சோதிடர்களின் கூட்டுச் சதி

கலைத்துறையில் புதிய தடங்கள் பதிப்பீர்கள். சொல்வாக்கும் செல்வாக்கும் மேலோங்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய வீடு வாங்கும் யோகம் கூடும். எதிரிகள் சில்லறைத் தொல்லை தருவார்கள். ஆனாலும் சமாளித்துவிடுவீர்கள். சிறு உடல் உபாதைகள் வந்து போகும். பயணம் செய்யும்போது எச்சரிக்கை அவசியம். விபத்துகள் நேரிடலாம்.

மேற்கண்ட சோதிடப் பலன்கள், புத்தாண்டை ஒட்டி பண்டிதர் காழியூர் நாராயணன், யதார்த்த ஜோதிடர் செல்வி, சே… ஷெல்வி, குமுதம் ஜோதிடம் ராஜகோபாலன், தினத்தந்தி சிவல்புரி சிங்காரம் உள்ளிட்ட அத்தனைபேரும் எனக்காகச் சொல்லிவைத்தவை.

இதில் ஒன்று நேற்று பலித்துவிட்டது.

கண்காட்சி முடிந்து வீடு திரும்பும் வழியில் வள்ளுவர் கோட்டத்துக்கு எதிரே சிக்னலை கவனிக்காமல் அதிவேகத்தில் வந்த ஒரு மோட்டார் சைக்கிள் என்னுடைய வண்டியின்மீது மோத, வேறு வழியே இல்லாமல் விழுந்து காலை உடைத்துக்கொண்டேன். இடது முழங்காலுக்குமேல் அசைக்கக்கூட முடியவில்லை. முகில் நேற்று என்னுடன் வந்தபடியால் ஒழுங்காக வீடு வந்து சேர முடிந்தது. இல்லாவிட்டால் ரொம்பக் கஷ்டப்பட்டிருப்பேன்.

இடித்த நல்ல மனிதர் திரும்பிக் கூடப் பாராமல் பறந்துவிட்டார். என்ன அவசரப் பணியோ தெரியவில்லை. அவருக்கு ஏதும் விபத்தாகாமல் இருக்கவேண்டும்.

முட்டியைச் சுற்றியுள்ள பகுதியில்தான் பாதிப்பு என்பதால் காலை ஓரடிகூட எடுத்து வைக்க முடியாத நிலை. இரவு மிகவும் தாமதமாகிவிட்டபடியால் மருத்துவமனைக்குச் செல்ல முடியவில்லை. இப்போதுதான் கிளம்புகிறேன். எனக்கென்னவோ, எலும்பு முறிவு இல்லை; தசைநார்கள் ஜாம் ஆகியிருக்கும் என்றுதான் தோன்றுகிறது. அதிக வீக்கமில்லை. ஆனால் காலை அசைக்க முயன்றால் வலி அதிகமாக உள்ளது.

நல்லவேளையாக இந்த ஒரு கால் தவிர வேறு எந்தப் பிராந்தியத்திலும் சிறு அடிகூடப் படவில்லை. ரத்தகாயம் ஏதுமில்லை. உட்கார்ந்து எழுத முடிகிறது. எழுந்துபோய் மாவா துப்பத்தான் முடியவில்லை.

இன்றைக்கு புத்தகக் கண்காட்சிக்கு என்னால் போகமுடியப் போவதில்லை. டாக்டர் ஜக்கம்மாவாகி ஏதாவது நல்லவார்த்தை சொல்லி, துரித வைத்தியம் பார்த்தால் இரண்டு, மூன்று நாள்களில் சரியாகிவிடலாம். அல்லது சினிமா டாக்டர் மாதிரி மூக்குக் கண்ணாடியைக் கழற்றியபடி ‘ஐயம் சாரி மிஸ்டர் ராகவன். உங்க கால் எலும்புகள் கண்டபடி உடைஞ்சிருக்கு. நீங்க ஒரு மாசம் பெட் ரெஸ்ட் எடுத்தே தீரணும்’ என்பாரேயானால் எனக்கு கண்காட்சி ரிப்போர்ட்டை நீங்கள்தான் தந்தாகவேண்டும்.

கண்காட்சியில் என்னுடைய மாயவலையும் Excellentம் இன்றோ நாளையோ வெளியாகும் என்று நினைக்கிறேன். பார்த்துவிட்டுப் புத்தகம் எப்படி வந்திருக்கிறது என்று எனக்கு ஒரு வரி மின்னஞ்சல் எழுதுங்கள்.

35 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற