‘வரேண்டி மவளே, வெச்சுக்கறேன் ஒன்ன…’

சகவாச தோஷத்தால் சில நாள்களாக நிறைய ஆங்கில டப்பிங் படங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறேன். இத்துறையில் முன் அனுபவம் இல்லாதவர்களுக்கு முதலில் சற்று அதிர்ச்சியாக இருக்கும். திரைப்படம் பார்க்கும் உணர்வு என்பது, அது தரவேண்டிய நியாயமான சந்தோஷத்தைத் தூரத் தள்ளிவிட்டு, பேயறைந்தது போல் உட்காரச் செய்துவிடும். ஆனால் பழகப் பழக, இதனை ரசிக்க முடிகிறது.

இந்த வகையில் சமீபத்தில் பார்த்து முடித்தவை: இரண்டு மூன்று ஹாரி பாட்டர் படங்கள், டைட்டானிக் வகையறா நான்கு [கப்பல் படங்கள்], டைனசார் படங்கள் மூன்று, ஒரு கௌபாய் படம், அதிரடி ஆக்‌ஷன் த்ரில்லர்கள் ஆறு, சம்பந்தமே இல்லாமல் ட்ராய் [ஆம், தமிழில் ட்ராய்!], விஜய் டிவி டவுன்லோடட் படங்கள் [சீன, கொரிய மொழிப் படங்கள்] ஒரு சில.

டப்பிங் படங்களின் வெற்றி என்பது அநேகமாகப் பிரதான கதாபாத்திரத்துக்குக் குரல் கொடுப்பவர் எவ்வளவு பொருந்துகிறார் என்பதில் இருக்கிறது. அவரது தோற்றமும் அவருக்கு வழங்கப்படும் குரலும் பொருந்திவிட்டால் ஒரு பத்திருபது நிமிடங்களுக்குள் படத்தில் ஆழ்ந்துவிட முடிகிறது. மாறாக, கமலஹாசன் மாதிரி இருக்கிற ஓர் ஆளுக்கு வடிவேலு குரல் அமைந்துவிட்டால் போச்சு. முழுப்படமும் இம்சை அரசனாகிவிடுகிறது.


அதே மாதிரி சயிண்டிஸ்டுகள், விமானிகள், கப்பல் கேப்டன்கள் போன்றோர் ஆள் எப்படி இருந்தாலும் அடிக்குரல் கொடுத்தால்தான் பொருந்துகிறது. காமெடியன்களுக்கென்று நமது டப்பர்கள் சில பிரத்தியேகக் கீச்சுக்குரல்கள் வைத்திருக்கிறார்கள். பெரும்பாலும் ரசிக்கவே முடியாத குரல்கள் அவை. நல்ல நகைச்சுவைக் காட்சியைக் கூட நாராசமாக்கிவிடுகிறார்கள். கதாநாயகிகள், பிற பெண் பாத்திரங்கள் பிரச்னையில்லை. எம்மாதிரிப் பெண் குரலும் எடுபட்டுவிடுகிறது. [காமெடிக்குக் குரல் கொடுக்கிறவர்கள்கூட பெண் பாத்திரங்களுக்கு சமயத்தில் டப்பிங் பேசுகிறார்களோ என்று சந்தேகம் வருகிறது.]

இது ஒரு தனி உலகம். வித்தியாசமான உலகம். ஒரு காலத்தில் டப்பிங் படங்கள் என்பவை பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் இங்கே வரவேண்டுமென்கிற நல்ல எண்ணத்தில் செய்யப்பட்டன. நீங்கள் பழைய டப்பிங் படங்களை கவனித்துப் பார்த்தால், நடிகர்களின் உதட்டசைவுக்கு ஏற்பத் தமிழ் வசனங்கள் துள்ளி வருவதைக் காணலாம். ஆரூர் தாஸ், கு. தேவநாராயணன் போன்றவர்கள் டப்பிங் படங்களுக்கு எழுதுவதில் விற்பன்னர்கள். நாம் டப்பிங் பார்க்கிறோம் என்கிற உணர்வே எழாதவாறு எழுதக்கூடியவர்கள். வளமான தமிழ் அவர்களிடம் இருந்தது. தவிரவும் கடும் பயிற்சி.

இன்றைக்கு வருகிற டப்பிங் படங்களின் நோக்கம் வேறு. உதட்டசைவுக்குப் பொருந்துகிறதா என்பது இப்போது முக்கியமே இல்லை. அதை யாரும் கவனிப்பதே இல்லை. காட்சி அழகு, தொழில்நுட்பம் இரண்டுமே பிரதானமானவை. பிற மொழிப் படங்கள் புரியாமல் சப் டைட்டில்களில் கண் லயித்துப் போய்விட்டால் இவற்றை கவனிக்காது போய்விடுவோம். எனவே கதை விளங்க மட்டுமே டப்பிங் வசனங்கள்.

இது சொல்லப்படாத ஒப்பந்தமாக டப்பிங் எழுத்தாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் இடையே உருவாகிப் பழகிவிட்டிருக்கிறது. அதனால்தான் ‘மவனே இருடி. ஒனக்கு வெச்சிருக்கேன் ஆப்பு. எங்கையில நீ மாட்டாமயா போயிருவ? என்னிக்கானா ஒருநாள் ஒன் சங்கறுக்கல, எம்பேரு நீல்சன் இல்ல’ என்கிற வசனம் பெரிதாக இடைஞ்சல் செய்வதில்லை.

நான் குமுதத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது மோட்சம் தியேட்டரில் செக்ஸ் படங்களுக்கு இடையே அவ்வப்போது சில நல்ல ஆங்கில டப்பிங் படங்களும் திரையிடுவார்கள். சீறும் பனிமலை, சிரிக்கும் சிகரம், அதிரடி ராஜா, கொடூரக் குரங்கு, ஜென்ம விரோதி, வெட்டு ஒண்ணு துண்டு மூணு போன்ற சில படங்களை நான் அங்கே பார்த்திருக்கிறேன். குமுதத்திலிருந்து விலகியதுமே டப்பிங் படங்கள் பார்க்கும் வாய்ப்பு இல்லாது போய்விட்டது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது மீண்டும். பர்மா பஜாரில் அதிஷா ஒரு ஹோல்சேல் வியாபாரியைப் பிடித்து வைத்திருப்பதாகச் சொன்னான். அவனும் லக்கியும் மாத சந்தா கட்டுகிறார்கள் போலிருக்கிறது. மொத்தமாக ஏழெட்டு சிடிக்கள் கொண்டுவந்து கொடுத்துவிட்டுப் போனான். ஒவ்வொன்றிலும் மூன்று, நான்கு படங்கள். சில சிடிக்கள் தரமாகவே இருக்கின்றன. சிலவற்றில் மழை பெய்கிறது. குறிப்பாக விஜய் டிவி டவுன்லோட் பட சிடிக்கள் மிக மோசமாக இருக்கின்றன. ஆனால் அந்தப் படங்களில்தான் வசனங்கள் சுவாரசியமாக இருக்கின்றன. எகிறிக் குதித்துப் பாய்ந்து பாய்ந்து காற்றில் கத்தி வீசும் சீனத்துப் பெண்களெல்லாம் கீச்சுக் குரலில் ‘வரேண்டி மவளே, வெச்சுக்கறேன் ஒன்ன’ என்று பேசுவது மிகவும் சுவாரசியம். [இந்த ரக வசனங்களை சுட்டி டிவி சீரியல்கள் சிலவற்றிலும் கேட்கலாம்.]

அபூர்வமாக ஒரு படம். பாலைவன சிங்கம் என்று தலைப்பு. கவர் டிசைன் கவர்ச்சிகரமாக இல்லை. தலைப்பும் பெரிதாகச் சுண்டி இழுக்கவில்லை. எனவே பார்க்காமலேயே தள்ளிப்போட்டுக்கொண்டிருந்தேன் தற்செயலாக நேற்றிரவு வேறு எதுவும் படம் இல்லாதபடியால் அதைப் போட்டுப் பார்க்க ஆரம்பித்தேன்.

ஆடிப்போய்விட்டேன். உமர் முக்தார்!

முசோலினி காலத்து இத்தாலிய மேலாதிக்கத்துக்கு எதிராகப் புரட்சி செய்த லிபியப் போராளியின் வாழ்க்கை. நுணுக்கமான சரித்திர விவரங்களுடன் விறுவிறுப்பான திரைக்கதை (ஹெச். ஏ.எல். க்ரெய்க் என்பவர் திரைக்கதை ஆசிரியர். வாட்டர்லூ, ஏர்போர்ட் 77 போன்ற படங்களின் எழுத்தாளர்) .அளவான வசனங்கள். அளவற்ற சண்டைக் காட்சிகள். அற்புதமான ஃப்ரேமிங் சென்ஸ் (முஸ்தஃபா அக்கத்).

உமர் முக்தர் நிச்சயமாகத் தன் வாழ்நாளில் இங்கிலீஷ் பேசியிருக்க மாட்டார். ஆனால் இது இங்கிலீஷ் படம்தான். என்ன கெட்டுவிட்டது? உமர் இங்கிலீஷ் பேசினாலும் தமிழ் பேசினாலும் ஒன்றே அல்லவா?

டப்பிங் படங்கள் பார்க்கும்போது சண்டை மற்றும் கலவரக் காட்சிகளில் பின்னணியில் இருந்து முகம் காட்டாமல் கூட்டமாகப் பேசுவோர் (சவுண்ட் த்ரோ என்பார்கள்) என்ன பேசுகிறார்கள் என்று கவனியுங்கள்.

கவிதை!

12 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற