ஆத்தா உன் கோயிலிலே!

திண்டுக்கல் அருகே சின்னாளப்பட்டியில் ஒரு கோடி ரூபாய் செலவில் தமிழுக்கு ஒரு கோயில் கட்டுகிறார்கள் என்று இன்றைக்கு ஒரு செய்தி படித்தேன். சம்பந்தப்பட்ட அத்தனை பேரையும் சென்னை வெயிலில் இருபது கிலோமீட்டர் மூச்சிறைக்க ஓடவிட்டால் என்னவென்று தோன்றியது.

கன்னித்தமிழுக்குக் கல்யாணம் செய்து வைத்து அன்னைத் தமிழாக்கி, அவள் பல  பிள்ளை குட்டிகள் பெற்றுப் போட்டு, கிட்டத்தட்ட ரிடையர் ஆகி வீட்டில் தொலைக்காட்சி சீரியல்களுக்குள் முடங்கிக் கிடக்கிறாள். இப்போது எதற்கு இத்தனை பெரிய செலவு?

எனக்குத் தமிழ் பிடிக்கும் என்று சொல்வதே அபத்தம். நமக்குத் தமிழ் தெரியும். அவ்வளவுதான். சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகள் தெரிந்திருக்கலாம். அவர்கள் யாமறிந்த மொழிகளிலே என்று விருத்தம் பாடலாம். மற்றபடி சிலை வடித்து, கோயில் கட்டி, ஆறு கால பூஜை செய்து பொங்கல் வைப்பது என்பது அபத்தத்தின் உச்சம். அறியாமையின் விளைவு.

மொழி விஷயத்தில் இந்தியாவுக்கு வெளியே யாராவது இத்தனை உணர்ச்சிவசப்படுகிறார்களா என்று தெரியவில்லை. ஈழத் தமிழர்களின் மொழிப்பற்றிலாவது ஓர் அர்த்தம் இருக்கிறது. அவர்கள் உபயோகிக்கும் தமிழ், நம்முடையதைக் காட்டிலும் சுத்தமாக இருக்கிறது. நம்மால் நாலு வரி சேர்ந்தாற்போல் தவறில்லாமல் எழுத, பேசக்கூட வராத பாவத்துக்கா கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்கிறார்கள்?

ஒரு தகவல் தொடர்புக் கருவி என்கிற அளவில் மொழிக்குக் கொடுக்கவேண்டிய நியாயமான கவனத்தைக் கொடுத்துவிட்டுப் போவதை யாரும் ஆட்சேபிக்க மாட்டார்கள். சரி, கல் தோன்றி மண் தோன்றாக் காலத்துச் சரக்கா? ஒழியட்டும், கனிமொழிக்கு அமைச்சர் அந்தஸ்து, தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து. போதாது? முடிந்தால் பேச்சிலும் எழுத்திலும் மொழியைச் சிதைக்காமல் அழகாகக் கையாண்டு அதன் ஆயுசை இன்னும் கொஞ்சம் ஆண்டுகள் அதிகரிக்க நம்மாலான உதவியைச் செய்யலாம்.

எனக்கென்னவோ இந்த தமிழ்க் கோயிலுக்கும் குஷ்பு கோயிலுக்கும் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. வெறும் கூத்து.

இந்தத் தமிழ்க் கோயில் சார்பில் பா-புனைதல், இலக்கணக் கோட்பாடுகள் எல்லாம் கற்றுத்தரப்போகிறார்களாம். கொஞ்சநஞ்சம் தமிழ் படிக்க நினைக்கும் தலைமுறையையும் தலைதெறித்து ஓடச் செய்ய இதனைக் காட்டிலும் வேறு சிறந்த உபாயம் இருக்க முடியுமென்று தோன்றவில்லை.

நாட்டில் இருக்கிற கவிஞர்கள் படுத்துகிற பாடு போதாதா? இலக்கணம் படித்து யாப்பில் ஆப்படிக்க ஒரு புதுத் தலைமுறை வேண்டுமென்று யார் அழுதது?

இதுதான் எனக்குப் பெரிய தீவிரவாதமாகத் தோன்றுகிறது. யாராவது இந்த அபத்த முயற்சியைத் தடுத்து நிறுத்த முன்வருவார்களா?

41 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற