திரையும் கதையும்

சிறந்த திரைக்கதைகள் என்று கமலஹாசன் அளித்த பட்டியலொன்றை பாஸ்டன் பாலாஜி வெளியிட்டிருக்கிறார். அது பற்றி ஆர்வி இங்கொரு குறிப்பு எழுதியிருக்கிறார். இதனை வைத்துக்கொண்டு விவாதிப்பதைவிட, ஒவ்வொருவரும் தமக்குச் சிறந்ததெனத் தோன்றும் திரைக்கதைகளைப் பற்றிப் பேசுவது பலன் தரும். எந்தத் தனிநபரின் ரசனையும் உலகப்பொதுவாக இயலாது. அனைவருக்கும் உண்டு, வேண்டுதல் வேண்டாமை.

சினிமாவை, பொழுதுபோக்காக அல்லாமல் தீவிரமாக கவனிக்கத் தொடங்கும் ஒவ்வொருவரும் தமக்கென இம்மாதிரி ஒரு பட்டியல் வைத்திருப்பார்கள். முற்றிலும் ரசனை சார்ந்து உருவாகும் அப்பட்டியல், பெரியவர்கள் சிபாரிசு செய்யும் பட்டியலுக்குச் சற்றும் தொடர்பின்றி இருந்தாலும் தன்னளவில் ஒரு முழுமையையும் அக விரிவையும் பெற்றிருக்கும்.

திரைப்படம் என்றில்லை. எந்த ஒரு கலைவடிவமும் ரசிகனின் கைகளுக்குச் சென்று சேர்ந்துவிட்டால், அவன் போடுவதுதான் மார்க். அவன் அளிப்பதுதான் தகுதி, தராதரம் எல்லாம். விமரிசகர்கள் பொருட்டில்லை, வாசிப்பவர் /காண்பவர் / கேட்பவர் யாரும் பொருட்டில்லை, ரசிப்பவர் முக்கியமில்லை, என் படைப்பின் தரம் எனக்குத் தெரியும் என்று சிலர் கருதலாம். அதிலும் பிழையில்லை. ஆனால் காலத்தின் முன்னால் எது ஒன்று நிற்கிறது என்கிற ஒரு புராதன அளவுகோல் இருக்கிறது. நாம் நூற்றாண்டு சரக்குகளின் பக்கமே போகவேண்டாம். சென்ற வருடம் வெளியான எத்தனை திரைப்படங்கள், நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் நமக்கு இப்போது நினைவிருக்கின்றன என்று ஒரு நிமிடம் யோசித்துப் பார்த்தாலே போதும். புரிந்துவிடும். ரசிகர்கள் பெருவாரியாக விரும்புகிற திரைப்படங்களுக்கு ஒரு கூடுதல் சலுகை கிடைக்கும். அவர்கள் நாலு பேருக்கு எடுத்துச் சொல்வது. இதைப் பார். நன்றாக இருக்கிறது. அதைப் பார்க்காதே. திராபை.

எனக்கு சினிமா பிடிக்கும். எத்தனை பிடிக்கும் என்றால் ஃப்ளூயிட் மெக்கானிக்ஸ் தேர்வு தினத்தன்று, ஆப்சண்ட் விழுந்தாலும் பரவாயில்லை; அரியர்ஸ் எழுதிக்கொள்ளலாம் என்று அன்று ரிலீஸான நாடோடித் தென்றலை அன்றே பார்த்துவிட பறங்கிமலை ஜோதிக்குச் சென்ற அளவுக்குப் பிடிக்கும்.

தொடக்கம் முதலே எனக்கு வெகுஜன சினிமா, உலக சினிமா பாகுபாடெல்லாம் இருந்ததில்லை. இரண்டு தரப்பிலும் தொடர்ந்து பார்ப்பேன். இரண்டிலும் பிடித்தவை, பிடிக்காதவை அநேகம். இந்திப் படங்கள் அதிகம் பார்த்ததில்லை. எனக்கு இங்கிலீஷ் புரியுமளவு இந்தி புரியாது என்பதும், இந்தி புரிந்தால் மட்டுமே இந்தி சினிமாவை ரசித்துப் பார்க்க முடியும் என்னும்படியாகத்தான் அந்தத் திரைக்கதைகள் பல எழுதப்பட்டிருக்கின்றன என்பதும் இதற்கான காரணங்கள்.

ஆனால் ஒரு நல்ல திரைப்படத்துக்கு மொழியின் துணை அநாவசியம். மொழிப் பிரச்னையில்லாமல், ம்யூட் செய்துவிட்டுப் பார்த்தாலும் புரியக்கூடிய, அள்ளிக்கொள்ளக்கூடிய படங்களே நல்ல திரைக்கதைகளைக் கொண்டவை என்பது எனக்கு நான் வைத்துக்கொண்ட எளிய அளவுகோல். மிகப்பல ஆண்டுகளுக்கு முன்னர் புதுதில்லி சர்வதேசத் திரைப்பட விழா ஒன்றில் பார்த்த ‘கேபே’ என்கிற இரானியத் திரைப்படம் கிட்டத்தட்ட ஒருவாரம் அதிசயத்தைவிட்டு அகலாமல் என்னைக் கட்டிப்போட்டிருந்தது நினைவுக்கு வருகிறது.

ஆனால் பெரும்பாலான தமிழ்ப் படங்கள் இந்திப் படங்களைப் போலவே இன்றுவரை நாடக வடிவின் திரைப்பிரதியாகவே இருக்கின்றன. திரைக்கதை என்பது வசனங்கள் நிறைந்த காட்சியின் எழுத்துப் பிரதி என்பதாகவே பலபேர் நம்புகிறார்கள், செயல்படுத்தியும் வருகிறார்கள்.

என் நண்பர் ஒருவர் உதவி இயக்குநர். அவர் முன்னர் வேலை பார்த்த ஒரு பெரிய இயக்குநரைப் பற்றிச் சொல்லும்போது அடிக்கடி ஒரு விஷயத்தைத் தமாஷாகக் குறிப்பிடுவார். ‘யோவ் அடுத்தவாரம் ப்ரொட்யூசருக்குக் கதை சொல்லணும்யா. இன்னும் டயலாகே ரெடியாகல.’ சினிமா என்பது வசனம் என்பது அந்தப் பெரிய இயக்குநரின் தீர்மானமான கருத்து. இன்றைக்கும் அவரது படங்களில் அதுவே பிரதானம். ஆனாலும் என்ன? அவரும் ஒரு சூப்பர்ஹிட்  டைரக்டர்தான். சினிமா என்பது வசனமும் கூட!

எனக்குத் தமிழில் மிகவும் பிடித்த இயக்குநர், பாக்யராஜ். அவரது படங்கள் அனைத்தும் நாடக வடிவிலேயே எடுக்கப்பட்டிருந்தாலும், அவரது திரைக்கதை நேர்த்தி பிரமிப்பூட்டக்கூடியது. ஒவ்வொரு காட்சியும் தனித்தனியே ஒரு சிறுகதை போலிருக்கும். தொடுக்கும் நேர்த்தியில் அதுவே ஒரு நாவலாக விரியும். பாக்யராஜின் படங்களில் வசனம் நிறைய இருக்கும் என்றாலும், அவர் வசனத்தை நம்பும் இயக்குநரல்லர். திரைக்கதைதான் அவரது பலம். சொல்ல வரும் விஷயம் எங்கே சரியாகப் புரியாமல் போய்விடுமோ என்கிற பதற்றமே அவரை அதிக வசனம் எழுத வைக்கிறது என்று ஒவ்வொரு படத்திலும் எனக்குத் தோன்றும்.

தாவணிக் கனவுகள் என்று நினைக்கிறேன். [தான். இப்போது சந்தேகமில்லை.] கதாநாயகன், தனது சகோதரிகளுடன் சினிமா பார்க்க தியேட்டருக்குப் போவான். உள்ளே நுழைந்ததும் பெட்டிக்கடைக்குச் சென்று நாலணாவை எடுத்து நீட்டுவான். கடைக்காரன் ஒரு மாதிரி பார்த்துவிட்டு என்ன வேணும் என்பான். கதாநாயகன், ‘அஞ்சு அஞ்சு பைசா வேணும்’ என்று கேட்பான்.

அந்தக் கணத்துக்கு அது நகைச்சுவைக் காட்சி. ஆனால் அடுத்தக் காட்சியில் அதுவே உறையச் செய்துவிடும். படத்தில் ஏடாகூடமாக ஏதாவது காட்சி வந்தால் அஞ்சு காசைக் கீழே போட்டுவிட்டு சகோதரிகளைக் குனிந்து தேடச் சொல்வான் கதாநாயகன். வயது வந்த தங்கைகள். திருமண வயது வந்தும் அதற்கு வழியில்லாதவர்கள். ஒரு  ‘பொறுப்புள்ள’ டிபிகல் லோயர் மிடில் க்ளாஸ் அண்ணனாக லட்சணமாக அவன் செய்யக்கூடியது அதுதான்!

ஆனால் துரதிருஷ்டவசமாக அப்படியான ஓர் ஏடாகூடக் காட்சியில் அவனே லயித்துவிட, கடைசித் தங்கை நினைவூட்டுவாள், ‘அண்ணே, அஞ்சு பைசா போடல?’

அண்ணன் தங்கை உறவு, அதிலுள்ள நெருக்கம், பாசப்பிணைப்பு, பொறுப்புகள், கையாலாகாத்தனம், வாழ்வின் அதி உன்னத அபத்தக் கணங்கள் பற்றிய மௌன விமரிசனம் அனைத்தும் அந்த ஒரு ஷாட்டில் வெளிப்பட்டுவிடும்.

பாக்யராஜின் தோல்வியுற்ற படங்களில்கூட இம்மாதிரியான அழகிய காட்சிகள் ஏராளமாக இருக்கும். படத்தின் தோல்விக்கு என்ன காரணம் என்பதைக் கூட அவரது திரைக்கதையை மனத்துக்குள் ஒருமுறை திரும்ப ஓட்டினாலே புரிந்துவிடும். ரசிகர்களால் ஓடுவது, பாடல்களால் ஓடுவது, டெக்னிக்குகளால் ஓடுவது, பிரம்மாண்டங்களால் ஓடுவது, ஸ்டார் வேல்யுவினால் ஓடுவது, மசாலாவினால் ஓடுவது என்றெல்லாம் இல்லாமல் திரைக்கதையால் மட்டுமே ஓடிய – திரைக்கதையால் மட்டுமே ஓடாத படங்களைத் தமிழில் தந்த ஒரே இயக்குநர் அவர் என்பது என் அபிப்பிராயம்.

பாக்யராஜுக்குப் பிறகு வெகுஜன சினிமாவில் சரியான திரைக்கதைக்காக அதிகம் மெனக்கெடுபவர் கே.எஸ். ரவிகுமார். எஸ்.பி. முத்துராமன் வரையிலான காலக்கட்டத்துக்குப் பிறகு கமலஹாசனுக்குப் பெரும்பாலான வெற்றிப்படங்களை அளித்தது ரவிகுமார்தான் என்று நினைக்கிறேன். கிரேசி மோகன் மேலோங்கித் தெரியும் அவரது பல நகைச்சுவைப் படங்களிலேயே ரவிகுமார் இயக்கியவை வெற்றிப்படங்களாகவும் பிறர் இயக்கியவை அத்தனை பெரிய வெற்றியை அளிக்காதவையாகவும் இருப்பதை சினிமா புள்ளிவிவரம் அறிந்தவர்கள் எடுத்துச் சொல்லலாம்.

ரவிகுமாரின் திரைக்கதைகள் பாக்யராஜ் பாணித் திரைக்கதைகள் அல்ல. இவரும் கமர்ஷியலாகச் சிந்திப்பவர்தான். கேளிக்கை என்பதுதான் பிரதானம். ஆனால் ஒவ்வொரு காட்சியிலும் ஒரு துளி புத்திசாலித்தனம் இருக்கும்.  அஜித்தை வைத்து அவர் இயக்கிய வரலாறு என்ற படத்தை, காட்சி காட்சியாக நிறுத்தி, பார்த்தை அப்படியே எழுதிப் பார்த்திருக்கிறேன். மிக நீளமான, ஏராளமான முடிச்சுகள், சஸ்பென்ஸ் கொண்ட அந்தக் கதையை ஓரடி கூட போரடிக்காதபடிக்கு எழுதியிருப்பார். இத்தனைக்கும் பாக்யராஜ் செய்கிற சிலிர்ப்பூட்டக்கூடிய சிறுகதை வடிவமெல்லாம் ரவிக்குமாரிடம் கிடையாது. அவரது தோல்விப்படங்களுள் ஒன்றான ‘முத்துக்குளிக்க வாரீகளா’ நல்ல கமர்ஷியல் திரைக்கதை வடிவத்துக்கு ஓர் எடுத்துக்காட்டு. அந்தப் படம் தோற்றதற்குக் காரணம், ரவிக்குமாரே முக்கிய வேடத்தில் நடித்தது. தசாவதாரத்தை ரவிகுமார் தவிர்த்து வேறு யாராவது இயக்கியிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று எண்ணிப்பார்க்கவே கலவரமாக இருக்கிறது.

இன்றைக்கு சினிமாவில், பழைய காலம்போல, பக்கம் பக்கமாகப் பேசவேண்டுமென்று யாரும் நினைப்பதில்லை. நாங்கள் சமீபத்தில் வெளியிட்ட மிஷ்கினின் சித்திரம் பேசுதடி திரைக்கதை நூலையும் விரைவில் வெளியிடவிருக்கிற சுப்ரமணியபுரம், நாடோடிகள், பசங்க ஆகிய படங்களின் திரைக்கதைகளையும் படித்துப் பார்க்கும்போது தமிழ்சினிமா இன்னும் கொஞ்ச காலத்துக்கு சுபீட்சமாகவே இருக்கும் என்று தோன்றுகிறது.

சுவாரசியத்துக்குக் குறைவில்லாமல், கேளிக்கை அம்சங்களில் பழுதில்லாமல், அதே சமயம் அழுத்தமான ஒரு கதையை, ஒரு செய்தியை, குறைவான சொற்களில், பெரிதும் காட்சி ரூபத்தில் நேர்த்தி குன்றாமல் தருகிற திரைக்கதைகள் நிறையவே வருகின்றன.

ராதாமோகனின் மொழி, அபியும் நானும் இரண்டுமே சமீபத்தில் வெளிவந்தவற்றுள் நல்ல திரைக்கதைகளாக எனக்குத் தோன்றின. அபி தோற்றதற்கு ராதாமோகன் காரணமில்லை. அபிதான் என்பது என் அபிப்பிராயம்! தவிரவும், ஒரு கட்டத்துக்குப் பிறகு பிரகாஷ்ராஜின் குணசித்திரம் ஒரு கார்ட்டூன் போல் மாறிவிடுவதும் அந்நியப்பட்டுவிடுகிறது. ஆனால் திரைக்கதை பயில இவரது இந்த இரண்டு படங்களுமே வெகுவாக உதவும்.

கீழே என்னைக் கவர்ந்த சில தமிழ்ப் படங்களின் திரைக்கதைகளைப் பட்டியலிட்டிருக்கிறேன். நல்ல படம், சிறந்த படம், மோசமான படம், ஓடியது, ஓடாதது, குப்பை, கோமேதகம் என்று படம் பற்றிய மொத்த அபிப்பிராயத்தை இந்தப் பட்டியலுக்கு தயவுசெய்து கொண்டுவராதீர்கள். இவை, எடுத்துக்கொண்ட கதைக்கு வலு சேர்க்கும் விதமாக எழுதப்பட்ட விறுவிறுப்பான, சுவாரசியமான திரைக்கதைகள்  என்று எனக்குத் தோன்றுகிறது. அவ்வளவே. இவை எல்லோருக்கும் பிடிக்கும் என்று சொல்லமுடியாது. அது அவசியமும் இல்லை. இம்மாதிரி ஒவ்வொருவரும் ஒரு பட்டியல் தயாரித்தால் ஒரு தோராய சிறந்த திரைக்கதைகள் பட்டியலை அதிலிருந்து நாம் உருவாக்க இயலும்.

1. சிந்து பைரவி [கே.பாலசந்தர்] 2. மறுபடியும் [ பாலுமகேந்திரா] 3. இருவர் [மணி ரத்னம்] 4. இது நம்ம ஆளு [ கே. பாக்யராஜ்] 5. ராசுக்குட்டி [ கே. பாக்யராஜ்] 6. டார்லிங் டார்லிங் டார்லிங் [கே. பாக்யராஜ்] 7. ஹே ராம் [கமல் ஹாசன்] 8. குருதிப்புனல் [கோவிந்த் நிஹலானி – கமல்ஹாசன்] 9. மொழி [ ராதா மோகன்] 10. அபியும் நானும் [ராதா மோகன்] 11. சுப்பிரமணியபுரம் [சசிக்குமார்] 12. நாடோடிகள் [ சமுத்திரக் கனி] 13. முதல் மரியாதை [பாரதிராஜா] 14. பாய்ஸ் [ ஷங்கர்] 15. நாட்டாமை [ கே.எஸ். ரவிக்குமார்] 16. கோபாலா கோபாலா [ ஆர். பாண்டியராஜன்] 17. பாட்ஷா [ சுரேஷ் கிருஷ்ணா] 18. ஆத்மா [ பிரதாப் போத்தன்] 19. நள தமயந்தி [ கமல் ஹாசன்] 20. சூரிய வம்சம் [ விக்கிரமன்] 21. சிவகாசி [ பேரரசு] 22. போக்கிரி [ பிரபுதேவா] 23. தூள் [ தரணி] 24. சென்னை 28 [வெங்கட் பிரபு] 25. பூவெல்லாம் கேட்டுப்பார் [ வஸந்த்]

சற்றும் யோசிக்காமல் மனத்தில் மேலோங்கி வந்த முதல் 25 திரைக்கதைகளின் பெயர்களை மட்டுமே குறிப்பிட்டிருக்கிறேன். யோசித்தால் இன்னும் பல சேரும். அதை நீங்களும் செய்யலாம்.

21 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற