எனக்கு வேணாம் சார்!

நெடுந்தூரப் பேருந்துப் பயணம் ஒன்றில்தான் முதல்முதலில் அவர் எனக்கு அறிமுகமானார். ரொம்பக் கோபத்தில் இருந்தார். அரசுப் பேருந்துகளின் இருக்கைகள் ஏன் இன்னும் இருபதாம் நூற்றாண்டிலேயே இருக்கின்றன? பயணிகளின் முதுகுகள் மற்றும் முழங்கால்கள் குறித்து முதல்வருக்குப் போதிய அக்கறை இல்லை. தி ஹிந்துவுக்கு யாராவது வாசகர் கடிதம் எழுதிவிட்டு மெரினா கடற்கரையில் ஒரு கண்டன மாநாடு நடத்தினால் அவர் வந்து கலந்துகொண்டு ஆதரவு தெரிவிக்கத் தயார்.

வண்டி விழுப்புரத்துக்குச் சற்று முன்னால் நின்றபோது, பசிக்கு வாங்கிய வாழைப்பழங்களில் ஒன்றை அவருக்குத் தரலாம் என்று முடிவு செய்தேன். வாழைப்பழத்துக்குச் சில சத்துகள் உண்டு. ஒருவேளை அது முதுகு வலிக்கும் நிவாரணியாகலாம்.

நீட்டியபோது, வேண்டாம் சார் என்று நாகரிகமாக மறுத்தார். நான் வற்புறுத்தவில்லை. ஒரு பழத்தை விண்டு பாதியை வாயில் போட்டுக்கொண்டேன். சட்டென்று அவர் கை நீண்டது. ‘சரி, ஆசையா கேட்டுட்டிங்க. பாதி குடுங்க. உங்களுக்காக’ என்று பாதி பழத்தை வாங்கிச் சாப்பிட்டார்.

எனக்கு அது பிடித்தது. திடீர், தாற்காலிக நட்புக்கும் மரியாதை தரக்கூடிய மனிதராக இருக்கிறாரே. எனவே விசாரித்தேன். அவர் எங்கே இருக்கிறார். என்ன செய்கிறார்.

நான் வசிக்கும் பிராந்தியத்துக்கு அருகில்தான் அவரும் வசித்துக்கொண்டிருந்தார். நான் காலை நடை பயின்றுகொண்டிருந்த பூங்காவில்தான் அவரும் தினமும் நடக்கிறார் என்று தெரிந்தபோது என் மகிழ்ச்சியைத் தெரிவித்தேன். அடிக்கடி சந்திக்கலாம் என்று பரஸ்பரம் தெரிவித்துக்கொண்டு பிரிந்தோம்.

ஓரிரு தினங்களுக்குப் பிறகு பூங்காவில் அவரைத் திரும்பவும் சந்தித்தேன். பார்த்ததும் புன்னகை செய்தார். சமூகக் கவலைகளை மென்று துப்ப நடைப்பயிற்சி நேரம் போல் சிறந்தது வேறில்லை என்பது அவர் கருத்தாக இருந்தது. எனக்கோ, நடக்கும்போது பேசக்கூடாது. எனவே உரையாடலாக அமைந்திருக்கவேண்டிய சங்கதிகள் யாவும் சொற்பொழிவுகளாகிப் பூங்காவின் பாதையை நனைத்துக்கொண்டிருந்தன. சுமார் ஒரு மணி நேரமும் அவர் பேச்சுக்குத் தலையாட்டியபடியே நடந்ததில் என் கால்களைவிட தலைப்பக்கம் இருக்கும் எலும்புகளும் நரம்புகளும் சுறுசுறுப்படைந்ததுபோல் இருந்தது.

பேசாமல் நடப்பது மிகவும் நல்லது சார் என்று மேலும் ஓரிரு தினங்களுக்குப் பிறகு ஒரு நாள் சாங்கோபாங்கமாக அவரிடம் தெரிவித்தேன். அவர் பதில் சொல்லவில்லை. ஒருவேளை தவறாக எடுத்துக்கொண்டிருப்பாரோ என்று சற்று சங்கடம் ஏற்பட்டது. தலையாட்டுதற்பொருட்டு மட்டுமா நட்பு?

இருப்பினும் அவரைச் சமாதானப்படுத்திவிடுவது என்று முடிவு செய்து, பயிற்சி முடிந்து வெளியே வந்ததும் மூலிகைச் சாறுகள் விற்கும் தள்ளுவண்டி அருகே நின்று, ‘சார், என்ன ஜூஸ் பிடிக்கும் உங்களுக்கு?’ என்று கேட்டேன்.

’நோநோ.. எனக்கு இதெல்லாம் வேண்டாம் சார்’ என்று மறுத்துவிட்டார். வற்புறுத்திக் கேட்டபிறகும் அவர் தன் முடிவில் உறுதியாக இருந்தபடியால் எனக்கு மட்டும் ஒரு கோப்பை வல்லாரைச் சாறு வாங்கிக்கொண்டேன்.

கோப்பையை வாயில் வைக்கப்போன நேரம் அவர் சட்டென்று கடைக்காரப் பெண்ணிடம் ‘ஒரு கிளாஸ் மட்டும் குடும்மா’ என்றார். ‘கேட்டுட்டிங்க. நீங்க வருத்தப்படக்கூடாது. உங்க கிளாஸ்லேருந்தே கொஞ்சம் இதுல ஊத்திடுங்க’ என்று நீட்டினார். அரை தம்ளர் வல்லாரைச் சாறை அந்த தம்ளரில் ஊற்றினேன். எனக்கு முன்னால் அதைக் குடித்து முடித்து கிளாஸைத் தூர எறிந்தார்.

‘இதெல்லாம் நிஜமாவே மூலிகைதானோ என்னமோ? எந்தப் புல்லைப் பறிச்சிட்டு வந்து ஜூஸ் போடறாங்களோ, யார் கண்டது?’ என்றார். லேசாக வயிற்றைக் கலக்கியது என்றாலும் நான் பதில் சொல்லவில்லை. ஆரோக்கியம் என்பதும் ஒரு வர்த்தகமாகிவிட்டது பற்றி பூங்கா வாசலில் மேலும் ஒரு சிறு பிரசங்கம் நடத்திவிட்டு விடைபெற்றார்.

பின்னொரு நாள் அவரை மயிலாப்பூர் சந்து ஒன்றில் உள்ள ஜன்னல் மெஸ்ஸில் சந்தித்தேன்.

ரொம்ப வித்தியாசமான மெஸ் அது. மாலை வேளைகளில் மட்டும் திறந்திருக்கும். ஒரு வீட்டின் பின்புறச் சுவரில் ஒரே ஒரு சன்னல் இருக்கும். சன்னலுக்கு அந்தப் பக்கம் மெஸ். பலகாரங்களை சன்னல் வழியே வெளியே தருவார்கள். நின்றவண்ணம் வாங்கிச் சாப்பிட்டுவிட்டுப் போய்க்கொண்டே இருக்க வேண்டியது. சாலையில் நின்றுதான் சாப்பிடவேண்டும் என்றாலும் பலகாரங்களின் ருசிக்குப் பங்கமிருக்காது. விற்கிற விலைவாசியில் எப்படி இவர்களுக்குக் கட்டுப்படியாகிறது என்று நினைக்கிற அளவுக்கு மலிவும்கூட.

அன்று நான் சாப்பிட விரும்பியது இட்லி. அருமையான சாம்பாரும் தேங்காய் மற்றும் தக்காளிச் சட்னிகளும் உடன் கிடைக்கும். கொதிக்கக் கொதிக்க இட்லி பானையிலிருந்து ஆவி பறக்க எடுத்துப் போடுவார்கள். மெத்தென்று ஒரு குழந்தையின் கன்னம் மாதிரி இருக்கும் அந்த இட்லி.

சுவரோரம் நின்று சாப்பிடத் தயாரானதும் நண்பர் எதிர்ப்பட்டார். வணக்கம் சொல்லிவிட்டு, வழக்கம்போல், சாப்பிடுகிறீர்களா என்று கேட்டேன். ‘இங்கெல்லாம் சாப்பிட்டுப் பழக்கமில்லை சார். ஒத்துக்கொள்ளாது’ என்று உடனே மறுத்துவிட்டார். சன்னலில் இருந்து ஒரு தட்டு நீண்டது. நான்கு இட்லிகளும் சாம்பார் சட்னிகளும். உள்ளுணர்வு சரியாக எச்சரித்ததால், கைக்கு வந்ததும் எடுத்து வாயில் போட்டுக்கொள்ளாமல் சில வினாடிகள் தாமதித்து நண்பரோடு பேசிக்கொண்டிருந்தேன்.

நான் நினைத்தது சரி. இந்த நரேந்திர மோடி எதற்காக இப்படி திடீரென்று உண்ணாவிரதம் இருக்கிறார்? அதற்கு நூறு கோடி ரூபாய் செலவு என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியிருக்கிறது. என்ன அக்கிரமம் பாருங்கள். சாப்பிடாமல் இருப்பதற்கு நூறு கோடி செலவு!

நண்பர், மோடியின்மீதான தமது விமரிசனத்தை என் கையில் இருந்த இட்லித் தட்டின்மீது வெளிப்படுத்திக்கொண்டிருந்தார். பரபரவென்று அவரது விரல்கள் இட்லிகளை விண்டன. சாம்பாரில் நனைத்து நனைத்து வாயில் போட்டுக்கொண்டே இருந்தார்.

எந்த ஒரு ஜமீந்தாரும் மாமன்னரும் ஷா இன் ஷாவும்கூட தனது தட்டின் உணவைத் தானெடுத்துச் சாப்பிட, இன்னொருத்தர் ஏந்திக்கொண்டிருக்கும்படி செய்ததாகக் கல்வெட்டுகளோ சொல்வெட்டுகளோ கண்டதில்லை. விருப்பமுடன் அன்பாக ஊட்டிவிடுதல் என்பது வேறு. ஆனால் நடுச்சாலையில் அவர் என் இட்லிகளைச் சாப்பிட, நான் தட்டை ஏந்தி நிற்பது எனக்கே கண்றாவியாக இருந்தது.

‘சார், வேண்டுமானால் உங்களுக்கு ஒரு ப்ளேட் ஆர்டர் செய்துவிடுகிறேனே’ என்று சொல்லிப்பார்த்தேன்.

‘அதெல்லாம் வேண்டாம் சார். நீங்கள் சொன்னதற்காகக் கொஞ்சம் மட்டும் எடுத்துக்கொண்டேன்’ என்று போய்க் கைகழுவிவிட்டு தண்ணீர் எடுத்துக் குடித்துவிட்டு வந்தார். தட்டைப் பார்த்தேன். ஒன்றரை இட்லி மிச்சம் இருந்தது.

இன்னொரு தருணத்தையும் பதிவு செய்துவிட்டால்தான் இது பூரணத்துவம் எய்தும். எங்களுடைய அடுத்த சந்திப்பு மேற்கு மாம்பலத்தில் உள்ள ஒரு பிரசித்தி பெற்ற நொறுக்குத் தீனிக் கடையில் அமைந்தது.

நான் இரவில் வேலை செய்பவன். ஒரு மணிக்குப் பிறகு குடலாகப்பட்டது கொண்டா கொண்டா என்று போட்டுப் பிராண்டியெடுக்கும். எனவே எப்போதும் சிலபல நொறுக்குத் தீனிகளை உடன் வைத்துக்கொண்டு எழுத உட்காருவதே என் வழக்கம். பெரும்பாலும் என் மனைவி இதற்கான ஏற்பாடுகளை எப்போதும் தயாராகச் செய்து வைத்திருப்பார். அம்முறை ஏனோ நான் அந்தக் கடைக்குப் போனேன். ஏனோ என்ன? அதன் பெயர் விதி.

நண்பர் சொல்லி வைத்த மாதிரி அங்கே வந்துவிட்டார். ‘ஏன் சார் கண்டதைச் சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக்கொள்கிறீர்கள்?’ என்று ஸ-ப-ஸ ஆரம்பித்தார். நீங்கள் நடைப்பயிற்சி செய்து என்ன பிரயோஜனம்? இப்படியெல்லாம் எண்ணெய்ப் பொருள்களை பாக்கெட் பாக்கெட்டாக உள்ளே தள்ளுவது உடல் நலத்துக்கு ரொம்பக் கெடுதல். காலக்கிரமத்தில் உங்களுக்குக் கொலஸ்டிரால் வரும். ஷுகர் வரும். மாரடைப்பு வரும்.

எம்பெருமான் திருவடிகளைச் சீக்கிரமே சென்றடையும் பாக்கியம் ஏற்படும் என்பதை மட்டும்தான் அவர் நேரடியாகச் சொல்லவில்லை.

நான் இதற்கெல்லாம் பொதுவில் பதில் சொல்லுவதில்லை. எனவே எப்போதும்போல் ஒரு சிறு புன்னகையை அவருக்கு அளித்துவிட்டு காரியத்தில் கவனமாக இருந்தேன்.

‘என்ன வாங்கறிங்க?’ என்றார் நண்பர்.

‘கொஞ்சம் மிக்சர். ஒரு நூறு கிராம் தட்டை. மிளகுக் காராசேவு’ என்று என் விருப்பங்களை அறிந்துகொண்டதும், ‘ஒரு நிமிஷம்’ என்று என்னைத் தடுத்தார். ஒரு ரஷ்ய ஜிம்னாசிய அழகுப்பெண்ணின் லாகவத்தில் கல்லாவுக்கும் வாடிக்கையாளருக்கும் இடைப்பட்ட தடுப்பு மரப்பலகையில் சொய்யாவென்று படுத்த வாக்கில் தன் உடலை நீட்டி மேற்படி ஐட்டங்களில் தலா ஒரு பிடியை அள்ளினார்.

‘இதையெல்லாம் சாப்பிட்டுப் பார்த்துத்தான் வாங்கணும் சார். என்ன எண்ணெய்ல போடறானோ என்னமோ?’ என்று சொல்லியவண்ணம் பரபரவென்று சாப்பிட்ட ஆரம்பித்தார்.

‘ம்.. தட்டை ஓகே. நல்லாத்தான் இருக்கு.. ம்ம்ம்ம்.. காராசேவு அருமையா இருக்கே.. வெரி குட். இது நல்ல கடைதான் போலருக்கு… மிக்சர் வேண்டாம் சார். கொஞ்சம் பழசுன்னு நினைக்கறேன். பெட்டர், யூ டேக் பக்கோடா..’ என்றபடி மீண்டும் ஒரு சொய்யா. இப்போது அவர் கையில் அரைப்பிடி பக்கோடா. அதையும் சாப்பிட்டுப் பார்த்துதான் அவர் சிபாரிசு செய்தார் என்பதைப் பதிவு செய்தாக வேண்டும்.

நான் பண்டங்களை வாங்கிக்கொண்டு பில் போடுமுன் மரியாதை மறவாமல் நண்பரைக் கேட்டேன். ‘உங்களுக்கு என்ன சார் வேணும்?’

‘சேச்சே. நான் இதெல்லாம் சாப்பிடறதே இல்லை. சுத்தமா பிடிக்காது தெரியுமோ?’

இப்போதெல்லாம் நான் பூங்கா நடைப்பயிற்சியை சுத்தமாக நிறுத்திவிட்டேன். பலகாரக் கடைகளுக்கும், பள்ளிக்கூடத்துக்குப் போவதுபோல ஹெல்மெட்டைக் கழட்டாமல்தான் போய்க்கொண்டிருக்கிறேன்.

35 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற