புளித்த பழம்

இது தொடர்பாக எழுதவே கூடாது என்று தீர்மானமாக இருந்தேன். ஏனோ முடியவில்லை.

காலை செய்தித் தாளில் கலைஞரின் செயற்குழுப் பேச்சு விவரங்கள் பார்த்தபிறகு இந்தியாவில் அல்ல, உலகிலேயே இவருக்கு நிகரான இன்னொரு அரசியல்வாதி இருக்கமுடியாது என்று தோன்றிவிட்டது. எத்தனையோ பல வருடங்களுக்கு முன்பு வாசித்த பிரபாகரனின் ஒரு பேட்டியின்போதே ஈழப்போராட்டம் தனக்குப் புளித்துவிட்டதாகச் சொல்லியிருக்கிறார். ஈழம் மலர்ந்தால், அங்கே சர்வாதிகார ஆட்சிதான் இருக்கும் என்று பிரபாகரன் அப்பேட்டியில் சொல்லியிருப்பதாகப் பின்னிணைப்பு. ஜனநாயகக் காவலரல்லவா. புளித்துத்தான் போகும்.

ஆனால் புளித்த பிறகும் கவலைப்படலாம், பிழையேதுமில்லை. மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தலாம். தமிழ்ச்செல்வன் செத்துப்போனால் இரங்கல் கவிதை எழுதலாம். எம்.பிக்களிடம் ராஜினாமா கடிதங்கள் எழுதி வாங்கலாம். உயிர் இருக்கும் வரை தமிழினத்துக்காகப் போராடுவேன் என்று கண்ணீர்க் கடிதங்கள் எழுதலாம். தம்பி பிரபாகரனின் தன்னிகரற்ற வீரத்தைப் போற்றியும் பாடலாம்.

எதுவும் செய்யலாம். திருமாவளவன் உண்ணாவிரதம் இருக்காத வரை. ராமதாஸ் போர்க்கொடி தூக்காத வரை. பா.ம.க. பத்திரிகை ஊழியர் முத்துக்குமார் எரித்துக்கொண்டு இறக்காதவரை. மாநிலமெங்கும் மாணவர்கள் கொதித்து எழாதவரை.

தனது இந்தப் பேச்சும் தி.மு.க. பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்ட முடிவுகளும் பெரும்பான்மை தமிழகத் தமிழர்கள் மத்தியில் கடும் மனக்கசப்பை ஏற்படுத்தும் என்று அரசியல் ஞானி கலைஞர் எதிர்பார்த்திருக்கவில்லையானால் அது வியப்புக்குரியதே. முத்துக்குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்தப் போயிருந்த ஒரு தி.மு.க. மாவட்ட செயலாளரை அங்கிருந்தவர்கள் செருப்பால் அடித்து விரட்டினார்கள் என்று கேள்விப்பட்டேன். கலைஞரின் காதுகளுக்குப் போகாமல் பார்த்துக்கொண்டிருக்கக் கூடும். எப்படியானாலும் மிகுந்த ஏமாற்றமாகவே உள்ளது. ஒரு பண்பட்ட அரசியல்வாதியின் பேச்சாகவும் நடவடிக்கையாகவும் இது இல்லை.

*

நீ ஈழப் போராட்டத்தை ஆதரிக்கிறாயா, எதிர்க்கிறாயா என்பது இல்லை முக்கியம். மனச்சாட்சிப்படி எடுக்கிற நிலைபாடுகளை இதில்கூட ஒருவரால் மாற்றிக்கொள்ள இயலுமா என்பதுதான் என் வியப்பு. இந்த விஷயத்தில் நான் ஜெயலலிதாவை மதிக்கிறேன். ஹிந்து பத்திரிகையை மதிக்கிறேன். துக்ளக்கை மதிக்கிறேன். ராமதாஸ், வைகோ, திருமாவளவன் போன்ற அரசியல்வாதிகளை மதிக்கிறேன். தமது புத்திக்குச் சரியென்று தோன்றிய ஒரு முடிவை இன்றளவும் இவர்கள் மாற்றிக்கொள்ளவில்லை. தமிழக அரசியல் சார்ந்து ஆயிரம் முறை பல்டி அடிக்கக்கூடியவர்களே என்றாலும் ஈழப் பிரச்னை தொடர்பாகப் பால் மாறியதில்லை. கொண்ட கொள்கையில் உறுதி காக்கக்கூடியவர்களாகவே இன்றுவரை இருக்கிறார்கள். தம்பி தம்பி என்று உருகிவிட்டு, கம்பி நீட்டியதில்லை. அல்லது தீவிரவாதம் வளர்க்கிறார்கள் என்று சொல்லிவிட்டு அதை விடுதலைப் போராட்டமாகச் சித்திரித்துப் பேசியதில்லை.

ஆட்சியில் நிலைத்திருக்க, பதவியில் ஒட்டிக்கொண்டிருக்க, மத்திய அரசின் பாசப்பிணைப்பு தொடரவேண்டுமே என்கிற பரிதவிப்புதான் கலைஞரின் இப்பேச்சுக்குக் காரணமாக இருக்குமா என்று என்னால் இன்னும் நம்பமுடியவில்லை. அவர் சந்திக்காத பதவி நீக்கங்கள் இல்லை, ஆட்சிக்கவிழ்ப்புகள் இல்லை, போராட்டங்கள், சிறையடைப்புகளில்லை. தமிழகத்தை மிக அதிக முறை, மிக நீண்ட காலம் ஆண்ட ஒரு முதியவர், தனது தள்ளாத வயதில் இப்படியொரு அழிக்க முடியாத அவப்பெயரை வேண்டி விரும்பித் தேடிக்கொள்ளத் தூண்டியது எதுவாக இருக்கும்?

உண்மையிலேயே எனக்கு விளங்கவில்லை. பெரும்பான்மை மக்களின் உணர்வு எப்படியிருக்கிறது என்று நிஜமாகவே உளவுத்துறை அவருக்குத் தெரியப்படுத்தியிருக்காதா? முத்துக்குமார் மரணத்துக்குப் பிறகும்? தமிழகமெங்கும் கல்லூரி, பள்ளி மாணவர்களின் எழுச்சிக்குப் பிறகும்? அத்தனை வெண்ணெய் வெட்டிகளாகவா இருந்திருப்பார்கள்?

முத்துக்குமாரின் தற்கொலையை அரசியல் லாபங்களுக்குப் பயன்படுத்திக்கொள்ள முயற்சி செய்யும் கட்சிகள்கூட ஈழப் போராட்டத்தையோ, விடுதலைப் புலிகளின் நோக்கத்தையோ கொச்சைப்படுத்தி சந்தர்ப்ப அரசியல் செய்ததில்லை. குறைந்தபட்சம் எனக்குத் தெரிந்த அளவில்.

கலைஞர் செய்திருப்பது, அருவருப்பாக உள்ளது.

*

இலங்கையில் நடைபெறும் இனப்போராட்டத்தினையும் அதன் பின்னணியையும் நான் இதுநாள் வரை அபிப்பிராயம் ஏதுமில்லாமல் மட்டுமே கவனித்து வந்திருக்கிறேன். ஒரு பத்திரிகையாளனாகச் சில போராளிகளைச் சந்தித்திருக்கிறேன், பேசியிருக்கிறேன். இப்போதல்ல. பத்திரிகைப் பணியில் இருந்தபோது.

ஆனால் ஒருபோதும் இலங்கைப் பிரச்னை குறித்து எழுதியதில்லை. காரணம், தகவல்களின் போதாமை மட்டுமே. தமிழ்ப் பத்திரிகைகளின் கடும் சார்பு நிலைகளை மட்டுமே தரவுகளாக வைத்துக்கொண்டு இலங்கைப் போராட்டம் குறித்து ஒருவர் கருத்துத் தெரிவிக்கத் தொடங்கினால் விபரீதம் மட்டுமே விளையும். இன்றளவும் இங்கே இரு சார்பு நிலைகளில் நின்று பேசுவோரில் எத்தனை பேருக்கு அவரவர் சார்ந்த வகையிலேனும் முழுத் தகவல்கள் தெரிந்திருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை.

கடந்த ஒரு வருட காலமாக அநேகமாக தினசரி ஆறு மணிநேரங்கள் இது தொடர்பான ஆய்வுகளுக்கெனச் செலவிட்டு வருபவன் என்கிற முறையில் இப்போது என்னால் பேசமுடியும். அடிப்படை தெரியும். இதன் ஆழ அகலங்களை இப்போது புரிந்துகொள்ள முடிகிறது. கண்மூடித்தனமான ஆதரவோ, எதிர்ப்போ, அனுதாபப் பிரயோகங்களோ இல்லாமல் தெளிவாக அணுக முடிகிறது.

ஆனால் என்னுடைய ஆய்வு தொடர்பாக நான் தகவல்கள் கோரி அணுகிய பெரும்பாலானவர்களிடம் எனக்கு வழங்க ஏதுமில்லை. இத்தனைக்கும் நான் எழுதுவது நடந்தது பற்றியே. நடப்பு நிலவரமல்ல. இதற்காக நான் அலையும் அலைச்சல்களும் படும் பாடுகளும் கொஞ்சநஞ்சமல்ல. ஒரு கள்ளத்தோணி பிடித்து ஈழத்துக்கே கூடப் போய்வந்துவிடலாம். ஆனால் அப்படி ஒருமுறை போய்வந்து விடுவதால் மட்டுமே அனைத்து உண்மைகளும் தெரிந்துவிடுமா? போய் வந்தவர்களுக்கேதான் தெரியுமா? நான் நம்பவில்லை.

வாழ்ந்து பார்த்தாலொழிய வாழ்க்கையில்லை. அடிபட்டாலொழிய வலியில்லை. இந்தளவில், நாம் செய்யக்கூடிய மாபெரும் உபகாரம் வாயை மூடிக்கொண்டு சும்மா இருப்பது மட்டுமே.

அதையாவது கலைஞர் செய்திருக்கலாம்.

*

உலகில் எந்த ஒரு விடுதலை இயக்கமும் சில சரித்திர மரணங்களுக்குக் காரணமாக இல்லாமல் இருந்ததில்லை. ரஷ்யா தொடங்கி அயர்லாந்து வரை, பாலஸ்தீன் தொடங்கி இந்தியா வரை இதற்கு உதாரணங்களை எடுத்துப் போட்டுக்கொண்டே இருக்கலாம். என்ன சொல்லியும் தனி மனிதக் கொலைகளை நியாயப்படுத்த இயலாது என்றாலும் இத்தகைய இடறல்கள் போராட்டப் பாதைகளெங்கும் இருக்கவே செய்திருக்கின்றன. வரலாறை அதன் வண்டல்களுடனும் ஏற்பதுதான் சரி. இறைவன் கூட இறுதி நாளன்றுதான் நியாயத்தீர்ப்பு கொடுப்பான் என்பார்கள். இப்படி இடையிடையே தலைக்குத்தலை நியாயத்தீர்ப்பு வழங்குவது அடுக்காது என்றே தோன்றுகிறது.

அறுபது வருடங்களாக ஓர் இனம் ஒடுக்கப்பட்டும் அழிக்கப்பட்டும் கிட்டத்தட்ட காலி செய்யப்பட்டுவிட்ட நிலையில் – ஒரு போராட்டம் அதன் உச்சக்கட்டத்தைத் தொடுகிறது. பொதுவாழ்வில் அதனைக் காட்டிலும் அதிக வருடங்கள் அனுபவம் சேகரித்த ஒரு மனிதர் இப்படி முற்றிலும் ஏமாற்றம் தரும் விதத்தில் பேசுவார் என்று நான் எண்ணிப் பார்க்கவேயில்லை.

எனக்கு எக்காலத்திலும் கட்சி சார்புகள் இருந்தது கிடையாது. பிரச்னைகளின் அடிப்படையில், வேட்பாளர்களின் தகுதி அடிப்படையில் மட்டுமே ஒவ்வொரு தேர்தலிலும் இதுநாள் வரை வோட்டுப் போட்டு வந்திருக்கிறேன். வாழ்விலேயே முதல் முறையாக, தி.மு.க. சார்ந்த எந்த வேட்பாளருக்கும் இனி வோட்டுப் போடக்கூடாது என்று இன்று தோன்றியது.

என்னைப்போல் வேறு பலருக்கும் தோன்றியிருக்கக் கூடும்.

தொடர்புடைய பத்திரிகைச் செய்தி இங்கே.

25 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற