சரஸ்வதி பூஜை

ஐயாசாமி ஐயாசாமி கொய்யா தந்தீங்க என்று திரேதா யுகத்தில் நான் முதல் முதலில் எழுதத் தொடங்கிய போதிலிருந்தே எனக்கு சரஸ்வதியைப் பிடிக்கும். சரஸ்வதி கடாட்சமிருந்தால்தான் எழுத வரும் என்று பெரியவர்கள் சொல்லியிருந்தது ஒரு காரணம். எழுத வந்தது இன்னொரு காரணம்.

மற்றப் பண்டிகைகளைக் கொஞ்சம் முன்னப்பின்ன கவனித்தாலும் சரஸ்வதி பூஜையை விடமாட்டேன். ரொம்ப சிரத்தையாகப் புத்தக அலமாரிகளை ஒழுங்கு செய்து, தூசு தட்டித் துடைத்து, மாவிலை கட்டி, சந்தன பேக்கிரவுண்டில் குங்குமப் பொட்டு வைத்து, துவாபர யுகத்தில் நான் வாசித்துக்கொண்டிருந்த வீணையை எடுத்துத் துடைத்து, அதற்கும் அலங்காரம் செய்து வைத்து, தெரிந்த மந்திரங்களை முணுமுணுத்தபடி பூஜை முடித்து விழுந்து சேவிக்கும் வரை கொஞ்சம் டென்ஷன் இருக்கும்.

லா.ச. ராமாமிருதம் அவர்கள் ஒரு சமயம் நவராத்திரி ஒன்பது நாளும் விரதமிருந்து பூஜை செய்வது எழுத்தாளனுக்கு ரொம்ப நல்லது என்று சொன்னார். ஆசைதான். ஆனால் எனக்கு அத்தனை சிரத்தை கூடி வராது. எழுதும் பணி ஒன்றைத்தவிர எதையும் என்னால் ஒழுங்காகச் செய்ய முடியாது. அதாவது, கவனம் குவியாது. எனவே ஒன்பது நாள் முடியாததை ஒருநாளாவது முயன்று பார்க்கிற ஆசை.

மற்ற பல தெய்வங்களோடு ஒப்பிடுகையில் சரஸ்வதிக்கு வயது அதிகம். ரிக்வேத காலத்திலிருந்தே குறிப்பிடப்படுகிறவள். இன்றைக்குப் பிரச்னைக்கு உள்ளாகியிருக்கும் அப்துல் கலாம் பிராண்ட் ஃப்யூஷன் குண்டு வெடித்த போக்ரன் பக்கம் ஓடிக்கொண்டிருந்தபோது எப்போதோ பூமிக்கு அடியில் அவள் மறைந்துவிட்டதாகச் சொல்வார்கள். போக்ரன் பூமியின் அடிப்பக்கம் அக்காலம் தொட்டே மர்மம் சுமந்து வந்திருக்கிறது.

அது நிற்க. சிறு வயதில் சரஸ்வதி பூஜை, ஆர்வமேற்படுத்தும் பண்டிகையாக எனக்குத் தென்பட்டதன் காரணம், அன்றைக்கு முழுக்கப் படிக்க வேண்டாம் என்பதுதான். படிப்பின் கடவுளுக்கு ஒரு நாள் விடுமுறை விடச் சொல்லி என் தலைமை ஆசிரியர் அப்பா அறிவித்துவிட்டார். நாளெல்லாம் பாடப்புத்தகத்தைத் தொடவேண்டாம் என்கிற தகவல் மிகச் சிறிய வயதில் எத்தனை மகிழ்ச்சியளித்தது என்பதை விவரிக்கவே முடியாது.

இன்றைக்குவரை ஏன் சரஸ்வதி பூஜையன்று படிக்கக் கூடாது என்றார்கள் என்பதற்கு எனக்கு ஏற்கும்படியான பதில் கிடைத்தபாடில்லை. தி. ஜானகிராமன்கூட அம்மா வந்தாளை இதைச் சொல்லித்தான் ஆரம்பிப்பார். ஆனால் அப்புவுக்கு அன்றைக்கு ஒருவரியாவது படித்துவிட வேண்டும் என்று அடங்காத ஆர்வம் வரும் என்பார். எனக்கு அப்படியெல்லாம் வந்ததில்லை. பள்ளி நாள்களில் விடுதலைச் சந்தோஷம். எழுதத் தொடங்கியபிறகு, ஒருநாளாவது எழுதாதிருந்து பார்ப்போம் என்கிற ஆர்வம்.

எப்படியும் நாளைக்கு நான் படிக்க மாட்டேன். எழுத மாட்டேன். என் கம்ப்யூட்டர் பக்கம்கூடப் போகிற உத்தேசமில்லை.

நான் சொல்லிக்கொடுத்து, சொக்கனும் இந்த வழக்கத்தைச் சில வருடங்களாக மிகத் தீவிரமாகக் கடைப்பிடிக்கிறான். இதென்ன அபத்தம், சரஸ்வதிக்கு நாம் ஓய்வு கொடுப்பதாவது என்று எனக்குத் தோன்றாததுபோல அவனுக்கும் தோன்றவில்லை என்பதில் எளியதொரு சந்தோஷம் இருக்கவே செய்கிறது. வருஷத்தில் முன்னூத்தி அறுபத்தி நாலு நாள்கள் பகுத்தறிவோடு இருந்தால் போதாது?

மற்றத் துறையினருக்கு எப்படி என்று எனக்குத் தெரியாது. பொதுவாகவே எழுதுகிறவர்களுக்கு அடிமனத்தில் ஒரு பயம் எப்போதும் இருக்கும். அது பயமா, பதற்றமா என்று சரியாகத் தெரியவில்லை. விவரிக்க முடியாததொரு மெல்லிய கலவர உணர்ச்சி எனலாமா? ம்ஹும். இதுகூடப் பொருத்தமாக இல்லை. அடுத்த வரி குறித்த நிச்சயமின்மை உருவாக்கும் அமைதியின்மை என்று வேண்டுமானாலும் சொல்லலாம். வெளியில் எத்தனை ஆர்ப்பரித்தாலும் எல்லா எழுத்தாளர்களும் உள்ளுக்குள் கன்றுக்குட்டிகள்தான். இதில் எனக்கு சந்தேகமே இல்லை.

இதனாலும் எழுத்துக் கடவுளின் திருநாள் முக்கியத்துவம் கொண்டதாகிவிடுகிறது. இது ஒரு மட்டரகமான சுயநலம் என்றுகூடத் தோன்றியிருக்கிறது. பாதகமில்லை. கடவுளுடனான எனது உறவு பெரும்பாலும் பேரங்களாலேயே தீர்மானிக்கப்பட்டு வந்திருக்கிறது. எதிர்பார்ப்புகளற்ற பரிபூரண பக்திக்கு இன்றைய தினம் வரை மனம் பக்குவப்படவில்லை. சொல்லிக்கொள்ளச் சற்று அவமானமாக இருப்பினும், இதற்கும் காரணம் நானில்லை. என்னை இப்படிச் சமைத்து வைத்ததும் அவனேதான் என்று பழியைத் தூக்கிப் பரமன்மேல் போடு.

இன்றைக்கு அலுவலகத்தில் கோலாகலமான சரஸ்வதி பூஜை. எடிட்டோரியலில் என்னோடு சேர்த்து இரண்டு மூன்று பேரைத் தவிர பிறர் அனைவரும் சார்வாக மகரிஷியின் வழித்தோன்றல்கள். பூஜையல்ல; பிரசாதமே பண்டிகை என்பதில் தெளிவாக இருப்பவர்கள். ஒவ்வொரு சரஸ்வதி பூஜை தினத்தன்றும் எனக்கு வருகிற பதற்றத்தை ரசித்துக் கிண்டல் செய்பவர்கள். எனக்கே குழந்தைத்தனமாகத்தான் இருக்கும். ஆனாலும் வார்ப்புகள் எடிட் செய்ய இயலாதவை. வேண்டுமானால் ஒன்று செய்யலாம். தூக்கிப் போடலாம்.

யோசித்துப் பார்த்தால் கொஞ்சம் வியப்பாகத்தான் இருக்கிறது. தனிப்பட்ட முறையில் மதத்துக்கோ சடங்குகளுக்கோ நான் முக்கியத்துவம் அளிப்பவன் அல்லன். பண்டிகைகளையும் விடுமுறை என்கிற அளவில் மட்டும் கொண்டாடக்கூடியவனாகவே இருந்துவந்திருக்கிறேன். அப்பாவுக்காக ஆவணி அவிட்டம், அம்மாவுக்காகக் கிருஷ்ண ஜெயந்தி அனைவருக்காகவும் தீபாவளி, அக்கார அடிசிலுக்காகப் பொங்கல் திருநாள் என்று கொண்டாடிவிட்டுப் போவதில் எனக்கு எவ்விதமான மனச்சிக்கலும் எப்போதும் இராது. எனது கடவுள் ஒருபோதும் என்னை மதவாதியாக இருக்கச் சொல்லி வற்புறுத்துவதில்லை. நிபந்தனைகளற்ற, நிர்ப்பந்தங்களற்ற, கட்டளைகள், கேள்விகள், அச்சுறுத்தல்களற்ற ஒரு மாதிரியான உறவு அது. நல்லுறவுதான். அதில் சந்தேகமில்லை. என்ன ஒன்று, தண்ணி தெளித்து விடப்பட்ட நல்லுறவு.

பலநாள் கடவுளுக்கு எதிரான வாதங்களை நானே யோசித்து யோசித்து எழுதிப் பார்த்து மூடி வைத்துவிட்டுப் படுத்துவிடுவதுண்டு. அவன் கோபித்துக்கொள்வதில்லை. மவனே உன்னை கவனிச்சிக்கற விதத்துல கவனிச்சிக்கறேன் என்று கறுவிக்கொண்டு பழிவாங்கியதில்லை. எப்போதும் என் தகுதிக்கு அதிகமாகத்தான் அளித்து வந்திருக்கிறான். எதிலும். எல்லாவற்றிலும். அடிப்படையில் இந்த எண்ணம் மிக வலுவாக இருப்பதனாலேயே எனது அத்தனை அடாவடிகளையும் அவன் சகித்துக்கொள்கிறான் போலிருக்கிறது என்று அதற்கும் நானே ஒரு தீர்வு தந்துவிடுவது வழக்கம்.

எதற்குச் சொல்ல வந்தேன்? ஆ, சடங்குகள். சரஸ்வதி பூஜை. மற்றப் பண்டிகைகள் அனைத்தையும் மற்றவர் விருப்பத்துக்காகக் கொண்டாடினாலும் என் பிரத்தியேக ஆர்வத்துடன் நான் ஈடுபடும் ஒரே பண்டிகை இதுதான். உட்கார்ந்து ஒரு மணிநேரம் பாராயணம் செய்வதற்கு அவளுக்கு நிறைய சுலோகங்கள் இல்லை [அல்லது எனக்குத் தெரியாது] என்பது ஒருவேளை காரணமாயிருக்குமோ? காசு கொடுக்கும் சாமிகளுக்கு மூலைக்கு மூலை கோயில்கள். கல்வி கொடுப்பவளுக்கு நாம் எத்தனை பிசுனாறித்தனம் காட்டியிருக்கிறோம் என்கிற ஆதங்கம் காரணமா? 364 நாள்கள் என் கடவுள் எனக்கு ‘அவன்’ தான். இந்த ஒரு நாள் மட்டும்தான் பெண் ரூபத்தில் தொழத் தோன்றுகிறது என்பது காரணமா? அதனால்தான் சடங்கு என்று பிறருக்குத் தோன்றக்கூடியவை எல்லாம் அவசியமான அலங்காரம் என்று எனக்குத் தோன்றுகிறதா? அதிகக் கட்டுக்கதைகள் இல்லாத கடவுள். எளிமையானவள். பாலும் தேனும் பாகும் பருப்பும் காட்டிவிட்டால் போதும். சங்கத் தமிழ் மூன்றும் தந்துவிடுவாள்.

நிஜமான நாத்திகவாதிகள்மீது எப்போதும் எனக்குச் சிறு பொறாமை உண்டு. நான் முன்னர் குறிப்பிட்ட அந்த விவரிக்க இயலாத அச்ச உணர்வு அவர்களுக்கு இருக்கவே இருக்காதா? அல்லது தன்னம்பிக்கை ஒன்றே அதனை வெல்லப் போதுமானதா? விழிப்புணர்வுடன் யோசித்துப் பார்க்கிறேன். எனது தன்னம்பிக்கையும் விவரிக்க இயலாததுதான். மிகவும் பிரம்மாண்டமானதும்கூட. ஆனால் அந்த உணர்வாக எனது கடவுளேதான் வந்து அமர்கிறான் என்று சர்வநிச்சயமாகத் தோன்றிவிடுகிறது.

நாளைக்கு, கல்விக் கடவுளுக்குப் பிறந்தநாள். முழுநாளும் எழுதப் போவதில்லை. படிக்கப்போவதில்லை. முழுநாளும் துதித்துக்கொண்டிருப்பேன் என்று பொய்சொல்லவும் போவதில்லை. அவளுக்கு ஐந்து நிமிடங்கள் போதும். மிச்ச நேரம் டிவி பார்க்கலாம். ஊர் சுற்றலாம். படுத்துத் தூங்கலாம். என்னவும் செய்யலாம்.

மூன்றில் இரண்டு பழுதானாலும் ஒரு தமிழை நிச்சயம் அவள் ஒழுங்காகக் கொடுத்துவிடுவாள். அதிலெனக்கு சந்தேகமில்லை.

Happy Birthday, Saraswathi!

26 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற