகுமளவு தேகமெலிவு பண்ணிவிடுவார்கள் என்று படித்திருக்கிறேன்.

என் மனைவிக்கும் என் தேகமெலிவுதான் நோக்கம். ஆனால் தப்ப நினைக்காத உத்தமோத்தமனுக்கும் ஏன் இந்தக் கொடுந்தண்டனை என்பதுதான் புரியவில்லை.

30 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற