ஜடாமுடிக்கு வழியில்லை!

பொதுவாக எனக்கு நகை அணிவது என்பது பிடிக்காது. பெண்கள் அணிவது, அவர்கள் பிறப்புரிமை. அது பற்றி இங்கே பேச்சில்லை. நகை அணியும் ஆண்களைப் பற்றியது இது.

மோதிரம், செயின், கம்மல், வளையல் எனப் பெண்களின் பிதுரார்ஜித உரிமைகளில் நான்கினை ஆண்கள் தமக்குமான ஆபரணங்களாக அபகரித்துக்கொண்டது பற்றி நிரம்ப வருத்தப்பட்டிருக்கிறேன். பால்ய வயதுகளில் நகையணியும் ஆண்களைப் பார்க்க நேர்ந்தால் குறைந்தபட்சம் நாலடியாவது தள்ளி நின்றுவிடுவேன். குறிப்பாக, ரயிலில் சீட்டுக்கு அடியே சூட்கேசை வைத்து இழுத்துக் கட்டும் இரும்புச் சங்கிலி கனத்துக்குக் கழுத்தில் செயின் அணிந்து நகர்வலம் வரும் நபர்களைக் கண்டால் எனக்குக் கிலி. அவர்கள் அன்னா ஹசாரே மாதிரி நல்லவர்களாகக் கூட இருப்பார்கள். அந்த வயதில் என் மனத்துக்குள் அங்ஙனம் தாட்டியான செயின் அணியும் ஆண்கள் அத்தனை பேரும் கெட்டவர்கள் என்னும் அபிப்பிராயம் எப்படியோ ஏற்பட்டிருந்தது.

திடீரென்று கொஞ்ச வருடங்களுக்கு முன்னர் கல்லூரி மாணவர்கள் மத்தியில் காதில் கடுக்கண் மாட்டும் நாகரிகம் உண்டானபோது சற்று திடுக்கிட்டேன். குடுமியும் கடுக்கனும் அணிந்த சாஸ்திரோக்த சிரோமணிகளை இதே தலைமுறை எத்தனை காலமாக வீதியில் பார்க்கும்தோறும் பரிகசித்து வந்திருக்கிறது என்று எண்ணிப் பார்த்தேன். உலகம் உருண்டை. நாகரிகமும் உருண்டை.

அதிலும் ஒரு காதில் மட்டும் கடுக்கன் – அதுவும் வைரக்கல் அல்லது வைரம்போல் மின்னும் வேறேதோ கல் பதித்தது. பத்தடி தூரத்திலேயே டாலடிக்கும் விதத்திலானது. ஃபேஷன் என்றார்கள். ஒன்றும் பேசிவிட முடியாது.

இதில் இன்னொரு விசேடம் என்னவெனில், அதே கடுக்கனை இடக்காதில் அணிந்தால் ஓர் அர்த்தம், வலக்காதில் அணிந்தால் வேறு அர்த்தம். இரண்டில் ஏதோ ஒன்று சற்றே அபாயகரமானது என்றும் யாரோ சொல்லியிருந்தார்கள். எத்தனை முறை சரியாக விசாரித்தும் எந்தக் காதுக் கம்மல் இசகுபிசகான அர்த்தம் தருவது என்பதில் சட்டென்று குழப்பம் வேறு வந்துவிடுகிறது. ஆகவே நல்ல அர்த்த நாகரிகக் காதுகளைப் பார்த்தால்கூட பின்னங்கால் பிடறியில்பட தலைதெரிக்க ஓடிவிடுவது என் வழக்கம்.

மோதிரதாரிகளால் பெரிய அபாயமில்லை என்றாலும் கோப்பரகேசரி முப்பத்தி ஆறாம் குலோத்துங்க சோழனின் இலைச்சினையைப் போல் நீண்டு அகன்று தோற்றமளிக்கும் எழுபது எம்மெம் மோதிரங்களை விரலுக்கு இரண்டு வீதம் இரு கரங்களிலும் ஏந்தி நிற்போரைக் கண்டாலும் கொஞ்சம் ஒரு மாதிரி ஆகிவிடும்.

ஆயிரம் சொல்லுங்கள். பெண்கள் அணிந்தால் பார்க்க அழகு. ஆண்கள் அணிவது அராஜகத்தின் உச்சம் என்பதே என் கருத்தாக இருந்தது.

இருந்ததா? இந்தக் கருத்தைக் கொஞ்சம் தடம் புரட்டிப் பார்க்க எம்பெருமான் ஒரு கெட்ட நாளில் திருவுள்ளம் கொண்டு என்னோடு விளையாட ஆரம்பித்தான்.

நெருங்கிய நண்பர் ஒருவர் தற்செயலாக ஒரு நாள், உடம்பில் ஏதேனும் ஓரிடத்தில் செம்பு என்னும் உலோகமானது இருக்குமானால் அது ஆரோக்கியத்துக்கு ரொம்ப நல்லது என்று சொன்னார். நண்பர் கொஞ்சம் அறிவியல் தெரிந்தவர்.

செம்பு அல்லது செப்பு எனப்படும் உலோகத்துக்கு நிறைய மருத்துவ குணங்கள் உண்டு. சுமார் மூவாயிரம் வருஷங்களுக்கு முன்னரே எகிப்து தேசத்தில் செப்பில் பாத்திரம் செய்து அதில் தண்ணீர் பிடித்து வைப்பார்கள். என்னத்துக்கு? செப்புப் பாத்திரத்தில் தண்ணீர் பிடித்தால், பாக்டீரியாக்கள் நாலே மணிநேரத்தில் பரமபதம் அடைந்துவிடும். சருமத்தின்மீது செப்பு பட்டுக்கொண்டே இருக்குமானால் உள்ளுக்குள்ளே ரத்த சோகை இத்தியாதிகள் வாராது போகும். செப்புக்கு, ‘மெலானின்’ என்னும் நிறமியை உற்பத்தி பண்ணுகிற திறனுண்டு. உடலில் அது இருக்குமானால் ‘விடிலிகோ’ என்னும் வெண்படை அண்டாது.

இப்படியாக ஆரம்பித்து சொம்பு சொம்பாக அவர் செம்பின் நற்குணங்களைப் பட்டியலிட்டு என்னை செம்பில் ஒரு மோதிரமாவது அவசியம் அணியவேண்டும் என்று வற்புறுத்தினார்.

செலவு பெரிதில்லை என்பது தவிர, செப்பு மோதிரமானது தங்க மோதிரம் போல் ஓர் ஆபரணமும் இல்லையே? அணிந்தால் என்ன கேடு என்று எனக்குள் நானே கேட்டுக்கொள்ள ஆரம்பித்தேன்.

அதே காலகட்டத்தில் எனக்கு கிருஷ்ண பக்தி மேலோங்கி கிருஷ்ண பஜன்களில் பெருவாரியான நேரத்தைக் கழித்துக்கொண்டும் இருந்தபடியால், செப்பு மோதிரம் என்பதைச் சற்றே வடிவம் மாற்றி, ஹரே கிருஷ்ணா என்று செதுக்கப்பட்ட செம்பினாலான காப்பு ஒன்றை வாங்கி அணிந்துகொண்டேன். தான் கெட்டால் போதாது, சந்திரபுஷ்கரனையும் சேர்த்துக் கெடு என்பார்கள் பெரியோர்கள். எனவே என்னைப் போலவே சிறந்ததொரு கோயிஞ்சாமியாக விளங்கும் என் எழுத்தாள நண்பன் ஒருத்தனுக்கும் அந்தக் காப்பை வாங்கி அணிவித்தேன்.

சில மாதங்கள் கடந்தன. இன்னொரு நண்பர் வந்தார்.

என்ன இப்படி ராப்பகலாக உட்கார்ந்து எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்? உடம்பு என்னத்துக்கு ஆகிறது என்று அக்கறையுடன் கவலைப்பட்டவர், எனக்கு உடல் உஷ்ணத்தால் உண்டாகக்கூடிய வியாதிகள் ஏகத்துக்கு வரும் வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லி, கையோடு அதற்கொரு தீர்வும் சொன்னார்.

ஸ்படிகம் தெரியும் இல்லையா? உடனே முகம் சுளித்துவிடாதீர்கள். அது ஆபரணமல்ல. மனுஷ தேகத்துக்குக் கவசம் போன்றது அது. ஸ்படிகமானது, உடம்பு உஷ்ணத்தை அப்படியே உறிஞ்சி எடுத்துக்கொண்டுவிடும். எப்போதும் உங்களை ஃப்ரிட்ஜில் வைத்த சாத்துக்குடிப் பழம் போல் ஜில்லென்று வைத்திருக்கும். தவிரவும் மன அழுத்தத்திலிருந்து உங்களைக் கட்டாயம் காப்பாற்றும்.

ஆரோக்கியம் என்பது அபாயகரமான பிராந்தியம். அதுவும் நமது ஆரோக்கியம் தொடர்பாக யாராவது அக்கறையுடன் கருத்து சொல்லும்போது பொருட்படுத்தாமலிருக்க முடியாது.

என்ன கெட்டது? வாங்கு ஒரு ஸ்படிக மாலை.

முதலில் சற்று நெருடலாக (கழுத்துக்குத்தான்) இருந்தாலும் விரைவில் அது பழகிவிட்டது. என்னைப் பார்த்து வேறு சில நண்பர்களும் நல்ல ஸ்படிகத்தை நானும் தேடிக்கொண்டிருக்கிறேன், எங்கு வாங்கினீர்கள் என்று கேட்க, ஆஹா, உலகமே தேடும் ஒரு பொருளை நாம் முந்திக்கொண்டு கைப்பற்றிவிட்டோம் என்னும் பெருமிதம் ஏற்பட்டது.

இந்த ஸ்படிகம் வந்து சேர்ந்த ஒரு சில தினங்களுக்குள்ளாகவே எனக்கு இன்னொரு அசரீரி வாக்கு வந்து சேர்ந்தது. ஸ்படிகம் சிறந்ததுதான். ஆனால் மனிதனே, உனக்குத் தாமரை மாலைதான் மிகவும் உபயோகமானது. ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவை அண்டாமல் தடுக்கவும், எப்போதும் புத்தியை நிதானத்தில் வைத்திருக்கவும், தொற்றுநோய்களைத் துரத்தி அடிக்கக்கூடியதுமான திபெத்திய தாமரை மணிகளை மாலையாக்கி அணிந்தால் நீ மேன்மையுறுவாய்.

தாமரை மணி என்பது அதுநாள்வரை நான் கேள்விப்பட்டிராதது. இம்மாதிரி விஷயங்களில் ஞானஸ்தனான சிவகுமார் என்ற நண்பனை விசாரித்தபோது, ஆமாம் அப்படித்தான் என்று அவனும் சொன்னான்.

தாமரை மாலையை மெட்ராஸில் எல்லாம் வாங்கக்கூடாது. இமயத்திலிருந்து தருவிக்க வேண்டும். தாமரை மலரின் விதையைக் காயவைத்து மணிகளாக்குவார்கள். அதை மாலையாக்கியபிறகு நாற்பத்தியெட்டு நாள் வேப்பெண்ணெயில் ஊறவைக்க வேண்டும். அதை எடுத்துக் காயவைத்துப் பிறகு அணியவேண்டும் என்றும் சொன்னான்.

சொன்னதோடு மட்டுமல்லாமல் ரிஷிகேசத்துக்குப் போன யாரிடமோ மறக்காமல் சொல்லி அனுப்பி எனக்காக ஒரு தாமரை மாலையையும் உடனே தருவித்து, அணிவித்து, கைதட்டி வாழ்த்துத் தெரிவித்தான்.

ஆனால், ஓரிரு தினங்களிலேயே எனக்கு ஒரு பெரும் சந்தேகம் வந்தது. தாமரை மாலை அணிந்தால் வியாதிகள்தானே அண்டாது என்றார்கள்? இது ஏதடா மனிதர்களே அண்டத் தயங்குகிறார்கள்? குழம்பினேன்.

பிறகு புரிந்தது. அது தாமரையின் குற்றமல்ல. அது குளித்த வேப்பெண்ணெயின் குற்றம். ஒருநாளா ரெண்டு நாளா? ஒரு மண்டல கால வேப்பெண்ணெய் வாசம். கொசுக்களை மட்டுமல்ல; குடும்பத்தாரையும் ஓட ஓட விரட்டும்படியாக இருந்தது அதன் வீரிய பராக்கிரமம்.

இருப்பினும் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனாக அதையும் ஸ்படிகத்துடன் சேர்த்தே அணிந்துகொண்டுதான் இருந்தேன்.

இடைப்பட்ட காலத்தில் இந்த உலோகங்கள், தாதுக்கள், மணிகள், மாலைகள் குறித்தெல்லாம் கண்டமேனிக்குப் படித்துத் தீர்த்ததில், எந்த உலோகம் அல்லது தாதுவில் என்ன சக்தி இருக்கிறது, எதை அணிந்தால் என்ன லாபம் என்று டக்டக்கென்று பதிலிறுக்கக்கூடிய வித்தகனாகவும் மறுபிறப்பெய்தி இருந்தேன்.

வெள்ளி மோதிரம் அணிந்தால் வித்தை சிறக்கும் என்றார்கள். வாங்கிப் போடு. தாமிரக் காப்பு, சிறந்த தற்காப்பு என்றார்கள். மணிக்கட்டு சும்மாதானே கிடக்கிறது? கோட் ஸ்டாண்டாகக் கருதி வாங்கி மாட்டு.

ஒவ்வொரு வஸ்துவை வாங்கும்போதும் இது நகையல்ல, இது நகையல்ல என்று 108 முறை ஜபித்துவிட்டே வாங்கினேன்.

இதெல்லாம் எனக்குப் பலன் தர ஆரம்பித்துவிட்டதா, இன்னும் ப்ரொபேஷன் பீரியடில்தான் இருக்கின்றனவா என்று சரியாகத் தெரியவில்லை. ஆனால் அனைத்தையும் அணிந்துகொண்டு வெளியே புறப்பட்டால், ரத கஜ துரக பதாதிகள் சகிதம் களம் காணப் புறப்படும் உணர்வு ஒன்று உடனே வந்துவிடுகிறது. சடாமுடி ஒன்று இருந்திருக்கலாம். துரதிருஷ்டவசமாக அதற்கு வாய்ப்பில்லை. முக்காலே மூணுவீசம் கொட்டிப் போய்விட்டது. பாதகமில்லை. இதுபோதும். இனி நான் ஆரோக்கியசாமி.

தொழில் முறை மருத்துவரும் விருப்பமுறை சோதிடருமான என்னுடைய இன்னொரு நண்பர் ப்ரூனோ, என் ராசிக்கு கனக புஷ்பராகக் கல் வைத்த மோதிரம் அணிவது மேலும் பலன் சேர்க்கும் என்று வேறு சமீபத்தில் சொல்லியிருக்கிறார்.

கனக புஷ்பராகம்! பேரே கிறுகிறுக்கவைக்கிறது. சீக்கிரம் அந்த வேட்டையும் ஆரம்பமாகிவிடுமோ என்று அச்சமாக இருக்கிறது.

ஆனால் ஒன்று. ரொம்ப நெருங்கிய சிலபேருக்கு என்னுடைய இந்த திடீர் கெட் அப் சேஞ்ச் குழப்பத்தையும் கலவரத்தையும் உண்டுபண்ணியிருக்கிறது என்பதை மறுக்கமுடியாது.

பக்கத்தில் வர பயமாயிருக்கிறது என்று என் மகள் சொல்லாதவரை இதைத் தொடரலாம் என்று நினைத்திருக்கிறேன்.

23 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற