எனக்காக மட்டும்

அவர் அப்போதுதான் சிம்பொனி முடித்து, திரும்பி வந்திருந்தார். அடையாறு பார்க் ஹோட்டலில் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடாகியிருந்தது. சிம்பொனி கிம்பொனியெல்லாம் எனக்குப் பிரமாதமில்லை. ராஜாவைப் பார்க்க ஒரு தருணம். போதும். புறப்பட்டுவிட்டேன்.

ஆனால் அந்தப் பத்திரிகையாளர் சந்திப்பு சற்று வினோதமாக இருந்தது. ராஜாவின் மொழி, அவர் என்ன செய்துவிட்டு வந்திருக்கிறார் என்பதைச் சரியாக வெளிப்படுத்தப் போதுமானதாக இல்லை. அவராக விளக்கிச் சொன்னாலொழிய மற்றவர்களுக்குப் புரியும் சாத்தியமும் இல்லை.

அவரும் பல நிமிடங்கள் விதவிதமாக என்னென்னவோ சொல்லி, தனது இசைக்கோலத்தை விளக்கப் பார்த்தார். ம்ஹும். ராயல் ஃபில்ஹார்மனிக் கலைஞர்களின் சிறப்புகளைப் பட்டியலிட்டு, அவர்கள் எப்படியெல்லாம் பாராட்டினார்கள் என்று சொன்னார். ம்ஹும்.

நம்ம ஆள் ஏதோ பெரிதாகச் செய்திருக்கிறார் என்கிற ஒருவரிக்குமேல் யாருக்குமே எதுவும் ஏறவில்லை. எதையோ தீவிரமாக விளக்க முயற்சி செய்து முழுதும் தோற்று, இறுதியில் அவர் கைகூப்பிவிட்டார். எல்லோரும் சாப்பிடப் போய்விட்டார்கள். ராஜா மேடையை விட்டு நகருமுன் ‘சார் ஒரு நிமிடம்’ என்றேன். நின்றார்.

ஒரு புகைப்படம் எடுக்கவேண்டும் என்றேன். அதுதான் அவ்வளவு எடுத்தாகிவிட்டதே என்றார்.

இல்லை, இது எனக்கே எனக்காக என்றேன். அவருக்குப் புரியவில்லை. சிரித்தார். சிரித்த கணத்தில் புகைப்படக்காரர் எடுத்துவிட்டார். உண்மையில் என் அற்ப சந்தோஷங்களில் ஒன்றாக இன்றளவும் இது இருக்கிறது. இந்தப் படம் என்னைத் தவிர உலகில் வேறு யாரிடமும் கிடையாது. ஒரே ப்ரிண்ட். போட்ட ப்ரிண்ட்டை லேமினேட் செய்து வைத்துவிட்டேன். தீர்ந்தது.

என் வீட்டில் நான் இரண்டு பேரின் புகைப்படங்களை மட்டும்தான் என் எழுதும் மேசைக்கு அருகே வைத்திருக்கிறேன். ஒன்று பாரதி. இன்னொன்று ராஜா. கவிதையில் அவன் செய்ததை இசையில் இவன் செய்திருக்கிறான் என்ற எண்ணம் இன்றுவரை மாறாமல் அப்படியே இருக்கிறது.

கடந்த வாரம் நடைபெற்ற இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்குப் போகவேண்டும் என்று பலமாக திட்டமிட்டு டிக்கெட்டெல்லாம் வாங்கியும் போகமுடியாமல் ஆகிவிட்டது. நாளை ஜெயா டிவியில் பார்த்துதான் தீர்த்துக்கொள்ளப் போகிறேன்.

இன்று பார்த்த முன்னோட்ட நிகழ்ச்சி, என் மகிழ்ச்சியை வெகுவாகக் கிளறிவிட்டபடியால் இந்தக் குறிப்பை எழுதி, இதுவரை உலகம் பார்க்காத இளையராஜாவின் இந்தப் புகைப்படத்தை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கலாம் என்று தோன்றியது.

இனி, இது உங்களுக்கும்.

பின்குறிப்பு: அன்று என்னுடன் வந்த புகைப்படக்காரர், இன்று பிரபல ஒளிப்பதிவாளராக இருக்கும் கோபிநாத்.

11 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற