ஜோக்கர்

மனித வாழ்வின் மாபெரும் அவலங்கள் எவையென்று யோசித்துப் பட்டியலிட்டால், ஒரு பெரிய ஆகிருதியின் பிம்பம் உடைந்து சிதறுவது அதில் அவசியம் இடம் பிடிக்கும்.

தமது அறுபதாண்டுகளுக்கு மேற்பட்ட பொதுவாழ்வில் தி.மு.க. தலைவர் கருணாநிதி இத்தனை நொறுங்கி, மலினப்பட்டு, ஒரு பிரம்மாண்டமான கேலிச்சித்திரமாகிப் போன தருணம் இன்னொன்றில்லை. நேற்றைக்கு போரஸ் மன்னனாகக் காட்சியளித்த பிரபாகரன் இன்றைக்கு நல்ல நண்பராக அவருக்குக் காட்சியளிக்கும்போது இத்தனை வருடங்களாக அவர் மட்டும் ஒரு மாபெரும் தலைவராக மட்டுமே மக்களுக்குக் காட்சியளித்துக்கொண்டிருந்தால் எப்படி? அதான், இன்றைக்கு ஒரு மாபெரும் கேலிச்சித்திரமாகக் காட்சியளிக்கத் தொடங்கியிருக்கிறார்.

வயது, தள்ளாமை, இயலாமை, நோய், தோல்வி பயம், தனக்குப் பின் கட்சி என்னாகும் என்கிற கவலை, அதனைக் காட்டிலும் தன் வாரிசுகள் கஷ்டப்படுவார்களோ, யாதவ குலத்தினைப் போல் அடித்துக்கொண்டு வீணாய்ப் போவார்களோ என்கிற பெருங்கவலை – எல்லாம் இருந்தாலும் இப்படியொரு புத்தித் தடுமாற்றம் அவருக்கு வந்திருக்கக் கூடாது. இரக்கமற்ற சரித்திரம் இவை அனைத்தையும் கர்ம சிரத்தையாக எழுதி வைத்துக்கொள்ளும் என்பதை எப்படியோ மறந்து போனார். வயதுதான் காரணமாக இருக்கவேண்டும்.

இலங்கைப் பிரச்னையில் தமிழக அரசியல் கட்சிகளின் நிலைபாடுகள் மிகவும் வெளிப்படையானவை. மக்களுக்கு அவர்கள் இதனை விளக்கிச் சொல்லவேண்டிய அவசியமே இல்லை. யாருக்கும் உள்ளார்ந்த அக்கறை கிடையாது என்பது பாமரர்களுக்கும் தெரியும். அதை ஒரு பொருட்டாக அவர்கள் கருதுவார்களேயானால் ஒருத்தரும் வோட்டுப்போட வரமாட்டார்கள். இவர்கள் இவ்வளவுதான் என்று புரிந்து, ஏற்றுக்கொண்டு, சகித்துக்கொண்டு வாழப் பழகிய மக்கள் அதன்பின் தமது விருப்பத்துக்கேற்ப கட்சிகளுக்கு வாக்களிக்கிறார்கள், வெற்றி பெறச் செய்கிறார்கள். இதுதான் நடைமுறை.

இதில் வேஷங்களுக்கு அர்த்தமே இல்லை. அவசியமும் இல்லை. இந்திய அரசால் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகளை நான் ஆதரிக்கவில்லை என்று கருணாநிதி சொன்னாலும் அவருக்கு வோட்டுப்போடக்கூடியவர்கள் போடாதிருக்கப் போவதில்லை. நேற்றைக்கு நண்பராக இருந்த பிரபாகரன் இன்றைக்கு எதிரி என்று சொன்னாலும் யாரும் ஏனென்று கேட்கப்போவதில்லை. ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை தவறாமல் கட்சி மாறிக் கூட்டணி வைக்கும் ராமதாசைத் தவறாமல் எல்லோரும் கேலி செய்தாலும் அவருக்கு உரிய பங்கான சுமார் எட்டு  ஆறு சதவீத வாக்குகளில் ஒருபோதும் குறை விழுந்ததில்லை என்பதை இங்கே நினைவுகூரலாம்.

பிரச்னைகளின் அடிப்படையில் மட்டும் வாக்களிப்பது என்று தீர்மானிக்கும் அளவுக்குத் தமிழக மக்கள் பக்குவம் பெறவில்லை. கட்சிச் சார்பு என்பது இங்கே கணவன் மனைவி உறவு போன்றது. வேண்டாத கணவனாக அல்லது வெறுக்கும் மனைவியாக இருந்தாலும் சட்டென்று முறித்துக்கொள்வது தமிழர் வழக்கமில்லை. தமிழினத் தலைவருக்கு இந்த எளிய உண்மை ஏன் இப்போது புரியாமல் போனது என்பதுதான் பிரச்னை.

அரசியல் கட்சிகள் என்ன விதமான நிலைபாடு எடுத்தாலும் மக்களைப் பொருத்த அளவில் ஈழத் தமிழர்களின் பெருங்கஷ்டம் அவர்களை மிகவும் பாதித்திருக்கிறது, பழங்கதைகளுக்கு அர்த்தமில்லை, உணர்வுபூர்வமாக மக்கள் ஈழத்தின்பால் ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள், எனவே நீங்கள் மக்கள் உணர்வை அனுசரித்துப் பேசவேண்டும் என்று உளவுத்துறை அறிக்கை கொடுத்திருக்கலாம்.

விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத அமைப்பு, பிரபாகரன் ஒரு தீவிரவாதி, கைப்பற்றப்படவேண்டியவர் என்று தான் பேசத் தொடங்கினால் தனக்கும் ஜெயலலிதாவுக்கும் வித்தியாசம் தெரியாமல் போய்விடுமோ, அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் கைகோத்துவிட்டதாக மக்கள் கருதி விடுவார்களோ என்று அவரே அஞ்சியிருக்கலாம். ஏனெனில் ஏற்கெனவே பாமக, மதிமுக, இ. கம்யூனிஸ்ட், மா. கம்யூனிஸ்ட் என்று திமுக தலைவரின் முன்னாள் தோழர்கள் அனைவரும் கட்சிமாறி, இலங்கை விஷயத்தில் அம்மாவை அனுசரித்து அடக்கி வாசிக்க, இப்போது தானும் பிரபாகரன் பிடிபட்டால் கௌரவமாக நடத்தவேண்டும், அவர் மரணமடைந்தால் நான் வருத்தப்படுவேன் என்றெல்லாம் பேசினால் தி.மு.கவும் அதிமுக கூட்டணிக்குப் போய்விட்டதாக மக்கள் சந்தேகப்படலாமல்லவா? அந்தக் கவலையாக இருக்கலாம்.

காங்கிரஸ் காலை வாருவது என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு எப்போதும் விருப்பமானதொரு விளையாட்டு. கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக் போன்றவர்களைக் காட்டிலும் தங்கபாலு, இளங்கோவன், ஞானதேசிகன் வகையறாக்கள் தமிழ் மக்களைச் சிரிக்க வைத்து விளையாட்டு காட்டிக்கொண்டிருப்பதில் வல்லுனர்கள். எனவே மக்களும் திருப்பி விளையாடுவார்கள். எனவே, மத்தியில் ஆளும் காங்கிரஸின் கூட்டணியில் இருந்துகொண்டு, அவர்களுக்காக ஈழ விரோதப் பேச்சுகளைப் பேசிக்கொண்டிருக்க, எதையும் கண்டுகொள்ளாமல் மக்கள் தம் வழக்கப்படி காங்கிரஸுடன் விளையாடத் தொடங்கி அது தன்னையும் பாதித்து வினையாகிவிடுமோ என்று கவலை கொண்டிருக்கலாம்.

நாடாளுமன்றத் தேர்தலில் ஒருவேளை தி.மு.க. கூட்டணி படுதோல்வி காணுமானால் அது வெகு நிச்சயமாக அடுத்த சட்டமன்றத் தேர்தலிலும் பிரதிபலிக்கும் என்று சொல்லிவிடுவதற்கில்லை. ஒருவேளை மத்தியில் காங்கிரஸ் ஆட்சியமைக்க முடியாது போகும் பட்சத்திலும் தி.மு.க.வுக்கு ஓரளவு சொல்லிக்கொள்ளு்ம்படியாகவேனும் நாடாளுமன்றப் பிரதிநிதிகள் இருந்தால் மட்டுமே இங்கே ஜெயலலிதாவின் வாயைக் கொஞ்சம் அடைக்க முடியும். ஒரு பத்து சீட்டாவது இல்லாவிட்டால் எப்படி? அந்த பயம் ஒரு காரணமாயிருக்கலாம்.

ஜெயலலிதாவின் புலி எதிர்ப்பு நிலைபாடு தமிழ் மக்களுக்கு ஒருபோதும் அதிர்ச்சி தராது. அவர் தொடக்கம் முதலே அதில் உறுதியாக இருப்பவர். அவரிடம் ஆதரவாக ஒருசொல் யாரும் எதிர்பார்க்கமாட்டார்கள். ஆனால் தொட்டதற்கெல்லாம் கண்ணீர்க் கவிதை எழுதி ரத்தமே, எலும்பே, நரம்பே, சிறு குடலே, நுரையீரலே என்று நான் வெஜ் ஹோட்டல் ஐட்டங்களாகக் காலகாலமாக அடுக்கிவிட்டு, தடாலென்று வெயிலுக்குக் கதர்ச்சட்டை போட்டுக்கொள்வது அவருக்கே சற்று பேஜாராக இருந்திருக்கலாம்.

காரணம் எதுவென்பது முக்கியமல்ல. கருணாநிதி ஒரு ஜோக்கராகியிருக்கிறார். இந்தத் தேர்தலில் பிற ஜூனியர் ஆர்டிஸ்டுகள் வழங்கியிருக்கவேண்டிய நகைச்சுவைப் பகுதியை மொத்தமாகக் குத்தகை எடுத்து தானே திரைக்கதை வசனம் எழுதி வழங்கத் தொடங்கியிருக்கிறார்.

தனது பேச்சுகளும் அறிக்கைகளும் எத்தனை மலினப்பட்டு இருக்கின்றன, எத்தனை அருவருப்புணர்வை ஏற்படுத்துகிறது, வாசிப்போர், கேட்போரையே அவமானத்தில் தலையில் அடித்துக்கொள்ளச் செய்கிறது என்பதையெல்லாம் சற்றும் எண்ணிப்பாராமல் எப்படி அவரால் இப்படியெல்லாம் பேச முடிகிறது என்பதே புரியவில்லை. கண்ணில் தென்படும் தி.மு.க. காரர்களே தமது தலைவரின் அறிக்கைகளால் மனச்சங்கடத்துக்கு உள்ளாகி, என்ன பேசுவதென்று புரியாமல் தவிப்பதைக் காண முடிகிறது. பரிதாபமாக இருக்கிறது.

சற்றே தீவிரமாக சரித்திரம் படிப்பவன் என்கிற முறையில் பிரபாகரன் கருணாநிதிக்கு எத்தனை நெருக்கமான நண்பராக இருந்திருக்கிறார் என்று யோசித்துப் பார்க்கிறேன். எம்.ஜி.ஆருடன் பிரபாகரனுக்கு இருந்த நல்லுறவுடன் என்னால் இதனை அருகில் வைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. மரியாதைக்குரிய ஒரு மூத்த தலைவர் என்கிற அளவில்தான் கருணாநிதியை ஆரம்பக்காலம் முதலே அணுகி வந்திருக்கிறார். ஒருவேளை நமக்கு இன்றைக்குப் புரிகிற கருணாநிதியின் நல்ல மனம் துரதிருஷ்டவசமாகப் பிரபாகரனுக்கு அன்றைக்கே புரிந்திருக்கலாம். தெரியவில்லை.

எண்பதுகளின் தொடக்கத்தில் ஈழப் போராளி இயக்கங்கள் எல்லாம் தமிழகத்தில் முகாமிட்டிருந்தபோது எம்.ஜி.ஆர். ஒரு சந்திப்புக்கு அழைப்பு விடுத்தார். வாருங்கள் பேசுவோம். ஏதாவது உருப்படியான தீர்வை நோக்கி நகர்வோம். நான் என்ன செய்யவேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? அது எனக்குத் தெரியவேண்டும். பிறகு நான் என்ன செய்யமுடியும் என்று பார்க்கிறேன். நிச்சயம் ஏதாவது செய்யப் பார்க்கிறேன். பேசலாம், வாருங்கள்.

எம்.ஜி.ஆரின் இந்த அழைப்பு அன்றைக்குத் தமிழகத்தில் இருந்து செயல்பட்டுக்கொண்டிருந்த ஐந்து முக்கியமான ஈழ விடுதலை இயக்கங்களுக்கு அனுப்பப்பட்டது. விடுதலைப் புலிகள், டெலோ, ஈரோஸ், ப்ளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எஃப்.

தமிழகத்தில் தி.மு.க. அப்போது எதிர்க்கட்சி. கருணாநிதி, துடிப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர். எதிர்க்கட்சி என்றால் என்ன? ஆளும் கட்சி என்ன செய்தாலும் அதற்கு எதிராக ஏதாவது செய்வது என்பதுதானே அர்த்தம்? இன்றைக்கு வரை இதில் யாருக்கும் எந்த கருத்து வேறுபாடும் எழுந்ததில்லை.

எனவே எம்.ஜி.ஆரின் இந்த சந்திப்பு முயற்சிக்கு எதிராக ஏதாவது செய்துவிட கருணாநிதி முடிவு செய்தார். எம்.ஜி.ஆர். அழைத்திருந்த தினத்துக்குச் சரியாக ஒருநாள் முன்னதாக அவர் ஒரு கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார். என்னிடமும் வரலாம். நானும் இளைப்பாறுதல் தருவேன்.

கருணாந்தியுடன் பத்மநாபா, சிறீ சபாரத்தினம், பாலகுமார்கருணாநிதி ஏற்பாடு செய்த அந்தக் கூட்டத்துக்குப் பிரபாகரன் செல்லவில்லை. [ப்ளொட் தலைவர் உமா மகேஸ்வரனும் கலந்துகொள்ளவில்லை.] மற்ற மூன்று அமைப்புகளின் தலைவர்களும் சென்று வந்தார்கள், செய்தித் தாள்களில் – குறிப்பாக தி.மு.க. ஆதரவுப் பத்திரிகைகளில் இவ்விஷயம் மிகப் பெரிய அளவில் இடம்பெற்றது. தமிழக முதல்வர் ஒரு சந்திப்புக்கு அழைப்பு விடுத்திருக்கும் நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் அதற்கு ஒருநாள் முன்னதாக போட்டிக் கூட்டம் நடத்த அழைத்தால் அதில் கலந்துகொள்வது எதனடிப்படையிலும் சரியாக இருக்காது என்று பிரபாகரன் கருதியதாக ஆண்டன் பாலசிங்கம் ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறார்.

அநேகமாக பிரபாகரன் மீதான கருணாநிதியின் தீராப்பாசமும் மாளா அன்பும் தொடரும் தோழமையும் அன்றைக்குத் தோன்றியிருக்கவேண்டும்.

விடுதலைப் புலிகளை ஆதரிப்பது என்று முடிவு செய்த கணத்திலிருந்து எம்.ஜி.ஆர். அவர்களுக்குப் பணமாகவும் பொருளாகவும் வேறு பல வகையிலும் ஏராளமான உதவிகள் செய்திருப்பதற்குச் சரித்திர ஆதாரங்கள் பல உள்ளன. எம்.ஜி.ஆருக்கு உலகம் தெரியாதுதான். சர்வதேச அரசியல் விவகாரங்கள் எதுவும் பெரிய அளவில் புரியாதுதான். தனிப்பட்ட முறையில் அவர் ஈழம் தொடர்பாக வெளியிட்டதாகச் சொல்லப்படும் பல கருத்துகள் குபீர்ச் சிரிப்பை வரவழைக்கக்கூடியவைதான்.

ஆனபோதிலும் ஒரு முடிவில் அவர் தெளிவாக இருந்தார். இறுதிவரை அவர் புலிகளுக்கு உதவி செய்வதை நிறுத்தவில்லை. தமிழகத்தின் பல இடங்களில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. அனைத்துக்கும் எம்.ஜி.ஆர். உதவி செய்திருக்கிறார். ஒரு சமயம் புலிகளின் ஆயுத கண்டெய்னர் ஒன்று சென்னை துறைமுகத்தில் கைப்பற்றப்படும் அபாயத்தில் இருந்தபோது தனது தனிப்பட்ட செல்வாக்கால் அதனை மீட்டு அளித்திருக்கிறார். பின்னொரு சமயம் மத்திய அரசின் தலையீட்டால் ஆயுதங்கள் காவல் துறையால் கைப்பற்றப்பட்டு, பிரபாகரன் உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்தபோதும் எம்.ஜி.ஆர். தலையிட்டுத்தான் அவற்றைத் திரும்பக் கிடைக்கச் செய்தார்.

சரி – தவறு என்கிற பேச்சே இங்கில்லை. ஈழத்தமிழர் விஷயத்தில் தனது கொள்கையில் எம்.ஜி.ஆர். காட்டிய உறுதி அபாரமானது. எம்.ஜி.ஆரையும் ‘என் தோழர்’ என்றே குறிப்பிடும் கருணாநிதி பொழுது போகாத நேரத்தில் கூடவா இதையெல்லாம் சிந்தித்துப் பார்த்திருக்க மாட்டார்? புரியவில்லை.

இவையெல்லம் ஒருபுறமிருக்க, ஒரு வசனகர்த்தாவாக,  சமீப நாள்களாகக் கருணாநிதியின் அறிக்கைகளுக்கு அப்பால் அவரது சில அபாரமான வசனங்களைக் கேட்டுச் சிலிர்த்துப் போயிருக்கிறேன்.  எனக்குத் தெரிந்த அளவில் நகைச்சுவைக் காட்சிகளுக்காக எழுதப்படும் வசனங்களைக் கட்டுடைத்து அர்த்தம் தேடவே முடியாது; கூடாது. நகைச்சுவை வசனங்கள், நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப்படும்.

ஆனால் பழம்பெரும் வசனகர்த்தாவான கருணாநிதியின் தற்போதைய சில நகைச்சுவை வசனங்களை அமைப்பியல் ரீதியில் கட்டுடைப்புச் செய்தால் அபாரமான சில தத்துவ தரிசனங்களே தென்படுகின்றன. புல்லரித்துப் போகிறது.

ஒரு சாம்பிள் – ‘பிரபாகரன் நல்லவர்தான். அவரது இயக்கத்தில் சிலர்தான் தீவிரவாதிகளாக இருக்கிறார்கள்.’

* தொடர்புள்ள முந்தைய பதிவு – புளித்த பழம்.

26 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற