காலத்தின் கோலக்கொலைக் குற்றபக்கெட்

நவீன ஓவியக்கலையானது கிபி 18ம் நூற்றாண்டுக்குச் சிலபல ஆண்டுகள் முன்னதாகவோ அல்லது பின்னதாகவோ தோன்றியிருக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். சுமார் இருநூறு ஆண்டுகளில் அதன் வளர்ச்சியாகப்பட்டது விலைவாசியைப் போல் தறிகெட்டு மேலேறிவிட்டதை ஓவியரல்லாதோர் அதிர்ச்சியுடன் கவனித்து வந்திருக்கிறார்கள். எல்லா பிரச்னைகளுக்கும் மூலக்காரணம் இந்த ஐரோப்பியர்கள்தான். நாடு பிடித்தோமா, நிறைய சம்பாதித்தோமா, குடித்து கூத்தடித்து வாழ்ந்து முடித்தோமா என்றில்லாமல், ஆடு மாடு வளர்ப்பதற்கு பதில் கலை வளர்க்கத் தொடங்கியதை ஒரு முக்கியத் திருப்பமாக சரித்திர ஆசிரியர்கள் (இவர்கள் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்துக்குப் புத்தகம் எழுதாதவர்கள்.) குறிப்பிடுகிறார்கள்.

நவீன ஓவியக் கலையின் முதல் கட்டமானது, அடுத்தது காட்டும் பளிங்குபோல் உள்ளது உள்ளபடி எடுத்துச் சொல்லுவதைச் சற்றே அழகூட்டிச் சொல்வது என்பதாக இருந்தது. பின்னர் காலப்பெண்ணானவள் சில இசங்களைப் பிறப்பித்தாள். அவை எல்லாமே கம்யூனிசம்போல் அபாயகரமானதல்ல என்றாலும் ஒரு சில அப்படியும் இருக்கத்தான் செய்தன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

இந்த இசங்களின் வருகைக்குப் பின்னர் நவீன ஓவியமாகப்பட்டது தன் எழில்மிகு கோர நாக்குகளை நாலாபுறமும் நீட்டிச் சுழட்டி விதவிதமான வர்ண ஜாலங்களைக் காட்டத்தொடங்கியது. நிற்பது, நடப்பது, ஆடுவது, பாடுவது, அழுவது, சிரிப்பது, சண்டையிடுவது, வேட்டையாடுவது, விருந்துபசாரம் செய்வது, உண்டு களித்திருப்பது, போர் புரிவது, பிரசாரம் செய்வது, கழுவேற்றுவது, கழுவேற்றப்பட்டானைக் கட்டையில் கிடத்தித் தீமூட்டுவது, அதன்பின் கூடி நின்று அழுவது, அழுது முடித்துவிட்டு அரிசி உப்புமா சாப்பிடுவது இன்னோரன்ன யதார்த்தக் காட்சிகளை யதார்த்தம் தெரியாத அளவு திறமையாகக் காட்சிப்படுத்தத் தொடங்கினார்கள்.

இக்கலையின் பரவலாக்கம் இந்தியத் துணைக்கண்டத்துக்குக் கப்பல் மற்றும் தரைவழி மார்க்கங்களில் வந்து சேர்ந்தபோது இராஜா ரவிவர்மா போன்ற ஓவிய மேதைகள் இதனை சம்ரட்சித்து வளர்க்கத் தலைப்பட்டனர். அந்த ஓவியர்கள் காலமான பிறகு ஜெயராஜ், மாருதி, சியாம் போன்ற ஓவிய மேதைகள் அப்பதவிக்கு அமர்த்தப்பட்டார்கள். இரவின் மயக்கம், பகலின் மப்பு கலைப்பு, ஹேங் ஓவர் அவஸ்தைகள் உள்ளிட்ட நுணுக்கமான உளவியல் மற்றும் தாவரவியல் சார்ந்த நுண்ணுணர்வுகளை ஓவிய மொழியில் இவர்கள் மொழிபெயர்த்துப் பிரசுரித்தார்கள்.

இந்தப் பிரசுரங்கள் பல இலட்சக்கணக்கில் விற்பனையான சரக்குகளின் இடையே சொருகிவைக்கப்பட்டதால் இவையும் விற்பனையானதாகவே கருதிக்கொள்ள வேண்டியிருக்கிறது. மதியப் பொழுதுகள், இடுப்பு வலி, முழங்கால் சிராய்ப்பு, ஆவக்காய் ஊறுகாய் போன்ற விவரிக்கவொண்ணாத அனுபவச் சிலிர்ப்புகளை இந்நவீன ஓவியக்கலையானது தாரை மற்றும் தப்பட்டையொலியாக உருமாற்றும் அதிரகசியம் ரசிக்கத்தக்கதே.

இவ்வியாசத்தின் மேலுள்ள நவீன ஓவியமானது 21ம் நூற்றாண்டில் (சரியாகச் சொல்வதென்றால் கிபி 2012 ஜுன் மாதம் இரண்டாம் தேதி இந்திய இரவு நேரம் 8.40) ஒரு நவீன ஓவியரல்லாதாரால் வரையப்பட்டது என்பது சரித்திரக் குறிப்புகளுக்காக. இவ்வோவியத்தின் தலைப்பு ‘காகம் இல்லாத வெளி’ என்பதாகும்.

12 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற