சுகம் பிரம்மாஸ்மி – 3

நான் கடவுளைப் பார்த்தேன், உனக்கு அவனைக் காட்டுகிறேன்.

ராமகிருஷ்ண பரமஹம்சரின் இந்த confidence என்னை மிகவும் உலுக்கியது. நம்பமுடியாமல் திரும்பத் திரும்ப இந்த வரிகளைப் பல சமயம் வாசித்துக்கொண்டே இருந்தேன். இந்த வரிகளின் எளிமை, நேரடித் தன்மை, ஆறே சொற்களில் முந்தைய அனைத்து சொற்பிதங்களையும் பெருக்கித் தள்ளிவிடும் லாகவம், மேலான சிநேகபாவம் – எது என்று சொல்வதற்கில்லை. விவேகானந்தர் மூலம்தான் நான் ராமகிருஷ்ணரைப் பிடித்தேன் என்றாலும், ஏனோ ராமகிருஷ்ணர் அளவுக்கு விவேகானந்தர் என்னைப் பெரிதாகக் கவரவில்லை. அவர் ஒரு செயின் ஸ்மோக்கராக இருந்தபடியால்தான் வீரத் துறவி என்று அழைக்கப்படுகிறார் என்று நினைத்துக்கொண்டேன். பள்ளி நூலகத்திலிருந்து அவருடைய ஞானதீபம் வால்யூம்கள் சிலவற்றை எடுத்துப் படிக்க முயற்சி செய்தேன். போரடித்தது. அந்த வயதில் ராஜயோகமெல்லாம் விளங்கவில்லை. யோகம் என்றால் அதிர்ஷ்டம் என்று மனத்துக்குள் ஓர் அர்த்தம் புகுந்துகொண்டிருந்தபடியால் கர்ம, பக்தி, குண்டலினி உள்ளிட்ட பல யோகங்களை உள்ளடக்கிய ராஜயோக முறைகள் என்ன, ஏன் எதற்கு என்றே விளங்கவில்லை.

கடவுள் தொடர்பாக எனக்கு ஒருவர் என்ன உதவி செய்யலாம்? இதோ, இவர்தான் பார் என்று சுட்டிக்காட்டலாம். இங்கேதான் இருக்கிறார், இன்ன காரியம் செய்துகொண்டிருக்கிறார், தொந்தரவு செய்யாதே என்று உடனே அழைத்துச் சென்றுவிட்டாலும் பாதகமில்லை. மாறாக, கடவுள் என்று ஆரம்பித்தவுடனேயே வேறு பல விஷயங்களைப் பற்றிக் குழப்பியடித்து எங்கெங்கோ கொண்டு போகிற சிக்கல் மிக்க வழிகளை இவர்கள் யாவரும் தவறாமல் காட்டுகிறார்கள் என்று தோன்றியது.

எங்கள் வீட்டில் பாரதியார் ஒரு முக்கிய உறுப்பினர். அப்பா, பெரியப்பாவெல்லாம் பெரிய பாரதி பக்தர்கள். வீட்டில் பல்வேறு சைஸ்களில் பாரதியார் கவிதைகள் எப்போதும் உண்டு. இன்னதுதான் என்றில்லாமல் அநேகமாக எல்லா சப்ஜெக்டுகள் மீதும் ஒரு மனிதன் வேலை மெனக்கெட்டு இத்தனை பாடல்கள் பாடி வைத்திருக்கிறானே என்று எப்போதாவது போனால் போகிறதென்று எடுத்துப் படிப்பேன். சரஸ்வதி பூஜை, வினாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி என்று என்ன பண்டிகை  வந்தாலும் வீட்டில் பாரதியார் பாடல்கள்தான். அவர் ஒரு தேசபக்தர், முதன்மையாக ஒரு தேசியக் கவி என்பதே எனக்கு வெகு தாமதமாகத்தான் தெரியவந்தது. பராசக்தி துதிகள், கண்ணன் பாட்டெல்லாம் ரொம்பப் பிடிக்கும். சடாரென்று அதே ஆசாமி, ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி அலையும் அறிவிலிகாள் என்று கூப்பிட்டு எல்லாம் டுபாக்கூர், அறிவுதான் கடவுள் என்று ஓரிடத்தில் எழுதி வைக்க, ரொம்பக் குழப்பமாகிவிட்டது.

நான் வளர்ந்த சூழல், பாரதியை ஒரு கவிஞனாக அல்லாமல் கிட்டத்தட்ட ஒரு ரிஷி போலவே எனக்கு அறிமுகப்படுத்தியிருந்தது. காவி ஒன்றுதான் இல்லை; மற்றபடி கடிதங்களுக்கு பதில் கவிதை எழுதும் விவேகானந்தர் மாதிரிதான் போலிருக்கிறது என்று எண்ணிக்கொண்டிருந்தேன். அந்தத் தலைப்பாகையும் ஒரு காரணம். போதாக்குறைக்கு அப்போது பள்ளியில் ஓவிய ஆசிரியராக இருந்த சுப்பு பெருமாள் என்பவர் [ ‘ல’விலிருந்து வாத்து, ‘ந’விலிருந்து காக்கை போடவெல்லாம் எனக்குக் கற்றுக்கொடுத்த அரிய ஓவியர். ஜெயராஜ், மாருதி தொடங்கி வின்செண்ட் வான்கா வரை அறிமுகமாவதற்கு முன்னால் நானறிந்த ஒரே பெரிய ஓவியச் சக்கரவர்த்தி. இவரைப் பற்றிக் கல்கியில் முன்பொரு சமயம் ஒரு சிறுகதை எழுதியிருக்கிறேன்.] ‘உன் அப்பாவிடம் போய்க் கேட்காதே, பாரதியார் அபின் சாப்பிடுவார்’ என்று ஒரு சமயம் ரகசியமாகச் சொல்லியிருந்தார்.

இதுவும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. பெரிய தடுமாற்றம். கெட்ட காரியம் என்று பட்டியலிட்டு வைக்கப்பட்டிருப்பதைப் பயிற்சி செய்பவர்கள் எப்படி மதிக்கத்தக்கவர்களாகவும் இருப்பார்கள்? கடவுளுக்கு நெருக்கமானவர்களாக? என்னால் நம்பமுடியவில்லை. அதிர்ச்சி ஒருபுறமிருக்க, துறவிகள், மகான்கள், மேதைகள் என்று சொல்லப்பட்ட அத்தனை பேரின் தனிப்பட்ட குணாதிசயங்களை அறிந்துகொள்ள வேண்டுமென்னும் ஆவல் ஏற்பட்டது. இந்த ஆவல் கடவுளை அறியும் ஆவலைக் காட்டிலும் பெரிதாக இருப்பதை உணர்ந்தேன். வேறு வழியில்லை. கடவுள் சற்றுக் காத்திருக்கலாம். முதலில் நான் பக்தர்களைப் புரிந்துகொண்டாக வேண்டும்.

முன்னதாக, இயேசுநாதரின் ‘திராட்ச ரச’த்துக்கு நவீன உலகில் ‘ஒயின்’ என்று பெயர் என்றும் கேள்விப்பட்டு மிகுந்த கிளுகிளுப்படைந்திருந்தேன். ராமாயணத்து ராமனேகூட குகனிடம் ஒரு பாட்டில் சாராயமும் மீனும்தான் வாங்கிச் சாப்பிட்டிருக்கிறான். உண்மை விளம்பி வால்மீகி அதைச் சரியாக விசாரித்துத்தான் எழுதியிருக்கிறார். என் வீட்டில்தான் கவனமாக அதை தேனும் மீனும் என்று மாற்றிச் சொல்லிவிட்டார்கள். விவேகானந்தரின் ஹுக்கா, பாரதியாரின் அபின், அரவிந்தரின் மரிஜ்ஜுவானா, சித்தர்களின் பச்சிலைப் பிரேமை என்று அடுத்தடுத்து நான் அறிய நேர்ந்த பல அதிர்ச்சிகரமான தகவல்கள் ஒரு கட்டத்தில் தம் அதிர்ச்சி மதிப்பினை இழந்து எனக்குள் ஒரு பேரின்பக் கிளுகிளுப்பையே உண்டாக்கத் தொடங்கின. ராமகிருஷ்ண பரமஹம்சர் கூட பாக்கு, புகையிலை கலந்ததொரு கலவையைப் போட்டு மென்றிருக்கிறார்.

என்றால் கடவுளை அறிவதற்கும் இவற்றுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை! நான் பெற்ற முதல் ஞானம் இதுதான். கடவுளை அறிவதற்கும் கெட்ட பழக்கங்களுக்கும் சம்பந்தமில்லை. தனிமனித ஒழுக்கம் அல்லது ஒழுக்கக் குறைபாடு பற்றிக் கடவுளாகப்பட்டவர் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை. தவிர, இதெல்லாம் ஒழுக்கக்கேடு என்பதே ஒரு பெரிய புனைவு. ஒரு வகையில் விவேகானந்தர்தான் எனக்கு இந்த ஞானத்தின் வாசல். எனக்கொரு ஆன்மிகக் குருவாக இருக்க முடியாது போனாலும் சிகரெட் பிடித்துப் பார்க்கலாம், அதிலொன்றும் பிழையில்லை என்று அந்தராத்மாவுக்குள் ரகசியமாக போதித்தவர் அவர்தான்.

கேளம்பாக்கம் ராஜலட்சுமி திரையரங்கத்தினை ஒட்டிய ஒரு முட்டுச் சந்தில் ஒரு நாள் இருட்டியபின்பு நானும் என் நண்பன் ரவிக்குமாரும் ஆளுக்கொரு சார்மினாருடன் கரங்கள் நடுங்க நின்றுகொண்டிருந்தோம். ஊரில் நான் எந்தக் கடையிலும் சிகரெட் வாங்க முடியாது. அப்பா ஒரு வி.ஐ.பி. தலைமை ஆசிரியர் என்றால் அந்த ஊரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாதிரி. ‘அவர் புள்ளையா?’ என்று யாராவது ஒருத்தர் அதிர்ச்சியடைந்து பார்த்துவிட்டால் கூட அடுத்தக் கணம் கிராமம் முழுக்க விஷயம் பரவிவிடும். இதில் இன்னொரு பிரச்னை. மீன் மார்க்கெட் வழியாக நான் யாராவது நண்பர்கள் வீட்டுக்குப் போக நேர்ந்தால் கூட, ‘பாப்பாரப்புள்ள இந்தப் பக்கம் போகுது?’ என்பார்கள்.

இது ஒரு பிரச்னை. பெரிய பிரச்னை. என்னை வெறுப்பேற்றுவதற்குக் கடவுள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு தருணத்திலும் ஹெட் மாஸ்டர் புள்ள என்றும் பாப்பாரப் புள்ள என்றும் திரும்பத் திரும்ப நான் நினைவுறுத்தப்பட்டிருக்கிறேன்.

பாப்பாரப் புள்ள மீன் கடைப்பக்கம் போகமுடியாது. பாப்பாரப்புள்ள சிகரெட் பிடித்துப் பார்க்க முடியாது. பாப்பாரப்புள்ள எந்தப் புதிய முயற்சிகளிலும் இறங்க முடியாது. என்ன அவலமான வாழ்க்கை? அந்த வயதில் எனக்குக் கடவுளைவிட இதெல்லாம் வெகு முக்கியமாக இருந்ததை நான் எப்படி, யாருக்குப் புரியவைப்பேன்?

ரவிக்குமார், வாங்கிவரும் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருந்தான். காசு நான் கொடுத்திருந்தேன். சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, ‘பத்தவைடா’ என்று ரவிக்குமார் காதில் ரகசியமாகச் சொன்னான். மிகவும் பயமாக இருந்தது. ஆனாலும் நான் எப்படிப் பிறகு கடவுளைச் சந்திப்பது?

நடுக்கம் குறையாமல் பற்றவைத்தேன். இரண்டு இழுப்புகள் மட்டுமே இழுத்தேன். என்ன நினைத்தானோ. அதுவரை என்னை ஆர்வமாகப் பார்த்துக்கொண்டு, தன் சிகரெட்டைப் பற்றவைக்காமல் இருந்த உயிர்த்தோழன் ரவிக்குமார் சடாரென்று கையில் இருந்ததை வீசிவிட்டு ஒரே ஓட்டமாக ஓடிப்போனான். ஐயோ, அவன் ஓர் இழுப்புக் கூட இழுக்கவில்லையே? அவன் மட்டும் நல்லவனாகவே இருந்துவிட்டானே? கடவுளே.

தலைதெறிக்க வீட்டுக்கு ஓடி, பாத்ரூமுக்குள் புகுந்து கதவைச் சாத்திக்கொண்டேன். ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு முறை திரும்பத் திரும்ப பல் துலக்கினேன். க்க்க்க்க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், க்க்க்க்க்காங்ச்ச்ச்ச்ச், ட்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ட்ட்ட்ட்ட்ட்ட்ட், ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று விதவிதமாகச் சத்தமெழுப்பி நாக்கை வழித்தேன். திரும்பத் திரும்ப வாயைக் கொப்புளித்து, உள்ளங்கையில் ஊதி ஊதிப் பார்த்து நிச்சயப்படுத்திக்கொண்ட பின்பே வெளியே வந்தேன்.

நடுக்கமாக இருந்தது. ஜுரம் வந்துவிடும்போலிருந்தது. கவனமாக அப்பாவின் முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்துவிட்டு நல்ல பிள்ளையாக புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு உட்கார்ந்தேன்.

யாரும் கண்டுபிடிக்கவில்லை. யாருக்கும் தெரியாது. இந்தக் கணம் வரை இந்தச் சம்பவம் வீட்டுக்குத் தெரியாது. துரோகி ரவிக்குமார் பள்ளிக்கூடத்தில் சொல்லிவிடுவானோ என்றுமட்டும் வெகுநாள் வரை பயந்துகொண்டிருந்தேன். நல்லவேளை, சொல்லவில்லை. திருட்டு சிகரெட் பிடித்த அந்த தினத்தின் இரவு தொடங்கி, அடுத்த பல நாள்கள் எப்போதும் ஸ்ரீகிருஷ்ணாஷ்டகம் சொல்லிக்கொண்டே இருந்தேன். ஒரு உண்மையான பக்தனைக் கடவுள் கைவிட மாட்டார் என்று நிச்சயமாக நம்பினேன்.

அவர் கைவிடவில்லை என்பது உறுதியாகத் தெரிந்தபிறகு, தாற்காலிகமாக நூதன முயற்சிகளுக்கு விடை கொடுத்துவிடுவது என்றும் தீவிரமாக ஆன்மிகத்தில் இறங்குவது என்றும் முடிவு செய்துகொண்டேன்.

அப்போதுதான் ராமகிருஷ்ணர் அகப்பட்டார். நான் கடவுளைப் பார்த்தேன், உனக்கும் காட்டுகிறேன் என்று அன்பாகச் சொன்ன அந்த தொனி எனக்குப் பிடித்திருந்தது.

24 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற