இந்த வருடம் என்ன செய்தேன்?

* மிகக் குறைவான திரைப்படங்களையே பார்த்திருக்கிறேன். மனத்தில் நிற்பது சுப்ரமணியபுரம் மட்டும். தமிழல்லாத வகையில் Gloomy Sunday.

* கிழக்கு சேர்த்து, படித்தது மொத்தம் 149 புத்தகங்கள். குறிப்பிடத் தோன்றுபவை: ஆன்மிகத்தில் பொருந்தாத ஒரு மறைஞானியின் சுயசரிதம் (கண்ணதாசன் பதிப்பகம்), பிரம்ம சூத்திரம் (விளக்கம்: அ. சுகவனேச்வரன்), சுதந்தர வேட்கை (அடேல் பாலசிங்கம்), ஜாமிஉத் திர்மிதி, அங்கே இப்ப என்ன நேரம் (அ. முத்துலிங்கம்), சூஃபி வழி (நாகூர் ரூமி).

* பயணம்? அதிகமில்லை. திருவண்ணாமலைக்கு ஒருமுறை. கன்யாகுமரிக்கு ஒருமுறை. இரண்டுமே அகங்காரம் அழிக்கும் இடங்கள். குமரி முனை ரயில்வே ஸ்டேஷன், இந்தியாவின் மிக அழகிய இடங்களுள் ஒன்று என்று எப்போது போனாலும் தோன்றும். இப்போதும்.

* இவ்வருடம் அறிமுகமானது ட்விட்டர். கொஞ்சம் தடுமாறினால் முழுக்க உள்ளிழுத்துக்கொண்டு விடும். எழுத்தாளனுக்குச் சோம்பல் வளர்க்கும் ஊடகம். சனியனைத் தலைமுழுக வேண்டும்.

* மிகக் குறைவாக எழுதிய வருடம் இது. பத்ரிக்கு வாக்களித்த புத்தகங்களில் எதையும் முடிக்கவில்லை. தொடர்கள் விழுங்கிவிட்டன. திரைப்படங்களும்.

* அடிக்கடி கண்ணில் பட்டுக் கவர்ந்தவர்கள் இரண்டு எழுத்தாளர்கள். விகடனில் திருமாவேலன். இணையத்தில் லக்கி லுக். இருவரும் மொழியை லாகவமாகக் கையாள்கிறார்கள். புனைவெழுத்தில் இப்படிப் புதிதாக யாரும் தென்படவில்லை.

* உடல் இளைத்தது சாதனை. பயிற்சியை விடுத்து, மீண்டும் பெருத்தது வேதனை. மாமி மெஸ், தாபா எக்ஸ்பிரஸ் அறிமுகமானதில் கலோரி பெருத்தது.

* சார்வாக மகரிஷிக்கு அடுத்தபடி கோர நாத்திகரான பத்ரியுடன் குப்பை கொட்டியபடி  கடவுளைப் பற்றி அதிகம் யோசித்தது மிக முக்கியம். தனியே எழுதவேண்டும்.

* ஏராளமாக இசை கேட்டேன். ஆண்டிறுதியில் அகப்பட்ட அனகா அனைத்தையும் மறக்கடித்துவிட்டாள். இந்தக் குழந்தைக்குச் சிறந்த எதிர்காலமுண்டு.

* சற்றும் ஓய்வில்லாது போய்விட்டதுபோல் ஓரெண்ணம். அடுத்த வருடம் முதல் மூன்று மாதங்களுக்குக் கண் காணாமல் போய்விட வேண்டும்.

11 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற