குளத்துக்குள் குரங்கு பெடல்

கிபி இரண்டாயிரமாவது ஆண்டு நான் கம்ப்யூட்டரில் எழுதத் தொடங்கிய நாளாக, திரைக்கதை எழுத ஒரு நல்ல மென்பொருள் கிடைக்குமா என்று தேடத் தொடங்கினேன். யாராவது சினிமாவும் கம்ப்யூட்டரும் தெரிந்த நண்பர்கள் என் கண்ணில் பட்டுவிட்டால் போதும். அவருக்கு அந்த வினாடியே சிக்ஸ் ப்ளஸ் ஒன் பாயிண்ட் ஃபைவ் பிடித்துவிடும் அபாயம் அவசியம் இருந்தது.
கமலஹாசன் மூவி மேஜிக் உபயோகிக்கிறாராமே, மணி ரத்னம் வேறு ஏதோ ஒன்று அதே மாதிரி வைத்திருக்கிறாராமே என்று காதில் விழுந்த பெயர்களையெல்லாம் இணையத்தில் டெமோ வர்ஷன் இறக்கி உபயோகித்துப் பார்ப்பேன். சனியன் எல்லாம் தமிழினத் துரோகிகள்.
நான் என்றைக்குத் தமிழ் போல் இங்கிலீஷ் எழுதக்  கற்றுக்கொண்டு ஸ்கிரிப்ட் எழுதி, இருபதாம் நூற்றாண்டுக் குள்ளநரி என்னைக் கூப்பிட்டு வாய்ப்புக் கொடுப்பது?
தவிரவும் எனக்கு இன்னொரு சந்தேகம் இருந்தது. கமலஹாசனும் மணி ரத்னமும் என்னதான் நல்ல ஆங்கிலத்தில் தடையற்று எழுதக்கூடியவர்களாகவே இருந்தாலும், ஒரு தமிழ் படத்துக்கான ஸ்கிரிப்டை ஆங்கிலத்தில் எழுதுவது என்பது நடைமுறையில் சாத்தியமே இல்லாதது. சும்மா எழுதி அழகு பார்க்கலாமே தவிர எடுத்து வைத்துக்கொண்டு வேலை பார்க்க முடியாது. ஏனென்றால் ஒரு ஸ்கிரிப்ட் என்பது குறைந்தது சம்பந்தப்பட்ட நூறு பேருக்குப் புரிந்தால்தான் ஒரு படம் உருப்படியாக உருவாகும். தமிழ்த் திரையுலகில் பெரும்பாலும் ஆங்கிலம் படிக்காத மேதைகள்தாம் மிகுதி.
மேலும் ஸ்கிரிப்ட் என்பது வசனங்களும் கலந்தது. தமிழ் வசனங்களை ஆங்கிலத்தில் அடிப்பதாவது?
இல்லை. ஏதோ பிழை. கமலஹாசனும் மணி ரத்னமும் கண்டிப்பாகக் கையாலாவது எழுதுவார்களே தவிர இப்படியெல்லாம் அபத்த முயற்சிகள் செய்யமாட்டார்கள் என்று தோன்றியது.
அப்போது நான் ராயர் காப்பி க்ளப்பில் இருந்தேன். அங்கே லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் நட்பாக, ஹாலிவுட் ஆசாமிகள் உபயோகிக்கும் ஸ்கிரிப்ட் ரைட்டிங் மென்பொருள்கள் பலவற்றைப் பற்றி அவ்வப்போது சொல்லி வெறுப்பேற்றிக்கொண்டிருந்தார். அவர் மூவி மேஜிக் உபயோகிப்பதாகவும். கொஞ்சம் செட்டிங்ஸ் மாத்தி தமிழ் எழுத ட்ரை பண்ணலாம்ண்ணா என்று சொட்டுத்தேன் விடுவதில் அவர் ஒரு விற்பன்னர்.
எனக்கு இந்த செட்டிங்ஸ் மாற்றுவதெல்லாம் அப்போது தெரியாது. ஒருவேளை கமலஹாசனுக்கும் மணி ரத்னத்துக்கும் தெரிந்திருக்குமோ? சற்றே பொறாமை வரத் தொடங்கியது. சொல்லி வைத்த மாதிரி அந்நேரம் கமலின் ‘ஹே ராம்’ திரைக்கதை புத்தக வடிவில் அப்போது வெளியாக, அது சரியான திரைக்கதை ஃபார்மட்டில் இருந்ததைக் கண்டதும் பதற்றமடையத் தொடங்கினேன்.
ஏதோ இருக்கிறது. எனக்குத்தான் தெரியவில்லை. நான் வெகு தீவிரமாக மென்பொருள்களுக்கு தமிழ் ஞானஸ்நானம் அளிக்க என்ன செய்யலாம் என்று ஆராய்ச்சி செய்யத் தொடங்கிய சமயத்தில் சில தொலைக்காட்சித் தொடர்களுக்கு எழுதும் வாய்ப்பு வந்தது.
‘சாப்டுவேரெல்லாம் வாணா சார். பேப்பர மடிச்சிக்கங்க. லெஃப்டுல சீனு. ரைட்டுல டயலாகு. போதும் சார்’ என்று நிர்த்தாட்சண்யமாக அந்த உலகம் சொல்லிவிட்டது.
கம்ப்யூட்டர் பழகிவிட்ட பிறகு கையால் எழுதவே வராமல் போய்விட்டது எனக்கு. எனவே வேர்ட் டாக்குமெண்டைத் திறந்து இரண்டு காலம் பிரித்து அடிக்கத் தொடங்கினேன். முதலில் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. பிறகு முத்துராமன் சொல்லிக்கொடுத்து, ஷார்ட் கட் கீக்களுடன் பரிச்சயம் ஏற்பட, ஒரு கட்டத்தில் பிசாசு வேகத்தில் அடிக்க ஆரம்பித்துவிட்டேன். நிமிடத்துக்கு நூறு Tab அடித்து என் இடது சுண்டுவிரல் கிட்டத்தட்ட பெண்டுலமாகவே ஆகிவிட்டது.
என்னுடைய பல நண்பர்கள் – சீரியல்களுக்கு எழுதுபவர்கள் – ஒரு காட்சியை எழுதி முடிக்க ஒரு மணி நேரம் எடுத்துக்கொள்வதாகச் சொல்லிக்கொண்டிருந்தபோது நான் ஏழு நிமிடம், எட்டு நிமிடங்களிலெல்லாம் முடித்துக் கடாசிக்கொண்டிருந்தேன்.
யோசிக்கும் வரைதான் எனக்கு வலிகள். எழுதத் தொடங்கிவிட்டால் தடையே கிடையாது. மனம் நினைப்பதை விரல்கள் இறக்கிவிடும். சொற்களுக்காகத் தவமிருப்பது, பஞ்ச் வசனங்களுக்காகப் பல்லாங்குழி ஆடுவது போன்ற கெட்ட வழக்கங்கள் அறவே கிடையாது. பயிற்சி செய்தால் இது எல்லோருக்கும் சாத்தியமே.
பிரச்னை அதுவல்ல. வேர்டில் இரண்டு காலம் பிரித்து சீன் எழுதுவதில் வேறு பல இம்சைகள் உண்டு. ஒவ்வொரு முறையும் கதாபாத்திரங்களின் பெயர்களை டைப் செய்வது, காட்சி எண், இரவு, பகல் விவரங்கள், உள்ளே வெளியே விவரங்கள், கட்டிங் குறிப்புகள் அனைத்தையும் திரும்பத் திரும்ப நாமே டைப் செய்தாக வேண்டும். போரடிக்கும்.
ஒரு மென்பொருள் இதையெல்லாம் தானாகவே செய்துவிடும். டைப் அடிக்கும் நேரம் இன்னும் கணிசமாக மிஞ்சும். ஆனால் எந்த மென்பொருள் தமிழைக் காதலிக்கும்?
பின்னும் ஒருநாள் பத்ரி, வெங்கட் போன்றோருடன் பழகத் தொடங்கி கட்டற்ற திறந்த வெளிப் பொருள்களுடன் பரிச்சயம் ஏற்பட்டதன் விளைவாக Celtx என்ற ஒரு வஸ்து இருப்பதைக் கண்டுபிடித்தேன்.
மூவி மேஜிக், ஃபைனல் டிராஃப்ட் போன்றவற்றுடன் ஒப்பிட இது எவ்வளவோ தேவலை என்று முதல் பார்வையில் தோன்றியது. தமிழ் எழுதுவதற்குத் தடை சொல்லவில்லை. அடிப்படை ஆறுதல்.
ஆனால் ஓப்பன் சோர்ஸ் சரக்குகளுக்கே உரிய குறைபாடுகள் அதிகம். உதாரணமாக எழுத்துருவின் அளவு. அசப்பில் குண்டாக, என்னுடைய சைஸில் இருக்கும் லதா ஃபாண்டில் நீங்கள் அடிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். ப்ரிண்ட் எடுத்தால் இருபது வரிகளுக்கு இரண்டே முக்கால் பக்கம் சாப்பிடும். மண்டை மண்டையாக இருக்கும். பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதைப்புத்தகம் படிக்கிற உணர்வு வரும்.
நம் இஷ்டத்துக்கு இந்த அளவைக் கூட்டவோ குறைக்கவோ வசதி கிடையாது. அது கொடுக்கும் அளவுதான். பொதுவில் தானம் கொடுக்கப்பட்ட மாடு அது. பல்லைப் பிடுங்கிப் பார்த்தல் தகாது.
அப்புறம் பேஜ் ப்ரேக் என்ற ஒன்று இருக்காது. திரவுபதி வஸ்திரம் மாதிரி போய்க்கொண்டே இருக்கும். எல்லா பக்கங்களின் எல்லா கடைசி வரிகளும் விதவைகளாகவே நிற்கும்.
இதெல்லாம் பெரிய விஷயமில்லை என்பீரானால் இன்னொரு பெரிய விஷயம். ஸ்கிரிப்டை எழுதி .celtx கோப்பாகத்தான் சேமிக்க முடியுமே தவிர வேர்ட் டாகுமெண்டாகச் சேமிக்க முடியாது.
நமது ஸ்கிரிப்டை யாருக்காவது அனுப்பினால், அவரிடமும் செல்டெக்ஸ் இருந்தால்தான் படிக்க, திருத்த, எடுக்க முடியும் என்று இதற்கு அர்த்தம்.
சரி எழுதி முடித்து அப்படியே கண்ட்ரோல் ஏ, கண்ட்ரோல் சி போட்டு வேர்டில் தூக்கிப் போடுவோம் என்றால் அலைன்மெண்டெல்லாம் காலாவதியாகி, நந்தனம் சிக்னல் டிராஃபிக் மாதிரி மொத்த ஃபைலும் கந்தரகோலமாகிவிடும்.
இவை அனைத்தையும் சகித்துக்கொண்டு இத்தனை நாளாக நான் செல்டெக்ஸ் தான் உபயோகிக்கிறேன். ஒரே காரணம், அதன் எளிமை. தவிரவும் அதிலேயே ஸ்டோரி போர்ட் செய்யலாம். ரெஃபரன்ஸ் மெட்டீரியல் சேர்க்கலாம். ஷாட் பிரிக்கலாம். ஷெட்யூல் போடலாம். ப்ரேக் டவுன் போடலாம். சகலமும் முடியும்.
இதனிடையே செல்டெக்ஸை வடிவமைத்த குழுவினருக்கு அவ்வப்போது எனது வருத்தங்களையும் வேண்டுதல்களையும் விவரித்துக் கண்ணீர்க் கடிதங்கள் எழுதவும் தவறவில்லை. என்றைக்காவது பலன் கிடைக்காதா என்கிற நப்பாசை.
கிடைத்தது. குழுவில் ஒருவர் ஒருநாள், போனால் போகிறதென்று எனக்கொரு அஞ்சல் அனுப்பினார். அன்பரே நீங்கள் செல்டெக்ஸ் உபயோகிப்பது பற்றி சந்தோஷம். இப்பவும் நாளது பங்குனி மாதம் கிருஷ்ண பட்சம், ரேவதி நட்சத்திரம் கூடிய சுபயோக சுபதினம் வரைக்கும் நாங்கள் அப்டேட் செய்து வைத்திருக்கும் சோர்ஸ் கோடாகப்பட்டது இன்ன இடத்தில் இருக்கிறது. அது ஒரு ஜார் ஃபைல். அதைத் திறந்து உள்ளே போய் CSS தேடியெடுத்து, படித்துப் பார்த்து உரிய இடத்தில் ஃபாண்ட் சைஸை மாற்றிக்கொள்ளுங்கள், மற்றபடிக்கு இப்போதைக்கு ஃபாண்ட் – சைஸ் ஆப்ஷனெல்லாம் வெளிப்படையாகக் கொடுக்கிறபடியாக இல்லை என்று ஒரே ஒரு கதவைத் திறந்துவிட்டார். பேஜ் ப்ரேக் பற்றியெல்லாம் வாயே திறக்கவில்லை அந்த டென்மார்க் நல்லவர்.
ஜார் ஃபைல்? நான் என்னத்தைக் கண்டேன்? ஜார் வம்சம் ஒழிந்து, கம்யூனிஸ்டுகளும் காலாவதியாகி, ரஷ்யாவிலேயே ஜனநாயகம் மாதிரி என்னவோ ஒன்று வந்துவிடவில்லை? ஆனால் வேறு வழியில்லை. செல்டெக்ஸ் டாட் ஜார் தான்.
நாகராஜன் உதவியுடன் என்னுடைய சோர்ஸ்-கோட் எடிட்டிங் கைங்கர்யம் ஆரம்பமானது. சீன் டைட்டிலுக்கு மட்டும் குண்டு லதா என்று வைத்துக்கொண்டு பாடிக்கு ஏரியல் யூனிகோட் எம்.எஸ். மாற்றினேன். கேரக்டர்கள் பெயரெல்லாம் போல்டாக வரும்படி அமைத்துக்கொண்டேன். பாயிண்ட் சைஸைப் பதினொன்றாக்கினேன்.
ப்ரிண்ட் எடுத்துப் பார்த்தால் கண்கொள்ளாக் காட்சி. தமிழின் தன்னிகரற்ற திரைக்கதையாளனாவது உறுதி என்று நிச்சயமாகத் தோன்றிவிட்டது. என்னுடைய இயக்குநர்களுக்கும் அதை எடுத்துச் சென்று செயல்முறை விளக்கமெல்லாம் கொடுத்து அனைவரையும் செல்டெக்ஸ் ஆசாமிகளாக்கும் முயற்சியில் இறங்கினேன். அடிப்பதற்கு என்.எச்.எம் ரைட்டர், அணைப்பதற்கு செல்டெக்ஸ் வர்ஷன் டூ பாயிண்ட் ஜீரோ என்று ஆசை காட்டினேன்.
‘சூப்பர் சார். பிரமாதம் சார்’ என்றவர்கள், ‘இந்தப் படத்த மட்டும் லெஃப்ட் ரைட் காலம் பிரிச்சி எழுதிக் குடுத்துடுங்க. அடுத்ததுலேருந்து இதுக்கு மாறிடலாம். பழகணும்ல?’
ஒழிகிறது என்று ப்ரிண்ட் எடுத்துக் கொடுத்துவிடலாம். ஆனால் பேஜ் ப்ரேக்? .doc சேமிப்பு வசதி?
இப்போதெல்லாம் தினசரிப் பிரார்த்தனைகளுள் ஒன்றாக நாகராஜனிடம் என் செல்டெக்ஸை ரிப்பேர் பண்ணித் தரச்சொல்லிக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். மனுஷன் மசிவதாக இல்லை என்பதால், அவ்வப்போது சுயமாகக் குடைந்தும் பார்க்கிறேன். codeகளைக் கையாளும் பயிற்சிக்காக எனது இணையத்தளத்தின் தீம் எடிட்டரிலும் அவ்வப்போது குரங்கு பெடல் செய்து பார்க்கிறேன். நிறைய சொதப்பல். ஆங்காங்கே செருப்படி. ஆனாலும் விடுவதாக இல்லை.
யார் கண்டது? ஒரு நல்ல திரைக்கதையாளனாவதற்கு முன்னால் ஒரு தேர்ந்த சாஃப்ட்வேர் இஞ்சினியர் ஆகிவிடப் போகிறேனோ என்னவோ.

இப்போதெல்லாம் தினசரிப் பிரார்த்தனைகளுள் ஒன்றாக நாகராஜனிடம் என் செல்டெக்ஸை ரிப்பேர் பண்ணித் தரச்சொல்லிக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். மனுஷன் மசிவதாக இல்லை என்பதால், அவ்வப்போது சுயமாகக் குடைந்தும் பார்க்கிறேன். codeகளைக் கையாளும் பயிற்சிக்காக எனது இணையத்தளத்தின் தீம் எடிட்டர் குளத்தில் குதித்து, அவ்வப்போது குரங்கு பெடல் செய்து பார்க்கிறேன். நிறைய சொதப்பல். ஆங்காங்கே செருப்படி. ஆனாலும் விடுவதாக இல்லை.

யார் கண்டது? ஒரு நல்ல திரைக்கதையாளனாவதற்கு முன்னால் ஒரு தேர்ந்த சாஃப்ட்வேர் இஞ்சினியர் ஆகிவிடப் போகிறேனோ என்னவோ.

[பி.கு: இதனைப் படிக்கும் நல்ல உள்ளங்களில், திறமூலத்தைத் திறந்து மூடத் தெரிந்த யாரேனும் ஒருவர் இரக்கப்பட்டு எனக்கு உதவ முன்வருவாரேயானால் தனியஞ்சலில் அவர்தம் பெயர், நட்சத்திரத்துடன் தொடர்புகொள்ளவும். பாடல் பெற்ற ஸ்தலமான ஏவி எம் வினாயகர் கோயிலில் ஒரு சிறப்பு அர்ச்சனை செய்து பிரசாதம் அனுப்புகிறேன்.]

22 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற