தேவநேசன்களின் வம்ச சரித்திரம்

சில ஆண்டுகளுக்கு முன்னால் வீட்டுக்கு ஒரு தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் வாங்கினோம். அக்வாகார்டு என்னும் நிறுவனத்துடையது. அன்று புதிதாக அறிமுகமாகியிருந்த ‘ரோபோட்’ என்னும் மாடல். வாங்கும்போது பதினைந்தாயிரமோ என்னமோ விலை.

நான் வாங்கிய நேரம்தான் காரணமாயிருக்கவேண்டும். அக்வாகார்டு நிறுவனத்தின் அந்த மாடல் மிகப்பெரிய ஃபெய்லியர் மாடலானது. என்னைப் போல் வாங்கிய அத்தனை பேரும் ஏதாவது குறை சொல்லி அதை தூஷித்துக்கொண்டிருந்தார்கள் என்பது மெல்ல மெல்லத் தெரிய ஆரம்பித்தது.

ஆனாலும் வாங்கிவிட்ட பிறகு என்ன செய்ய இயலும்? சர்வீஸ் செண்டருக்கு மாதம் மும்மாரி போன் செய்து அழைத்துக்கொண்டே இருப்பது என் மனைவியின் பொழுதுபோக்குகளுள் ஒன்றானது. தண்ணீர் ஏறவில்லை. அடியில் உப்பு படிகிறது. சர்வீஸ் லைட் எரிந்துகொண்டே இருக்கிறது. கொடகொடவென்று சத்தம் கேட்கிறது. சுத்திகரிக்கப்பட்டுவிட்டதாக சிக்னல் கொடுக்கப்பட்ட பிறகும் தண்ணீரில் தூசு தெரிகிறது.

இன்னபிற குறைபாடுகள் முதலில் மிகுந்த அதிர்ச்சியளித்தாலும் காலப்போக்கில் பழகிவிட்டது. அக்வாகார்டு விளையாட்டு என்பது வீட்டுக்குப் பழகிப் போன ஒன்றாகிவிட்டது.

ஒவ்வொரு முறையும் சுமார் 108 அழைப்புகளுக்குப் பிறகு எப்படியும் சர்வீஸ் செண்டரில் புகாரை ஏற்றுக்கொண்டு ஒரு நம்பர் கொடுத்துவிடுவார்கள். அதன்பின் சம்மந்தப்பட்ட ஏரியா சர்வீஸ் மேனேஜருக்கு போன் செய்யத் தொடங்கினால் பத்திருபது முறைகளுக்குப் பிறகு அவர் லைனுக்கு வருவார். வந்து பார்ப்பதாக வாக்குறுதி அளித்துவிட்டு ஏழெட்டு தினங்கள் காத்திருக்கச் செய்வார். அதற்குள் மேலிடப் புகார்கள், கண்டன அறிக்கைகள், சாபங்களால் நிறுவனத்தாரைக் குளிப்பாட்டி முடித்திருப்போம்.

சற்றும் எதிர்பாராத ஒரு தேவ கணத்தில் அக்வாகார்டு சர்வீஸ் மேன் வாசலில் வந்து நிற்பார். மேடம், புகார் வந்திருக்கிறது.

அத்தருணத்தில்,

* மின்வெட்டு இல்லாதிருந்தால்
* மோட்டார் ரிப்பேர் ஆகாதிருந்தால்
* வந்த சர்வீஸ்மேனுக்கு ‘ரோபோட்’ மாடல் குறித்துத் தெரிந்திருந்தால்
* அவரது தோள்பையில் உரிய பழுதுபார்க்கும் கருவிகள் மறக்காமல் எடுத்து வைக்கப்பட்டிருக்குமானால்
* வாரண்டி கார்டு, ஏஎம்சி கார்டு ஒளிந்துகொண்டு பூச்சாண்டி காட்டாதிருந்தால்

பழுது சரிபார்க்கப்பட்டுவிடும். அடுத்த ஓரிரு மாதங்களுக்குப் பிரச்னை இராது.

ஆனால் பெரும்பாலும் வருகிற சர்வீஸ்மேனுக்கு ‘ரோபோட்’ என்னும் மாடல் குறித்துத் தெரிந்திருக்காது. அக்வாகார்டு கம்பெனியில் வாரமொருமுறை புதிய சர்வீஸ் இஞ்சினியர்களை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். இந்த ரோபோட் மாடலை மட்டும் அறிமுகப்படுத்திய முதல் மாதத்திலேயே ஊத்திமூடி ஏறக்கட்டி, அவர்களும் மறந்துவிட்டார்கள்.

இதுவரை சுமார் ஐம்பது சர்வீஸ்மேன்களையும் பத்துப் பன்னிரண்டு சர்வீஸ் மேனேஜர்களையும் பார்த்துவிட்டோம். என் மனைவி தொலைபேசியில் அழைத்தால் கதறிக்கொண்டு காணாமல் போய்விடுகிறவர்கள். ஒவ்வொருவரும் பதவிக்கு வந்ததுமே நிறுவனத்தார் முதற்கண் என் மனைவியின் தொலைபேசி எண்ணைத்தான் தருவார்கள். இந்த நம்பரில் இருந்து ஒரு நாரீமணி அழைப்பார். அழைத்தால் எடுக்காதே என்று சொல்லிவிட்டுத்தான் அப்பாயின்மெண்ட் ஆர்டர் தருவார்கள் என்று கேள்வி.

தேவநேசன் என்னும் சர்வீஸ் மேலாளராகப்பட்டவர் (இது ஒரு நபரின் பெயர் மட்டுமல்ல. குருதிப்புனலில் வரும் சின்னசுவாமிஜி மாதிரி பொறுப்பாளியின் பெயராகிவிட்டது.) சலிக்காமல் எத்தனை முறை அழைத்தாலும் எடுக்காதிருப்பதில் விற்பன்னர். அலுவலக நேரத்தில் அழைத்தால்கூட பக்கத்து சீட் பெண்மணியிடம் மொபைலைக் கொடுத்து, ‘சார் வீட்ல இல்லிங்க’ என்று சொல்லச் சொல்லுமளவு மன உளைச்சலுக்கு ஆளான பரிதாபகரர்.

வேறு வழியில்லை. அவர்களை நாங்களும் எங்களை அவர்களும் சகித்துக்கொண்டுதான் தீரவேண்டும் என்பது என்னப்பன் இட்டமுடன் எந்தலையில் எழுதிவைத்த விதி.

சென்ற வாரமும் அக்வாகார்டு படுத்துவிட்டது. ஒருவாரமாக வீட்டில் கேன் தண்ணீர்தான். இரு தினங்களாக கேனுக்கும் தட்டுப்பாடு. டீசல் பற்றாக்குறையால் தண்ணீர் கேன் வண்டிகள் வரவில்லை. அப்படியே வரும் தண்ணீர் கேன்களைக் கடைக்காரர்கள் ரெகுலர் கஸ்டமர்களுக்கு மட்டும்தான் தருவேனென்று அடம்பிடிப்பதால் அசோகமித்திரன் நாவல் சித்திரிக்கும் நிலைமைக்கு ஆளாகிவிடுவோமோ என்று பயந்திருந்தேன்.

இந்நாள்களில் இடைவிடாமல் தேவநேசனுக்கும் சர்வீஸ் செண்டருக்கும் மாற்றி மாற்றி போன் செய்து வெயிலின் கொடுமையை மேலும் அவர்களுக்கு உக்கிரமாக்கிய பாவத்தைத் தேடிக்கொண்டேன்.

சனியனைத் தூக்கிப் போட்டுவிட்டு வேறு கம்பெனியின் நீர் சுத்திகரிப்பானை வாங்கித் தொலைத்தால்தான் என்ன?

முடியவே முடியாதாம். கூப்பிடும்போதெல்லாம் பழுது நீக்கித் தரவேண்டியது தேவநேசனின் கடமை. ஏஎம்சி போடும்போது மட்டும் எத்தனை குழைந்தார்கள்? வரட்டும். வந்து செய்யட்டும்.

மல்லுக்கட்டுதல் என்பது முதலில்தான் சிரமம் தரும். பழகப்பழக அது ஒரு வீர விளையாட்டாகிவிடும் போலிருக்கிறது.

13 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற