சில வினாக்கள், சில புத்தகங்கள், சில எண்ணங்கள்

1. புத்தகக் கண்காட்சியில் உங்களைச் சந்திக்கலாமா? கிழக்கு அரங்கில் எப்போதும் இருப்பீர்களா?
2. இந்தக் கண்காட்சியில் வாங்குவதற்கென நீங்கள் பரிந்துரைக்கும் புத்தகங்கள் எவை?
3. பிளாட்பாரக் கடைகளில் புத்தகம் தேடி வாங்கியதுண்டா?
4. கண்காட்சியில் கூடுதல் டிஸ்கவுண்ட் கிடைக்க வழியுண்டா?
5. கண்காட்சி குறித்து தினமும் எழுதுவீர்களா?
6. புத்தகக் கண்காட்சிக்காக திண்டுக்கல்லில் இருந்து வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னை வருவேன். எழுத்தாளர்களை அங்கே சந்திக்க முடியுமா? வாசகர்களை மதித்து பேசுவார்களா?
7. கிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்களில் நீங்கள் பரிந்துரைக்கும் புத்தகங்கள் எவை? [உண்மையிலேயே மிகவும் நல்ல புத்தகம் என்று நினைப்பதை மட்டும் சொல்லுங்கள்]

– சென்னை புத்தகக் கண்காட்சி குறித்து இங்கே நான் எழுதத் தொடங்கிய நாளாக எனக்கு வரும் பல மின்னஞ்சல்களில் மேற்படி வினாக்கள் அநேகமாக இருக்கின்றன. அனைத்தும் இல்லாவிட்டாலும் ஒவ்வொரு மின்னஞ்சலிலும் இவற்றில் ஏதேனும் சில, குறைந்தது ஒன்று. மொத்தமாக இங்கே பதிலளித்துவிடுகிறேன்.

1. புத்தகக் கண்காட்சியில் உங்களைச் சந்திக்கலாமா? கிழக்கு அரங்கில் எப்போதும் இருப்பீர்களா? – வி. விக்னேஸ்வரன், சென்னை.

கிழக்கு அரங்கில் எப்போதும் இருப்பது சாத்தியமில்லை. கண்டிப்பாக தினசரி இரண்டு மணி நேரமாவது இருப்பேன். பெரும்பாலும் மாலை வேளைகளில் – ஆறு மணிக்குப் பிறகு. அதிகமும் சுற்றிக்கொண்டுதான் இருப்பேன். மாலை நான்கு மணிக்கு அரங்குக்கு வெளியே போடப்பட்டிருக்கும் விழாப் பந்தலில் நாம் சந்திக்கலாம், உரையாடலாம்.

2. இந்தக் கண்காட்சியில் வாங்குவதற்கென நீங்கள் பரிந்துரைக்கும் புத்தகங்கள் எவை? – கார்த்திக் ராமானுஜம், சென்னை.

புத்தகத் தேர்வுகள் தனிப்பட்ட நபரின் ரசனை சார்ந்த விஷயம். சிபாரிசுகள் இதில் பயனளிக்காது. என்னளவில் யார் சிபாரிசு செய்த புத்தகத்தையும் நான் நம்பி வாங்கியதில்லை. எனக்கே தோன்றினாலொழிய. இதன்மூலம் எனக்குச் சில இழப்புகள் ஏற்பட்டிருக்கலாம். ஆயினும் நான் இன்றளவும் இப்படித்தான் இருக்கிறேன்.

இருப்பினும் பலபேர் இக்கேள்வியைக் கேட்பது எனக்குப் பெரிதும் வியப்பளிக்கிறது. வாசிப்புலகில் புதிதாக நுழைவோர் அவசியம் படித்தாக வேண்டியவை எனச்சில புத்தகங்கள் உண்டு. அவற்றை நான் உங்களுக்குப் பரிந்துரைக்கலாம். அதிலும்கூட இத்தகைய சிபாரிசுகள் நபருக்கு நபர் மாறுபடக்கூடும். நண்பர்கள் பலருக்கு அவர்களுடைய ரசனை, ஆர்வம், தேவை கருதி அவ்வப்போது இப்படிப் பரிந்துரை செய்திருக்கிறேன். சிலருக்கு அது பலனளித்திருக்கிறது. சிலருக்குப் பலனளிக்கவில்லை.

எனினும் என் தனிப்பட்ட ரசனையின் அடிப்படையில் எனக்கு உவப்பானவையாக இருக்கும் ஒரு நூறு புத்தகங்களின் பட்டியல் ஒன்றைத் தயாரித்து அளிக்கலாம். முன்பொரு சமயம் [2004ல்] தமிழோவியத்தில் இப்படி ஒரு பட்டியல் வெளியிட்டேன். அதைச் சற்றே செம்மைப்படுத்தி – சற்றே அப்டேட் செய்து தனிப்பதிவாகப் பிரசுரிக்கிறேன்.

3. பிளாட்பாரக் கடைகளில் புத்தகம் தேடி வாங்கியதுண்டா? – எஸ். சதீஷ், ஈரோடு.

சில சமயங்களில். என்னால் குவித்து வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களுக்கிடையில் தேட முடியாது. எனக்காகச் சில நண்பர்கள் இந்த வேலையைச் செய்திருக்கிறார்கள். பல அபூர்வமான நூல்கள் அகப்படும் இடம் அது என்பதில் சந்தேகமில்லை. என் நண்பன் ஆர். வெங்கடேஷ் திருவல்லிக்கேணி பிளாட்பாரக் கடைகள் அனைத்தையும் ஆழ உழுதவன். எனக்குச் சற்றுப் பொறுமை மட்டு.

4. கண்காட்சியில் கூடுதல் டிஸ்கவுண்ட் கிடைக்க வழியுண்டா? [பெயரை நான் வெளியிட விரும்பவில்லை]

மன்னிக்கவும். உங்களால் ஒரு ஜட்டி, பனியன் அல்லது கைக்குட்டையை பேரம் பேசி விலை குறைத்து வாங்க முடியுமா? ஒரு பீடி, சிகரெட், ஹோட்டலில் இரண்டு இட்லி, சினிமா தியேட்டரில் ஒரு டிக்கெட்டை விலை குறைத்து என்றேனும் கேட்டிருப்பீர்களா? புத்தகம் என்று வரும்போது மட்டும் எதற்காக இந்தப் பிச்சைக்காரத்தனம்? புத்தகங்களுக்குச் செய்கிற செலவை சந்தோஷமாகச் செய்பவர்கள் மட்டுமே என் கட்சி.

5. கண்காட்சி குறித்து தினமும் எழுதுவீர்களா? – மணிவண்ணன் [ஊர் விவரம் தெரியவில்லை]

எழுதலாம் என்று எண்ணம். சில தினங்கள் முடியாமல் போகலாம். பெரும்பாலும் எழுதுவேன். அன்றன்றைய பணிகளைப் பொருத்த விஷயம் அது. நான் எழுதாவிட்டாலும் தினசரி ரிப்போர்ட்டை அவசியம் பிரசன்னா எழுதுவார் [என்று நினைக்கிறேன்.]

6. புத்தகக் கண்காட்சிக்காக திண்டுக்கல்லில் இருந்து வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னை வருவேன். எழுத்தாளர்களை அங்கே சந்திக்க முடியுமா? வாசகர்களை மதித்து பேசுவார்களா? – சந்தோஷ், திண்டுக்கல்

ஞாயிற்றுக்கிழமை எல்லா எழுத்தாளர்களும் கண்காட்சியில் இருப்பார்கள் என்பதற்கு நான் உத்தரவாதம் தர இயலாது. ஆனால் நீங்கள் சந்திக்கக்கூடிய எந்த ஒரு எழுத்தாளரும் வாசகர்களை மதிக்காது போகமாட்டார். எல்லா எழுத்தாளர்களுமே இணக்கமானவர்கள்தாம், அன்பானவர்கள்தாம். நீங்கள் சந்திக்கும் நேரம், சந்தர்ப்ப சூழல் சரியாக அமையவேண்டும்.

7. கிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்களில் நீங்கள் பரிந்துரைக்கும் புத்தகங்கள் எவை? [உண்மையிலேயே மிகவும் நல்ல புத்தகம் என்று நினைப்பதை மட்டும் சொல்லுங்கள்] – விக்டர் ஆரோக்கியராஜ், கோயமுத்தூர்

2008ல் கிழக்கு வெளியிட்ட புத்தகங்களின் எண்ணிக்கை மிக அதிகம். உங்கள் வினாவுக்காக ஒரு நிமிடம் யோசித்தபோது சட்டென்று நினைவுக்கு வந்தவை இவை. நூற்றுக்கணக்கான புத்தகங்களுள் தனித்து, நினைவில் மேலோங்கி வரக்கூடிய அம்சங்கள் ஏதோ சில இந்தப் புத்தகங்களில் இருக்கின்றன. இவை ஒவ்வொன்றும் வேறு வேறு காரணங்களால் என்னைக் கவர்ந்தன. நிச்சயம் உங்களையும் கவரும்.

* கிறிஸ்தவம்: ஒரு முழுமையான வரலாறு – சேவியர்
* சித்திரம் பேசுதடி : திரைக்கதை – இயக்குநர் மிஷ்கின்
* செங்கிஸ்கான் – முகில்
* அடியாள் – ஜோதி நரசிம்மன்
* கோபுலு: கோடுகளால் ஒரு வாழ்க்கை – எஸ். சந்திரமௌலி
* சுண்டி இழுக்கும் விளம்பர உலகம் – யுவகிருஷ்ணா
* பிரபாகரன் : ஒரு வாழ்க்கை – செல்லமுத்து குப்புசாமி
* சூஃபி வழி: ஓர் எளிய அறிமுகம் – நாகூர் ரூமி
* சுபாஷ் சந்திரா – என். சொக்கன்
* இந்திரா – ஆர். முத்துக்குமார்
* கீரைகள் – டாக்டர் அருண் சின்னையா [நலம் வெளியீடு] * மால்கம் எக்ஸ் – மருதன்

இவற்றுள் கீரைகள் புத்தகம் பற்றித் தனியே சில வரிகள் எழுதத்தோன்றுகிறது. எடுத்ததை வைக்க முடியாமல் நான் எந்த ஒரு மருத்துவ நூலையும் இதுவரை வாசித்ததில்லை. இத்தனைக்கும் இது பக்க அளவு சற்றே கூடுதலான புத்தகம். ஆயினும் ஒன்றரை மணி நேரத்தில் படித்து முடித்து, வியந்தேன். இந்நூலில் உள்ள பல தகவல்கள் வியப்பூட்டின. எத்தனை விதமான கீரைகள், எத்தனை மருத்துவ குணங்கள்! ஒரு மனிதன் தன் வாழ்நாள் முழுதும் இந்நூலில் சுட்டிக்காட்டப்படும் கீரைகளை தினமொன்றாகத் திரும்பத் திரும்பச் சாப்பிட்டு வருவானேயானால், எந்த நோயுமே அவனை அண்டாது என்று தோன்றுகிறது. பெரும்பாலும் எளிதில் கிடைக்கக்கூடிய கீரைகள்.

நவீன அடுக்குமாடி வாழ்வில் நாம் இழந்த பலவற்றுள் வீட்டுத்தோட்டம் என்பது மிகவும் முக்கியமானது. நான் 1985ம் ஆண்டு குரோம்பேட்டைக்குக் குடிபோன புதிதில் வீட்டு வாசலில் இருந்த அங்கவஸ்திர நீள இடத்தில் பாத்தி கட்டி என் அம்மா பொன்னாங்கண்ணிக்கீரை விதைத்தது நினைவுக்கு வருகிறது. அதன் அருமை தெரியாமல் அன்றைக்கு அம்மாவை நிறைய கோபித்துக்கொண்டிருக்கிறேன்.

குருட்டாம்போக்கில் இன்ன கீரைக்கு இன்ன குணம் என்று பட்டியலிடாமல், ஒவ்வொரு கீரை இனத்தின் குண இயல்புகளையும் விளக்கி, எதனால் இதைச் சாப்பிட்டால் இது சாத்தியம் என்று மருத்துவ ரீதியில் இந்நூல் விளக்குகிறது.

எழுத்து சுவாரசியம் என்கிற ஒரு விஷயத்தை அறவே கொண்டுவரமுடியாத துறை இது என்பது இதுநாள்வரை என் தீவிரமான நம்பிக்கையாக இருந்தது. அதை உடைத்து எறிந்திருக்கிறார், டாக்டருடன் பேசி இந்நூலை எழுதியிருக்கும்ஆர். பார்த்தசாரதி. உண்மையிலேயே நினைத்து நினைத்து வியக்கிறேன்.

கீரைகள் புத்தகம் பற்றி மேலும் அறிய இங்கே செல்லலாம்.

31 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற