ஸ்வீட் எடு, கொண்டாடு!

சென்ற வாரத்தில் ஒருநாள், சென்னை நகரின் நட்ட நடு செண்டரிலிருந்து கிழக்குக் கடற்கரையோரம் அமைந்துள்ள சாந்தோம் தேவாலயத்தை ஒட்டிய ஒரு சந்து வரை ஒரு பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. நீதி ஏதும் கேட்கிற உத்தேசமில்லை என்றாலும் நீண்ட நெடும் பயணம்தான். என் மூஞ்சூறு வாகனத்தில் உரிய இடத்தைச் சென்றடைய எப்படியும் ஒன்று முதல் ஒன்றரை மணிநேரம் ஆகலாம் என்று கணக்கிட்டு இருந்தேன்.

ஆனால் என்ன ஆச்சரியம். முதல்வர் போகும் பாதை மாதிரி நான் போன வழியெங்கும் போக்குவரத்து ஒதுங்கி, நகர்ந்து எனக்கு வழிவிட்டு, வியப்பில் திக்குமுக்காடச் செய்துவிட்டது. இதோ, முப்பதே நிமிடங்களில் ராதாகிருஷ்ணன் சாலையைக் கடந்துவிட்டேன். அதோ, கண்ணெட்டும் தொலைவில் கடலோரம்.

பரவசத்தில் வேகத்தை மேலும் கூட்டி, அடுத்த சிக்னல் விழுவதற்குள் கமிஷனர் அலுவலகத்தைத் தொட்டுத் திரும்பிவிடவேண்டுமென்று முடிவு செய்திருந்தேன்.

ஆனால் இதையெல்லாம் பொதுவாக நாமா தீர்மானிக்க முடியும்? திருவல்லிக்கேணி சாலைத் திருப்பத்தில் ஒரு பிரேக் அடிக்க வேண்டி வந்துவிட்டது. ஏனெனில், எனக்கு முன்னால் அந்தச் சந்திப்பை வந்தடைந்திருந்த சுமார் இருபது வாகனங்கள் அங்கே அணிவகுத்து நின்றுகொண்டிருந்தன. இடப்புறத்து நவீன நகர மையக் கட்டடத்திலிருந்து ஊர்ந்து வந்துகொண்டிருந்த பெரிய பெரிய கார்களும் மெல்ல மெல்ல வந்து கூட்டத்தோடு இணைந்துகொள்ளத் தொடங்கின. சக இரு சக்கர வாகனாதிபதிகள் பிளாட்பாரத்தின்மீது வண்டியை ஏற்றி ஓட்டிச் செல்ல முடியுமா என்று பூகோள ஆராய்ச்சியில் ஈடுபடத் தொடங்க, சம்பவ இடத்திலிருந்து பத்திருபது அடி தொலைவில் நிற்க வேண்டியிருந்த எனக்கு, எதனால் இந்தப் போக்குவரத்துக் கூழ் என்று சரியாகப் பிடிபடவில்லை.

திடீரென்றுதான் அந்தச் சத்தம் எழத் தொடங்கியது.

டண்டண்டன் டண்டனக்கர டண்டனக்கர டண்டனக்கர

டண்டண்டன் டண்டனக்கர டண்டனக்கர டண்டனக்கர

அட்சரம் பிசகாத ஆதி தாளம். சமத்தில் எடுத்து, துரித கதியில் வீறிடத் தொடங்கியது வாத்தியம்.

கூடவே உய்ய் உய்ய்ய்ய் உய்ய்ய்ய்ய்ய்ய்ய் என்று விண்ணைத் தொடும் உத்தேசமுடன் காற்றைக் கிழித்த விசில் சத்தங்கள்.

இம்மாதிரியான திடீர் ஊர்வலங்களில் முன் அனுபவம் உண்டென்பதால் இஞ்சினை அணைத்துவிட்டுக் காத்திருந்தேன். எப்படியும் பத்து நிமிடங்கள் ஆகும் என்று தோன்றியது. தவிரவும் இது சாதாரண மரணமாகவும் தெரியவில்லை. பிரம்மாண்டமான தேர் உயரத்துக்கு பூ அலங்காரங்கள் எல்லாம் செய்யப்பட்ட வண்டி மெல்ல அசைந்து அசைந்து வந்துகொண்டிருந்தது. பொதுவாக மரண ஊர்வலங்களில் பத்துப் பேர் முன்னால், பத்துப் பேர் பின்னால் போவார்கள் (ஆடுவோர், வெடி வைப்போர் தனி) என்றால், இந்த ஊர்வலத்தின் முன்னாலும் பின்னாலும் சுமார் நூறு பேருக்குமேல் இருந்தார்கள்.

இறந்த நபராகப்பட்டவர், வாழ்ந்த காலத்தில் பெரும் வள்ளலாக அல்லது நிறையப் பேரிடம் கடன் வாங்கிவிட்டுத் திருப்பிக் கொடுக்காதவராக இருந்திருக்க வேண்டும். ஊர்வல நபர்கள் அத்தனை பேர் முகத்திலும் கட்டுக்கடங்காத சோகம் இருந்தது.

ஆனாலும் என்ன? மரணம் கொண்டாடப்பட வேண்டியது.

டண்டண்டன் டண்டனக்கர டண்டனக்கர டண்டனக்கர

டண்டண்டன் டண்டனக்கர டண்டனக்கர டண்டனக்கர

ஆவர்த்தனம் அதன் உச்சத்தை இன்னும் தொடவில்லை. கலைஞர்கள் அதே வரியைத்தான் திரும்பத் திரும்ப வாசித்துக்கொண்டிருந்தார்கள். விசில்கள் மட்டும் விதவிதமான சுருதிகளில் எழுந்துகொண்டிருந்தன. இடையிடையே சர வெடிகள் வைத்தார்கள். வெயில் கொளுத்தும் வேளையிலும் இக்கொண்டாட்டங்களுக்கு ஒரு பிரத்தியேக மனநிலை அவசியம் வேண்டும். மனநிலையாகப்பட்டது மானிட்டரால் தீர்மானிக்கப்படும்.

எனக்கு மூன்று மணிக்குள் நான் போய்ச்சேர வேண்டிய இடத்தில் இருந்தாக வேண்டும். ரொம்ப இல்லை என்றாலும் கொஞ்சம் அவசர வேலைதான். மணியைப் பார்த்தேன். இரண்டு ஐம்பது. ஊர்வலம் நகர்ந்து, போக்குவரத்து இயங்க ஆரம்பித்துவிட்டால் ஐந்து நிமிடங்களில் போய்விடக்கூடிய தூரம்தான். ஆனால் இது எப்போது நகரும்?

யாரோ சுக்ரீவன் அல்லது அங்கதன் ஒரு பெரிய கூடையிலிருந்து மாலைகளைக் கண்டபடி பிய்த்துப் பிய்த்து ஊர்வலத்தில் உடன் வந்துகொண்டிருப்போரின் கரங்களில் திணிக்க, சட்டென்று பத்துப் பன்னிரண்டு கரங்கள் விண்ணை நோக்கி உயர்ந்து பூமாரி பொழிந்தன. நியாயமாக தேவர்கள் செய்ய வேண்டிய வேலை. விடுமுறை தினமாகையால் மனிதர்களே செய்யவேண்டியதாகிவிடுகிறது.

இப்போது திருவல்லிக்கேணி சாலையிலிருந்து நகர மையக் கட்டட வளாகத்தை ஒட்டிய சிக்னல் திருப்பத்தை அடைந்து முழுமையாக ஆக்கிரமித்துவிட்ட ஊர்வலம், கடற்கரைச் சாலையை அடையும் திசை  நோக்கித் திரும்பிவிட்டது. எனக்குப் பகீர் என்றது.

கடவுளே, யாராவது பெருந்தலைவர் அமரராகிவிட்டாரா என்ன? கடற்கரையில் மிச்சமிருக்கும் சதுர அடிகளில் இன்னொரு சமாதிக்கு ஏற்பாடாகியிருக்கிறதா? காலை செய்தித் தாளில் ஒன்றும் கண்ணில் படவில்லையே?

கையில் இருந்த செங்கோலால் காலில் தட்டிக்கொண்டு அலுப்புடன் நின்றுகொண்டிருந்த போக்குவரத்துக் காவலரிடம் இறந்தது யார் என்று விசாரித்தேன். ‘யாருக்குத் தெரியும்?’ என்றார். அந்த நியாயமான பதிலை அவர் சொன்னதும்தான் சமாதி பயம் நீங்கியது.

வண்டியிலிருந்து இறங்கி ஸ்டாண்ட் போட்டுவிட்டு, சற்றே மேடான பகுதியைத் தேடிப்போய் நின்று ஊர்வலத்தைக் கவனிக்கத் தொடங்கினேன். அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் அவசரங்கள் என்னும் சிந்தனையே உதிக்காத உலக உத்தமர்கள் பங்குபெற்ற ஊர்வலம். வெயிலடிக்கிறதா? சரி. போக்குவரத்து முடங்கிவிட்டதா? சரி. பின்னால் வரும் வாகனங்கள் ஹார்ன் அடிக்கின்றனவா? சரி. எதிர்ப்புற டிராஃபிக்கும் கெடுகிறதா? சரி.

டண்டண்டன் டண்டனக்கர டண்டனக்கர டண்டனக்கர

டண்டண்டன் டண்டனக்கர டண்டனக்கர டண்டனக்கர

ஆதிதாளம் மாறக்கூடாது. அவசரப்பட்டு ஃபரன்ஸ், மோரா என்று முத்தாய்ப்புக்கும் போய்விடக்கூடாது.

ஒரு ஏழெட்டு இளைஞர்கள் ஊர்வலத்தின் முன்னால் சுழன்று சுழன்று ஆடிக்கொண்டிருந்தார்கள். கொஞ்சம் முயற்சி செய்தால் இவர்களுக்கெல்லாம் தமிழ்த் திரையுலகில் எதிர்காலத்தில் ஒரு நல்ல இடம் கிடைக்கக்கூடும். இப்படி திறமையை எல்லாம் வீதியில் வீணாக்கிக்கொண்டிருக்கிறார்களே என்று கவலையேற்பட்டது.

ஆனால் அப்படியெல்லாம் நினைக்கப்படாது. இது ஒரு மரணம் அளித்த கவலையிலிருந்து உதித்திருக்கும் கலை. ஊர்வலம் பிரதான சாலையில்தான் போய்க்கொண்டிருந்தது என்றாலும், இது தன்னிலை மறந்த ஞானகர்ம சன்னியாச யோகத்துக்கான பைபாஸ் சாலைப் பயணம். சாமானியர்களுக்கு அவ்வளவாகப் புரியாது.

ஏ மனிதனே! இக வாழ்க்கை அவசரங்களை நினைத்து ஏன் பரிதவித்துக் கொண்டிருக்கிறாய்? இதோ இறந்து கிடக்கும் மனிதனைப் பார். இவனை நாங்கள் பரவாழ்க்கைப் பயணத்துக்குப் பார்சல் பண்ணிக்கொண்டிருக்கிறோம். பயணத்துக்கான பாஸ்போர்ட்டில் இவனுடைய அடையாளம் தமிழன் என்று எழுதப்பட்டிருக்கிறது.

எனவே பொதுவெளியை நாரடிப்பது பிறப்புரிமை ஆகிவிடுகிறது. நின்ற இடத்தில் துப்பி, நடந்த வாக்கில் ஒன்றுக்கடித்து, ஒன் வேயில் வண்டி ஓட்டி, பிளாக்கில் டிக்கெட் வாங்கி, லாரியில் பொதுக்கூட்டத்துக்குப் போய், வாங்கிய பிரியாணிப் பொட்டலத்தில் பாதியைச் சாப்பிட்டுவிட்டு மீதியை வீதியில் போட்டு, பாக்கெட் குடிநீரைப் பல்லால் கடித்து இழுத்து, மேலுக்குக் கொஞ்சம் துப்பிக்கொண்டு உள்ளுக்கு மிச்சத்தைத் தள்ளிவிட்டு –

அனைத்தையும் சரியாகச் செய்து முடித்து அடங்கியிருக்கிறான் இம்மனிதன். இது இறுதிப் பயணம். இறந்தவனை கௌரவிப்பது முக்கியம். டிராஃபிக்கை நிறுத்தி, வெடித்தாளும் பூக்களுமாகச் சாலையை நாரடித்து, ஒலிக் கழிவால் காற்றை நிரப்பி வழியனுப்பி வைத்தலே சரியான மரியாதை. நீங்கள் காத்திருக்கலாம், தப்பில்லை.

அந்த ஊர்வலம் முழுச்சாலையை அடைத்துக்கொண்டு நகர்ந்தபடியால், பின்னால் காத்திருந்த நாங்கள் மெல்ல மெல்லக் காலால் விந்திதான் வண்டிகளை நகர்த்திக்கொண்டு முன்னேற வேண்டியிருந்தது. சுமார் நூறடி தூரம் அவ்வாறு செல்ல வேண்டியதானது.

என் அதிர்ஷ்டம், ஊர்வலம் சாந்தோம் பக்கம் திரும்பாமல் சட்டசபை உள்ள திசை நோக்கித் திரும்ப, அந்தப் புள்ளியில் பிசாசு வேகத்தில் என் வழியே பறந்துவிட்டேன்.

திரும்பும்போதுதான் ஊர்வலம் ஊர்ந்த பாதையைச் சற்று ஆர அமர கவனிக்க முடிந்தது.

எப்படியும் ஆயிரம் ரோஜாப்பூக்கள் இருக்கும். கசக்கிப் பிழிந்து சாலையெங்கும் வீசிக் குவித்திருந்தார்கள். வெடித்த சரவெடிக் குப்பைகளில் அந்தப் பிராந்தியமே அல்லோலகல்லோலமாகியிருந்தது. ஏற்கெனவே அந்த வளைவில் எருமைகள் எப்போதும் மேய்ந்து அங்கிங்கெனாதபடி எங்கும் சாணம் நிறைந்திருக்கும். கூட்ட நெரிசலில் வாகனங்களும் வாகனாதிபதிகளும் அதன்மீது ஏற்றி இறக்கி முட்டிக்கொண்டு செல்ல, இப்போது தார்ச்சாலைக்குச் சாணம் மெழுகினாற்போல் ஆகியிருந்தது.

காலக்கிரமத்தில் கார்ப்பரேஷன்காரர்கள் வந்து குப்பையள்ளிப் போவார்கள். அதற்குள் இறந்த உத்தமோத்தமன், எம்பெருமான் திருவடிக்குச் சென்று சேர்ந்துவிடுவான். அடுத்த சில தினங்களுக்குச் சாலை சரியாகவே இருக்கும். மீண்டும் யாராவது காலமாவார்கள். மீண்டும் ஒரு மரண ஊர்வலம். ஊர்வலத்தில் சிக்கிக்கொண்டு சின்னாபின்னமாகிறவன் புதிய தலைமுறைக்குக் கட்டுரை எழுதுவான்.

மரணம், கொண்டாடப்படவேண்டியது என்று சொன்னவனைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன். மாநகரவாசிகள் திண்டாடப்படவேண்டியவர்கள் என்றும் நட்சத்திரக்குறியிட்டு கண்டிஷன்ஸ் அப்ளை மாதிரி சின்னதாக ஒருவரியை அவனேதான் சேர்த்தானா என்று கேட்டாக வேண்டும்.

19 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற