தேடாதே, கிடைக்காது.

என்னுடைய இணையத்தளத்துக்கு தினசரி வந்து வாசிக்கும் அல்லது வாசிக்காது போகும் நண்பர்களைக் காட்டிலும் குறிப்பிட்ட சில சொற்களை இட்டுத் தேடிப் படிப்பவர்கள் என்னை மிகவும் வசீகரிக்கிறார்கள்.

இவர்கள் என்னென்ன சொற்களை உள்ளிட்டுத் தேடுகிறார்கள் என்று பார்ப்பதில் எனக்கு எப்போதும் ஆர்வம் உண்டு. நான் இணையத்துக்கு எழுத வந்த நாளாகச் சில நல்லவர்கள் இடைவிடாமல் தினசரி என்னுடைய தளத்தில் குறி, மாமி, அத்தை, மாமியின் ஆசை, ஆண்குறி, காமக்கதைகள் [பெரும்பாலும் க் இருக்காது], பாலியல், செக்ஸ் படங்கள், மடிசார் போன்ற சொற்களை உள்ளிட்டுத் தேடிப்பார்க்கிறார்கள்.

இவர்கள் கூகுளில் இதனைத் தேடி என் தளத்துக்கு வர வாய்ப்பில்லை. என்னுடைய தளத்திலேயே தேடினாலும் கிடைப்பது அரிது. வருடக்கணக்காக தினசரி விடாமுயற்சியுடன் தேடும் இந்தச் செயல்வீரர்களுக்காக நான் செய்யக்கூடியது என்னவென்று யோசித்துப் பார்த்தேன். இப்படி ஒரு கட்டுரை எழுதி இதற்கான குறிச்சொற்களாக [சே! இனி அடையாளச் சொற்கள் என்று அழைப்போம்.] மேற்கண்ட சொற்களையே போட்டு வைப்பது தவிர வேறெதுவும் தோன்றவில்லை.

அது நிற்க. இந்தத் தேடல் மன்னர்களின் உந்துதலால் கூகுளில் மேற்படி சொற்களில் சிலவற்றை இட்டு நானே தேடிப்பார்த்தேன்.

ம்ஹும். தமிழ் வயசுக்கு வரவில்லை. மிக அற்பமான, மிகச் சொற்பமான porn எழுத்துகள் மட்டுமே தமிழில் உள்ளன. அதிலும்கூட விடுமுறைக்கு ஊருக்குப் போகிற வயசுப்பெண், மாமா வீட்டிலிருக்க, அத்தை கோயிலுக்குப் போகும் அதே சீக்வன்ஸ்தான் திரும்பத் திரும்ப எல்லாக் கதைகளிலும் வருகிறது. மாமா ஆபீஸ் போயிருந்தால் மாமா பையன். சீன் லொக்கேஷன்கள் கூட மாறுவதில்லை. எந்தப் படுக்கையறைக் காட்சியிலும் வில்லன்கள் யாரும் குறுக்கிட்டு ஒரு சிறு திடுக்கிடும் திருப்பத்தைக் கூடக் கொடுப்பதில்லை. தவிரவும் எழுதுபவர்களின் மொழிக் குறைபாடுகளால் பெரும்பாலான வருணனைச் சொற்கள் திரும்பத் திரும்ப வந்து, அது தரவேண்டிய நியாயமான கிளர்ச்சியைத் தரத் தவறிவிடுகின்றன. பத்து வரிகளுக்குமேல் படிக்கவே முடிவதில்லை.

முன்னொரு காலத்தில் தேனாம்பேட்டை திருவள்ளுவர் வீதியில் ஒரு கோஷ்டி குடியிருந்தது. பிளாஸ்டிக் கவர் போட்ட, இருபுறம் பின் அடித்த புத்தகப் பதிப்பாளர்கள். கையில் காசு இருக்கும்போது மட்டும் இவர்களுடைய பத்திரிகைகள் வரும். மொத்தமாக அச்சடித்து கிண்டி ரயில்வே ஸ்டேஷனுக்கு எடுத்துப் போய்ப் போட்டுவிடுவார்கள். அங்கிருந்துதான் டிஸ்ட்ரிப்யூஷன். அந்தப் புத்தகங்களை எழுதச் சில எழுத்தாளர்கள் இருந்தார்கள். ஃபாரத்துக்கு இருபது ரூபாய் சம்பளம். ஒரு புத்தகம் அதிகபட்சம் ஆறு முதல் எட்டு ஃபாரங்கள் வரும். இடையிடையே கறுப்பு வெள்ளைப் படங்கள். [சரியாக அச்சாகாது.]

என் நண்பரான வடிவமைப்பு ஓவியர் ஒருவர் அந்த வீதியில் குடியிருந்தார். அவரைப் பார்க்க வரும்போது இந்த எழுத்தாளர்களைப் பார்க்க நேரிடும். பெரும்பாலும் பிரும்மச்சாரிகள். சினிமாக் கனவுகள் சிலருக்கு இருக்கும். பத்திரிகைக் கனவுகள் சிலருக்கு. எதனுள்ளும் நுழைய முடியாத நிலையில் வயிற்றுப்பாட்டுக்காக இந்தத் தொழிலுக்கு வருவார்கள். பெயரில்லாமல் ஆறு ஃபாரங்கள் எழுதிக்கொடுத்துவிட்டு ஒருவாரத்துக்கு உண்டான உணவுக்கு வழி தேடிக்கொண்டு போவார்கள்.

அவர்கள் எழுத்திலும் க்ளீஷேக்கள் உண்டு. முயல்குட்டிகள், மதர்த்த மார்பு போன்ற வார்த்தைகள் இல்லாமல் எழுத வராது அவர்களுக்கு. ஒரு ஃபாரத்துக்கு இரண்டு காட்சிகள் வரவேண்டுமென்பது அவர்கள் கணக்கு. ஒவ்வொரு காட்சியும் இரண்டரை – மூன்று பக்கங்கள் நீளவேண்டும். என்றால் குறைந்தது ஐந்நூறு வலுவான சொற்கள் தேவை. இருக்கிற ஏழெட்டு கசமுசா வார்த்தைகளை வைத்துக்கொண்டு எங்கிருந்து உணர்ச்சிமயமான படுக்கையறைக் காட்சியை எழுதுவது?

பரிதாபம்தான். புகைப்படங்கள் பலத்தில் அந்தப் பத்திரிகைகள் ஜீவித்துக்கொண்டிருந்தன. பிறகு வெளி நாட்டுத் தொலைக்காட்சிகள், பர்மா பஜார் சிடிக்கள், இண்டர்நெட் எல்லாம் வந்தபிறகு இந்த இருபுறம் பின்னடித்த பத்திரிகைகளுக்கு வாழ்வில்லாது போய்விட்டது. அந்தப் பதிப்பாளர்களில் ஓரிருவர் பிறகு ஆன்மிக மாத இதழ் தொடங்கி நலமாக வாழ்கிறார்கள் இப்போது.

நல்ல porn எழுத்து தமிழில் அநேகமாகக் கிடையாது. சில சங்கப்பாடல்களிலும் ஆண்டாளின் சில வரிகளிலும் அழகான படுக்கையறைக் காட்சிகள் இருக்கின்றன. குத்துவிளக்கெரிய எனத் தொடங்கும் திருப்பாவையின் பத்தொன்பதாம் பாசுரத்தை சொல் சொல்லாக கவனித்து வாசித்துப் பாருங்கள். அது கொடுக்கும் அனுபவத்தை எந்தக் காமக் கதாசிரியரும் இதுகாறும் தந்ததில்லை என்று அடித்துச் சொல்வேன்.

ஆண்டாள் தரத்தில் எழுத எனக்கு எம்பெருமான் அருள் புரிந்தால் அவசியம் இந்தத் தளத்தில் சில நல்ல porn கதைகள் அல்லது கவிதைகள் எழுதிப் போடுகிறேன். அதுவரை நண்பர்கள் தம் தேடல் முயற்சிகளை வேறு இடங்களில் செயல்படுத்திப் பார்க்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

38 comments

para

புதியவை

வகை

தொகுப்பு

முந்தையவை

பொதுவெளி

மின்னஞ்சலில் பெற

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.