ஆண்டாளுக்கு வந்த சோதனை

எனது முந்தைய பதிவுக்குத் தமிழ் இந்து தளத்தில் அரவிந்தன் நீலகண்டன் ஒரு நீண்ட எதிர்வினை ஆற்றியிருப்பதை இப்போதுதான் கண்டேன். அரவிந்தனுக்கு முதலில் நன்றி சொல்லவேண்டும். நான் சாதாரணமாக எழுதிய கட்டுரையில் ஆண்டாள் தன்னிஷ்டத்துக்குத் தானாக வந்து விழ, மனிதர் ரிக் வேதம் தொடங்கி சூஃபி வரை உலகளந்து, இறுதியில் அந்தப் பத்து பைசா பெறாத கட்டுரைக்கு ஏதோ அரசியல் உள்நோக்கம் வேறு இருப்பதாகச் சொல்லிவிட்டார். இப்படியெல்லாமும் என்னைப் பெரிய ஆள் ஆக்கு என்று ஆண்டாள்தான் அவரிடம் மானசீகத்தில் சொல்லியிருக்கவேண்டும்.
அது நிற்க. ஆண்டாளை போர்னோகிராபி எழுதும் எழுத்தாளர் என்று நான் எங்கே சொன்னேன்? இது அபாண்டமல்லவா? ஆண்டாளின் சில வரிகளில் அழகான படுக்கையறைக் காட்சிகள் இருக்கின்றன. அந்தத் தரத்தில் படுக்கையறைக் காட்சியை இன்றுவரை வேறு யாரும் வருணித்ததில்லை என்றுதானே எழுதியிருந்தேன்?
ஆண்டாள் என்று பேசும்போது ஒரு படைப்பாளியாக அவர் எனக்கு முதலில் தெரிவதும், அரவிந்தனுக்கு பக்தி செய்து உய்தவராகத் தெரிவதும்தான் இங்கு வித்தியாசம், பிரச்னை.
தவிரவும் Porn என்பதை அரவிந்தன் பஞ்சமாபாதகத்தில் ஒன்றாகப் பார்க்கிறாரா என்றும் தெரியவில்லை. நான் அப்படிப் பார்க்கவில்லை என்பதைச் சொல்லிவிடுகிறேன். எழுத்தில் பல விதங்கள், பல ரகங்கள் உண்டு. எதையும் எழுதிப் பார்க்கலாம். எப்படியும் எழுதிப் பார்க்கலாம். எந்தத் தவறும் இல்லை. எழுத்து ரசமாக இருக்கிறதா, சரியாக இருக்கிறதா  என்பது மட்டும்தான் என் அக்கறை. அந்தக் கட்டுரையிலும் அதைத்தான் சொல்லியிருந்தேன்.
ஆண்டாள் உதாரணம் ஏன் வந்தது என்பதற்கு இப்போது யோசிக்கும்போது ஒரு காரணம் தோன்றுகிறது. உயர்ந்த தரத்தில் எழுதும்போது எழுதப்படும் விஷயமும் உயர்வாகிறது என்பதைச் சுட்டிக்காட்டவே அது வந்தது என்றும் கொள்ளலாம் அல்லவா? எழுத்தால் எழுதுபவன் உயர்வதும் தாழ்வதும் போல, எழுதப்படும் விதத்தாலும் சாராம்சத்தின் உயர்வு தாழ்வு தீர்மானிக்கப்படக்கூடாது என்று யார் சொல்ல முடியும்?
எனக்கு ஆண்டாள் ஒரு கவிஞர். அவர் பெண் கவிஞரா, புனைபெயர் வைத்துக்கொண்டவரா, பாவை நோன்பு இருக்கிற வயதில் [எத்தனை வயது என்று கேட்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.] கொங்கை, அல்குல் எல்லாம் தெரிந்தவராக இருந்தாரா, அந்த வயதில் [ஞானப்பால் குடித்த கதை ஏதும் இல்லாவிட்டாலும்] அவருக்கு இலக்கண சுத்தமான விருத்தம் வசப்பட்டதா என்பதெல்லாம் முக்கியமே இல்லை. நாயக நாயகி பாவம் பற்றியும் எனக்குச் சந்தேகங்கள் இல்லை. ‘காமத்தையும் ஆன்மிகத்தையும் இணைக்கும் கவித்துவ-ஆன்ம முயற்சி’ பற்றியெல்லாம் கூட எனக்கு இரண்டாம் கருத்தே கிடையாது. ஆண்டாளின் பக்தி, ஆண்டாள் என்னும் கருத்துருவாக்கம் மூலம் வெளிப்படுத்த முனையும் தத்துவம் அனைத்தும் எனக்கு ஏற்புடையதே.
ஆனால் நான் குறிப்பிட்டது இவை எதுபற்றியும் அல்ல. ஆண்டாள் என்னும் எழுத்தாளர் எழுதி வைத்த ஒரு வரி. அதில் பொதிந்திருக்கும் அழகு. கிளுகிளுப்பான ஒரு விஷயத்தை எத்தனை அழகுமேவ அவர் எடுத்துரைக்கிறார் என்கிற ஒற்றைவரி எடுத்துக்காட்டு.
இது ஏன் இத்தனை கொதிப்படையச் செய்யவேண்டும் என்று புரியவில்லை. ஆண்டாள், கடவுளைக் காதலித்தாள் என்பதனாலேயே அவளது படுக்கையறை விவரிப்புகள் வரும்போது கண்மூடி, கைகூப்பிக்கொண்டுவிட வேண்டுமா? என்னால் முடியாது!
அவரைப் பிராயம் தொடங்கி ஆதரித்து எழுந்த தன்னுடைய தடமுலைகள் துவரைப் பிரானுக்கே என்று அவள் டிக்ளேர் செய்யும்போது எனக்கு விசிலடிக்கத் தோன்றினால் அரவிந்தனுக்கு ஏன் கோபம் வருகிறது?
‘ஆண்டாளின் பாசுரங்களில் தத்துவார்த்த குறியீடாக மாற்றுவதற்கு அப்பால், ஆண்டாள் கோபிகைகளின் உணர்ச்சிகளை தனதாக மாற்றினாள். அதன் மூலம் இறையுடன் கலந்தாள்.’ என்று அரவிந்தன் சொல்கிறார். மிகவும் சரி. சினிமா ஹீரோவின் சாகசங்களை லயித்துப் பார்த்துவிட்டு அவற்றைத் தானே செய்ததுபோல் மனத்துக்குள் கற்பனை செய்து மகிழும் எளிய பாமர உணர்வின் வெளிப்பாடல்லவா இது? ஆண்டாளின் ஹீரோ கண்ணன் என்பதால் மட்டும் ஃபார்முலா மாறிவிடுமா?
நாயகனுடன் டூயட் பாடும் நாயகியைத் தன்னுடன் ஆடிப்பாடுவது போல் ஓர் எளிய ரசிகன் கற்பனை செய்து கொள்வதற்கும், ஊடல் கூடல் உணர்தல் புணர்தலை நீடு நின்ற நிறைபுகழ் ஆய்ச்சியர் கோதை முன்கூற, அவள் தானே ஊடி, கூடி, உணர்ந்து, புணர்ந்து பாடி வைத்ததற்கும் என்ன வித்தியாசம்? அதை அனுபவித்துப் படித்தால் செய்த பாவங்களே தொலைந்துவிடும் என்கிறது பிரபந்தம். [பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை பாவமே.] நான் பிரபந்தத்தை நம்புகிறேன்! நீலகண்டனுக்கு நம்புவதில் என்ன பிரச்னை?
இருமை நிலையிலிருந்து இரண்டற்ற இறை நிலைக்குப் போவதற்கு நாயக நாயகி பாவம் ஆண்டாளுக்கு உதவியிருக்கிறது. அரவிந்தன் சொல்வதில் தவறொன்றுமில்லை. இறையுடன் கலத்தல் என்பதற்கும் காமத்தின் வழி மேற்கொள்ளும் பயணம்தான் அவளுக்கு அவசியமாகிறது. ராமகிருஷ்ண பரமஹம்சரும் இறையுடன் கலந்தவர்தான். அந்த ப்ராஜக்டைக் கையில் எடுப்பதற்கு முன்னால் தன் மனைவியைக் கூப்பிட்டு மந்திரித்து உட்காரவைத்துவிட்டுத்தான் வேலையை ஆரம்பிக்கிறார். மனைவியை இறைவியாகக் கருதி வழிபடுதல் ஒரு வழி என்பது போல, இறைவனை இணையாகக் கருதிக் கலப்பதும் இன்னொரு வழி.
இரண்டிலும் பிழையில்லை. இருவர் பாதையிலும் எனக்கு எந்த அபிப்பிராயமும் இல்லை. ஆனால், ‘பொங்கிய பாற்கடல் பள்ளிகொள்வானைப் புணர்வதோர் ஆசையினால் என் கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதூகலித்தாவியையாகுலஞ்செய்யும்’ என்று அவள் உளக் காமத்தின் உச்சநிலைக்குப் போவதை பக்தியுடன் தான் பார்க்க வேண்டுமா? வரிகளை ரசிக்கக் கூடாதா? இந்த மாதிரி ஏன் வேறு யாராலும் எழுத முடியவில்லை என்று ஆதங்கப்படக்கூடாதா? இதிலுள்ள பாலியல் சார்ந்த உளக்கிளர்ச்சியைச் சுட்டிக்காட்டினால் பாவமாகிவிடுமா? இல்லை பாவமே என்று அவளேதான் சர்டிபிகேட் கொடுத்துவிடுகிறாளே.
மாமுத்த நிதிசொரியும் மாமுகில்காள், வேங்கடத்து
சாமத்தின் நிறங்கொண்ட தாடாளன் வார்த்தையென்னே
காமத்தீ உள்புகுந்து கதுவப்பட்டு இடைக்கங்குல்
ஏமத்தோர் தென்றலுக்கிங்கு இலக்காய் நான் இருப்பேனே
என்ற வரியில் எனக்கு கண்ணன், ஆண்டாள், நாயக நாயகி பாவம், யோகம், இரண்டறக் கலத்தல் இன்னபிற அனைத்தும் அழிந்துவிடுகிறது. காமத்தீ உள்புகுந்து கதுவப்பட்ட ஒரு பெண் தன் உள்ளத்தை ஒளிக்காமல் வெளியிடும் துணிச்சலை வியக்கத் தோன்றவில்லை? அவளது எண்ணம், எத்தனை அற்புதமாகச் சொற்களுக்குள் தன்னைச் சொருகிக்கொண்டு வெளியே வருகிறது என்று வாய்பிளக்கத் தோன்றவில்லை? இப்படி ஒருத்தி எழுதியிருக்கிறாள், முடிந்தால் யாராவது முயற்சி செய்து பாருங்கள் என்று சொன்னால் அது ஆண்டாளை போர்னோகிராபி ரைட்டராக்குவதாகுமா? அரவிந்தன் மன்னிக்கவேண்டும், எழுத்தை எனக்கு எழுத்தாக மட்டுமே பார்க்கத் தெரியும். ஹிந்துத்வ கலர் கண்ணாடி எனக்கு அவசியமில்லை. [ஏற்கெனவே சோடாபுட்டி. மைனஸ் மூணு.]
‘ஆர்க்கும் என் நோய் இது அறியலாகா – கார்க்கடல் வண்ணன் கைகண்ட யோகம் தடவத் தீரும்’ என்கிற ஆண்டாளுக்கே இம்மாதிரியான மனத்தடைகள் எதுவும் இல்லாதபோது தமிழ் ஹிந்துவுக்கு மட்டும் எங்கிருந்து வருகிறது என்பதுதான் புரியவில்லை.
பி.கு 1: இந்தக் கட்டுரையில் நான் குறிப்பிட்டிருக்கும் சில பாடல் வரிகள் எங்கெங்கே வருகிறது என்று சட்டென்று என்னால் சரியாகச் சொல்ல இயலாது.  ஆனால் கண்டிப்பாக ஆண்டாள் எழுதியவைதான். சந்தேகமில்லை. மிகச்சிறு வயதில், காஞ்சீபுரத்தில் பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் ஆதரவில் நடந்த ஒரு பாடசாலையில் சில காலம் படித்தேன். அப்போது அர்த்தமெல்லாம் தெரியாமல் ஒவ்வொரு வரியையும் ஆசிரியர் சொல்ல, திரும்ப மூன்று மூன்று முறை சொல்லி உருப்போட்டேன். அர்த்தம் இழந்து அவை மனத்துக்குள் தங்கிவிட்டன. மிகப்பல ஆண்டுகள் கழித்து – எழுத ஆரம்பித்த பிறகே ஆண்டாளும் இன்னபிறரும் அர்த்தமுடன் ஜீரணமானார்கள். இப்போது அரவிந்தனுக்காகச் சில வரிகளை மீளோட்டம் செய்து பார்த்து பொருத்தமான சிலவற்றை மட்டும் மேலே தந்திருக்கிறேன். புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு பார்த்தால் கண்டிப்பாக எந்தப் பாசுரம், எண் என்றெல்லாம் அடைப்புக்குறிகளுக்குள் தந்துவிடலாம். சோம்பல் தடுக்கிறது. ஆண்டாளிடம் இன்னும் ரசமான வரிகள் பல உண்டு. அவளை சற்றே ஆசுவாசமாக நினைவுகூர ஒரு வாய்ப்பளித்த அரவிந்தன் நீலகண்டனுக்கு நன்றி.
பி.கு. 2: //அவ்லானின் தெரசாவும் அரேபியாவின் ரபியாவும் யூதத்தின் உன்னதபாடல்களும் வெறும் ஃபோர்னோகிராபி அல்லது திறமையான கவித்துவமான ஃபோர்னோகிராபி எனலாமா? பருவத்தின் காம எழுச்சிக்கும் வயோதிகத்தின் காம ஏக்கத்துக்குமான வடிகால் எனலாமா? பாஸ்ரா பட்டணத்து ரபியாவின் பாடல்களில் எழும் வேட்கையை அராபிய எழுத்தாளன் எவனாவது ஃபோர்னோகிராஃபி என சொல்வானா? அல்லது அந்த தரத்தில் நான் ஃபோர்ன் எழுத இறைவன் அருள் தர வேண்டும் என சொல்வானா?// என்று அரவிந்தன் தனது கட்டுரையில் கேட்டிருக்கிறார். இவை நான் இதுவரை வாசித்தறியாதவை. எனவே வாசித்துவிட்டு பதில் சொல்லுகிறேன். புதிதாகப் படிக்கச் சில விஷயங்களைச் சுட்டிக்காட்டியமைக்குத் திரும்பவும் நன்றி.

எனது தேடாதே கிடைக்காது கட்டுரைக்குத்  தமிழ் இந்து தளத்தில் அரவிந்தன் நீலகண்டன் ஒரு நீண்ட எதிர்வினை ஆற்றியிருப்பதைக் கண்டேன். அரவிந்தனுக்கு முதலில் நன்றி சொல்லவேண்டும். நான் சாதாரணமாக எழுதிய கட்டுரையில் ஆண்டாள் தன்னிஷ்டத்துக்குத் தானாக வந்து விழ, மனிதர் ரிக் வேதம் தொடங்கி சூஃபி வரை உலகளந்து, இறுதியில் அந்தப் பத்து பைசா பெறாத கட்டுரைக்கு ஏதோ அரசியல் உள்நோக்கம் வேறு இருப்பதாகச் சொல்லிவிட்டார். இப்படியெல்லாமும் என்னைப் பெரிய ஆள் ஆக்கு என்று ஆண்டாள்தான் அவரிடம் மானசீகத்தில் சொல்லியிருக்கவேண்டும்.

அது நிற்க. ஆண்டாளை போர்னோகிராபி எழுதும் எழுத்தாளர் என்று நான் எங்கே சொன்னேன்? இது அபாண்டமல்லவா? ஆண்டாளின் சில வரிகளில் அழகான படுக்கையறைக் காட்சிகள் இருக்கின்றன. அந்தத் தரத்தில் படுக்கையறைக் காட்சியை இன்றுவரை வேறு யாரும் வருணித்ததில்லை என்றுதானே எழுதியிருந்தேன்?

ஆண்டாள் என்று பேசும்போது ஒரு படைப்பாளியாக அவர் எனக்கு முதலில் தெரிவதும், அரவிந்தனுக்கு பக்தி செய்து உய்தவராகத் தெரிவதும்தான் இங்கு வித்தியாசம், பிரச்னை.

தவிரவும் Porn என்பதை அரவிந்தன் பஞ்சமாபாதகத்தில் ஒன்றாகப் பார்க்கிறாரா என்றும் தெரியவில்லை. நான் அப்படிப் பார்க்கவில்லை என்பதைச் சொல்லிவிடுகிறேன். எழுத்தில் பல விதங்கள், பல ரகங்கள் உண்டு. எதையும் எழுதிப் பார்க்கலாம். எப்படியும் எழுதிப் பார்க்கலாம். எந்தத் தவறும் இல்லை. எழுத்து ரசமாக இருக்கிறதா, சரியாக இருக்கிறதா என்பது மட்டும்தான் என் அக்கறை. அந்தக் கட்டுரையிலும் அதைத்தான் சொல்லியிருந்தேன்.

ஆண்டாள் உதாரணம் ஏன் வந்தது என்பதற்கு இப்போது யோசிக்கும்போது ஒரு காரணம் தோன்றுகிறது. உயர்ந்த தரத்தில் எழுதும்போது எழுதப்படும் விஷயமும் உயர்வாகிறது என்பதைச் சுட்டிக்காட்டவே அது வந்தது என்றும் கொள்ளலாம் அல்லவா? எழுத்தால் எழுதுபவன் உயர்வதும் தாழ்வதும் போல, எழுதப்படும் விதத்தாலும் சாராம்சத்தின் உயர்வு தாழ்வு தீர்மானிக்கப்படக்கூடாது என்று யார் சொல்ல முடியும்?

எனக்கு ஆண்டாள் ஒரு கவிஞர். அவர் பெண் கவிஞரா, புனைபெயர் வைத்துக்கொண்டவரா, பாவை நோன்பு இருக்கிற வயதில் [எத்தனை வயது என்று கேட்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.] கொங்கை, அல்குல் எல்லாம் தெரிந்தவராக இருந்தாரா, அந்த வயதில் [ஞானப்பால் குடித்த கதை ஏதும் இல்லாவிட்டாலும்] அவருக்கு இலக்கண சுத்தமான விருத்தம் வசப்பட்டதா என்பதெல்லாம் முக்கியமே இல்லை. நாயக நாயகி பாவம் பற்றியும் எனக்குச் சந்தேகங்கள் இல்லை. ‘காமத்தையும் ஆன்மிகத்தையும் இணைக்கும் கவித்துவ-ஆன்ம முயற்சி’ பற்றியெல்லாம் கூட எனக்கு இரண்டாம் கருத்தே கிடையாது. ஆண்டாளின் பக்தி, ஆண்டாள் என்னும் கருத்துருவாக்கம் மூலம் வெளிப்படுத்த முனையும் தத்துவம் அனைத்தும் எனக்கு ஏற்புடையதே.

ஆனால் நான் குறிப்பிட்டது இவை எதுபற்றியும் அல்ல. ஆண்டாள் என்னும் எழுத்தாளர் எழுதி வைத்த ஒரு வரி. அதில் பொதிந்திருக்கும் அழகு. கிளுகிளுப்பான ஒரு விஷயத்தை எத்தனை அழகுமேவ அவர் எடுத்துரைக்கிறார் என்கிற ஒற்றைவரி எடுத்துக்காட்டு.

இது ஏன் இத்தனை கொதிப்படையச் செய்யவேண்டும் என்று புரியவில்லை. ஆண்டாள், கடவுளைக் காதலித்தாள் என்பதனாலேயே அவளது படுக்கையறை விவரிப்புகள் வரும்போது கண்மூடி, கைகூப்பிக்கொண்டுவிட வேண்டுமா? என்னால் முடியாது!

அவரைப் பிராயம் தொடங்கி ஆதரித்து எழுந்த தன்னுடைய தடமுலைகள் துவரைப் பிரானுக்கே என்று அவள் டிக்ளேர் செய்யும்போது எனக்கு விசிலடிக்கத் தோன்றினால் அரவிந்தனுக்கு ஏன் கோபம் வருகிறது?

‘ஆண்டாளின் பாசுரங்களில் தத்துவார்த்த குறியீடாக மாற்றுவதற்கு அப்பால், ஆண்டாள் கோபிகைகளின் உணர்ச்சிகளை தனதாக மாற்றினாள். அதன் மூலம் இறையுடன் கலந்தாள்.’ என்று அரவிந்தன் சொல்கிறார். மிகவும் சரி. சினிமா ஹீரோவின் சாகசங்களை லயித்துப் பார்த்துவிட்டு அவற்றைத் தானே செய்ததுபோல் மனத்துக்குள் கற்பனை செய்து மகிழும் எளிய பாமர உணர்வின் வெளிப்பாடல்லவா இது? ஆண்டாளின் ஹீரோ கண்ணன் என்பதால் மட்டும் ஃபார்முலா மாறிவிடுமா?

நாயகனுடன் டூயட் பாடும் நாயகியைத் தன்னுடன் ஆடிப்பாடுவது போல் ஓர் எளிய ரசிகன் கற்பனை செய்து கொள்வதற்கும், ஊடல் கூடல் உணர்தல் புணர்தலை நீடு நின்ற நிறைபுகழ் ஆய்ச்சியர் கோதை முன்கூற, அவள் தானே ஊடி, கூடி, உணர்ந்து, புணர்ந்து பாடி வைத்ததற்கும் என்ன வித்தியாசம்? அதை அனுபவித்துப் படித்தால் செய்த பாவங்களே தொலைந்துவிடும் என்கிறது பிரபந்தம். [பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை பாவமே.] நான் பிரபந்தத்தை நம்புகிறேன்! நீலகண்டனுக்கு நம்புவதில் என்ன பிரச்னை?

இருமை நிலையிலிருந்து இரண்டற்ற இறை நிலைக்குப் போவதற்கு நாயக நாயகி பாவம் ஆண்டாளுக்கு உதவியிருக்கிறது. அரவிந்தன் சொல்வதில் தவறொன்றுமில்லை. இறையுடன் கலத்தல் என்பதற்கும் காமத்தின் வழி மேற்கொள்ளும் பயணம்தான் அவளுக்கு அவசியமாகிறது. ராமகிருஷ்ண பரமஹம்சரும் இறையுடன் கலந்தவர்தான். அந்த ப்ராஜக்டைக் கையில் எடுப்பதற்கு முன்னால் தன் மனைவியைக் கூப்பிட்டு மந்திரித்து உட்காரவைத்துவிட்டுத்தான் வேலையை ஆரம்பிக்கிறார். மனைவியை இறைவியாகக் கருதி வழிபடுதல் ஒரு வழி என்பது போல, இறைவனை இணையாகக் கருதிக் கலப்பதும் இன்னொரு வழி.

இரண்டிலும் பிழையில்லை. இருவர் பாதையிலும் எனக்கு எந்த அபிப்பிராயமும் இல்லை. ஆனால், ‘பொங்கிய பாற்கடல் பள்ளிகொள்வானைப் புணர்வதோர் ஆசையினால் என் கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதூகலித்தாவியையாகுலஞ்செய்யும்’ என்று அவள் உளக் காமத்தின் உச்சநிலைக்குப் போவதை பக்தியுடன் தான் பார்க்க வேண்டுமா? வரிகளை ரசிக்கக் கூடாதா? இந்த மாதிரி ஏன் வேறு யாராலும் எழுத முடியவில்லை என்று ஆதங்கப்படக்கூடாதா? இதிலுள்ள பாலியல் சார்ந்த உளக்கிளர்ச்சியைச் சுட்டிக்காட்டினால் பாவமாகிவிடுமா? இல்லை பாவமே என்று அவளேதான் சர்டிபிகேட் கொடுத்துவிடுகிறாளே.

மாமுத்த நிதிசொரியும் மாமுகில்காள், வேங்கடத்து

சாமத்தின் நிறங்கொண்ட தாடாளன் வார்த்தையென்னே

காமத்தீ உள்புகுந்து கதுவப்பட்டு இடைக்கங்குல்

ஏமத்தோர் தென்றலுக்கிங்கு இலக்காய் நான் இருப்பேனே

என்ற வரியில் எனக்கு கண்ணன், ஆண்டாள், நாயக நாயகி பாவம், யோகம், இரண்டறக் கலத்தல் இன்னபிற அனைத்தும் அழிந்துவிடுகிறது. காமத்தீ உள்புகுந்து கதுவப்பட்ட ஒரு பெண் தன் உள்ளத்தை ஒளிக்காமல் வெளியிடும் துணிச்சலை வியக்கத் தோன்றவில்லை? அவளது எண்ணம், எத்தனை அற்புதமாகச் சொற்களுக்குள் தன்னைச் சொருகிக்கொண்டு வெளியே வருகிறது என்று வாய்பிளக்கத் தோன்றவில்லை? இப்படி ஒருத்தி எழுதியிருக்கிறாள், முடிந்தால் யாராவது முயற்சி செய்து பாருங்கள் என்று சொன்னால் அது ஆண்டாளை போர்னோகிராபி ரைட்டராக்குவதாகுமா? அரவிந்தன் மன்னிக்கவேண்டும், எழுத்தை எனக்கு எழுத்தாக மட்டுமே பார்க்கத் தெரியும். ஹிந்துத்வ கலர் கண்ணாடி எனக்கு அவசியமில்லை. [ஏற்கெனவே சோடாபுட்டி. மைனஸ் மூணு.]

‘ஆர்க்கும் என் நோய் இது அறியலாகா – கார்க்கடல் வண்ணன் கைகண்ட யோகம் தடவத் தீரும்’ என்கிற ஆண்டாளுக்கே இம்மாதிரியான மனத்தடைகள் எதுவும் இல்லாதபோது தமிழ் ஹிந்துவுக்கு மட்டும் எங்கிருந்து வருகிறது என்பதுதான் புரியவில்லை.

பி.கு 1: இந்தக் கட்டுரையில் நான் குறிப்பிட்டிருக்கும் சில பாடல் வரிகள் எங்கெங்கே வருகிறது என்று சட்டென்று என்னால் சரியாகச் சொல்ல இயலாது.  ஆனால் கண்டிப்பாக ஆண்டாள் எழுதியவைதான். சந்தேகமில்லை. மிகச்சிறு வயதில், காஞ்சீபுரத்தில் பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் ஆதரவில் நடந்த ஒரு பாடசாலையில் சில காலம் படித்தேன். அப்போது அர்த்தமெல்லாம் தெரியாமல் ஒவ்வொரு வரியையும் ஆசிரியர் சொல்ல, திரும்ப மூன்று மூன்று முறை சொல்லி உருப்போட்டேன். அர்த்தம் இழந்து அவை மனத்துக்குள் தங்கிவிட்டன. மிகப்பல ஆண்டுகள் கழித்து – எழுத ஆரம்பித்த பிறகே ஆண்டாளும் இன்னபிறரும் அர்த்தமுடன் ஜீரணமானார்கள். இப்போது அரவிந்தனுக்காகச் சில வரிகளை மீளோட்டம் செய்து பார்த்து பொருத்தமான சிலவற்றை மட்டும் மேலே தந்திருக்கிறேன். சில சொற்களில் – பதப்பிரிப்பில் பிழைகளும் வந்திருக்கலாம். மன்னிக்கவும். புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு பார்த்தால் கண்டிப்பாக எந்தப் பாசுரம், எண் என்றெல்லாம் அடைப்புக்குறிகளுக்குள் தந்துவிடலாம். சோம்பல் தடுக்கிறது. ஆண்டாளிடம் இன்னும் ரசமான வரிகள் பல உண்டு. அவளை சற்றே ஆசுவாசமாக நினைவுகூர ஒரு வாய்ப்பளித்த அரவிந்தன் நீலகண்டனுக்கு நன்றி.

பி.கு. 2: //அவ்லானின் தெரசாவும் அரேபியாவின் ரபியாவும் யூதத்தின் உன்னதபாடல்களும் வெறும் ஃபோர்னோகிராபி அல்லது திறமையான கவித்துவமான ஃபோர்னோகிராபி எனலாமா? பருவத்தின் காம எழுச்சிக்கும் வயோதிகத்தின் காம ஏக்கத்துக்குமான வடிகால் எனலாமா? பாஸ்ரா பட்டணத்து ரபியாவின் பாடல்களில் எழும் வேட்கையை அராபிய எழுத்தாளன் எவனாவது ஃபோர்னோகிராஃபி என சொல்வானா? அல்லது அந்த தரத்தில் நான் ஃபோர்ன் எழுத இறைவன் அருள் தர வேண்டும் என சொல்வானா?// என்று அரவிந்தன் தனது கட்டுரையில் கேட்டிருக்கிறார். இவை நான் இதுவரை வாசித்தறியாதவை. எனவே வாசித்துவிட்டு பதில் சொல்லுகிறேன். புதிதாகப் படிக்கச் சில விஷயங்களைச் சுட்டிக்காட்டியமைக்குத் திரும்பவும் நன்றி.

51 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற