மழையும் மற்றதும்

கடந்த சில வாரங்களில் சென்னை நகரில் நான் இதற்குமுன் பார்த்திராத பல பகுதிகளுக்கு, படப்பிடிப்பு நிமித்தம் செல்ல வேண்டியிருந்தது. ஒரு சில இடங்கள் சென்னைக்குச் சற்று வெளியேயும் இருந்தன. எப்படி ஆனாலும் அதிகபட்சம் அரை மணி, முக்கால் மணி நேரத் தொலைவுக்குள் இருந்த இடங்கள்.

ஒரு சுமாரான மழைக்கு நகரம் எத்தனை நாசமாகிவிடுகிறது என்பதை இந்தப் பயணங்களின்போது கண்கூடாகப் பார்த்தேன். குறிப்பாக, போரூர், கெருகம்பாக்கம், முகப்பேர், விருகம்பாக்கம், ஆலப்பாக்கம், திருமங்கலம், கோயம்பேடு, மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், பெரம்பூர் போன்ற இடங்கள் மனிதர்கள் வசிப்பதற்கே தகுதியற்ற பிராந்தியங்களாக இருக்கின்றன. எந்தச் சாலையிலும் வடிகால் வசதி கிடையாது. எல்லா சாலைகளும் தார் இல்லாமலேயேதான் இருக்கின்றன. பெரிய பெரிய பள்ளங்களும் திடீர் மேடுகளும் நான்கடிக்கு ஒருமுறையாவது அவசியம் எதிர்ப்படுகின்றன. கண்ணுக்கெட்டிய தொலைவு வரை நீர் தேங்கி ஏரி போல் இருக்கும் சாலைகளில், பள்ளம் மேடு பார்த்து வண்டி ஓட்டவே முடிவதில்லை. இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் விழுந்து விழுந்து நகர்ந்த காட்சிகளைத் திரும்பத் திரும்பக் காண நேரிட்டது. கோயம்பேடு என்ற பிராந்தியம் ஒரு நல்ல மழை நாளில் திருப்பாற்கடல் போல் காட்சியளித்ததைக் கண்டேன்.

இதில் பல இடங்களில் டிராஃபிக் சிக்னல்கள் பழுதாகி, போக்குவரத்து நெரிசல் வேறு. ஒரு நாள் போரூர் சிக்னல் தாண்டி மதனந்தபுரத்தை அடைவதற்கு எனக்கு ஒன்றே முக்கால் மணி நேரம் பிடித்தது. மிஞ்சிப்போனால் மூன்று கிலோ மீட்டர்!

இதனை இன்று எழுதக் காரணம், முந்தைய மழை முடிந்து ஒரு வாரத்துக்கு மேலாகி, இன்று அடுத்த மழை ஆரம்பித்திருக்கிறது. நேற்று மாலை வரைகூட நான் முன்னர் குறிப்பிட்ட இடங்களுள் சிலவற்றில் பழைய நீர்த்தேக்கம் அப்படியேதான் உள்ளது. ஏற்கெனவே மோசமான நிலையில் உள்ள சாலைகள், இம்மழைக்குப் பிறகு மேலும் மோசமாகி, நடக்கக்கூட முடியாத அளவுக்கு இருக்கின்றன. அவலம் பழகிய மக்கள் சகித்துக்கொண்டு போய்வந்தபடிதான் இருக்கிறார்கள்.

புதிய ஆட்சி, புதிய உள்ளாட்சி எது வந்தாலும் நகரின் இந்தக் கேடுகெட்ட சாலைகள் ஒருபோதும் மாறாது என்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. ஆட்சியில் இருப்பவர்கள் தாம் ஆபீசுக்குப் போய்வரும் சாலைகளை மட்டும் அவ்வப்போது செப்பனிட்டு வைத்துக்கொள்வது வடிகட்டிய அயோக்கியத்தனம்.

இந்த ஒரு மாத காலம் விடாமல் ஊர் சுற்றியதில், ஓர் உண்மை தெரிந்தது. சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலுக்கு மக்கள் தொகையோ வாகனங்களோ அல்ல;  வாகனங்கள் நகரவே முடியாதபடிக்கு அடிக்கொருதரம் பிரேக் போடவைக்கும் மட்டரகமான சாலைகளே முக்கியமான காரணம்.

உடனே புதிய சாலைகள், எத்தனையோ கோடி ஒதுக்கீடு என்று சென்ற மழையின்போதே அறிவிப்புகள் வந்தன. ஆனால் எங்கும் வேலை நடப்பதாகத் தெரியவில்லை. இந்தப் புயல் கரை கடந்து அடுத்தது வருவதற்குள்ளாகவாவது ஏதாவது செய்தால் தேவலை.

13 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற