யுத்தம் சரணம்: சில விமரிசனங்கள், சில விளக்கங்கள்

குமுதம் ரிப்போர்ட்டரில் வெளியாகும் என்னுடைய ‘யுத்தம் சரணம்’ தொடர் குறித்து இணையத்தில் வெளியாகும் சில விமரிசனங்களைச் சுட்டிக்காட்டி, தொடர்ந்து சில வாசகர்கள் கேள்வியெழுப்பி வருகிறார்கள். நண்பர் சுரேஷ் யுத்தம் சரணம் அறிவிப்பு வெளியான பதிவில் இன்று இதனை ஒரு வினாவாக முன்வைத்துள்ளார். வாசகர்களின் வசதிக்காக அவரது கருத்தைக் கீழேயும் அளித்திருக்கிறேன். இது பற்றிய என் கருத்துகள் இதனைத் தொடர்ந்து வெளியாகியிருக்கிறது.

ஈழம் பற்றிய யுத்தம் சரணம் ஆரம்பித்தாலும் ஆரம்பித்தீர்கள், அதைப் பற்றி இணைய உலகில் விரிவான விவாதமே ஆரம்பித்து விட்டது. நீங்கள் ஈழத்தகவல்களைப் பிழையுடன் கூறுவதாயும், பொன்சகா கொலைமுயற்சியிலிருந்து இதைத் தொடங்கியது, ஈழம்பற்றி அறியாத வாசகனை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தும் என்றும் தமிழ் சசி தனது வலைப் பதிவில் கூறியிருக்கிறார். உங்களது பெயரில் ஆரம்பித்திருக்கும் ஆர்குட் குழுமத்திலும் இது பற்றிய ஒரு விவாதம் ஓடிக்கொண்டிருக்கிறது. தாங்கள் விளக்கம் அளிப்பீர்கள் என்று எதிர்பார்க்கும் ஒரு வாசகன். – சுரேஷ்

இனி என் பதில்:

அன்புள்ள சுரேஷ்

இத்தொடரினைக் குறித்து இணையத்தில் வெளியாகும் ஒவ்வொரு குறிப்பையும் விமரிசனத்தையும் கவனமாகப் படித்து வருகிறேன். ஈழப் போராட்டம் குறித்த சார்பற்ற, சரியான தகவல்களை அளிக்கவேண்டும் என்பது மட்டும்தான் என் நோக்கம். என்னுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இதில் எவ்வித இடமும் இல்லை. எழுதுகிற ஒவ்வொரு வரிக்கும் சாத்தியமுள்ள அனைத்துத் தரப்புகளிலிருந்தும் ஆதாரங்கள் தேடி, ஒப்பிட்டுச் சரிபார்த்துத்தான் எழுதுகிறேன். இவற்றைத்தாண்டி, தகவல் பிழைகள் வருமானால் – சுட்டிக்காட்டப்படுமானால், அதையும் சரிபார்த்து, நேர்ந்த பிழையைச் சொல்லி, சரியான தகவலையும் அளிக்கத் தயாராக இருக்கிறேன்.

தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு ஈழப் பிரச்னை குறித்த சரியான புரிதலை உண்டாக்குவது ஒன்றே இத்தொடரின் நோக்கம். பெரிய நாளேடுகளும் பிரபல விமரிசகர்களும் தொடர்ந்து ஈழம் குறித்த ஒருதலைப்பட்சமான தகவல்களையே முன்வைத்துவரும் சூழலில், அனைத்துத் தரப்புகளில் இருந்தும் கிடைக்கக்கூடிய தகவல்களைப் பொதுவில் வைத்து, உண்மையை வாசகர்களே உணர்ந்துகொள்ளக்கூடிய வகையில் இதனை வடிவமைக்க விரும்புகிறேன்.

மகாவம்சம் தொடங்கி இலங்கையின் முழுமையான சரித்திரத்தை இத்தொடர் விவரிக்கும். களம் பெரிது என்பதனால் முன்னும் பின்னுமாக நகர வசதியாக Halfway opening உத்தியைக் கையாண்டிருக்கிறேன். மற்றபடி இதன்மூலம் க்ரைம் நாவல் வாசிக்கும் பரபரப்புணர்வை உண்டாக்கும் எண்ணம் சற்றுமில்லை. அப்படி இருக்கும்பட்சத்தில் மாவிலாறு யுத்தக் காட்சியை அங்குலம் அங்குலமாக விவரித்திருக்க இயலும். பல வீடியோ காட்சிப் படங்கள் என்னிடம் உள்ளன.

பிரச்னை மிகவும் தீவிரமானது என்பதனால், அந்தத் தீவிரம் சற்றும் குறையாத ஒரு மொழிநடையை இணையத்தில் உள்ள பல வாசகர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதை எனக்கு வரும் சில மின்னஞ்சல்கள் மூலமும் சில வலைப்பதிவுக் குறிப்புகள் மூலமும் அறிகிறேன். எதையும் காட்சிப்படுத்தாமல் நேரடியாக நடந்ததைச் சொல்லும் அத்தகைய உத்தி, பத்திரிகைத் தொடருக்குப் பொருந்தாது. மக்களை விடாமல் வாசிக்கவைப்பது என்பது ஆகப்பெரிய சவால். எனக்கு அவர்கள் வாசித்தே தீரவேண்டும் என்பது மிகவும் முக்கியமானது. எளிதில் வாசிக்கக்கூடிய வகையில் வெளிப்படுத்த முடியுமானால் எத்தனை கனமான விஷயத்தையும் பத்திரிகைத் தொடராக எழுத இயலும். டாலர் தேசம் தொடங்கி இதைப் பலமுறை எனக்கு நானே நிரூபித்துக்கொண்டிருக்கிறேன்.

எனவே மொழி சார்ந்த விமரிசனங்களுக்கு நான் பதில் சொல்லப்போவதில்லை. ஆனால் கருத்து ரீதியில் முன்வைக்கப்படும் எந்த ஒரு விமரிசனத்தையும் நிச்சயம் நிராகரிக்கமாட்டேன். பதில் சொல்லவேண்டிய ஒவ்வொரு வினாவுக்கும் அவசியம் பதிலளிப்பேன். மின்னஞ்சல் மூலமோ, நேரடியாகவோ, தொடரிலோ, அல்லது என் வலைப்பதிவிலோ – அவசியத்துக்கேற்றபடி. ஏதேனும் பிழைகள் சுட்டிக்காட்டப்படுமானால் அவசியம் திருத்திக்கொள்வேன். இது விஷயத்தில் எனக்கு அகங்காரம் ஏதுமில்லை. ஈழத்தில் நடப்பது பற்றி வெறுமனே கவலைகொண்டு வருந்திக்கிடக்கும் கோடிக்கணக்கான சாதாரணர்களுள் நானும் ஒருவன். அவ்வளவே.

ஆனால் வாரம் இருமுறை இதழில் இது வெளியாகிறபடியால் உடனடிப் பிழை திருத்தம் என்பது சற்றே சிரமமான செயல். ஏதேனும் பிழை நேர்ந்தால், எதிர்வரும் இதழ்களில் ஒன்றில்தான் சரி செய்ய இயலும்.

தொடர் நிறைவடைந்து புத்தகமாக இது வெளிவரும்போது எந்தப் பிழையும் இல்லாமல் வரும் என்கிற ஓர் உத்தரவாதத்தைக் கண்டிப்பாக அளிக்கிறேன்.

ஈழப் பிரச்னை குறித்த உள்ளார்ந்த அக்கறை உள்ள வாசகர்கள் என்னுடைய இம்முயற்சியில் சகபயணிகளாக இணைந்துகொள்ள முன்வருவார்களேயானால், அவர்களை அன்புடன் வரவேற்கிறேன். பெரும்பான்மை வாசகர்களுக்குச் சரியான தகவல்கள் சென்று சேர உங்களால் இயன்ற தகவல் உதவிகளை எனக்குச் செய்யலாம்.

என்னைக்காட்டிலும் சிறப்பாக இதனை எழுதக்கூடியவர்கள் பலர் இருக்கக்கூடும். எனக்குக் கிடைத்த இந்த வாய்ப்பை அர்த்தமுள்ளதாக்க விரும்புகிறேன். அவ்வளவுதான்.

தொடர்புடைய தமிழ் சசியின் பதிவு இங்கே.

தொடர்புடைய இன்னொரு பதிவு இங்கே.

20 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற