கண்ணீரும் புன்னகையும்

இன்றைக்கு மாநிலம் தழுவிய வேலை நிறுத்தத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி அல்லது தமிழக முதல்வர் கருணாநிதி அழைப்பு விடுத்திருக்கிறார். ஈழத் தமிழர் படுகொலைக்கு எதிராக இங்கிருந்து வேறென்ன செய்ய முடியும்? மேடைப்பேச்சு, அறிக்கைப் புரட்சி, டிவி பேட்டிக்கு அடுத்தபடி இது. எனவே இன்று பஸ்கள் ஓடாது. கடைகள் இருக்காது. கலைஞர் டிவியில் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படும். ஈழத்தில் போர் நின்றுவிடும்.

இதைவிட –த்தனமான அரசியல் நடத்த யாராலும் முடியாது. தமிழ்நாட்டு மக்களை முழு மாங்கா மடையர்கள் என்றே கலைஞர் முடிவு செய்து விட்டதைத்தான் அவரது சமீபத்திய செயல்பாடுகள் காட்டுகின்றன. சுயமரியாதை உள்ள தமிழ்நாட்டு மக்கள் இன்று பதினாறு மணிநேரம் வேலை பார்ப்பார்களேயானால் அதுவே அவருக்கு நாம் அளிக்கும் சரியான பதிலாக இருக்கும்.

*

திட்டமிட்டுப் பரப்பப்பட்டதா, தற்செயலா என்று தெரியவில்லை. நேற்று மதியம் முதல் வன்னிப் பகுதியில் நடைபெறும் தாக்குதல் தொடர்பாகப் பல நூதனமான வதந்திகள் உலவ ஆரம்பித்தன. இலங்கை ராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர் குறித்து செய்திகள் வெளிவந்த சில நிமிடங்களுக்குள்ளாக பொட்டு அம்மான் பிடிபட்டார் என்று எனக்கொரு மின்னஞ்சல் வந்தது. மாலை என் பக்கத்து வீட்டுக்காரர் அவசரமாகக் கதவைத் தட்டி, பிரபாகரனைச் சுற்றி வளைத்துவிட்டார்களாமே என்று கேட்டார். போர்க்களத்தில் இருந்த அத்தனை மக்களும் வெளியேறிவிட்டார்கள், பிரபாகரனும் ஒரு சில வீரர்களும் மட்டும் தனியே மாட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் பிரபாகரன் தாய்லாந்துக்குத் தப்பித்துவிட்டார் என்றும் சம்பந்தமில்லாமல் வேறு வேறு தரப்புகளிலிருந்து வதந்திகள் புறப்பட்ட வண்ணம் இருந்தன.

எதையும் நிரூபித்துக்கொண்டிருக்கவோ, பதில் சொல்லிக்கொண்டிருக்கவோ அவசியமற்ற நெருக்கடி நிலை. உண்மையல்லாத எதுவும் அதிக சமயம் உயிர் வாழ்வதில்லை. இந்தச் சூழலிலும் விளையாடும் எண்ணம் எப்படிச் சிலருக்கு எழும் என்பதுதான் விளங்கவில்லை.

*

இலங்கை ராணுவச் செயலகம் வெளியிட்டுள்ள ஒளிப்படங்கள் சிலவற்றைக் கண்டேன். கூட்டம் கூட்டமாக மக்கள் வெளியேறும் காட்சியின் பின்னணியில் விரியும் செய்திகளுக்கு அப்பால் நிஜம் வேறெங்கோ ஒளிந்து கிடக்கிறது.  செய்யக்கூடியது ஒன்றுமில்லை. எதையும் விமரிசித்துக்கொண்டிருக்கவோ, நியாய அநியாயங்கள் குறித்து விவாதம் வளர்க்கவோ இது சூழலல்ல. ஒரு பக்கம் அனுதாபம் தெரிவித்துக்கொண்டு இன்னொரு பக்கம் வதந்தி வளர்த்துக்கொண்டிருப்பதைக் காட்டிலும் மூடிக்கொண்டு சும்மா இருக்க முடியுமானால் லட்சக்கணக்கானோர் நிம்மதியுறுவர்.

பி.கு:  ஒரு தகவல். குமுதத்தில் நான் எழுதிக்கொண்டிருந்த பிரபாகரன் குறித்த தொடரை ஆர்வமுடன் வாசித்துக்கொண்டிருந்த வாசகர்கள் மன்னிக்க. வரும் இதழில் வெளியாகும் அத்தியாயத்துடன் தொடரினை நிறுத்துகிறேன். அவசரமாக முடித்து அல்ல. அப்படியே பாதியில்.

15 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற