சுகம் பிரம்மாஸ்மி – 2

அப்பா எனக்கு உபநயனம் செய்யவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்த நாள்களில் இனாயத்துல்லாவுக்கு அவன் வீட்டில் சுன்னத் கல்யாணம் செய்ய ஏற்பாடு செய்ய ஆரம்பித்தார்கள். சரியாக ஒரு மாதம். அவன் வீட்டில் விசேஷம் வந்துவிட்டது. எங்கள் வீட்டில் ஒரு மூன்று வருடங்கள் தள்ளிப்போட்டு, குரோம்பேட்டைக்குக் குடிவந்த பிறகுதான் அதைச் செய்தார்கள்.

இனாயத்துல்லா திகிலும் பரவசமுமாகத் தனக்கு நடக்கப்போகிற விஷயம் பற்றி என்னிடம் நிறைய சொன்னான். காரணம் மட்டும் எனக்கு அப்போது புரியவில்லை. அவனுக்கும் சரியாக விளக்கத் தெரியவில்லை. வலிக்காதாடா? வலிக்காதாடா? என்று மட்டும் அடிக்கொருதரம் கேட்டுக்கொண்டிருந்தேன். பல இரவுகள் தூக்கம் வராமல் அவனுக்காக பயந்துகொண்டும் இருந்தேன். அப்படியொரு அச்சம் அதன்பின் ஒருபோதும் என்னைச் சூழ்ந்ததில்லை.

குறிப்பிட்ட நாள் நெருங்க, அவன் என்னிடம் சொல்லிக்கொண்டு விடுமுறையில் போனான். என்னை அவன் வீட்டுக்கு அழைத்திருந்தான் என்றபோதிலும் ஏனோ நான் போகவில்லை. பயம்தான், வேறென்ன? பத்துப் பதினைந்து நாள்கள் கழித்து அவன் மீண்டும் பள்ளிக்கு வந்தபோது வழக்கம்போல் சிரித்தான். மிகவும் சகஜமாகவே பேசினான். எனக்கென்னவோ அவன் மறுபிறவி எடுத்து வந்தது போலத்தான் இருந்தது. அவனிடம் என்னென்னவோ பேசவேண்டும், நிறைய சந்தேகங்கள் கேட்கவேண்டுமென்று நினைத்தேன். ஆனால் எங்கிருந்து தொடங்குவது என்பது சரியாகப் புரியவில்லை. எப்படிடா தாங்கின? என்று மட்டும் கேட்டேன்.

அதெல்லாம் முடியும். தேவையான வலுவை அல்லா அளித்துவிடுவார் என்று அவன் சொன்னான். காலில் ஒரு சிறு கல் இடித்து ரத்தம் வந்தால்கூட என்னை முந்திக்கொண்டு என் கடவுள் அழத்தொடங்கிவிடுவான். ஏண்டா பாவி இப்படி இடிக்க வைத்தாய் என்று கேட்டால் சரியாக பதில் சொல்லமாட்டான். இனிமே இப்படி ஆகாது என்று மட்டுமே குரல் கொடுப்பான். துணிந்து ஒரு மரத்தின்மீது ஏறுவதற்குக் கூடப் பெரும்பாலும் அவன் என்னை அனுமதித்ததில்லை.

கடவுள் என்ன செய்வார்? எல்லாம் வளர்ப்புதான் என்று இனாயத்துல்லா சொன்னான். இப்போது நினைத்துப் பார்த்தாலும் வியப்பாகத்தான் இருக்கிறது. அந்த வயதில் அவன் என்னைக்காட்டிலும் மிக அதிகம் விவரம் தெரிந்தவனாக இருந்தான். அன்றாடம் நாம் செய்யும் சிறு பிழைகளுக்குக் கடவுளைப் பொறுப்பாக்குவது சரியல்ல என்று ஒருநாள் என்னிடம் சொன்னான். ஆறாம் வகுப்புச் சிறுவன் தான். தானாகச் சொன்னானோ, வீட்டில் சொல்லிக்கொடுத்து, வந்ததோ. ஆனாலும் சொன்னான். எனில், கடவுளின் வேலைதான் என்ன? இறுதித் தீர்ப்பு தினம் என்ற ஒரு புது விஷயத்தை அப்போது நான் அவனிடமிருந்து அறிந்துகொண்டேன்.

முருகய்ய நாடார் மளிகைக்கடை கல்லாப்பெட்டியின்மீது எப்போதும் ஏழெட்டு கணக்குப் பேரேடுகள் அடுக்கப்பட்டிருக்கும். மாதம்தோறும் நாடார் அவற்றை ஒவ்வொன்றாக எடுத்து வைத்துக்கொண்டு ஒவ்வொரு பக்கமாகக் கூட்டுவார். வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவர் வீட்டுக் கணக்குக்கும் ஒவ்வொரு பக்கம். அந்தந்த மாதம் முழுதும் அவர்கள் வாங்கிய மளிகைச் சாமான்கள் பற்றிய விவரங்கள். பால் பாயிண்ட் பேனாவால் ஒவ்வொரு வரியின்மீதும் புள்ளி வைத்துக்கொண்டே கூட்டிக்கொண்டு வருவார். பிறகு க்ளிப் வைத்த அட்டையிலிருந்து ஒரு தாளை சரக்கென்று உருவி கூட்டல் எழுதி கடைப்பையனிடம் கொடுத்தனுப்புவார்.

இனாயத்துல்லா வீட்டுக்கும் எங்கள் வீட்டுக்கும் நாடார் கடையில் கணக்கு உண்டு. பல சமயம் நாங்கள் இருவருமே கணக்கு செட்டில் செய்யச் சென்றிருக்கிறோம். ஐம்பது ரூபாய்க்குக் குறைவான எண்ணிக்கை என்றால் அம்மா என்னிடம் பணம் கொடுத்து அனுப்பத் தயங்கமாட்டாள்.

கடவுளின் தகுதிக்கு நிச்சயமாக அவர் முருகய்ய நாடாரின் கணக்குப் பேரேடுகளைவிட அளவில் பெரிதான, எண்ணிக்கையில் அதிகமான கணக்குகளைப் பராமரிக்க முடியும்தான். ஆனாலும் ஓர் எல்லை இருந்தாக வேண்டுமல்லவா? எத்தனை காலமாக, எத்தனை எத்தனை பேரின் கணக்கு வழக்குகளைச் சேர்த்து வைப்பார்? காலம் காலமாக, யுகம் யுகமாக ஒரு கடவுள் கணக்கு செட்டில் பண்ணுவதே வேலையாக இருப்பாரேயானால் அவரால் வேறு காரியம் எதையும் எப்படிப் பார்க்க இயலும்?

இனாயத்துல்லாவுக்குக் கோபம் வந்துவிட்டது. இப்படியெல்லாம் பேசுபவர்களை நாங்கள் காஃபிர் என்று அழைப்போம் என்று சொன்னான். என் அகராதிக்கு இன்னொரு சொல்.

உண்மையில் அவன் சொன்னதை நான் கிண்டல் செய்யவேயில்லை. எனக்குத் தெரியாத, அதுநாள் வரை என் புத்திக்கு எட்டாது இருந்த என்னென்னவோ புதிய விஷயங்களைத்தான் அவன் சொல்லிக்கொண்டிருந்தான். தெரிந்துகொள்வதில் எனக்கும் ஆர்வம் இருந்தது. இடையில் எதிர்பாராவிதமாகத் தோன்றிவிட்ட ஏடாகூட ஒப்புவமைதான் பிரச்னை.

அந்த சுன்னத் சம்பவத்துக்குப் பிறகு என்னைப் பொருத்தவரை அவன் அதிசக்தி பொருந்திய மானிடப்பிறவியாகவே தெரிந்தான். அம்மாதிரி ஒரு சடங்கு எனக்கு நிறைவேற்றப்படுமானால் கட்டாயம் நான் வீட்டை விட்டு ஓடிப்போய்விடுவேன் என்று அவனிடம் பலமுறை சொல்லியிருக்கிறேன். கடவுளிடம் ஆழமான நம்பிக்கை இருக்குமானால் எந்த வலியும் வேதனையும் அண்டாது என்று இனாயத்துல்லா என்னிடம் சொன்னான். எனக்கு வெட்கமும் அவமானமும் பிடுங்கித் தின்றது.

நான் மிகவும் பலவீனமானவன். ஒரு சிறு வலியைக் கூட என்னால் தாங்க இயலாது. அப்பா முறைத்துப் பார்த்தால்கூட அழுதுவிடக்கூடிய அளவுக்கு பலவீனமானவன். சிராய்ப்புகள், முட்டி காயங்கள், நகம் வெட்டும்போது சதையில் பட்டுவிடும் பிளேடு, கணக்கு வாத்தியாரின் ஸ்கேல் அடி என்று எதுவும் என்னால் தாங்கக்கூடியதல்ல.

என்றால் என்ன அர்த்தம்? என் கடவுளிடம் எனக்கு ஆழமான நம்பிக்கை இல்லை.

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. மகாலிங்க வாத்தியார் புறங்கையைத் திருப்பச் சொல்லித்தான் பெரும்பாலும் ஸ்கேலால் அடிப்பார். ஒன்றிரண்டல்ல. ஆரம்பித்தால் ஆறு, பன்னிரண்டு என்று எண்ணி எண்ணித்தான் அடிப்பார். பலமுறை கணக்கில் தவறு செய்து இனாயத்துல்லா அம்மாதிரி அடி வாங்கியிருக்கிறான். ஆனால் ஒரு சிறு சலனம் கூட இருக்காது. கோயிலில் பொங்கல் வாங்கிக்கொள்வது மாதிரியான பாவனையில் வாங்கிக்கொண்டு பேசாமல் அமர்ந்துவிடுவான். அவனது நெஞ்சுரம் எனக்கு பிரமிப்பைத் தந்தது.

வலிக்கலையாடா என்றால், தாங்கிக்குவேன் என்பான் சிரித்தபடி. என்னால் தாங்க முடியாது.

அப்போதெல்லாம் துக்கம் மிகும்போது நான் கேலண்டரில் பூத்த தாமரைப்பூவில் நின்றவண்ணம் சிரிக்கும் மகாலட்சுமியின் படத்தைப் பார்த்து நிறைய கேள்வி கேட்பேன். சண்டை போடுவேன். ஏன் இப்படி கஷ்டப்படுத்துகிறாய் என்று மனமுருகி அழுவேன். அழுது முடித்தால் கொஞ்சம் லேசான மாதிரி இருக்கும்.

இனாயத்துல்லாவுக்கு அந்த வசதிகூடக் கிடையாது. அவன் தன் கடவுளை கேலண்டரில்கூடப் பார்த்ததில்லை. அதற்கு வாய்ப்பும் இல்லை. ஒரு நம்பிக்கை. அபாரமான நம்பிக்கை. எதிலிருந்து அது கிளைத்தது என்பது எனக்குப் புரியவேயில்லை. நானும் அவனும் கடவுளைப் பற்றி நிறைய பேசினோம். விளையாட்டு வகுப்புகளின்போது மற்ற பையன்கள் சாஃப்ட் பால் அடித்துக்கொண்டிருக்க, நானும் இனாயத்துல்லாவும் கோவளம் போகிற பாதையில், ராஜமாணிக்க முதலியார் உப்பு குடோனுக்குப் பக்கத்திலிருக்கும் பாலத்தின்மீது அமர்ந்து மணிக்கணக்காகப் பேசுவோம்.

உருவமுள்ள கடவுள். உருவமற்ற கடவுள். அன்பான கடவுள். அச்சமூட்டும் கடவுள். கடவுள் மீது எவ்வளவு பாரம் சுமத்தலாம்? எத்தனை பாரத்தை நாமே சுமக்கலாம்? கடவுளை நம்புவது என்றால் என்ன? அவர் நம் கட்சி என்பதற்கு என்ன அத்தாட்சி? கோடிக்கணக்கான மக்களிடையே நம்மைப் பொருட்படுத்தி கவனிப்பதுதான் அவர் வேலை என்பதை எப்படி நம்புவது? அவர் எங்கே இருக்கிறார்? உருவமில்லாமல் ஒருவர் எப்படி இருக்கமுடியும்? என்றால் உனக்கு ஒரு கடவுள், எனக்கு ஒரு கடவுளா? உன் அப்பா சொல்லிக்கொடுத்ததுதான் சரி என்றால் முஸ்லிம் அல்லாத மற்ற அப்பாக்கள் சொல்லிக்கொடுத்ததெல்லாமே பிழையா? ஏன் நீ சொல்வது மட்டும் பிழையாக இருக்கக்கூடாது?

விவாதங்கள் ஒருபோதும் எங்கள் நட்புக்கு இடையூறு செய்ததில்லை. என்ன ஒரே பிரச்னை என்றால் ஒருநாளும் எங்கள் விவாதங்கள் ஒரு முடிவுக்கு வந்ததில்லை. என் நம்பிக்கை எனக்கு, அவன் நம்பிக்கை அவனுக்கு. இருவருமே விட்டுக்கொடுத்து இறங்கிவரத் தயாராக இல்லை.

ஒருநாள் அவன், நாங்க வீடு மாத்தறோம்டா என்று சொன்னான். அதிர்ச்சியாக இருந்தது. ஆவடிக்குப் போய்விடப் போகிறார்கள். மஸ்ஜித் ஏ முபாரக், நேரு பஜார், ஆவடி, சென்னை ஐம்பத்தி நாலு என்று ஒரு துண்டுச் சீட்டில் எழுதி முகவரி கொடுத்தான்.

கடவுளே, இனி யாருடன் நான் உன்னைப் பற்றிப் பேசுவேன்? எப்போது நீ எனக்குப் புரிவாய்?

இனாயத்துல்லா புறப்பட்டுப் போன சில காலம் கழித்து ஒரு பேச்சுப் போட்டியில் கிடைத்த பரிசின்மூலம் வீறத் துறவி விவேகானந்தர் அறிமுகமானார். என் விதி, கிடைத்த புத்தகத்தை நான் பிரித்த பக்கத்திலேயே விவேகானந்தர் ஹுக்கா பிடித்தார்.

ஒரு துறவி சிகரெட் பிடிக்கலாமா? சிகரெட் பிடிக்கும் ஒருவருக்குக் கூடக் கடவுள் காட்சியளிப்பாரா? நம்பவே முடியவில்லை என்னால். விவேகானந்தரின் கடிதங்கள் என்னும் அந்தப் புத்தகத்தை இன்று வரை நான் முழுக்க வாசித்ததே இல்லை. ஆனால் தான் ஹுக்கா பிடிப்பதைப் பற்றி ஒரு சக குருபாயிக்கு விவேகானந்தர் எழுதிய கடிதம் உள்ள அந்த ஒரு பக்கத்தை மட்டும் ஒரு லட்சம் முறையாவது திரும்பத் திரும்ப வாசித்திருப்பேன்.

ஏனோ அன்றுமுதல் இனாயத்துல்லாவைவிட விவேகானந்தர் என்னை மிகவும் கவரத் தொடங்கிவிட்டார். இனாயத்துல்லா ஒரு தோராய அணுகுமுறையில்தான் கடவுளைப் பற்றிப் பேசி்யதாக இப்போது தோன்றியது. ஆனால் விவேகானந்தர் மிகவும் கான்ஃபிடண்ட்டாகப் பேசுவதாகப் பட்டது. நானும் விவேகானந்தர் போல் ஆகிவிட வேண்டும் என்று நினைத்தேன்.

முதல் காரியமாக சிகரெட் பிடித்துப் பார்ப்பது என்று முடிவு செய்துகொண்டேன்.

[தொடரும்]

13 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற