பேசு கண்ணா பேசு

பேசிக்கொண்டே வேலை செய்கிறவர்களைப் பார்க்கிற போதெல்லாம் என்னையறியாமல் ஒரு பதற்றம் ஒட்டிக்கொள்ளும். எதிராளியின் வேலையோ, அதன் நேர்த்தி அல்லது பிழையோ எவ்விதத்திலும் என்னை பாதிக்கப்போவதில்லை என்றாலும் அந்தப் பதற்றத்தைத் தவிர்க்க முடிந்ததில்லை.

நான் எழுதுபவன். வேலை செய்துகொண்டிருக்கும்போது, உலகம் அழிய இன்னும் ஒரு வினாடிதான் இருக்கிறது என்று எம்பெருமான் நேரில் வந்து தகவல் தெரிவித்தாலும் அது என் காதில் விழாது. காதில் விழுந்தாலும் வாயிலிருந்து ஒரு சொல்லும் வெளிவராது. இதனாலெல்லாம் என்னை ஒரு உம்மணாமூஞ்சி என்று மதிப்பிடுவீர்களானால் அது சரியல்ல. மணிக்கணக்கில் பேசக்கூடியவன் தான். அர்த்தமற்ற வெறும்பேச்சுகளிலும் ஆர்வம் மிக்கவனே. ஆனாலும் ஒரு வேலையில் ஈடுபட்டிருக்கும்போது பேசத் தோன்றாது. அல்லது பேச வராது.

ஆனால் என் விதி, அன்றாட வாழ்வில் நான் சந்திக்க நேர்கிற பெரும்பாலானவர்கள் பேசிக்கொண்டே பணியாற்றக்கூடியவர்களாக இருக்கிறார்கள். என் எழுத்தாள நண்பர் ஒருவர் இருக்கிறார். கம்ப்யூட்டரைத் திறந்துவைத்துக்கொண்டு படபடவென்று ஏதாவது முக்கியமான விஷயத்தை எழுத ஆரம்பிப்பார். அடுத்த பத்து நிமிடங்களுக்குள் எழுதி முடித்துச் சரிபார்த்து அனுப்பியாகவேண்டிய அவசர நெருக்கடியும் அவருக்கு இருக்கும். ஆனாலும் விடமாட்டார். எழுத ஆரம்பித்த அடுத்தக் கணமே பேசவும் தொடங்கிவிடுவார்.

‘ஏன் சார், இன்னார் நடித்த இன்ன படம் ரிலீஸ் ஆயிருக்குதே, பார்த்துட்டிங்களா? ரிப்போர்ட் எப்படி இருக்காம்? எனக்கு ரெண்டு நாள் கழிச்சி பார்க்கத்தான் டிக்கெட் கிடைச்சிருக்கு. அதுவும் நைட் ஷோ. வண்டி வண்டியா டிக்கெட் வெச்சிருப்பான். தியேட்டர்ல ஈயாடும். ஆனாலும் இந்த முதல் வாரம் இவங்க பண்ணுற அலப்பறை தாங்க முடியமாட்டேங்குது…’

என்னைப் பார்த்துத்தான் பேசிக்கொண்டிருப்பார். கைவிரல்கள் தன்பாட்டுக்கு கம்ப்யூட்டரில் இயங்கிக்கொண்டிருக்கும். இரண்டு மனம் வேண்டுமென்று இறைவனிடம் கேட்டுப் பெற்றவரா என்றால் அதுவுமில்லை. சார்வாக மகரிஷியின் சகலை வம்சத்தில் வந்த கோர நாத்திகர்.

எனக்கு இருப்புக் கொள்ளாது. ‘விடுங்க சார். முதல்ல எழுதி அனுப்புங்க. அப்பறம் பேசுவோம்’ என்பேன். ‘அது கிடக்கட்டும் சார். இந்த அன்னா ஹசாரேக்கு என்ன கூட்டம் சேருது பாத்திங்களா? ஷங்கர் படத்து இந்தியன் தாத்தாக்கு இன்னும் கொஞ்சம் வயசான மாதிரி இருக்காரில்ல?’

‘பார்த்து டைப் பண்ணுங்க சார். எதாவது தப்பாயிடப்போகுது’ என்று பரிதவிப்பேன். அவர் கண்டுகொள்ளவே மாட்டார். அன்னா ஹசாரே, அழகிரியின் சொத்து மதிப்பு, அருண் ஷோரியின் அடுத்த புத்தகம், அமெரிக்கப் பொருளாதார வீழ்ச்சி, மங்காத்தா பின்னணி இசையில் சுட்டுப் போட்ட பாக்கின் ஏ மைனர் வயலின் கான்சர்ட்டோ, மத்தியானம் சாப்பிட்ட பிரியாணியின் சுவையின்மை, பாஸ்போர்ட் புதுப்பிக்க வேண்டிய கெடு தேதி வந்துவிட்டது பற்றிய கவலை என்று அந்தப் பத்து நிமிடத்தில் குறைந்தது பதினொரு விஷயங்களையாவது பேசுவார். அவர் எழுதிக்கொண்டிருக்கும் சரக்கு நிச்சயம் கந்தரகோலமாகியிருக்கும் என்று என் மனசு கிடந்து அடித்துக்கொள்ளும். அவர் கண்டுகொள்வாரோ? ம்ஹும். திரும்பப் படித்துக்கூடப் பார்க்காமல் உரியவருக்கு அப்படியே மின்னஞ்சல் செய்துவிடுவார்.

இவர் பரவாயில்லை. ரமேஷ் என்று இன்னொரு நண்பர் இருக்கிறார். ரொம்ப நெருங்கிய நண்பரும்கூட.. மேற்படி விஷயத்தில் அவர் ஒரு பி.எச்.டி. ஹோல்டர்.  இவர் ஒரு பி.பி.ஓ. வைத்திருக்கிறார். ஒரு பக்கம் தீப்பொறி பறக்க வேலை ஓடிக்கொண்டிருக்கும். இன்னொரு பக்கம் ட்விட்டரில் இடைவெளியில்லாமல் என்னவாவது கிறுக்கிக்கொண்டே இருப்பார். ‘இப்போது கேட்டுக்கொண்டிருக்கும் பாடல்..’ என்று மூன்று நிமிடங்களுக்கொரு முறை ஸ்டேடஸ் அப்டேட் செய்வார். நாயே, பேயே, நயவஞ்சக நரியே, அவனே இவனே என்று மயிலை மாங்கொல்லை கட்சிக்கூட்ட நட்சத்திரப் பேச்சாளர்போல் தனது அரசியல் எதிரிகளுக்குச் சவால் விட்டுக்கொண்டும் இருப்பார். வந்த சவால்களுக்கு பதிலளிக்கத் தொடங்கிவிட்டாரென்றால் உலகையே மறந்துவிடுவார். ‘வேலையைக் கவனியுங்கள் ஐயா’ என்றால் அது பாட்டுக்கு அது என்பார்.

இதுகூடப் பரவாயில்லை. எங்காவது இந்த நண்பருடன் காரில் பயணம் செய்ய நேர்ந்துவிட்டால் தீர்ந்தது விஷயம். வேகமுள் எண்பதைத் தொடும் வரைதான் அமைதியாக இருப்பார். எண்பதைத் தாண்டியதோ இல்லையோ, மொபைல் போனில் யாராவது அழைத்துவிடுவார்கள். உடனே நீலப்பல்லை மாட்டிக்கொண்டு பேச ஆரம்பித்துவிடுவார். எதிரே வருகிற ஒவ்வொரு வாகனத்திலும் எமகிங்கரர்கள் இருப்பதுபோல் ஓர் உணர்வு நமக்கு அவசியம் ஏற்படும். உண்மையில் அது இடமாறு தோற்றப்பிழை. நண்பரின் உள்மனத்தின் ஒரு ஓரத்தில் பழைய பி.எஸ். வீரப்பா இன்னும் உட்கார்ந்துகொண்டிருக்கிறாரோ என்கிற சந்தேகம் வருமானால் அதுவே நியாயமானது. சற்றும் வேகத்தைக் குறைக்காமல் போனில் பேசியபடியே லாரிகளையும் டெம்போக்களையும் உரசுகிற பாணியில் ஓவர்டேக் செய்வார். ஐயோ என்று நம் அந்தராத்மா அலறும் கணத்தில் போனில் ஹாஹாஹாஹா என்று எதற்கோ உற்சாகமாக அவர் சிரிப்பார். ’யோவ் பார்த்து ஓட்டுய்யா’ என்று அலறினால் திரும்பவும் சிரிப்பார். பரமாத்மா வேடமேற்ற என்.டி. ராமாராவ்போல அபயஹஸ்தம் காட்டுவார். சர்க்கஸில் வரும் மரணக்குழி விளையாட்டுக்குச் சற்றும் சளைத்ததல்ல, அவரோடு பயணம் செய்யும் அனுபவம்.

இம்மாதிரி நீங்களும் பலபேரைப் பார்த்திருக்கலாம். ஆனால் நிச்சயமாக நீங்கள் சந்தித்திருக்க முடியாத இன்னொரு நண்பரைப் பற்றி இனி சொல்லுகிறேன். இவர் ஒரே சமயத்தில் இரண்டல்ல; மூன்று காரியங்கள் பார்க்கிற திறமைசாலி. அவரது நான்காவது திறமை, அவர் பணியாற்றுவதைப் பார்க்கிறவர்களுக்கு அந்தக் கணமே தலை சுற்றல், வாந்தி பேதி மயக்கம் உள்ளிட்ட சகல ரோகங்களும் வந்து சேர்ந்துவிடும்படிப் பண்ணுவது.

இவர் ஒரு சிகையலங்கார நிபுணர். என் வீட்டுக்குப் பக்கத்தில் கடை வைத்திருக்கிறார். இளைஞர். ரொம்ப நல்லவர். தொழிலில் திறமைசாலிதான். ஆனால் கத்திரிக்கோலைக் கையில் எடுத்தவுடன் எங்கிருந்தோ அவருக்கு ஏகப்பட்ட சமூகக் கோபங்கள் வந்துவிடும். சரக் சரக்கென்று இடது கரத்துக் கத்திரிக்கோல் நமது சிகையில் விளையாடும்போதே அவரது வாய் அரசியல் பேசத் தொடங்கிவிடும். நீங்கள் காது கொடுத்துக் கேட்டுத்தான் ஆகவேண்டுமென்ற அவசியமில்லை. அவர் சிகையலங்காரத்தை நிறுத்துகிற வரைக்கும் அரசியலையும் கத்திரித்துத் தள்ளாமல் விடமாட்டார். பிரபல தலைவர்களின் அன்றைய சட்டசபைப் பேச்சுகள், எதிர்க்கட்சிக்காரர்களின் வெளிநடப்புகள், உண்ணாவிரதங்கள், போராட்டங்கள், சாதிக்கலவரம், இளம்பெண் கற்பழிப்பு என்று நாளிதழின் அன்றைய அனைத்துச் செய்திகளையும் முன்னதாக அவர் மனப்பாடம் செய்திருப்பார். ஒவ்வொரு செய்தியின்மீதான தனது விமரிசனத்தையும் குறைந்தது பத்து பக்க அளவுக்கு மந்திர உச்சாடணம் மாதிரி வெளிப்படுத்துவார். ஒரு செய்தி முடிந்ததே, ஒரு பிரேக் விடுவார் என்று நினைப்பீரானால், அது பிழை. சடக்கென்று உங்கள் முகவாயை வலப்புறத்திலிருந்து இடப்புறத்துக்கு ஒரு திருப்பு திருப்பிவிட்டு அடுத்த செய்திக்குத் தாவிவிடுவார்.

சற்றுத் தொலைவில் இருந்து பார்த்தால் உங்கள் செவிக்கு அருகே அவர் வாய் வைத்து செய்தி விமரிசனம் செய்வது, யாரோ குரு, சிஷ்யனுக்கு மந்திரோபதேசம் செய்வதுபோல் இருக்கும். கை பாட்டுக்குத் தலையில் விளையாடிக்கொண்டிருக்கும்.

பார்த்து, பார்த்து, பார்த்து என்று எத்தனை முறை சொன்னாலும் அவர் பேச்சையும் நிறுத்தமாட்டார், முகவாய்க்கட்டையைத் திருப்பும் வேகத்தையும் குறைத்துக்கொள்ளமாட்டார்.

இதுவாவது பரவாயில்லை. மூன்றாவதாக அவர் செய்யும் காரியம்தான் இன்னும் அபாயகரமானது. பாதி முகச்சவரத்தில் இருக்கும்போது அவரது செய்தி விமரிசனங்கள் அதன் உச்சக்கட்ட உக்கிரத்துடன் வெளிப்பட்டுக்கொண்டிருக்கும். அப்போது அவர் கடையில் ஓடிக்கொண்டிருக்கும் தொலைக்காட்சியில் [பெரும்பாலும் அதுவும் செய்தி சானலாகத்தான் இருக்கும்.] என்னவாவது ரத்தக்களறிச் செய்தி வந்துவிட்டால் தீர்ந்தது விஷயம்.

‘சனியம்புடிச்ச நாதாறி. எப்புடி பேசறான் பாரு சார். இதே ஆளு ரெண்டாயிரத்தி ஒம்பது  நவம்பர் இருவத்தி ரெண்டாந்தேதி என்ன சொன்னான்? என்ன சொன்னான்னு கேக்கறேன்? ரெண்டு வருசத்துல புத்தி மாறிடுமா? பணம் சார். இவனையெல்லாம் நம்ம மக்கள் நம்புறாங்க பாருங்க.. புத்திய செருப்பால அடிக்கணும் சார்!’

அவரது பார்வை தொலைக்காட்சியின்மீதே இருக்கும். உதடுகள் சாபங்களை அள்ளி வீசிக்கொண்டே இருக்கும். கையில் இருக்கும் சவரக்கத்தியோ சரக் சரக்கென்று கன்னத்தில் இறங்கிக்கொண்டே இருக்கும். எந்தக் கணத்தில் அவரது கோபம் அதன் உச்சத்தைத் தொட்டு, கையில் அழுத்தம் கூடிவிடுமோ என்று பயப்பீதியில் உரைந்துபோய்க் கிடப்பேன்.

இடையே சில கணங்கள் அவர் சவரம் செய்வதை நிறுத்திவிட்டு தொலைக்காட்சியிலேயே லயித்துப் போய்விடுவதும் உண்டு. அப்போது பக்குவமாக முகத்தை நகர்த்தி, பாதுகாப்பான இடத்தில் வைத்துக்கொண்டால் தீர்ந்தது விஷயம்.

ஒரு கணம் திரும்பிப் பார்ப்பார். சடக்கென்று மீண்டும் முகவாயைப் பிடித்து ஒரு இழு. கழுத்து சுளுக்கிக்கொள்ளாதிருந்தால் அது நமது நல்லூழ்.

ஒருநாள் ரத்த காயங்களின்றி தப்பித்த பரவசத்தில், பட்டாபிஷேகம் முடிந்து, சிம்மாசனத்தை விட்டு இறங்கியபிறகு நண்பரைத் தனியே அழைத்து என் கலவரத்தை விவரித்தேன். வேலை செய்யும்போது பேசாதீர்கள். உங்களின் உள்ளார்ந்த சமூகக் கவலைகளை வேலையைச் செய்து முடித்த பிறகு வைத்துக்கொள்ளுங்கள். உங்களிடம் நான் என் முகத்தையும் தலையையும் நம்பிக் கொடுத்திருக்கிறேன். அதற்கு ஹானி உண்டாக்கிவிடாதீர்கள்.

அவர் ஒரு கணம் என்னை உற்றுப்பார்த்தார். பிறகு நிதானமாகச் சொன்னார்: ‘நெறையப்பேர் சொல்லிட்டாங்க சார். சர்தான்னு பேசாம ஷேவ் பண்ணேன்னா கண்டிசனா அன்னிக்கு கீறிடுது. கையும் வாயும் சேந்தாத்தான் சார் கலை சுத்தமா இருக்குது நமக்கு.’

8 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற