ஆடு, பாம்பு, யானை மற்றும் எம்.ஜி.ஆர்.

சமீபத்தில் நான் வியந்து வாசித்த புத்தகம், சின்னப்பா தேவருடைய வாழ்க்கை வரலாறு. ஒரு திரைப்படத் தயாரிப்பாளர், பல்வேறு கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களுடன் பழக வாய்த்தவர் வாழ்வில் அனுபவங்களுக்குப் பஞ்சம் இராது என்பது உண்மைதான். ஆனால் தேவருடைய அனுபவங்கள் சாதாரணமாக வேறு யாருக்கும் வாய்க்க முடியாதவை.

அபாரமான கடவுள் பக்தி, கண்மூடித்தனமான பக்தி. [முருகனை மயிராண்டி என்றெல்லாம் கூப்பிடுகிறார். பயமாக இருக்கிறது.] ப்ரொஃபஷனலிசம் என்று இல்லாமல், தன்னொழுக்கமாகவே தன் தொழிலுக்கு ஓர் இலக்கணம் வகுத்து முரட்டுத்தனமாக அதைப் பின்பற்றிய பாங்கு. அடிப்படை நேர்மை, உதார குணம்.

தேவர் தன் வாழ்நாளில் ஒரு கணம் கூட சினிமாவை ஒரு கலைப்படைப்பாகவெல்லாம் நினைத்துப் பார்த்தவரில்லை. அது அவருக்கு பிசினஸ். நாலைந்து வெற்றி பெற்ற படங்களைப் பார்த்தால் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பிய்த்துப் போட்டு புதிதாக ஒரு திரைக்கதை சமைப்பதை ஆத்ம சுத்தியுடன் செய்தவர். எம்.ஜி.ஆர். கால்ஷீட் இல்லாவிட்டால் ஏதாவது ஒரு பாம்பைப் பிடி, ஆட்டைப் பிடி, யானையைப் பிடி என்று ஹீரோவை மாற்றுபவர். அதே எம்.ஜி.ஆர். மனம் வருந்தி, திருந்தி வந்து நின்றால், சற்றும் தயங்காமல் உடனே அடுத்தப் படத்துக்கு அவரை வைத்து பூஜை போடுகிறவர். தனக்கு லாபம் கொடுக்கும் எம்.ஜி.ஆர். கேட்டுக்கொண்டார் என்பதற்காக வாழ்நாள் முழுதும் சிவாஜி கணேசனை வைத்து ஒரு படமும் எடுக்காதவர்.

‘கத சொல்றியா? நாலு வரில சொல்லு. மொத வரில மேட்டர சொல்லு’ என்று நிர்த்தாட்சண்யமாகப் புதியவர்களை அச்சுறுத்தியவர். [அப்படி நாலு வரியில் சொல்லத் தெரியாததால் அவர் நிராகரித்தவர்களுள் ஒருவர் கே. பாக்யராஜ்!] ஹீரோயின் ஒழுங்காக நடிக்க வராவிட்டால், சரோஜா தேவியே ஆனாலும் தூக்கிப் போட்டுவிட்டுத் திரும்பிச் சென்றவர். ஹிந்தி சூப்பர் ஸ்டார் ராஜேஷ் கன்னாவைக் கதறக் கதற மிரட்டி விரட்டியவர். புனித வெடிகுண்டாக இடுப்பில் எப்போதும் கத்தை கத்தையாகப் பணத்தைக் கட்டிக்கொண்டு திரிந்தவர். யார் கேட்டாலும் கிடைக்கும். எவ்வளவு கேட்டாலும் கிடைக்கும். ஆனால் சம்பந்தப்பட்டவரால் தேவருக்கு உபயோகம் இருக்கவேண்டும்.

ஒரு சமயம் தேவரின் மனைவி அவரிடம் கேட்டார். யார் யாருக்கோ எவ்வளவோ பணம் குடுக்கறிங்க. நம்ம குடும்பத்துக்கு நாலு காசு சேத்து வெக்கக்கூடாதா?

தேவர் அப்போதுதான் மனைவியின் பேங்க் பேலன்ஸைப் பார்த்தார். அதிர்ச்சி. உடனே வினியோகஸ்தர்களைக் கூப்பிட்டு, அடுத்தப் படத்துக்கு யார் எத்தனை அட்வான்ஸ் தருவீர்களோ, இங்கே, இன்றே, இப்போதே கொடுங்கள் என்று கேட்டார்.

தேவர் அழைத்து யார் மறுப்பார்கள்? குவிந்த பணத்தை மனைவியிடம் கொண்டு கொட்டினார். போதுமா? போதுமா? போதுமா?

இந்தப் புத்தகம், தமிழ் சினிமா இன்றுவரை எப்படி எடுக்கப்படுகிறது என்பதை மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது. ஏதோ ஒரு நம்பிக்கை. கிட்டத்தட்ட குருட்டு நம்பிக்கை. ஓடும் ஓடாது என்பதைக் கடவுள் தலையில் தூக்கிப் போடு. இது பண விளையாட்டு. லாபம் ஒன்றுதான் குறிக்கோள். லாபம் கொடுத்தால் நல்ல படம். கொடுக்காவிட்டால் கெட்ட படம். கொண்டாடப்படும் நபர்கள் யாரும் நிரந்தரமானவர்கள் அல்லர். கொண்டாட்டம் ஒன்றே நிரந்தரமானது.

ஆட்டுக்கார அலமேலுவின் பிரம்மாண்ட வெற்றிக்கான பாராட்டை தேவர் அந்த ஆட்டை மேடையேற்றி அளித்ததில் எந்த வியப்பும் உங்களுக்கு ஏற்படாவிட்டால், உங்களுக்குத் தமிழ் சினிமா உலகம் புரிந்தது என்று பொருள்.

ஒரு பார்வையில் தேவர் பரிதாபகரமான மனிதராகவும் எனக்குத் தெரிந்தார். கிட்டத்தட்ட மாடு மேய்ப்பது மாதிரிதான் அவர் தம் யூனிட்டை மேய்த்திருக்கிறார். கலைஞர்கள் அனைவரையும் கடலைப் புண்ணாக்கு போலவே அவரால் பாவிக்க முடிந்திருக்கிறது. அதிர்ஷ்டத்தினாலன்றி, வேறு எதனாலும் தேவர் படங்கள் அத்தனை பிய்த்துக்கொண்டு ஓடியிருக்க முடியாது என்று வெகு நிச்சயமாகத் தோன்றுகிறது. [அவர்கள் கதை பண்ணும் அழகை நீங்கள் வாசித்துத்தான் உணரவேண்டும். ஒன்று விழுந்து விழுந்து சிரிப்பீர்கள். அல்லது தலைதெறிக்க ஓடிவிடுவீர்கள்!]

அதிர்ஷ்டம் தொடர்ச்சியான விஷயமல்ல. தேவருக்குப் பிறகு அவரது நிறுவனம் காணாமல் போனதற்கான காரணத்தை யூகிப்பது அத்தனை சிரமமானதுமல்ல.

ஆனால் இன்றளவும் தேவர் ஃபார்முலாவைக் கோடம்பாக்கம் நம்புகிறது என்பதுதான் இதில் வியப்புக்குரிய அம்சம்.

தமிழ் வெகுஜன வெற்றி சினிமாவுக்கான இலக்கணங்களுள் முக்கியமான ஒன்றை வகுத்தவர் தேவர் என்று தயங்காமல் சொல்லலாம். அந்த ஃபார்முலா அபத்தமானது. ஆனால் அதனை உருவாக்கிய தேவரின் வாழ்க்கை சுவாரசியமானது.

[சாண்டோ சின்னப்பா தேவர் / பா. தீனதயாளன் / கிழக்கு / விலை ரூ. 110]

26 comments

para

புதியவை

வகை

தொகுப்பு

முந்தையவை

பொதுவெளி

மின்னஞ்சலில் பெற

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.