சில புதிய புத்தகங்கள் – 1

இணையத்தில் எழுதி இரு வாரங்களாகின்றன. உருப்படியாக எழுதி மூன்று மாதங்களுக்கு மேல். சென்னை புத்தகக் கண்காட்சி நெருங்குவதுதான் காரணம். வேலைகள் அதிகம்.

இருப்பினும், கண்காட்சிக்கென நாங்கள் வெளியிடும் புத்தகங்களுள் குறிப்பிடத்தக்க சிலவற்றைப் பற்றி இங்கே சிறு அறிமுகங்கள் செய்யலாம் என்றிருக்கிறேன்.

கண்காட்சியில் என்னுடைய புதிய நூல்கள் மூன்று இடம்பெறுகின்றன. 1. மாயவலை 2. Excellent. 3. ஆயில் ரேகை.

ஆயில் ரேகை, ரிப்போர்ட்டரில் தொடராக வெளிவந்தது. கொஞ்சம் ஒழுங்கு செய்து இப்போது நூல் வடிவம் கொள்கிறது.

மாயவலை. மிகவும் யோசித்த பிறகுதான் முழுப்புத்தகமாக இது வேண்டாம் என்று முதலில் தீர்மானித்தோம். தனித்தனிப் புத்தகங்களாக வெளியிடுவதில் பல சவுகரியங்கள். அவரவருக்கு விருப்பமான பகுதிகளை மட்டும் தேர்ந்தெடுத்துக்கொள்ள ஒரு வாய்ப்பு. தவிரவும் பதம் பார்க்காத விலை வசதி.

ஆனாலும் மாயவலையை மொத்தமாக வெளியிடுங்கள் என்று தொடர்ந்து பல தரப்பு வற்புறுத்தல் இருந்தபடியால் – குறிப்பாக, யுத்தம் சரணம் தொடங்கிய பிறகு – வருகிற ஜனவரி சென்னை புத்தகக் கண்காட்சியில் மிகக் குறைவான பிரதிகள் மட்டும் வெளியிடலாம் என்று தீர்மானித்திருக்கிறோம். முன்கூட்டிச் சொல்லிவைப்பவர்களுக்கு மட்டுமே ஏமாற்றமின்றிக் கிடைக்கும் சாத்தியம் இருக்கும். கண்காட்சிக்குப் பிறகு நிதானமாக இப்பதிப்பினைத் தொடரலாம் என்று உத்தேசம்.

தனித்தொகுப்புகளாக வெளிவந்த மாயவலை நூல்களில் ஹமாஸ் இடம் பெறவில்லை. அதற்கான காரணம் பற்றி ஏற்கெனவே இங்கு எழுதியிருக்கிறேன். இப்போதைய முழுத் தொகுதியில் அதுவும் இடம்பெறுகின்றது.

புத்தகம் அதன் முழு வடிவில் 1300 பக்கங்கள் வருகின்றன. Hard Bound கட்டமைப்பு. எடுக்கவும் பிரிக்கவும் படிக்கவும் வசதியாக இது அமையவேண்டுமென்பதற்காக கவனமாகச் சில ஏற்பாடுகளை பத்ரி செய்துகொண்டிருக்கிறார். இம்மாத இறுதியில் அல்லது ஜனவரி முதல் வாரத்தில் நூல் தயாராகிவிடும் என்று தெரிகிறது. விலை ரூ. 750.

இந்நூலை வாங்க விரும்பும் வாசக நண்பர்கள் NHMன் நேரடி விற்பனைப் பிரிவு மேலாளர் பிரசன்னாவுக்கு எழுதலாம்.[haranprasanna@nhm.in].

மூன்றாவது நூல், Excellent – இதுநாள் வரை நான் கனவிலும் நினைத்துப் பார்த்திராத ஒரு முயற்சி. பத்ரியுடன் ஒருநாள் பொழுதுபோகாமல் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, தற்செயலாக அவர் அளித்த யோசனை. முழுக்க முழுக்க எனக்காகவும் எங்கள் அலுவலக சகாக்களுக்காகவுமே – எங்கள் பணியில் மேன்மையுற உதவியாக ஒரு ‘கெய்ட்’ மாதிரி எழுதியது. நன்றாக இருப்பதாக எல்லோரும் சொன்னதால் புத்தகமாகி, கடைக்கு வருகிறது. மேல் விவரம் எதுவும் இப்போது கேட்காதீர்கள்! வாசித்துவிட்டுப் பாராட்ட விரும்பினால் எனக்கும், திட்டத் தோன்றினால் பத்ரிக்கும் மின்னஞ்சல் அனுப்பவும்.

மாயவலை முன்பதிவுக்கு இங்கு செல்லலாம்.

10 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற