பதிலளிக்கும் நேரம்

கிழக்கிலிருந்து விலகிய பிறகு நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்று கேட்டு அநேகமாக தினசரி இரண்டு மின்னஞ்சல்களாவது வருகின்றன. இணையத்தில் ஏன் முன்போல் எழுதுவதில்லை என்று விசாரித்தும்.

இது பதிலளிக்கும் நேரம்.

உண்மையில், கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மூச்சு விடவும் அவகாசமின்றி வேலைகள் கழுத்தை நெரித்துக்கொண்டிருந்தன. சன் டிவியில் இரண்டு புதிய மெகா சீரியல்களுக்கு ஒரே சமயத்தில் வசனம் எழுதும் வாய்ப்பு வந்தது.

நீண்ட நாள்களாகப் பேச்சுவார்த்தையில் மட்டும் இருந்த ஒரு திரைப்படத்துக்கான பணிகள் திடீரென சூடு பிடித்து அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர ஆரம்பித்தது. அப்படத்தின் கதை என்னுடையது. திரைக்கதை, வசனங்களையும் நானே எழுதுகிறேன். முதல் முறையாக, ஒரு பெரிய பட்ஜெட் படத்துக்கு – பெரிய நடிகர் நடிக்கும் படத்துக்குப் பணியாற்றக் கிடைத்த வாய்ப்பு. (விவரங்கள் விரைவில்)

இதோடு, புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தலைமை நிர்வாகி பால கைலாசம், என் முதல் ஆசிரியரும் இப்போது பு.த. டிவியில் தயாரிப்பாளராக உள்ளவருமான ரகுநாத் மூலம் அழைப்பு விடுத்து, கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு நிகழ்ச்சிக்கு ஸ்கிரிப்ட் செய்து தரச் சொல்லிக் கேட்டார்.

காட்சி ஊடகச் செயல்பாடுகள் புதிதில்லைதான். ஆனால் முழுநேரம் செய்ததில்லை இதுவரை. இப்போது, வேறு எந்த ஒரு முழு நேரப் பணியையும் சிந்திக்கக்கூட முடியாத அளவுக்கு எழுத்து மட்டுமே வாழ்வை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.

இது எனக்குப் பிடித்திருக்கிறது. ஒரு வகையில், நான் விரும்பியதும்கூட.

புதிய தலைமுறை டிவி தொடர் மட்டும் உடனே ஆரம்பித்துவிட்டது. ஏற்கெனவே குமுதம் ரிப்போர்ட்டரில் உணவின் வரலாறு எழுதியபடியால், இந்நிகழ்ச்சிக்கு ஸ்கிரிப்ட் செய்வது சற்று சுலபமாகவே இருந்தது. ஆனால் பத்திரிகைக்கு எழுதுவதற்கும், விஷுவலுக்கு இடமளித்து எழுதுவதற்குமான வித்தியாசங்கள் பெரிது. இந்தத் தொடர், மிகப்பெரிய வெற்றி கண்டிருக்கிறது இப்போது. செய்தி சானல் ரேட்டிங் பட்டியலில் முன்னணியில் இருக்கிறது என்று சொன்னார்கள். மகிழ்ச்சியாக இருந்தது. இதன் தயாரிப்பாளர் – இயக்குநர் விக்ரம், தொகுத்து வழங்கும் ஹரி, இரண்டு பேரும் எனக்கு அளிக்கும் உற்சாகம் மிகப் பெரிது. ஹரி, ஏற்கெனவே குமுதத்தில் என்னுடன் பணியாற்றியவர். என் ரசனைகள், ஆர்வங்கள், நான் வேலை செய்யும் விதம் அனைத்தும் அறிந்தவர். இவர்களோடு இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

கடந்த ஆண்டுத் தொடக்கத்தில் தம்பி வெட்டோத்தி சுந்தரம் திரைப்படத்துக்கு எழுதத் தொடங்கிய பிறகு, தொலைக்காட்சித் தொடர்களுக்கு எழுதுவது நின்றுபோயிருந்தது. கிழக்கு வேலைகள் அதிகரித்து, அந்தப் பக்கம் திரும்பக் கூட முடியாத நிலை. இப்போது கிழக்கிலிருந்து வெளியேறியவுடன் (சரியாகச் சொல்வதென்றால், விலகியதற்கு மறுநாள்!) இயக்குநர் விக்கிரமாதித்தனிடமிருந்து அழைப்பு வந்தது. மெகா சீரியல் உலகுக்கு என்னை அறிமுகப்படுத்திய இயக்குநர் அவர். கெட்டி மேளத்துக்குப் பிறகு அவருக்கு நான் எழுத முடியாமலேயே இருந்தது. இடையில் மலர்கள், மேகலா, செல்லமே என்று மூன்று தொடர்களை அவர் கடந்திருந்தார். அடுத்ததாக அவர் தொடங்கவிருக்கும் ‘உதிரிப்பூக்களு’க்கு வசனம் எழுதச் சொன்னார். அது ஹோம் மீடியா தயாரிப்பு என்றும்.

ஹோம் மீடியாவுக்கு நான் ஏற்கெனவே எழுதியிருக்கிறேன். சிவசக்தி. இரண்டாண்டு இடைவெளிக்குப் பிறகு திரும்பவும் அந்நிறுவனத்துக்கு எழுதுகிறேன்.

இன்னொரு மெகா, சினி டைம்ஸ் தயாரிக்கும் முத்தாரம். இதில் தேவயானி நடிக்கிறார். ஆர். கணேஷ் இயக்கும் இத்தொடருக்கும் நான் வசனம் எழுதுகிறேன்.

தினமும் குறைந்தது பத்தொன்பது மணி நேரங்கள் பணியாற்ற வேண்டியிருப்பதால் இணையத்துக்கு அதிகம் வர முடிவதில்லை. இருந்தாலும் ட்விட்டரில் தொடர்ந்து இயங்கிக்கொண்டுதான் இருக்கிறேன் – நள்ளிரவுப் பொழுதுகளில். என் ஒரே தகவல் தொடர்பு சாதனமாகவும், ஒரே பொழுதுபோக்காகவும் ட்விட்டர்தான் இருக்கிறது இப்போது. பத்திரிகை எழுத்து, புத்தக எழுத்து இரண்டுமே இப்போதைக்கு சாத்தியமில்லாமல் இருக்கிறது. இந்த உறுத்தல் கொஞ்சம் அதிகமாகவே இருப்பதால் கூடிய சீக்கிரம் ஒரு பத்திரிகைத் தொடரையாவது ஆரம்பிக்க நினைத்திருக்கிறேன். பார்க்கலாம்.

நாளை தம்பி வெட்டோத்தி சுந்தரம் ரிலீஸ் ஆகிறது. இரண்டு நாள் இடைவெளியில் – எதிர்வரும் திங்கள்கிழமை முதல் சன் டிவியில் உதிரிப்பூக்கள் (மாலை 6.30), முத்தாரம் (காலை 11) இரண்டு மெகா தொடர்களும் ஆரம்பமாகின்றன. நண்பர்கள் பார்த்துவிட்ட, கருத்துகளை எனக்கு மின்னஞ்சல் செய்யலாம். நள்ளிரவுக்குப் பிறகு எப்படியும் சில மணிநேரங்களாவது ஆன்லைனில் அகப்படுவேன். அப்போது பேசலாம். இருக்கவே இருக்கிறது ட்விட்டர்.

38 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற