மகளிரும் சிறுவரும்

அவசரத்தில் கவனிக்கவில்லை. ஏறிய பேருந்தின் முன்புறமே போர்டு இருந்திருக்கும். மகளிரும் சிறுவரும். ஏறும்போதாவது யாரும் எச்சரித்திருக்கலாம். யோவ் பெரிசு, இந்த வயசுல இன்னா தில்லா லேடிஸ் ஸ்பெஷல்ல ஏறுறே என்று எந்த விடலையாவது உரத்த குரலில் கிண்டல் செய்திருக்கலாம். மாநகர இளைஞர்களெல்லாம் திருந்திவிட்டார்கள் போலிருக்கிறது. கண்டக்டர் பேருந்தின் முன்புறம் இருந்ததால் அவரும் பார்க்கவில்லை. அட, உள்ளே இருக்கிற மகளிரும் சிறுவருமாவது ஒரு சொல் சொல்லியிருக்கக்கூடாதா? சார், இது லேடிஸ் ஸ்பெஷல். யாருக்கும் தோன்றவில்லையா? அல்லது தன் வயதுக்கு அளிக்கப்படும் சலுகையா?

வயதானவர் பாவம். தவறி மட்டுமே ஏறியிருக்கமுடியும். அதனாலென்ன? அடுத்த ஸ்டாப்பிங்கில் இறங்கி வேறு பஸ் பிடித்துக்கொள்ளுங்கள்.

பேருந்து புறப்பட்டு வேகமெடுத்த பிறகு தான் கண்டக்டர் பார்த்தார். அதற்குள் முந்திக்கொண்டு அவரே மன்னிப்புக் கேட்கும் தொனியில் சொன்னார்: “கண்ணு தெரியலை…. நிறுத்தினிங்கன்னா இறங்கிடறேன்…”

சொல்லிவிட்டாரே தவிர அதுவும் சங்கடம் தான். ஆன வயசுக்கு உடம்பில் இல்லாத நோயில்லை. முட்டி வலிக்கிறது. முதுகு வலிக்கிறது. கொஞ்ச நேரம் நிற்கவேண்டி வந்தால் தலை சுற்றுகிறது. கண்ணாடி மாற்றவேண்டும். ஷுகர் டெஸ்ட் செய்து நாளாகிறது. இரவுகளில் உறக்கம் வருவதில்லை. விழித்திருப்பதால் பகலெல்லாம் அலுப்பாக இருக்கிறது. இறங்கி மீண்டும் பஸ் ஸ்டாண்ட் வரை நடப்பதில் சங்கடங்கள் பல உண்டு. முக்கியமாக, போக்குவரத்து பெருகிவிட்டது. எதிரே வரும் ஒவ்வொரு வாகனத்தையும் எமன் அனுப்பிவைத்தது போலத்தான் நோக்கமுடிகிறது.

உலகம் வேகமாகிவிட்டது. பைக்குகளும் சிறு கார்களும் பெருகிவிட்டன. எல்லாருக்கும் எல்லாமே அவசரமாகிவிட்டது. சாலையில் ஒரு வாகனமும் நிதானமான வேகத்தில் போவதேயில்லை. போதாத குறைக்குக் குறுக்கே தன்னிஷ்டத்துக்குப் பாய்கிற தண்ணீர் லாரிகளும் மீன்பாடி வண்டிகளும். ஒரு மாநகரமாக இருப்பதற்கே லாயக்கில்லாத நகரம். சந்து பொந்துகளாலான மாபெரும் குப்பைத்தொட்டி. கடவுளே, எப்படிக் கஷ்டப்படுகிறார்கள் ஜனங்கள்!

கல்லூரிக்குப் போகிற பெண் போலிருக்கிறது. சற்று நகர்ந்து அவரை அருகே உட்காரச் சொன்னாள்.

“பரவாயில்லேம்மா. அடுத்த ஸ்டாப்பிங்கில் இறங்கிடுவேன்… தெரியாம ஏறிட்டேன். கண்ணு தெரியல்லே..”

மீண்டும் மன்னிப்புக் கேட்கிற தொனியில் அவர் சொன்னார்.

“இட்ஸ் ஆல்ரைட் சார். அதுவரைக்கும் ஏன் நிக்கணும். உக்காருங்க.”

அவருக்குத் தான் சங்கடமாக இருந்தது. முற்றிலும் பெண்கள் நிறைந்த பேருந்து. மகளிரும் சிறுவரும் என்று போர்டில் இருந்தாலும் சிறுவர்கள் யாரும் இல்லை. பதினெட்டு வயது தொடங்கி அறுபது வயது வரை விதவிதமான பெண்கள் மட்டுமே நிறைந்திருந்தார்கள். கல்லூரிக்குப் போகிறவர்கள். அலுவலகங்களுக்குப் போகிறவர்கள். கூடை நிறையப் பூக்களுடன் வியாபாரத்துக்குப் போகிறவர்கள். அலுவலக வேளைகளில் மற்றப் பேருந்துகளில் இருப்பது போன்ற நெரிசல் ஏதும் இதில் இல்லை. எல்லாருமே அமர்ந்திருந்தார்கள். அமர்ந்தது போக மிச்சம் சில இருக்கைகளும் இருந்தன. பெண்கள் சௌகரியமாகப் போய்வர இப்படியான ஏற்பாடு இருப்பது மிகவும் நல்லதுக்கே.

நடத்துநர் இப்போது அவர் அருகே வந்தார். உட்காரலாமா என்று மிகவும் யோசித்து, அந்தப்பெண் மீண்டும் மீண்டும் வற்புறுத்தியதால் ஒரு ஓரமாக ஒட்டிக்கொண்டு அமர்ந்திருந்தவர், சட்டென்று மீண்டும் எழுந்து நின்றுகொண்டார்.

“கண்ணு தெரியலே…தெரியாம ஏறிட்டேன். அடுத்த ஸ்டாப்பிங்கில் இறங்கிடுறேன்…” மீண்டும் அவர் கண்டக்டரிடம் அதையே சொன்னார். அடுத்த பேருந்து நிறுத்தம் வரும் வரை பயணம் செய்வதற்கு டிக்கெட் கேட்டு, சரியான சில்லறையையும் எடுத்து நீட்டினார்.

“டிக்கெட்டெல்லாம் வேணாம் பெரியவரே. இந்தா வந்துரும். நீ பாட்டுக்கு இறங்கிப்போயிரு..” என்றான் அந்த இளைஞன்.

“இல்லேப்பா. டிக்கெட் குடுத்துடு. உனக்கெதுக்குக் கஷ்டம்?”

“அட, பரவால்லங்க. இங்க செக்கிங் ஏதும் வராது. அதும் பீக் அவர் பாருங்க. எதுக்கு ரெண்டு டிக்கெட் நீ வாங்கணும்?”

அவருக்கு உண்மையிலேயே வியப்பாக இருந்தது. பொதுவாக மக்கள் சேவையில் இருக்கிற பணியாளர்கள் மீது அவருக்கு நல்ல அபிப்பிராயம் கிடையாது. எரிந்துவிழுகிற கண்டெக்டர்கள். கெட்ட வார்த்தைகள் உதிர்க்கிற டிரைவர்கள். ஊழல் செய்கிற ரேஷன் ஊழியர்கள். லஞ்சம் கேட்கிற போக்குவரத்து கான்ஸ்டபிள்கள். தலை சொறிகிற தொலைபேசி இலாகா லைன் மேன்கள். தகராறு செய்யவே அவதரித்த தண்ணீர் லாரி டிரைவர்கள்.

ஒரு மாறுதலுக்கு அந்த கண்டக்டர் இளைஞன் அவரை மிகவும் வசீகரித்தான். ஆனாலும் டிக்கெட் வாங்காமல் பயணம் செய்ய அவருக்கு விருப்பம் இல்லை. ஆகவே, “இல்லேப்பா. நீ குடுத்துடு” என்று வலுக்கட்டாயமாகச் சில்லறையை அவன் கையில் திணித்தார்.

“சரி, உக்காருங்க”என்று அவன் சொன்னான்.

“இருக்கட்டும்பா.”

“சீட்டுதான் இருக்குங்களே, எதுக்கு நிக்கறிங்க. தெரியாமத்தானே ஏறிட்டிங்க. டிராஃபிக்கைப் பாருங்க. சிக்னல் தாண்டவே அஞ்சு நிமிஷம் ஆவும். அதுமுட்டும் எதுக்கு நிக்கணும். சிஸ்டர் நீங்க கொஞ்சம் நகந்துக்கங்க”

ஏற்கெனவே அவரை அமர அழைத்த பெண்ணை அவன் மீண்டும் நகர்ந்துகொள்ளச் சொன்னதும் அவருக்கு மிகவும் சங்கடமாகிப்போனது.

“அடடே, இருக்கட்டும்பா. அந்தப் பொண்ணு அப்பவே என்னை உக்காரத்தான் சொன்னது” என்றார்.

பிறகு அவர் ஜன்னலுக்கு வெளியே பார்வையைச் செலுத்தினார். சரியான போக்குவரத்து நெரிசலில் வண்டி சிக்கி நின்றிருந்தது. அவர் இருந்த பேருந்தின் இருபுறமும் கூட்டம் நிரம்பித் ததும்பும் பேருந்துகள் அணி வகுத்து நின்றிருந்தன. அவர் ஏறியிருக்கவேண்டிய பேருந்தும் அங்கே இருந்தது. ஐயோ, இதில் தான் எப்படி ஏறியிருக்க முடியும்? மூச்சடைத்துக் கண்டிப்பாக விழுந்திருப்போம் என்று அவருக்குத் தோன்றியது. தெய்வம்தான் தன்னை மகளிரும் சிறுவரும் மட்டும் ஏறும் பேருந்தில் ஏற்றி அனுப்பியிருக்கவேண்டும்.  அடுத்த ஸ்டாப்பிங்கில் இறங்கினாலும் அந்தக் கும்பல் பேருந்தில் நிச்சயம் ஏற முடியப்போவதில்லை. ஒரு ஆட்டோ பிடித்துத் தான் போயாக வேண்டும். ஆட்டோ என்றால் குறைந்தபட்சம் பதினைந்து ரூபாய். அதிகபட்சம் இருபத்தைந்து ஆகும். பென்ஷன் வாங்குகிறவர்களெல்லாம் ஆட்டோவை நினைத்துப் பார்ப்பதே பாவம் என்று அவருக்குத் தோன்றியது.

ஒரு பத்து, பதினோரு மணிக்குப் பிறகு கிளம்பியிருக்கலாம். கூட்டம் இத்தனை இருந்திருக்காது. என்ன பெரிய வெட்டி முறிக்கிற வேலை? மகள் வீட்டிலிருந்து மகன் வீட்டுக்கு வருவதை மத்தியானத்தில் நிதானமாகவே வைத்துக்கொண்டிருந்திருக்கலாம். இப்படி யோசிக்காமல் கிளம்பியிருக்கவேண்டாம்.

இப்போது ஜன்னலுக்கு வெளியே காத்திருந்த சக பேருந்துகளின் படிக்கட்டுகளில் தொத்திக்கொண்டிருந்தவர்கள் அனைவரும் தன்னை விநோதமாகப் பார்ப்பது போல அவருக்குத் தோன்றியது.

ஐயா, அவசரத்தில் ஏறிவிட்டேன். இது மகளிர் பேருந்து தான். எனக்குக் கண் சரியாகத் தெரியவில்லை. மனத்துக்குள் சொற்களைக் கூட்டிப் பார்த்துக்கொண்டார். சங்கடமாக இருந்தது. எப்படியும் சிவப்பு போர்டு தான் வைத்திருந்திருப்பார்கள். எப்படி கவனிக்காமல் ஏறிவிட்டோம்? சிவப்பு போர்டுக்கும் மஞ்சள் போர்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் போகிற அளவுக்குக் கண்பார்வை மோசமில்லை. எப்படியோ பிசகிவிட்டது. என்னவோ ஞாபகம்.

நேற்றிரவு மாப்பிள்ளை மகளைக் கடிந்துகொண்டதைத்தான் அவர் நினைத்துக்கொண்டிருந்தார், பஸ் ஸ்டாண்டில். மகள் வேலை பார்க்கிற அலுவலகத்தில் யாரோ ஒரு பெண் புடைவைகள் எடுத்துவந்து கடை விரித்திருக்கிறாள். முன்னூறு ரூபாய்க்கு சாதாரணமாகக் கிடைக்காத உயர்தரப் புடைவைகள். கண்ணுக்குத் தெரியாத சிறு குறைகள் மட்டும் அவற்றில் இருந்ததால் எக்ஸ்போர்ட் குவாலிடி தகுதியிலிருந்து நீக்கப்பட்ட புடைவைகள். பல பெண்கள் ஆர்வமுடன் வாங்க முன்வந்த தைரியத்தில் அவரது மகளும் ஒரு புடைவையை வாங்கி வந்திருந்தாள்.

எதற்கு இப்போது ஒரு புதுப்புடைவை? புதுச்செலவு? அதைத்தான் அவரது மாப்பிள்ளை கேட்டார். நவராத்திரிக்கு ஒரு புடைவை வாங்கியாகிவிட்டது. தீபாவளிக்கென்று தனியே ஒரு புடைவையும் வாங்கியாகிவிட்டது. நடுவில் எதற்கு இன்னொரு தண்டச்செலவு?

சாதாரணமான குடும்பப் பிரச்னை தான். மகள் கொஞ்சம் தணிந்து போயிருக்கலாம். வாங்கினால் என்ன தவறு என்று கேள்விக்கு பதில் கேள்வி பிறந்ததும் சொற்களில் சூடு ஏறத்தொடங்கிவிட்டது. எல்லா நடுத்தர வர்க்கத்து வீடுகளிலும் புடைவைச்சண்டைகள் கட்டாயம் இருந்தே தீரும். பெண்களும் புடைவையும். யுகம் யுகமாகத் தொடரும் உறவு. யுகம் யுகமாகத் தொடரும் சிறு பிரச்னைகள்.

புடைவைகளால் நிரம்பிப் பிதுங்கும் அவளது பீரோவைத் திறந்து, கோபத்தில் அனைத்தையும் அள்ளி வெளியே வீசி, எண்ணிப்பார் என்று கத்தினார் மாப்பிள்ளை.

அவருக்குத் தான் மிகவும் சங்கடமாகப் போய்விட்டது. இருந்து இருந்து ஆறு மாதங்கள் கழித்து, ஒரு நாலு நாள் தங்குவதற்கென்று அவர் தம் மகள் வீட்டுக்கு வந்திருந்தபோது அந்தப் புடைவைச் சண்டை வந்திருக்கவேண்டாம்.

அதை நினைத்துக் கொஞ்சம் வருத்தப்பட்டுக்கொண்டு இருந்தபோதுதான் தவறுதலாக மகளிரும் சிறுவரும் வண்டியில் ஏறிவிடும்படி ஆகிவிட்டது.

பேருந்தில் இருந்த மகளிரின் புடைவைகளை அவர் பார்த்தார். எல்லாமே அழகாக இருப்பது போலத்தான் தெரிந்தது அவருக்கு. புடைவைகள் விஷயத்தில் பெண்கள் சமரசமே செய்துகொள்வதில்லை என்று தோன்றியது. பஸ்ஸில் மொத்தம் நாற்பத்தைந்து பெண்கள் இருப்பார்கள். ஒவ்வொருவரிடமும் குறைந்த பட்சம் இருபது புடைவைகளாவது இருக்கும். அப்படிப் பார்த்தால் இந்தப் பேருந்துக்குள் இருப்பவர்களிடம் மட்டுமே சுமார் தொள்ளாயிரம் புடைவைகள் இருப்பதாக ஆகும். நூறு பேருந்துகள். ஆயிரம் பெண்கள். இருபதாயிரம் புடைவைகள். மாநிலமெங்கும் உள்ள பெண்களிடம் மொத்தமாகக் கணக்கெடுத்தால் குறைந்தபட்சம் சில கோடிப் புடைவைகளாவது தேறும். எத்தனை புடைவைகளை சந்தோஷமாக வாங்கியிருப்பார்கள்? எத்தனை புடைவைகள் சண்டைபோட்டு வாங்கப்பட்டிருக்கும்?

சட்டென்று தலையைச் சிலுப்பிக்கொண்டார். இதென்ன, மகளிர் பேருந்தில் ஏறினால் சிந்தனை கூடவா புடைவையைக் குறித்துத் திரும்பிவிடும்?

பேருந்து புறப்படுகிற வழியாகத்தெரியவில்லை. அவருக்கு அந்த இருக்கையில் உட்கார்ந்திருக்கவே சங்கடமாக இருந்தது. அங்கிருந்த அத்தனை பெண்களின் பார்வையும் தன்மீதே இருப்பதாக நினைத்தார். டிரைவர் கூடத் தனக்கு முன் இருந்த கண்ணாடியில் தன்னையேதான் பார்த்துக்கொண்டிருக்கவேண்டும். வயசு ஒரு லைசன்ஸ். கிழவன் ஜாலியாக லேடிஸ் ஸ்பெஷலில் ஏறி அனுபவித்துக்கொண்டே வருகிறான் என்று அவன் நினைத்துவிட்டால்?

கடவுளே, என்னத்துக்காக இன்று இப்படியொரு கஷ்டத்தை அளித்தாய்? ஆனால் இது கஷ்டமா என்றும் அவருக்குத் தோன்றியது. நினைத்துப் பார்த்திருக்க முடியுமா? இந்தப் போக்குவரத்து நெரிசல் மிக்க நேரத்தில் இப்படி சுகமாக உட்கார்ந்து பயணம் செய்யக்கிடைக்கிற வாய்ப்பு!

சிந்தனையை மாற்றிக்கொள்ள விரும்பி, பக்கத்தில் அமர்ந்திருந்த பெண்ணிடம் அவர் பேச்சுக்கொடுத்தார். “என்னம்மா படிக்கிறே?”

“செகண்ட் இயர் பிகாம் சார்” என்று அந்தப் பெண் சொன்னது. சொல்லிவிட்டு ஜன்னலைப் பார்த்துத் திரும்பிக்கொண்டது. உடனே அவருக்கு மீண்டும் கஷ்டமாகிப்போய்விட்டது. ஒரு அனுதாபத்தில் உட்காரச் சொன்னாலும் மகளிர் பேருந்தில் – கிழவனே ஆனாலும் – ஒரு ஆண் ஏறி அமர்வது பெண்களுக்குச் சங்கடம் தான். தன்பொருட்டு அவர்கள் தினசரி நிகழ்த்தும் உரையாடல்களைத் தவிர்த்திருக்கலாம். கிண்டல்கள், கேலிகள் யாவற்றையும் தாற்காலிகமாக நிறுத்தியிருக்கலாம். பிரத்தியேகமாகப் பகிர்ந்துகொள்ளப் பெண்களுக்கும் விஷயம் உண்டு. ஆண்களைக் குறித்த கமெண்ட்கள், சங்கேதச் சொற்கள், சிரித்து மகிழச் சில்லறை ஜோக்குகள். பார்த்த படங்கள். கவர்ந்த ஹீரோக்கள். வீட்டில், கல்லூரியில் நடந்த சம்பவங்கள்.

அனுதாபத்தில் தன்னை ஏற்று அங்கீகரித்தாலும் பின்னால் மனத்துக்குள் அவசியம் திட்டித்தீர்ப்பார்கள் என்று அவருக்குத் தோன்றியது. சனியன் பிடித்த டிராஃபிக் ஜாம். வண்டி புறப்பட்டு சிக்னலைக் கடந்துவிட்டால் நூறடி தூரத்தில் அடுத்த ஸ்டாப்பிங் வந்துவிடும். ஓசைப்படாமல் இறங்கி நடந்தே கூட வீட்டுக்குப் போய்ச் சேர்ந்துவிடலாம். அல்லது இரண்டு மணிநேரம் காத்திருந்து, பேருந்து கூட்டமில்லாமல் வரத்தொடங்கியதும் ஏறிப் போகலாம். உடனே போய் ஆகவேண்டிய காரியம் ஏதுமில்லை. மகன் அலுவலகத்துக்குப் போயிருப்பான். மருமகள் தொலைக்காட்சித் தொடர் எதையாவது பார்த்துக்கொண்டிருப்பாள். உள்ளே நுழைந்ததும் வாங்க என்று சொல்லிவிட்டு ஒரு தம்ளர் தண்ணீர் கொண்டுவந்து தருவாள். மதியம் டிபனுக்கு என்ன செய்யலாம் என்று சம்பிரதாயமாகக் கேட்டுவிட்டு அதே பதினாறாண்டுகால அரிசி உப்புமாவைக் கிண்டிக் கொண்டுவந்து வைப்பாள்.

வாழ்க்கையில் சிறு விஷயங்கள் முதல் மிகப்பெரிய விஷயங்கள் வரை எல்லாமே நிர்ணயிக்கப்பட்டுவிட்டவையாகவே இருக்கின்றன. அரிசி உப்புமா முதல் ஆல் இந்தியா ரேடியோவின் மாநிலச் செய்திகள் வரை. ஒரே விதமான அரிசி உப்புமா. ஒரே விதமான மாநிலச் செய்திகள். தலைவர்களின் அறிக்கைகள். முதல்வரின் அதிரடி நடவடிக்கைகள். போக்குவரத்து நெரிசல். புடைவைப் பிரச்னைகள்.

இருந்து இருந்து ஒரு மாறுதலை இறைவன் அளித்திருக்கிறான். மகளிர் பேருந்தில் சிறிது தூரப் பயணம். அந்த விநோத அனுபவத்தைக் கூடத் தன்னால் ரசித்து ஏற்க முடியவில்லை. மனக்குறுகுறுப்பும் விவரம் புரியாத குற்ற உணர்வும். நம்பத்தான் முடியவில்லை. வாழ்விலேயே முதல் முதலாக ஒரு மனிதாபிமானமுள்ள கண்டக்டரை அவர் சந்தித்திருக்கிறார். கிண்டல் செய்யாமல் அருகில் அமர இடமளித்த ஒரு கல்லூரி மாணவியைச் சந்தித்திருக்கிறார். பேருந்தில் இருந்த மற்ற அனைத்துப் பெண்களுமே கூட அவர் தவறுதலாக ஏறியதை ஒரு பொருட்டாகக் கருதாததாகவே பட்டது. சிக்னலுக்கு பஸ் நின்றபோது வெளியே சுற்றிலும் நின்ற பேருந்துகளில் தொத்திக்கொண்டு பயணம் செய்த எத்தனையோ வாலிபர்களுள் ஒருத்தருக்குக் கூடவா தன்னைப் பார்த்துக் கிண்டல் செய்யவும் கேலி பேசவும் தோன்றவில்லை?

ஆச்சர்யமாகத்தான் இருந்தது அவருக்கு. இதுநாள் வரை தான் எந்த மதிப்பீடுகளில் வாழ்ந்திருந்தோம்? இளைய தலைமுறை குறித்த குறிப்பிடும்படியான நல்ல எண்ணங்கள் ஏதும் அவருக்கு இல்லை. எல்லாரும் வயதை வீணாக்கிக்கொண்டிருக்கிறார்கள் என்று எப்போதும் சொல்லுவது அவருக்கு வழக்கம். பேரன்கள், பேத்திகள், மருமகள், மகன், மகள், மாப்பிள்ளை. அத்தனைபேர் மீதும் அவருக்கு விமர்சனங்கள் இருந்தன. விமர்சனம் இல்லாமல் ஏற்கும்படியாக ஏன் யாருமே நடந்துகொள்வதில்லை?

இது தனிநபரின் கோளாறில்லை. தலைமுறையின் கோளாறு என்று அவருக்குத் தோன்றும். இளைய தலைமுறையின் கோளாறாகவும் இருக்கலாம். தன் தலைமுறையின் கோளாறாகவும் கூட அது இருக்கலாம். எப்படியோ இயல்பாகப் பொருந்தாமல், சமரசங்களின் அடிப்படையில் தான் வாழ்ந்து தீர்க்கவேண்டும் என்று இருக்கிறது. இன்னும் எத்தனை நாளைக்கு?

மரணம் குறித்த பயம் ஏதும் அவருக்குக் கிடையாது. தயாராகத்தான் இருந்தார். என்ன பெரிய பயம்? உறங்குவது போலும் சாக்காடு. வள்ளுவர் சரியாகத் தான் சொல்லியிருக்கவேண்டும். ஆனால் இறந்துபார்த்துச் சொன்னதில்லை. அதுவும் கூட யூகம் தான். ஆனால் சரியாக இருக்கும்போலத்தான் இருந்தது. தீவிரமாக வாழ்வதும் இறந்துபோவதும் ஒரு பிரச்னை இல்லை. வாழ்ந்து முடித்து, இறப்புக்குக் காத்திருக்கும் தினங்கள் தான் பாரமாக இருக்கின்றன. பஸ்ஸுக்குக் காத்திருப்பது போல. எப்போதும் கூட்டமாகவே வந்துதொலைக்கிற பஸ். பரவசமானதொரு மாநகரப்பேருந்துப் பயணம் இந்த ஜென்மத்தில் தனக்கு சாத்தியமில்லை என்று அவர் தீர்மானமே செய்திருந்தார். முப்பத்தெட்டு ஆண்டுகாலம் அவர் அலுவலகத்துக்குப் போய்வந்ததும் நெரிசல்களுக்கு இடையில் தான். ஓய்வு பெற்றபோது மற்ற எல்லாவற்றைக்காட்டிலும் அந்த ஒரு விடுதலை தான் அவருக்குப் பெரிதாகப் பட்டது. இனி நெரிசலில் நின்று பயணம் செய்யவேண்டாம்.

சிக்னல் கிடைத்து பேருந்து புறப்பட்டுவிட்டது. அவருக்கு அப்பாடா என்றிருந்தது. இன்னும் சில விநாடிகளில் பேருந்து நிறுத்தம் வந்துவிடும். உட்கார இடம் கொடுத்த கல்லூரிப்பெண்ணுக்கும் கண்டக்டருக்கும் நன்றி சொல்லிவிட்டு இறங்கிவிடலாம். இறங்கும்போது யாரும் கிண்டல் செய்யாமல் இருந்தால் மனம் மிகவும் சமாதானமாகும். எல்லா பேருந்து நிறுத்தங்களிலும் மக்கள் நல்லவர்களாகவே இருப்பார்கள் என்று சொல்லிவிடமுடியாது. எல்லா நிறுத்தங்களில் மட்டுமல்ல. எல்லாத் தருணங்களிலும் கூட. இன்றைக்கு என்னவோ தன் அதிர்ஷ்டம் எதிர்பாராத விதமாக எல்லாம் நடக்கிறது. இதே கல்லூரிப்பெண் இன்னொரு சந்தர்ப்பத்தில் தன்னை முறைக்கமாட்டாள் என்பது நிச்சயமில்லை. இதே கண்டக்டர் இன்னொரு சந்தர்ப்பத்தில் சாவுகிராக்கி என்று சொல்லமாட்டான் என்று நிச்சயமில்லை. இதே பேருந்து நிறுத்தத்தில் தான் மீண்டும் தவறுதலாக மகளிர் பேருந்தில் ஏறும்போது விடலைகள் நாராசமாகக் கிண்டல் செய்யமாட்டார்கள் என்பதும் நிச்சயமில்லை.

கடவுளுக்கு நன்றி. ரசித்து அனுபவிக்க முடியாவிட்டாலும் மாறுபட்ட ஒரு அனுபவம்.

நிறுத்தம் வந்ததும் கண்டக்டர் இளைஞன் இயல்பாக அவரைப் பார்த்தான். அவர் எழுந்துகொண்டு கை கூப்பினார்.

“ரொம்ப நன்றிப்பா. தப்பா நினைச்சுக்காதே. கண்ணு சரியா….”

“பரவால்ல சார். இறங்குங்க” என்றான் அவன்.

அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இறங்கும்போது சரியாக செக்கிங் ஆபீசர்கள் வண்டியருகே வந்து நின்றுகொண்டார்கள். யாரும் அவரிடம் ஏதும் கேட்கும் முன்னதாக அவரே சொல்லிவிட்டார்.

“சாரி சார். கண்ணு சரியாத் தெரியலை. போன ஸ்டாப்பிங்குலே தெரியாம ஏறிட்டேன்.. ஆனா டிக்கெட் வாங்கிட்டேன்.. இதோ பாருங்க….”

அவர் மகளிர் பேருந்தில் ஏறியது குறித்து டிக்கெட் பரிசோதகர் ஏதும் சொல்லவில்லை. மாறாக டிக்கெட்டை வாங்கிச் சரிபார்த்துவிட்டு, ‘பார்த்து ஓரமாப் போங்க பெரியவரே’ என்று கையைப் பிடித்து பிளாட்பாரத்தில் ஏற்றிவிட்டார்கள்.

அவருக்கு திடீரென்று ஒரு சந்தேகம் வந்தது. மகளிரும் சிறுவரும். தவறிப்போய் ஒரு வயோதிகன் ஏறுவதில் யாதொரு பிழையும் இல்லை என்று சொல்லிவைத்தமாதிரி எல்லாருமேவா நினைப்பார்கள்? தலைமுறை இடைவெளியெல்லாம் இந்தமாதிரி விஷயங்களூடன் சம்பந்தம் இல்லாதவை தானா? அல்லது உலகம் பெருந்தன்மை பழகத்தொடங்கிவிட்டதா? தாம்தான் இல்லாதவற்றையெல்லாம் நினைத்துக் குறுகுறுப்படைந்து கொண்டிருக்கிறோமா? இந்தக் காலத்து இளைஞர்களும் யுவதிகளும் நிஜமாகவே விடலைத்தனத்தை விட்டொழித்துவிட்டார்களா என்ன? மக்கள் சேவகர்கள் அனைவரும் கனிவு பழகிவிட்டார்களா? புடைவை விஷயம் தவிர மற்றவற்றில் பெண்களும் கூட மாறிவிட்டதுபோலத்தான் தெரிகிறது…

அந்தப் பயணம் மறக்கமுடியாத ஒரு அனுபவமாகத் தானிருக்கிறவரை தன்னோடு தங்கியிருக்கும் என்றெல்லாம் அவருக்குத் தோன்றியது. மனத்தளவில் மிக மென்மையாக, இலேசாக உணர்ந்தார். கொஞ்சம் பரவசமாகவும். எப்போதாவது பேரனைக் கூட்டி உட்காரவைத்து இதைச் சொல்லவேண்டும். ஐயய்யே, லேடிஸ் ஸ்பெஷல்லயா வந்தே? என்று அவன் கேலிச்சிரிப்பு சிரிப்பான். கல்மிஷமில்லாத அவனது சிரிப்பு மட்டும் தான் அவருக்கு நெருக்கமான ஒரே விஷயமாக இதுகாறும் இருந்துவந்திருக்கிறது. அந்த ஒரே ஆறுதல் தரும் தெம்பில்தான் அவர் ஆண்டாண்டுகாலமாக மருமகளின் அரிசி உப்புமாவைக்கூடச் சகித்துக்கொண்டிருக்கிறார்.

சாலை இப்போதும் பரபரப்பாகவே இருந்தது. இன்னும் அரை கிலோமீட்டர் நடந்தால் வீடு வந்துவிடும். பஸ்ஸுக்காகக் காத்திருப்பதைக்காட்டிலும் இப்படி எதையாவது நினைத்துக்கொண்டு மெதுவாக நடந்தே போய்விடலாம் என்று அவர் நினைத்தார். பத்திரமாக பிளாட்பாரத்தின்மீது ஏற்றிவிட்ட டிக்கெட் பரிசோதகருக்கு மனத்துக்குள் நன்றி சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தார்.

முக்கால் மணி நேரத்தில் வீட்டுக்குப் போய்விடமுடிந்தது. வாங்க என்று மருமகள் சொன்னாள். தொலைக்காட்சித் தொடர் தான் பார்த்துக்கொண்டிருந்தாள். அவரை உட்காரச் சொல்லிவிட்டு ஒருதம்ளர் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தாள். சம்பிரதாயமாக நாலு வார்த்தைகள் அவரது மகளைக் குறித்தும் மருமகனைக்குறித்தும் விசாரித்துவிட்டு, ‘மத்தியானத்துக்கு என்ன செய்யட்டும்?’ என்று கேட்டாள்.

அவர் தமக்குள் சிரித்துக்கொண்டு, “என்னமோ தெரியலை. வாய் நமநமன்னு இருக்கு. எதாவது கரகரன்னு டிபன் பண்ணேன்” என்று சொன்னார். அரிசி உப்புமாவின் அடிப்பகுதியைக் காந்தவிட்டால் அதுகூட கரகரவென்று தான் இருக்கும்.. நடந்த களைப்பில் தூங்கிப்போனார்.

மத்தியானம் அவர் எழுந்தபோது மருமகள் டிபன் ரெடி என்று அவரை அழைத்தாள். அவரால் நம்ப முடியவில்லை. அரிசி உப்புமாவுக்கு பதில் சுடச்சுட வெங்காய பக்கோடா.

[2004]

11 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற