How to Name it?

இன்றைய தினம்,  என் வாழ்வின் பெருமகிழ்ச்சியான நாள்களுள் ஒன்று.  பல வருடக் கனவான எலக்டிரானிக் கீ போர்ட் ஒன்றை [Casio CTK 2200] இன்று வாங்கினேன். பேசிக்குக்குப் பக்கத்து வீட்டு மாடல்தான். ஆனாலுமென்ன. நான் கடையனிலும் கடையன். எனக்கு இது போதும்.

பல வருடங்களுக்கு முன்னர் முதல் முதலில் புல்லாங்குழல் கற்றுக்கொண்டு வாசிக்கத் தொடங்கினேன். பிறகு வீணைக்கு மாறி ஏழு எட்டு வருடங்கள் அதனோடு போனது. எங்காவது ஹார்மோனியம் கண்ணில் பட்டால் தப்புத் தப்பாக வாசித்துப் பார்ப்பேன். நூற்றுக்கணக்கான தப்புகளுக்குப் பிறகு கொஞ்சம்போல் அதன் சூட்சுமம் பிடிபட்டது. ஒரு ஹார்மோனியம் வாங்கவேண்டுமென்று ரொம்ப நாளாக ஆசைப்பட்டேன். முடியாமலே போய்விட்டது.

பிறகு கிடார்மீது காதல் ஏற்பட்டது. என் சகோதரி வீட்டில் இரண்டு கிடார்கள் இருந்தன. யாரோ நண்பர் குடிமாறிச் சென்றபோது கொடுத்துவிட்டுச் சென்ற கிடார்கள். ஒன்று பாஸ் கிடார். இன்னொன்று லீட். பாஸை எடுத்து வந்து சுதி கூட்டி வாசித்துப் பார்க்க ஆரம்பித்தேன். தந்திக் கருவிகள் அனைத்துக்கும் அடிப்படை ஒன்றுதான் என்பது என் தீர்மானம். கிடாரில் கமக சூட்சுமம்தான் பிடிபடவில்லையே தவிர எளிய கிடார் பாடல்களை சுலபமாகவே வாசிக்க முடிந்தது. இன்று காலை கூட பனி விழும் மலர்வனம் வாசித்துப் பார்த்தேன். கேட்கும்படியாகத்தான் இருந்தது.

ஆனால் ஒரு கீ போர்டுக்கான எனது ஏக்கம் தீருவதாக இல்லை. குறிப்பாக, ட்விட்டரில் அறிமுகமான நண்பர் கார்த்திக்குடன் (@karthiktn) பழகத் தொடங்கிய பிறகு, அவர்மூலம் அறிமுகமான ஏராளமான மேற்கத்திய இசை மேதைகளின் படைப்புகளைக் கேட்க ஆரம்பித்த பிறகு கை சும்மா இருக்கமாட்டேனென்கிறது. சற்று ஓய்வு கிடைத்தாலும் கேட்டதை வாசித்துப் பார்க்கச் சொல்லி உள்ளுக்குள் ஒரு குண்டூசி குத்திக்கொண்டே இருந்தது.

இதெல்லாம் எதற்கு என்ற எண்ணம் எழாமலிருப்பதில்லை. மற்றதெல்லாம் மட்டும் எதற்கு என்ற பதில் வினாவும் கையோடு வந்துவிடுகிறது. இசை என்பது போதையல்ல. போதம். தொடக்கம் முதலே அது வெறும் பொழுதுபோக்கல்ல என்ற தீர்மானமான எண்ணமுடன் வளர்ந்தவன் என்பதால் ஒவ்வொரு கருவி சித்திக்கும்போதும் பரவசமாகிவிடுகிறது.

ஒரு முழுநேர இசைக்கலைஞனாகவேண்டும் என்று மிகச் சிறு வயதுகளில் ஆசைப்பட்டிருக்கிறேன். புத்தி தெளிந்தபோது எனக்கு அத்தகுதி இல்லை என்று உணர்ந்தேன். என் மொழி இசையல்ல; எழுத்து என்று கண்டு தேர்ந்தேன். இருப்பினும் செகண்ட் லேங்குவேஜாக இதுவும் இன்றுவரை கூடவே வந்துகொண்டுதான் இருக்கிறது.

ஒரு நாளில் சுமார் பதினெட்டு, பத்தொன்பது மணி நேரங்கள் எழுதும் வேலையில் இருப்பவன் நான். கீ போர்டை வாசித்துப் பார்க்க எங்கே நேரமிருக்கும் என்ற சந்தேகம் என் மனைவிக்கு இருக்குமென்று நினைக்கிறேன். ஆயினும் என் எந்த விருப்பத்துக்கும் தடை போடாத அவளது சுபாவம்தான் என்னை இப்படியெல்லாம் எண்ணியபடி வாழவைக்கிறது.

கடந்த அரை மணிநேரமாக என் புதிய கேஸியோ கீ போர்டில் ஹவ் டு நேம் இட்டில் இருந்து ஒரு பகுதியைத் திரும்பத் திரும்ப வாசித்துக்கொண்டிருக்கிறேன். அக்கம்பக்கத்தாரிடமிருந்து இன்னும் புகாரேதும் வரவில்லை என்பதால் வாசிப்பு நன்றாக இருப்பதாகவே நினைத்துக்கொள்கிறேன்.

மனித வாழ்க்கை அற்ப சந்தோஷங்களால் ஆனது. என் சந்தோஷம், இது.

14 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற