உலகை வென்ற இசை

Oscars Oscar Insiderபாடல்கள் பிரமாதம். பின்னணி இசை பிரமாதம். தமிழ் ரசிகர்கள் இதற்குமுன் இப்படியொரு இசையைக் கேட்டிருக்க வாய்ப்பில்லை. நன்றாக இருக்கிறது என்பது இரண்டாவது. இளைஞனே, உன்னுடைய இசை மிகவும் புதிதாக இருக்கிறது. நீ பேசப்படுவாய். சரி, ஆடியோ ரெடியாகிவிட்டது. அட்டை டிசைன் தான் மிச்சம். சொல். ரசிகர்களுக்கு நீ என்ன பெயரில் அறிமுகமாகப் போகிறாய்?

மணி ரத்னம் காத்திருந்தார். ரோஜா அவருக்கு ஒரு முக்கியமான படம். இளையராஜா இல்லாமலும் தன்னால் வெற்றி பெற முடியும் என்று நிரூபித்தாக வேண்டிய தருணம். பத்தோடு பதினொன்றாக இசை இருந்துவிட முடியாது. சொற்கள் தோற்கும் இடங்களை இசைதான் தூக்கி நிறுத்தியாக வேண்டும். இந்த இளைஞன் எதிர்பார்த்ததைக் காட்டிலும் அதிகம் சாதித்திருக்கிறான். வயதுக்கு மீறிய ஞானம். வயதுக்கு மீறிய பக்குவம். சொல், என்ன பெயர்?

கரீமுல்லா ஷா கதிரி ஏழு பெயர்களை எழுதி எதிரே வைத்தார். ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடு. எல்லாமே சிறந்த பெயர்கள்.

அந்த இளைஞன் தேர்ந்தெடுத்த பெயர் அல்லா ரக்கா ரஹ்மான். இறைவனின் ஆயிரம் திருப்பெயர்களுள் அதுவே முதலானது. மணி ரத்னம் புன்னகை செய்தார். அல்லா ரக்காவைச் சுருக்கி ‘ஏ.ஆர்’ என்று ஆக்கினார். சென்னை தேவி திரையரங்கம் குளிர்ந்திருக்க, முதல் நாள், முதல் காட்சி, படம் தொடங்குவதற்கு முன்னால் கண் காணாத மூலைகளிலிருந்து அந்த இசை வழிய ஆரம்பித்தது. சின்னச் சின்ன ஆசை.

யார்? யார்? என்று எல்லோரும் கேட்ட தினம் நினைவிருக்கிறது. சரியாகப் பதினெட்டு வருடங்கள். அப்போது சொன்ன ‘எல்லா புகழும் இறைவனுக்கே’வைத்தான் இப்போதும் ரஹ்மான் சொன்னார். ஆஸ்கர் மேடையில் அபூர்வமாக ஒலித்த தமிழ்க்குரல். (இது எல்லா முஸ்லிம்களும் சொல்வது. நல்லது எது நடந்தாலும் அல்ஹம்துலில்லாஹ் என்பது வழக்கம். அதன் தமிழாக்கமே இது.) ஒன்றல்ல, இரண்டு விருதுகள். மணி ரத்னத்தைப் போலவே ஸ்லம் டாக் மில்லியனரின் இயக்குநர் டேனி பாயில் (Danny Boyle) ரஹ்மான் வாழ்வில் மறக்க முடியாத மனிதராகிப் போனார்.

விருது அறிவிக்கப்பட்ட அடுத்தக் கணம் கோடம்பாக்கம் சுப்பராயன் நகரில் ரகுமான் வசிக்கும் வீதி முழுக்க சரவெடி. வெகு நேரம் ஓயாத சரவெடி. என்ன செய்வதென்று புரியாமல் பலபேர் தலைதெரிக்க அங்குமிங்கும் ஓடினார்கள். சந்தோஷக் கூக்குரல்கள் எங்கும் கேட்டன. யாருக்கும் தலைகால் புரியவில்லை. இது எதிர்பாராததல்ல. ஆனால், நினைத்துப் பார்த்திராதது. ஆஸ்கர் என்பது ஒரு கனவாக மட்டுமே அறிமுகமாகியிருக்கிற விஷயம். சென்ற மாதம் ரஹ்மான் கோல்டன் க்ளோப் விருது பெற்றபோதுதான் இந்தக் கனவு முட்டை ஒருவேளை குஞ்சு பொறித்துவிடுமோ என்று நினைக்கத் தொடங்கினார்கள். மக்கள் ஸ்லம் டாகைக் கண்டார்களா, மில்லினியரைக் கண்டார்களா? அவசர அவசரமாக பர்மா பஜார் கடைகளில் சிடி மூட்டைகள் பிரிக்கப்பட்டு அந்தப் படம் இருக்கிறதா என்று கேட்க ஆரம்பித்தார்கள். நல்ல படம் என்றும் இந்தியாவின் ஏழை முகத்தை அமெரிக்காவில் கடை விரித்துக் காசு பார்க்கும் படம் என்றும் இருவேறு விமரிசனங்கள் வெளிவர ஆரம்பித்ததும் அதன்பிறகுதான்.

எட்டு அகடமி விருதுகள் கிடைத்திருந்தாலும் ஸ்லம் டாக் மில்லியனர் காலம் கடந்து நிற்கக்கூடிய படமல்ல. புத்திசாலித்தனமாக எடுக்கப்பட்ட சராசரிக்கு மேற்பட்ட ஒரு நல்ல வர்த்தகப் படம். ரஹ்மானேகூட இதனைக்காட்டிலும் பெரிய சிகரங்களைப் பல படங்களில், பல பாடல்களில் தொட்டிருப்பவர்தான்.

ஆனாலும் இது ஒரு தருணம். இரும்புக் கோட்டையாக இதுநாள் வரை நம்மவர்களால் கருதப்பட்ட இடத்துக்குள் நுழைய நமக்குக் கிடைத்த ஒரு கடவுச் சீட்டு. ரஹ்மான் என்னும் நம் ஊர் ஜீனியஸை உலகம் தெரிந்துகொள்ள ஒரு நல்ல சந்தர்ப்பம்.

*

கே.எஸ். திலீப்குமாராக 1967ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி பிறந்த ரஹ்மான், அதிகம் படித்தவரில்லை. குடும்பத்தின் ஏழைமை அவரை மிக இளம் வயதிலேயே சம்பாதிக்க அனுப்பியது. அவரது தந்தை ஓர் இசைக் கலைஞர். சில மலையாளப் படங்களில் இசையமைப்பாளராகப் பணியாற்றியவர். ஆர்.கே. சேகர் என்று பெயர். துரதிருஷ்டவசமாக அவர் இங்கு பிரபலமாகவில்லை. அவர் இசையமைப்பாளராகப் பணியாற்றிய ‘சோட்டானிக்கர அம்மா’ என்ற  படம் வெளியான தினத்தன்று அவர் காலமானார். கேன்சர். ரஹ்மானுக்கு அப்போது வயது ஒன்பது.

பத்மா சேஷாத்ரியில் அவர் படித்துக்கொண்டிருந்தார். ஆனால் தந்தையின் மறைவுக்குப் பிறகு ஒழுங்காகப் பள்ளிக்கூடம் போகமுடியவில்லை. யாருக்காவது கீ போர்ட் வாசிக்க, ஆர்மோனியம் வாசிக்கப் போனால் கொஞ்சம் பணம் கிடைக்கும். அது கிடைத்தால்தான் வீட்டில் அம்மாவுக்கும் மூன்று சகோதரிகளுக்கும் உணவு கிடைக்கும்.

சந்தேகமில்லாமல் ஏழைமையில் கழிந்த இளமைப்பருவம்தான். பல சமயம் வீட்டில் இருக்கும் வாத்தியக் கருவிகளை வாடகைக்கு விட்டும், விற்றும்கூட வயிறு நனைத்திருக்கிறார்கள்.

ஆனால் பத்மா சேஷாத்ரி மாதிரி பள்ளிக்கூடங்களில் ஒழுங்காக அட்டண்டன்ஸ் இல்லாவிட்டால் சும்மா விடமாட்டார்கள். ரஹ்மானுக்கும் இது தெரியும். என்ன செய்ய முடியும்? ஒரு நல்ல நாள் பார்த்து, டிசி கொடுத்துவிட்டார்கள். அப்புறம் வேறு பள்ளி. அங்கும் கொஞ்சநாள். ரஹ்மானுக்குப் படிப்பு தான் எட்டவில்லையே தவிர இசை வெகு நெருக்கம். பள்ளி நாள்களிலல்ல; அதற்கெல்லாம் வெகு முன்னதாகவே.

அவருக்கு மூன்று அல்லது மூன்றரை வயதானபோதே ஆர்மோனியம் வாசிக்கத் தெரிந்திருந்தது. மொஸார்ட் பியானோ வாசித்த அதே வயது. அவரது அப்பா ஒரு நாள் இசையமைப்பாளர் சுதர்சனத்திடம் ரஹ்மானை அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினார். என் மகன். ஆர்மோனியம் வாசிப்பான். சும்மா அல்ல. நீங்கள் என்ன சொன்னாலும் வாசிப்பான்.

சுதர்சனத்தால் நம்பமுடியவில்லை. அப்படியா? பார்த்துவிடலாம். மேல் துண்டை எடுத்து ஆர்மோனியக் கட்டைகளின்மீது போட்டு மறைத்துக்கொண்டு கஷ்டமான ஓர் இசைத்துணுக்கை வாசித்தார். எங்கே, நீ வாசி பார்க்கலாம்?

மூன்றரை வயது திலீப் அதை வாசித்தபோது சுதர்சனம்தான் முதலில் சொன்னார். இவன் ஒரு ஜீனியஸ்.

அப்பாவின் மறைவுக்குப் பிறகு வயிற்றுப்பாட்டுக்காக அந்த ஜீனியஸ் யார் யாரிடமோ ஆர்மோனியமும் கீ போர்டும் இன்ன பிற இசைக்கருவிகளும் வாசிக்க நேர்ந்தது. நினைத்துப் பார்த்தால் கொஞ்சம் சிரிப்புக்கூட வருகிறது. ரயிலில் பாடுகிற கலைஞர்களைத் தவிர தமிழ்நாட்டில் அநேகமாக அத்தனை பேருமே ரஹ்மான் எனக்கு வாசித்தார் என்று சொல்லித் தீர்த்துவிட்டார்கள். இது தங்களைப் பெருமைப்படுத்துமா, சிறுமைப்படுத்துமா என்று கூட யாரும் யோசித்துப் பார்ப்பதில்லை.

காலம் தோறும் நவீனமாகி வருகிற இசையை இந்தத் தலைமுறையில் அலங்கரித்துக்கொண்டிருப்பவர் ரஹ்மான். வெகு நிச்சயமாக சரித்திரம் நினைவுகூரத்தக்க சாதனைகள் பல அவரிடமிருந்து வந்திருக்கின்றன. திரைப்பட இசையைத் தாண்டி அவருடைய வந்தே மாதரம் போன்ற சில ஆல்பங்கள் உலக அளவில் பெற்ற வெற்றியை இங்கே நினைவுகூரலாம். ஒரு சிறு சூட்சுமம்தான். ரஹ்மானுக்கு வெகுகாலம் முன்பே கீ போர்ட் என்னும் சிந்த்தசைஸர் பிறந்து, வளர்ந்து, வந்துவிட்டாலும் எந்த இந்திய இசையமைப்பாளரும் இசையை அவரளவு நேர்த்தியாகத் தொழில்நுட்ப வாகனத்தில் ஏற்றி உலவவிட்டதில்லை. மேற்கத்திய இசைக்கருவிகளை இந்திய இசைக்குப் பயன்படுத்தும்போது ஒன்று, இசை மேற்கு முகம் பூசிக்கொள்ளும், அல்லது கருவி கைவிட்டுச் சிரித்துவிடும்.

ரஹ்மானின் தனித்துவம், கருவியையும் இசையையும் சர்க்கரைக் கரைசல் போல் ஆக்கியது. அமெரிக்கர்களுக்கும் பிரிட்டிஷ்காரர்களுக்கும் இந்திய இசையின்மீது ஓர் ஈர்ப்பு எப்போதும் உண்டு. வடக்கத்தித் தலைவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்தால் இட்லி சாப்பிட விரும்புவது போன்ற ஈர்ப்பு அது. ஆனால் ஊறித் திளைப்பதில் நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. ரஹ்மானின் அந்தச் சரியான கலவைதான் அவரை அங்கேயும், இங்கேயும், எங்கேயும் கொடிநாட்ட வைத்தது. இட்லியின் மீது சாம்பாரைக் கொட்டி, ரவுண்டு கட்டி அடிப்பது ஒரு ருசி. ஃபோர்க்கால் குத்தி எடுத்து, கப்பில் சாம்பார் வைத்து ஸ்டைலாகத் தோய்த்துச் சாப்பிடத்தான் இஷ்டம் என்றால் சாப்பிட்டுவிட்டுப் போயேன்?

இட்லி நம்முடையது. இசை அவருடையது.

*

இசை மட்டுமல்ல. ரஹ்மானுக்கு இன்னொரு முகமுண்டு. ஆன்மிக முகம். இளமையில் துரத்திய ஏழைமை கொடுத்த வேதனையிலிருந்து தப்பிக்க அப்போது அது அவருக்கு உதவியிருக்கலாம். உண்மையில் இத்தனை பெரிய உயரங்களிலும் தலை சுற்றாத பணிவை அவர் கண்டெடுத்தது அங்கேதான்.

நீங்கள் இன்றைக்கும் தினசரி ரஹ்மான் வீட்டு வாசலில் எப்போதும் நாலைந்து ஃபகீர்களைப் பார்க்கலாம். திடீர் திடீரென்று வருவார்கள். யார் என்ன என்று தெரியாது. வந்த வேகத்தில் போய்விடுவார்கள். விவரம் தெரியாதவர்கள் அவர்களை முஸ்லிம் பிச்சைக்காரர்கள் என்று நினைக்கக்கூடும். உண்மையில், ரஹ்மானின் ஆன்மிகம் வேறு விதமானது. எளிதில் புரியக்கூடியதல்ல. அவர் இஸ்லாத்தின் ஒரு பிரிவான சூஃபித்துவத்தைத் (Sufism) தன் வாழ்க்கை முறையாக ஏற்றுக்கொண்டவர். கடவுளுடன் தொடர்பு கொள்வது என்பது, வெறுமனே தொழுவதல்ல; அவருடன் இரண்டறக் கலப்பது என்பதுதான் சூஃபித்துவத்தின் அடிப்படை. காதல் கொண்டால் மட்டுமே அல்லவா இரண்டறக் கலக்க முடியும்!

அதைத்தான் செய்யச் சொல்கிறது சூஃபித்துவம். அதைத்தான் செய்கிறார் ரஹ்மான். அவரது கடவுள், அவரது இசை.

தந்தையை இழந்த ஆரம்ப வருடங்களில் ஒரு சமயம் குடும்பத்துடன் எங்கோ வெளியே போகப் புறப்பட்ட ரஹ்மான், ஒரு ரயில்வே ஸ்டேஷனில் ஃபகீர் ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. அவர் பெயர் கரீமுல்லா ஷா கதிரி. சிறுவன் திலீப்பை வெகுநேரம் உற்றுப் பார்த்துகொண்டிருந்துவிட்டு, சட்டென்று தலையில் கைவைத்து ஆசீர்வதித்தார் அந்த சூஃபி ஞானி. கடகடவென்று அவனது எதிர்காலம் எப்படி இருக்கும் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். கிளம்பும்போது அவர் கடைசியில் சொன்னது: ‘பத்தே வருடம். நீ மறுபடியும் என்னிடம் வருவாய்.’

ரஹ்மான் வாழ்வில் அதுதான் முதலும் மிகப் பெரிதுமான திருப்புமுனை. முன்பின் தெரியாத அந்த ஞானி சொன்னதெல்லாம் அதன்பிறகு அவர் வாழ்வில் நடக்க ஆரம்பித்ததும் ரஹ்மான் தன் மனத்துக்குள் ஒடுங்க ஆரம்பித்தார். சூஃபிக்களைப் பற்றித் தெரிந்துகொள்ளத் தொடங்கினார். சூஃபி இலக்கியங்களைப் படித்தார். ஊர் ஊராக தர்காக்களைத் தேடித் தேடிச் சென்று தரிசித்தார்.

சரியாகப் பத்து வருடங்கள். வீட்டுக்குள்ளேயே ஒரு ரெக்கார்டிங் ஸ்டுடியோ கட்டுமளவுக்கு அவர் வளர்ந்தபோது அதற்கு அடிக்கல் நாட்ட வந்தவர் கரீமுல்லா ஷா கதிரிதான். திலீப் குமார், ரஹ்மான் ஆனது, அவரது தாய் கஸ்தூரி, கரீமா பேகம் ஆனது எல்லாம் அதன்பிறகுதான்.

கரீமுல்லா ஷாவுக்குப் பிறகு அவரது மகன் ஆரிஃபுல்லா முஹம்மத் அல் ஹுசைனி சிஸ்தி உல் கதிரி, ரஹ்மானின் ஆன்மிக வழிகாட்டியாகத் தன் தந்தையின் பணியைத் தொடர ஆரம்பித்தார். இன்றைக்கு வரை ரஹ்மான் இந்த இரண்டு குருநாதர்கள் போட்டுக்கொடுத்த பாதையைத் தாண்டுவதில்லை.

இசையில் உன்னதம் என்பது அவரது இலக்கு. முதல் படத்திலேயே தேசிய விருது பார்த்துவிட்ட பிறகு மயக்கங்கள் இல்லாது போய்விட்டது. நாற்பத்தி மூன்று வயதில் ஆஸ்கர். இதற்குமேல் வெளியிலிருந்து கிடைக்க ஒன்றுமில்லை. உள்ளிருந்து வரவேண்டியது மட்டும்தான்.

*

கோடம்பாக்கம் சுப்பராயன் நகர் என்பது சினிமாக்காரர்கள் நிறையப்பேர் இருக்கும் பகுதிதான். ஆனால் யார் வீட்டுக்கும் பாலிவுட் சூப்பர் ஸ்டார்களும் சில்வர் ஜூப்ளி டைரக்டர்களும் ஹாலிவுட் தொழில்நுட்பக் கலைஞர்களும் தினசரி கறிகாய் வாங்க வருவது போல் வந்து போய்க்கொண்டிருப்பதில்லை. ரஹ்மானை எதிர்பார்த்து எப்போதும் ஒரு பெரிய படை அங்கே காத்திருக்கும்.

rahman-wrapperஇரவெல்லாம் வேலை பார்த்துவிட்டுப் பகலில் தூங்குகிறார், வருடத்தில் பாதி தினங்கள் வெளி நாடுகளில் கழிக்கிறார், சொன்ன நேரத்துக்கு பாடல் வருவதில்லை, ரொம்ப இழுக்கிறார், படம் தொடங்கி முக்கால் வாசி முடிந்துவிட்டது, இன்னும் மூன்று பாட்டு பாக்கி வைத்திருக்கிறார், ரீ ரெக்கார்டிங்குக்குத் தண்ணி காட்டுகிறார் – இன்றைக்கும் இந்த ஒருவரி அக்கப்போர்கள் அவரைப் பற்றி வந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனாலும் இந்தக் காத்திருக்கும் கூட்டம் குறைந்ததாகத் தெரியவில்லை.

கார்ப்பரேஷன் லாரி தண்ணீரில் திருப்தியுறக் கூடியவர்களால் கங்கையை வரவழைக்க முயற்சி செய்பவரின் பிரயத்தனங்கள் புரிந்துகொள்ளப் படாமல்தான் போகும். பெரிய பிழையில்லை.

பின் குறிப்பு: ரஹ்மான் என்ற சொல்லுக்கு, கேளாமலே கொடுக்கும் பெரும் கருணையாளன் என்று அர்த்தம்.
(நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் – 1.3.2009 தேதியிட்ட இன்றைய இதழ்)

39 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற