புத்தாண்டு வாழ்த்து

வாசகர்கள், நண்பர்கள் யாவருக்கும் என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகள்.

ஒவ்வொரு புத்தாண்டு சமயமும் யோசிப்பேன். இந்த ‘வாழ்த்து’ என்பது உண்மையிலேயே அடிமனத்திலிருந்துதான் கிளம்புகிறதா? வருடம் தவறாமல் சொல்லிச் சொல்லி உதட்டிலேயே வீடு கட்டிக்கொண்டு குடியமர்ந்துவிட்ட சொல்லாகிவிட்டதா?

அதுவும் கொத்தாக முகவரிப் பெட்டியில் இருக்கும் அத்தனை மின்னஞ்சல் முகவரிகளையும் தேர்ந்தெடுத்து ஒரே செய்தியை அனுப்புவதுபோல் அபத்தம் வேறில்லை. எதுவுமே சடங்காகும்போது அர்த்தமிழந்து போய்விடுகின்றது.

இந்த வருடம் பிசிசி போட்டு கொத்து வாழ்த்து யாருக்கும் அனுப்புவதில்லை என்று முடிவு செய்தேன். அவ்வண்ணமே குறுஞ்செய்தி வாழ்த்துகள்.

கடந்த சில வருடங்களில் இறுதி மாதம் சந்தித்த பேரழிவுச் சம்பவங்கள் ஏனோ இந்த வருட டிசம்பர் தொடக்கத்திலிருந்தே நினைவில் ஊசலாடிக்கொண்டிருந்தன. மும்பைத் தாக்குதல் செய்தி முதல் முதலில் வந்தபோது ஐயோ என்றுதான் தலையில் கைவைக்கத் தோன்றியது. அனைத்தையும் போல இதுவும் கடந்து போகும்.

ஒவ்வொரு வருடத்தையும் நம்பிக்கையுடனும் புத்துணர்ச்சியுடனும் எதிர்கொள்வது என் வழக்கம். கொண்டாட்டங்களல்ல, சரியான திட்டங்களே ஒரு புதிய வருடத்தைத் தொடங்க உகந்த உபாயம் என்று எப்போதும் கருதுவேன்.

மனச்சோர்வு கொள்ளத்தக்க சம்பவங்கள் நேரக்கூடாது என்று பிரார்த்திப்பதைக் காட்டிலும், நேரும்போது எளிதில் மீண்டு எழும் மன உறுதி கோரிப் பிரார்த்திப்பது சிறப்பு.

நண்பர்கள், வாசகர்கள் அனைவருக்காகவும் இதனையே பிரார்த்திக்கிறேன். உற்சாகமாக, நம்பிக்கையுடன், குறையாத ஆரோக்கியத்துடன், நீங்காத சுறுசுறுப்புடன் நாளை மீண்டும் புதிதாய்ப் பிறப்போம்.

8 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற