குசலவபுரி என்கிற கோயம்பேடு

வெகு வருஷங்களுக்கு முன்னால் கல்கியில் ஒரு சிறுகதை எழுதியிருந்தேன். ராமேஸ்வரம் போகும் வழியில் ராமர் குரோம்பேட்டைக்கு வந்து தங்கியிருக்கிறார் என்று அழிச்சாட்டியம் பண்ணும் ஒரு மாமாவைப் பற்றிய கதை. இப்போது தோன்றுகிறது. அக்கதை உண்மையில் நடந்ததாகக் கூட இருக்கலாம். கோயம்பேட்டுக்கு சீதை வந்திருக்கும்போது ஏன் குரோம்பேட்டைக்கு ராமர் வந்திருக்க முடியாது?

கோயம்பேட்டில் ஒரு பெருமாள் கோயில் இருக்கிறது என்பது எனக்குத் தெரியும். கேள்விப்பட்டதுதான். போனதில்லை. அக்கோயில் ராமாயணத்துடன் ஏதோ வகையில் சம்மந்தப்பட்டது என்றும் காதில் விழுந்திருந்தது. இன்று நேரில் சென்றதால் விவரம் அறிந்தேன்.

முன்னொரு காலத்தில் வால்மீகி முனிவர் கோயம்பேட்டில் ஆசிரமம் கட்டி வாழ்ந்து வந்திருக்கிறார். தமிழ் ஈழத்தாரால் கடத்தப்பட்டு பின்னர் மீட்கப்பட்டு தாயகம் திரும்பி, குடும்பம் நடத்தி கர்ப்பவதியான சீதை, முனிவரின் இந்த ஆசிரமத்துக்குத்தான் வந்து தங்கியிருந்திருக்கிறாள். அதாவது கர்ப்பகாலம் முழுதும். அம்மா வீடு ஏன் அவரைக் கைவிட்டது என்பது குறித்த சரித்திரக் குறிப்புகள் ஏதுமில்லையாதலால் அதற்குள் நாம் நுழைய வேண்டாம். சீதையானவள் வால்மிகி முனிவரின் கோயம்பேடு ஆசிரமத்தில் வசித்து, அங்கேயே இரட்டைக் குழந்தைகளைப் பெற்று, கொஞ்சகாலம் அங்கேயே வளர்க்கவும் செய்திருக்கிறாள்.

வால்மிகி முனிவரிடம் பாடம் படித்து வளர்ந்த லவனும் குசனும் ஆசிரமத்துக்குப் பக்கத்திலேயே கோயில் கொண்டிருந்த சிவபெருமானை வழிபட்டிருக்கிறார்கள். அந்தச் சிவன் கோயிலுக்குப் பக்கத்திலேயே வால்மிகி ஆசிரமம் இருந்த இடத்தில் சிலபல நூறாண்டுகளுக்கு முன்னர் வைகுந்தவாசப் பெருமாள் கோயில் கட்டப்பட்டிருக்கிறது.

கோயம்பேடு போன்ற ஒரு ஜனசந்தடி பிரதேசத்தில் இப்படியொரு அமைதியான கோயில் இருக்குமென்று நான் நினைத்ததில்லை. குலோத்துங்க சோழன் (எத்தனையாவது என்று தெரியவில்லை) கைங்கர்யம் செய்திருப்பதாகத் தகவல் பலகை தெரிவிக்கிறது. பழைய கோயில்தான். சந்தேகமில்லை. ஆனால் பழசுமில்லாத, புதுசுமில்லாத ஒரு ரெண்டுங்கெட்டான்தனத்தை அவ்வப்போதைய கைங்கர்யர்கள் கவனமாகக் கொண்டு சேர்த்திருக்கிறார்கள். பக்கத்து சிவன் கோயிலுடன் ஒப்பிட்டால், பெருமாள் கொஞ்சம் ஏழைதான் போலிருக்கிறது. சிவனார் பெரிய கோபுரம், சமீபத்திய கும்பாபிஷேகம், ஆரவாரமான பூஜை புனஸ்காரங்களுடன் ஜோராக இருக்கிறார். வைகுந்தவாசப் பெருமாள் ஏனோ தமிழ் எழுத்தாளன் மாதிரிதான் இருக்கிறார். புராதனமான இக்கோயிலுக்கு ஒரு முகப்புக் கோபுரம்கூட இல்லை. தாயாருக்கு (கனகவல்லித் தாயார்) தனி சன்னிதி இருக்கிறது. ஆனால் தனி பட்டாச்சாரியார் இருப்பதாகத் தெரியவில்லை. பெருமாள் சன்னிதி பட்டரிடம் கேட்டபோது, கொஞ்சநாழி காத்திருந்தா தாயார் சன்னிதி திறக்கலாம் என்று சொன்னார்.

இந்தக் கோயிலில் ராமர் சன்னிதி ஒரு விசேஷம். ராமரும் சீதையும் மட்டும்தான். ஆஞ்சநேயர் கிடையாது. லட்சுமணன் கிடையாது. வசிஷ்டன் புனைந்த மௌலியை ராமர் கழட்டி வைத்திருக்கிறார். மரவுரிதான். சீதைகூட கோடாலிக் கொண்டை போட்ட கோலத்தில்தான் காட்சி கொடுக்கிறாள். புருஷன் பெண்டாட்டி சண்டை முடிந்து கொஞ்சநாள்தான் ஆகியிருக்கும் போலிருக்கிறது. ஆசிரமத்திலிருந்து அழைத்துப் போக வந்திருக்கிறார்.

கோயிலைவிட்டு வெளியே வந்ததும் லவனும் குசனும் எங்கே என்று என் மகள் கேட்டாள். ரொம்பக் கவனமாக அவர்களைக் கடவுளாக்காமல் விட்டிருப்பதை மனத்துக்குள் ரசித்தபடி கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுக்கு எதிரே உள்ள பூங்காவுக்கு அழைத்துச் சென்று விளையாட விட்டுவிட்டேன்.

வாய்ப்பிருந்தால் கோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாளைச் சென்று சேவித்துவிட்டு வாருங்கள். பஸ் ஸ்டாண்ட் தாண்டி, சிக்னல் தாண்டி, மேம்பாலத்தின் அடியில் இடதுபுறம் திரும்பினால் இருநூறடியில் மீண்டுமொரு இடது வளைவு. வால்மீகி காலத்தில் இந்த இடம் பெரிய காடாம். இப்போது சதுர அடி ரூபாய் ஐயாயிரத்துக்குக் குறையாது.

20 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற