Tata Photon என்னும் தண்ட கருமாந்திரம்

சென்ற மாதம் டாட்டா போட்டான் என்னும் டேட்டா கார்ட் ஒன்று வாங்கினேன்.  மொபைலில் தினமும் மூன்று வேளை வரும் விளம்பர எஸ்.எம்.எஸ் நம்பர் ஒன்றை அழைத்து எனது தேவையைச் சொல்லி, எனக்கொரு இண்டர்நெட் குச்சி தேவை என்று தெரிவித்தேன். 

அடுத்த ஒரு மணி நேரத்தில் டாட்டா போட்டான் பிரதிநிதி ஒருவர் வீட்டுக்கு வந்தார். பத்து நிமிடங்களில் என் மடினியில் அதை இன்ஸ்டால் செய்துவிட்டு, ரூ. 1200 கருவிக்கான தொகை என்று சொல்லி பெற்றுக்கொண்டார். கருவித்தொகைக்கான பில்லானது, மாதாந்திர பில்லுடன் சேர்ந்து வரும் என்றும் சொன்னார்.

உண்மையில் நான் கேட்டது ப்ரீ பெய்ட் வசதி. ஆனா முதல் மாதம் கண்டிப்பாக போஸ்ட் பெய்டாகத்தான் இருந்தாகவேண்டும் என்று சொல்லிவிட்டு கொடுத்த குச்சிக்கு இலவசம் என்று சொல்லி தோசைக்கல் அளவுக்கு கைக்கடிகாரம் ஒன்றையும் கொடுத்துவிட்டுப் போனார்.

என் வீட்டில் அகலப்பாட்டை இணைய இணைப்பு இருக்கிறது. அது பி.எஸ்.என்.எல்லினுடையது. எந்தப் பிரச்னையும் இல்லாமல் நாளெல்லாம் இணையத்தைப் பயன்படுத்த இயலும்.

ஆனால் கதை விவாதங்களுக்காக வெளியூர் செல்லும்போது பிரச்னையாகிவிடுகிறது. அங்கிருந்தபடியே காட்சிகளை அனுப்ப வசதியாக இருக்குமே என்றுதான் இதைக் கூடுதலாக வாங்கினேன்.

வாங்கிய மரியாதைக்கு மகாபலிபுரத்திலிருந்து இரண்டு நாள் அதைப் பயன்படுத்தவும் செய்தேன். ஒன்றும் பிரச்னை இல்லை.

ஆனால் சென்னை திரும்பியபிறகுதான் பஞ்சாயத்து தொடங்கியது.

ஊர் திரும்பிய இரண்டு மூன்று நாள்கள் கழித்து என் டாட்டா போட்டான் குச்சியை சொருகி இணையத்தைப் பயன்படுத்த முயற்சி செய்தபோது தொடர்பு கிடைக்கவில்லை. ஒவ்வொரு முறையும் என்னென்னவோ எரர் காட்டிக்கொண்டே இருந்தது. மூடி வைத்துவிட்டு வழக்கமான பி.எஸ்.என்.எல். தொடர்பில் வேலையை முடித்தேன்.

மறுநாள், அடுத்த நாள் என திரும்பத் திரும்ப முயற்சி செய்தபோதும் டாட்டா போட்டான், டாட்டா மட்டுமே சொன்னது. இணையம் கிடைத்தபாடில்லை. வந்த புண்ணியவான் கொடுத்த மொபைல் நம்பரில் அழைத்தால்  உபயோகத்தில் இல்லை என்றது. கஸ்டமர் கேருக்கு அழைத்தால் ரிங் மட்டும் போகிறதே தவிர யாருமே எடுப்பதில்லை. இது ஒருநாள் இருநாளல்ல. கிட்டத்தட்ட 20 தினங்கள். சுமார் இருநூறு அல்லது இருநூற்றைம்பது முறை போன் செய்தும் ஒருவரிடம் கூடப் பேச முடியாமல் போனதால் நண்பர் அப்புவிடம் சொல்லி (@zenofzeno)  ட்விட்டரில் அவர்களைப் பிடிக்கச் சொல்லிக் கேட்டுக்கொண்டேன்.

நீண்ட போராட்டம் நடத்தி, தன் முயற்சியில் சற்றும் தளராத அப்பு, டாட்டா போட்டானியர்களை ஒருவழியாக ட்விட்டரில் துரத்திப் பிடித்து விஷயத்தை விளக்கி புகாரைப் பதிவு செய்தார். இதற்குள் கிட்டத்தட்ட ஒரு மாதம் முடிந்துவிட்டது.

எப்படியும் முதல் மாத பில் வரும், அப்போது பார்த்துக்கொள்ளலாம் என்றிருந்த வேளையில், நானொருத்தன் அவர்களது வாடிக்கையாளராகியிருப்பதையே மறந்துவிட்டாற்போல் இருந்தார்கள் டாட்டாவினர். பில் என்ற ஒன்று வரவேயில்லை.

இதனிடையில் அப்புவின் விடாப்பிடி நச்சரிப்பின் விளைவாக ட்விட்டர் போட்டானியர்கள் புகாரை ஏற்று எண் ஒன்றை அளித்து, ஆகஸ்ட் 14 அன்று பிரச்னை தீர்க்கப்படும் என்றார்கள்.

பாகிஸ்தானின் சுதந்தர தினம்! நல்லது. எனது போட்டானின் பிரச்னையும் அன்றே தீருமானால் சரித்திரத்தில் இதனைப் பதிவு செய்துவிடலாம் என்று எண்ணியிருந்த வேளை, பாகிஸ்தான் சுதந்தர தினம் முடிவடைந்து, இந்திய சுந்தர தினமும் வந்து போய் ஐந்து நாள்களாகிவிட்டன.

திரும்பவும் ட்விட்டர் போட்டானியர்களைக் குடைந்தால் இம்முறை பதிலே கிடையாது.

வெறுத்துப் போய்விட்டேன். 1200 ரூபாய் தண்டம் என்று மனத்துக்குள் முடிவு செய்த வேளையில் என்னைப் போல் வேறு பலரும் டாட்டா போட்டானின் இந்த நூதன மோசடிக்கு ஆட்பட்டு பணத்த இழந்த கதைகள் மெல்ல மெல்ல எனக்குக் கிடைக்கத் தொடங்கின.

இணையக் குச்சிகளைத் தள்ளிவிடுவதற்கு மட்டுமே அவர்கள் கிலோ கணக்கில் நிறுத்து ஆள்களை எடுக்கிறார்கள் என்றும் சர்வீஸ் சுத்தமாகக் கிடையாதென்றும் முன்னனுபவஸ்தர்கள் இப்போது சொல்கிறார்கள்.

ஆகவே நண்பர்களே, தப்பித்தவறிக்கூட யாரும் டாட்டா போட்டான் டேட்டா கார்ட் வாங்கி ஏமாந்து போகாதீர்கள். ஓசி வாட்ச், பைரேடட் ஆண்ட்டி வைரஸ் சிடி என்று இதில் கிடைக்கும் இலவசங்களுக்கு மயங்கிவிடாதீர்கள்.

டாட்டா என்றால் நம்பிக்கை என்று ஏதோ ஒரு விளம்பரத்தில் அவர்கள் சொல்வார்கள். நான் சொல்கிறேன்,  போட்டான் என்றால் ஃப்ராடு.

14 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற