சுகம் பிரம்மாஸ்மி – 6

அரைகுறைப் படிப்பு, கலவையான ஆர்வங்கள், எதிலும் முழுத்தேர்ச்சி இன்மை, மிகவும் உணர்ச்சிவசப்படும் இயல்பு, கேளிக்கைகளில் மிகுவிருப்பம், வீட்டுக்கோ, நட்புகளுக்கோ, உறவுகளுக்கோ, எனக்கேகூட உபயோகமின்மை, நேர்மையின்மை, வசதிக்கு – தேவைக்கு ஏற்ப விதிமுறைகளை வளைக்கும் அல்லது ஒடிக்கும் இயல்பு, எதையாவது பெரிதாகச் செய்துவிடவேண்டுமென்கிற வெறி அல்லது வேட்கை, ஆனால் எதையும் செய்யத் துப்பில்லாத மொக்கை புத்தி – இன்னும் நிறைய அடுக்கலாம். யாருமே விரும்பமாட்டாத இத்தனை கல்யாண குணங்களுடனும் நான் அப்போது இருந்தேன்.

எனக்குத் தெரிந்த வட்டங்கள் அனைத்தும் ஒரு கட்டத்தில் என்னை மிகவும் வெறுக்கவும் முதுகுக்குப் பின்னால் இழித்துப் பேசவும் தொடங்கியிருந்த சமயத்திலும் என் கடவுள் என்னை வெறுக்கவோ, கைவிடவோ இல்லை என்பது எனக்கு மிகப்பெரிய விஷயமாக இருந்தது. மனத்துக்குள் கேட்கும் அவனது குரல் எப்போதும் அதே அன்புடனேயே ஒலிக்கும். பரவாயில்லை ராகவா. யாரும் செய்யாத தவறுகளை நீ செய்யவில்லை. இதெல்லாம் இந்த வயதில் இயல்பு. என்ன, ஒரு படி மேலே போனாய். கல்லூரிக் கூத்துகளுக்குப் பிறகும், வேலைக்குப் போவதாகப் பொய் சொல்லிவிட்டு ஊர் சுற்றி வீட்டை ஏமாற்றினாய். அவ்வளவுதானே. கல்யாணப் பரிசு தங்கவேலு கதை. ஒன்றும் பிரச்னையில்லை. பின்னாளில் நீ நினைத்துச் சிரிக்க ஒரு அனுபவம். விடு, மறந்துவிடு. அடுத்து என்ன? அதை யோசி.

இப்படித்தான் அவன் பேசுவான். நான் செய்த எதையும் தவறென்று சொல்லமாட்டான். திடீர் திடீரென்று சந்தேகம் வந்துவிடும். இது கடவுளின் குரல் தானா? எனக்கு நானே கேள்வி கேட்டு பதில் சொல்லி ஏமாந்து போகிறேனா?

ஆனால் அது கடவுளின் குரல்தான் என்று வெகு விரைவில் நிச்சயமாகிவிடும். ஏனென்றால் நான் செய்த அயோக்கியத் தனங்களுக்கு எல்லாம் அவன் என்னை தண்டிப்பது என்று முடிவு செய்திருந்தால் இந்நேரம் நானொரு ஆயுள் தண்டனைக் கைதி. மாறாக, ஒவ்வொரு கட்டத்திலும் கைதூக்கி விட்டுக்கொண்டே இருந்தான். ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.

அப்போதெல்லாம் தினசரி ஒரு சிறுகதை எழுதுவேன். ஒரு நாள் தவறாது. இரவு முழுதும் யோசித்து, விடிந்ததும் ஆரம்பித்துவிடுவேன். மாலைக்குள் நிச்சயம் ஒரு கதை தயாராகிவிடும். இவ்வாறு எழுதி எழுதி சுமார் எழுபது, எண்பது கதைகளைச் சேர்த்துக்கொண்டேன். பிறகு அதே மாதிரி தினம் ஒன்றாகக் கல்கிக்கு அனுப்ப ஆரம்பித்தேன். சுமார் நான்கு மாதங்கள் இம்மாதிரி செய்தேன் என்று நினைக்கிறேன். ஒரு கதையும் பிரசுரமாகவில்லை, திரும்பியும் வரவில்லை.

ஒருநாள் நேரில் சென்று கேட்டுவிடுவது என்று சைக்கிளில் புறப்பட்டேன். அப்போதெல்லாம் சைக்கிள்தான். ஒரு பழைய ஹெர்குலிஸ். குரோம்பேட்டையிலிருந்து புறப்பட்டு சென்னை மாநகரம் முழுதும் அந்த சைக்கிளிலேயே சுற்றியிருக்கிறேன்.

கல்கி அலுவலகம் அப்போது ரேஸ் கோர்ஸ் சாலையில் இருந்தது. ஈக்காடுதாங்கலில் இடம் வாங்கியிருக்கவில்லை. உள்ளே சென்று ஆசிரியரைப் பார்க்க அனுமதி கேட்டேன். அதெல்லாம் அத்தனை சுலபமா என்ன? உதவி ஆசிரியர் பி.எஸ். மணி என்கிற குண்டுமணிதான் வந்தார். என்ன விஷயம் என்று கேட்டார். எழுபது கதைகள். கை ஒடிய எழுதியவை. அவற்றின் தலையெழுத்தென்ன என்று கேட்டேன்.

செலக்ட் ஆனா வரும் சார். செலக்ட் ஆகலேன்னா, நீங்க ஸ்டாம்ப் வெச்சிருந்தா திரும்பி வரும். இதுக்காகல்லாம் ஆசிரியரைப் பார்க்க முடியாது என்று சொல்லிவிட்டார். என் வாதங்கள் அவரிடம் எடுபடவில்லை. ஓர் இளைஞன். பதினெட்டு வயதுகூட நிரம்பாதவன். எத்தனை ஆர்வத்துடன் அத்தனை கதைகளையும் எழுதியிருப்பேன்! இப்படியா அலட்சியமாக ஒரு பதில் வரும்!

இரண்டு நாள் இடைவெளி விட்டு மீண்டும் சென்றேன். மீண்டும் சென்றேன். மீண்டும் மீண்டும் சென்றேன். சரியாக ஆறு முறை. அதே பி.எஸ். மணி. அதே பதில். என் கோபம் அதன் எல்லையை அன்று தொட்டது.

‘கல்கில வேல பாக்கறோம்ங்கற தெனாவெட்டுல பேசறிங்க சார். இப்ப சொல்றேன். இதே கல்கி என்னைக் கூப்பிட்டு வேல குடுக்கும். உங்க சீட்டுக்குப் பக்கத்து சீட்ல நான் வந்து உக்காருவேன். அன்னிக்கி என் கதைகளை நீங்களே எடுத்து ப்ரூப் படிச்சி பப்ளிஷ் பண்ணுவிங்க பாருங்க.’

எனது சபத வரிகளில் கடவுள் சின்னதாகக் கொஞ்சம் எடிட் செய்து பப்ளிஷ் செய்தான். பக்கத்து சீட் இல்லை. திரு. மணி அமர்ந்திருந்த அதே சீட். நான் உள்ளே சென்றபோது அவர் ரிடையர் ஆகிவிட்டிருந்தார்.

எனக்கு நினைவு தெரிந்து, நான் கண்ணீர் விட்டு அழுது கடவுளுக்கு நன்றி சொன்ன தருணம் அதுதான். ஒரு வகையில் என் நடவடிக்கைகள் அனைத்தையும் புரட்டிப்போட்ட தருணமும் அதுவே. நான் அடித்த கூத்துகளுக்கெல்லாம் என்னை தண்டிப்பது என்று கடவுள் முடிவு செய்திருந்தால் இப்படியா செய்திருப்பான்? அந்தக் கணமே நான் அமைதி அடைந்தேன். என் தவிப்புகள் அடங்கிப் போயின. யாரைப் பார்த்தாலும் வணங்கத் தோன்றியது. அதுநாள் வரை என்பொருட்டு கவலையும் கண்ணீரும் வளர்த்த என் பெற்றோரைப் புரிந்துகொள்ளாமல் என் வாழ்வின் தலையாய வில்லன்களாகவே அவர்களை நினைத்ததற்காக வருத்தப்பட்டேன். ஊர் சுற்றல் விடைபெற்றது. பலான படங்களுக்கு விடைகொடுத்தேன். பழைய பொறுக்கி நண்பர்களின் சகவாசத்தைத் துண்டித்தேன். இனி நான் திருந்திய மனிதன். கடவுளுக்கு நன்றி. கடவுளுக்கு நன்றி. கடவுளுக்கு நன்றி.

சிரிப்புத்தான் வருகிறது. ஒரு பொருளாதாரப் பாதுகாப்பு நமக்குக் கிடைக்காது போய்விடுமோ என்கிற அச்சமே என்னைக் கண்டபடி அலைக்கழித்துத் திரிய வைத்திருக்கிறது. அதற்கொரு ஆரம்ப உத்தரவாதம் கிடைத்துவிட்டதும் உலகமே பிரசன்னமடைந்து விட்டது போலாகிவிடுகிறது.  முந்தையக் கணம் வரை இருட்டும் துர்நாற்றமும் பயமுறுத்தலும் மிக்கதாகக் காட்சியளித்த உலகம். ‘ஒங்க கதயெல்லாம் படிச்சேங்க. நல்லாத்தான் எளுதறிங்க. வந்துர்றிங்களா வேலைக்கு?’ என்று கி.ராஜேந்திரன் கேட்ட கணத்தில் பளிச்சிடும் ரின் வெண்மைக்கு மாறிவிட்டது.

இதெல்லாம் இப்போது யோசிப்பது. அந்தக் கணம் கடவுளை எண்ணி எண்ணி நன்றி சொல்ல மட்டுமே தோன்றியது. ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு அடுத்தபடி நான் தான் சாது என்றே சொல்லிவிடலாம். மனத்துக்குள் அப்படிக் கனிந்து போனேன். உண்மையில் கவலையில்லாமல் நான் வாசிக்கத்தொடங்கியதுகூட அதன் பிறகுதான். பரமஹம்சரை மேலும் தீவிரமாகப் படித்தேன். நான்கு வயதில் அர்த்தம் புரியாமல் உருப்போட்ட நாலாயிர திவ்வியப் பிரபந்தப் பாசுரங்களை அர்த்தம் புரிந்து திரும்பப் படித்தேன். வியாசபாரதம் படித்தேன். பெரும்பாலும் பக்தி இலக்கியங்கள். சிறுபான்மை, நவீன இலக்கியம்.

மாதம் ஒருமுறை திருப்பதிக்கு பஸ் ஏறிவிடுவேன். மலையின் பின்னணியில் வெள்ளைக் கோபுரத்தைப் பார்த்தபடி முன் மண்டப வாசலில் மணிக்கணக்கில் அமர்ந்திருப்பேன். தரிசன கணத்தில் பெருமாளின் பிரம்மாண்டமான தோற்றம் கண்டுச் சிலிர்த்துப்போவேன். ஓரடி முன்னால் எடுத்து வைத்து, கைநீட்டி என் தலையைத் தொட்டு ஆசீர்வதிப்பதுபோல் மனத்துக்குள் ஒரு திரைக்காட்சி ஓடவிட்டு ரசிப்பேன். அவன் என் கடவுள். எனக்கு மட்டுமே கடவுள். அல்லது அவனுக்கு நான் ஒரு ஸ்பெஷல் பக்தன். என்ன தகுதியைக் கண்டு இத்தனை அள்ளிக்கொடுத்தான்? தெரியவில்லை. இனி தகுதி வளர்த்துக்கொள்ள வேண்டியதுதான்.

அப்பழுக்கில்லாமல் நம்பினேன். கடவுள் உண்டு. ராமகிருஷ்ணருக்குக் காளியாகவும் எனக்குக் கல்கியாகவும் காட்சி கொடுத்த கடவுள்.

ஒருநாள் தற்செயலாக டீக்கடையில் பேசிக்கொண்டிருந்தபோது அவரிடம் இதனைப் புல்லரிப்புடன் விவரித்துச் சொன்னேன். எனக்கு என்ன சார் தகுதி இருக்கு? வெறும் பொறுக்கி சார். சரியாக்கூட படிக்கல. ஆனா என்னை எழுத வெச்சிட்டான். இப்ப நிம்மதியா, நல்ல இடத்துல ஒரு வேலை வேற குடுத்துட்டான். வீட்ல எவ்ளோ சந்தோஷப்படறாங்க தெரியுமா? எங்கம்மா எனக்காக அழுததுதான் சார் ஜாஸ்தி. இப்ப நாலு பேர்ட்ட பெருமையா பேச ஒரு சந்தர்ப்பம் குடுத்திருக்கான் சார்.

யாரு? என்று கேட்டார்.

கடவுள் சார் என்றேன்.

சிரித்தார். ஒனக்கு எழுத வந்தது, நீ எழுதின. நல்லா இருந்திச்சி. நீ தேவைப்பட்ட, எடுத்துக்கிட்டாங்க. செய்யற வேலைக்கு சம்பளம். மேட்டர் அதோட ஓவர். எதுக்கு அநாவசியமா கடவுளையெல்லாம் இழுக்கற? அவனுக்கு வேற வேலவெட்டி இல்ல? உன்னயமாதிரி பொறுக்கிக்கெல்லாம் வேல போட்டுக் குடுக்கற எம்ப்ளாயின்மெண்ட் எக்ஸ்சேஞ்சாய்யா நடத்தறான் அவன்?

டீயைக் குடித்து முடித்து சிகரெட்டை இழுத்து ஊதி, எறிந்துவிட்டு உள்ளே போய்விட்டார்.

எனக்குக் கடும் கோபம் வந்தது. என்ன மனிதர் இவர்? சற்றும் ரசனையற்ற, சொல்வதை அதன் உள்ளார்ந்த உணர்ச்சிகளுடன் உள்வாங்கத் தெரியாத வெறும் ஜடமாக இருக்கிறாரே.

மதிய உணவின்போது அலுவலக நண்பன் ரங்கராஜன் சொன்னான். அட நீ ஒண்ணுப்பா. அவருகிட்டப்போயி கடவுள் கிடவுள்னுக்கிட்டு. அந்தாளு நாஸ்திகன்யா. அப்பிடித்தாம் பேசுவாரு.

ஓஹோ என்றேன். சற்று பார்த்துப் பழகவேண்டும் என்று எண்ணிக்கொண்டேன். வேறு வழியில்லை. கல்கியில் அப்போது அவர்தான் சீனியர். எனக்கு மட்டுமல்ல. பின்னாளில் ஆசிரியரான திருமதி சீதா ரவிக்கும்கூட. விலகியிருக்க முடியாது. நெருங்கினால் என் பக்திப் பரவச நிலைக்கு பங்கம் வந்தாலும் வந்துவிடும். சொன்னதைச் செய்துவிட்டு ஒதுங்கியிருந்துவிடலாம் என்று முடிவு செய்துகொண்டேன்.

சில தருணங்கள் மிகவும் அழகானவை. அவை அபத்தமானவையாகவே இருந்தாலும்கூட.

அவர் பெயர் இளங்கோவன்.

[தொடரும்]

19 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற