எழுதாத நாள்கள்

வாசகர்கள் மன்னிக்க வேண்டும். சுகம் பிரம்மாஸ்மி ஆரம்பித்த வேளை சரியில்லை. சிவல்புரி சிங்காரத்திடம் கேட்டுவிட்டுத் தொடங்கியிருக்கலாம். உட்கார்ந்து எழுதவே முடியவில்லை. தவிர்க்கவே முடியாத ரிப்போர்ட்டர் தொடர் தவிர வேறு எதுவுமே இந்நாள்களில் எழுதுவதில்லை.

கால், கால்வாசிதான் குணமாகியிருக்கிறது. இப்போது எழுந்து நிற்க முடிகிறது. ஒரு சில நிமிடங்கள். ஆனால் நடக்க முடியவில்லை. இந்த வயதில் நடைவண்டி வாங்கிப் பயிலவேண்டும் போலிருக்கிறது. ஆனால் வலி இல்லை இப்போது. இருபது நாள்களாக படுத்தபடியும் அமர்ந்தபடியுமே இருந்ததால் உண்டான முழு உடல் வலி மட்டும்தான். அடுத்தவாரம் கண்டிப்பாக குணமாகிவிடுமென்று டாக்டர் சொல்லியிருக்கிறார். கடவுளும் நீங்களும் காத்திருப்பது தவிர வேறு வழியில்லை.

*

கடந்த தினங்களில் படுத்திருப்பது சார்ந்த சுய சோகத்திலிருந்து மீள்வதற்கு உதவிய நண்பர்களுக்கு நன்றி.  காலை பத்து மணி முதல் இரவு பத்து மணி வரை எழும்பூர் அழுக்கு லாட்ஜில் சேலம் சித்த வைத்தியருக்குக் கூட இத்தனை விசிட்டர்கள் இருக்க மாட்டார்கள். சற்றுப் பெருமையாகவே இருக்கிறது. நிறையவே நண்பர்களைச் சம்பாதித்திருக்கிறேன். பத்திரிகை, எழுத்து, தொலைக்காட்சி, சினிமா உலக நண்பர்கள். ஒரே பிரச்னை, காலைக் குறித்தே அவர்கள் பேசிக்கொண்டிருக்கக்கூடாது என்று கவனமாக ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு சப்ஜெக்டை நானே தொடங்கி வைக்கவேண்டியிருக்கிறது. பாரக் ஒபாமாவின் பதவியேற்பு சொற்பொழிவு குறித்து ஒரு நண்பரிடம் முக்கால் மணிநேரம் பேச நேர்ந்த துர்ப்பாக்கிய நிலையை விவரிக்க வார்த்தைகளில்லை.

*

பாங்காக்கில் இறுதிக்கட்ட பாடல் காட்சிகளை முடித்துவிட்டு, கனகவேல் காக்க இயக்குநர் பாலமுருகன் வந்திருந்தார். இன்னும் ரெண்டு நாள் ஷூட்டிங். அதோட ஓவர் என்று சொன்னார். படம் மிகவும் திருப்தியாக வந்திருப்பது பற்றியும் எடிட்டர் சுரேஷ் அர்ஸ், ‘யார் சார் இந்த ரைட்டர்? பின்னிருக்காரே’ என்று பாராட்டியது பற்றியும் சொல்லி சந்தோஷப்படுத்தினார்.

பாலமுருகன் சரணிடம் இருந்தவர். அபாரமான நிதானவாதி. நம்பமுடியாத அளவுக்குப் பொறுமைசாலி. உலகிலேயே ஒரு நாள் கூட படப்பிடிப்புத் தளத்துக்குப் போகாத ஒரே வசனகர்த்தா நானாகத்தான் இருப்பேன். கதையை ஒரு நாள் உட்கார்ந்து கேட்டுவிட்டு, ஒரே வாரத்தில் மொத்தமாக எழுதி, கையில் கொடுத்துவிட்டு வந்ததோடு சரி. அவ்வப்போது ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து சிறு திருத்தங்கள் வேண்டி போன் செய்வார். எஸ்.எம்.எஸ்ஸில் எல்லாம் வசனம் அனுப்பி அவரைக் கொடு்மைப்படுத்தியிருக்கிறேன். அப்போதுகூட ‘இதெல்லாம் அநியாயம் சார்’ என்பாரே தவிர, கடிந்து ஒரு வார்த்தை பேசமாட்டார்.

சீக்கிரம் எழுந்து நடக்க ஆரம்பிங்க. அடுத்த படத்து டிஸ்கஷனை பாங்காக்ல வெச்சிப்பம் என்றார்.

ஒரு விஷயம். எடிட்டர் சுரேஷ் அர்ஸை நான் இன்று வரை சந்தித்ததில்லை. ஆனால் கனகவேல் காக்க எடிட்டிங்கில் அவர் என்னுடைய வசனங்களை ரசித்துவிட்டு, வந்து போகிற அத்தனை பேரிடமும் சொல்லியிருக்கிறார் போலிருக்கிறது. 2009ல் தமிழ் ரசிகர்கள் பாடு திண்டாட்டம்தான் என்று நினைக்கிறேன். அடுத்தப்படம் மார்ச்சில் ஆரம்பிக்கிறது. இன்னொன்று ஜூனில்.

*

படுத்துக் கிடப்பவர்களுக்கு டிவிடியே தெய்வம். ஓடிய படம், ஓடாத படம், நல்ல படம், திராபை படம், உலகப்படம், உழக்குப் படம், தமிழ்ப்படம், இங்கிலீஷ் படம், பழைய படம், புதிய படம் என்கிற பேதமே இல்லாமல் பார்த்துத் தீர்த்துக்கொண்டிருக்கிறேன். இதுவரை கண்டு களித்தவற்றின் எண்ணிக்கையெல்லாம் கைவசமில்லை. ஆனால் நினைவை விட்டு நீங்காத அமர காவியங்கள் என்று இரண்டைச் சொல்வேன். ஏகன், வில்லு.

அண்ணனும் தம்பியுமான இப்படங்களின் இயக்குநர்கள், தமிழ் சினிமாவின் இரண்டு முக்கியக் கதாநாயகர்களை ஏக காலத்தில் அணுகி கதை சொல்லி, கவிழ்த்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஒரே மாதிரி கதை, ஒரே மாதிரி திரைக்கதை, ஒரே மாதிரி வசனங்கள், ஒரே மாதிரி காட்சியமைப்புகள்.

எனக்கு நினைவு தெரிந்து என்னை இப்படித் தலை தெறிக்க ஓடவைத்த [சரி, உருண்டபடி ஓடவைத்த என்று வையுங்கள்] படமென்று வேறெதுவும் சட்டென்று நினைவுக்கு வரவில்லை. குசேலனை விடவும் மோசமான ஒரு படம் வருமா என்று நினைத்தேன். விஜய் ரஜினியை மிஞ்சிவிட்டார். வாழ்க.

வாரணம் ஆயிரம் இப்போதுதான் பார்த்தேன். கௌதமிடம் ஒரு ஸ்டைல் இருக்கிறது. ஆனால் ஸ்டைல் மட்டுமே சரக்கல்ல என்பது அவருக்குப் புரியவேண்டும். வெறுமனே ஒரு காதலைச் சொல்லி, காதலி செத்துப் போவதற்கு மட்டுமே ஆறாயிரம் அடியா? இடைவேளைக்குப் பிந்தைய கதையை இரண்டு நாள் இடைவெளி விட்டுத்தான் பார்த்தேன். ஏன் ஓடவில்லை என்று எளிதாகப் புரிகிறது.

மோஷன் மக்மல்பஃபின் சைக்ளிஸ்ட், தீபா மேத்தாவின் வாட்டர், லியனார்டொ டிகாப்ரியோ நடித்த ப்ளட் டயமண்ட், டேவிட் மெக்கேயின் ப்ளாக் பாயிண்ட் என்று எந்த லாஜிக்கினுள்ளும் அடங்காமல் கிடைத்ததையெல்லாம் பார்த்துத் தீர்த்திருக்கிறேன்.

இதற்காகவாவது கடவுள் என் காலை சீக்கிரம் குணப்படுத்தி ஆபீசுக்குத் துரத்துவார் என்று எதிர்பார்க்கிறேன்.

*

படித்த புத்தகங்கள் இரண்டு. கனடாவிலிருந்து எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அன்புடன் அனுப்பிவைத்த ‘The Jewel of Medina’, கிறிஸ்டோபர் ஜெஃபர்லாட் எடிட் செய்த The Sangh Parivar – A Reader. முன்னது, சுவாரசியமான நாவல். பின்னது, ஒரு சுவாரசியமான நாவலைக் காட்டிலும் சுவாரசியம் தரக்கூடிய மத அரசியல். இரண்டினைப் பற்றியும் தனியே எழுதவேண்டும்.

25 comments

para

புதியவை

வகை

தொகுப்பு

முந்தையவை

பொதுவெளி

மின்னஞ்சலில் பெற

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.