ருசி

சென்ற வருடம் நாரத கான சபாவில் ஞானாம்பிகா கேடரிங் கிடையாது. நிறுவனத்தில் பெரிய அளவில் ஏதோ திருடு போய்விட, டிசம்பர் சீசனில் அவர்கள் கலந்துகொள்ளவில்லை என்று நண்பர் ஜே.எஸ். ராகவன் சொன்னார். ஆனாலும் அலுவலகத்துக்குப் பக்கம் என்பதால் ஒரு நாள் சாப்பிட்டுப் பார்க்கப் போயிருந்தேன். பிடிக்கவில்லை. வேறு யாரோ. சனியன் பிடித்த சூர்யாஸ் சுவைதான் அதிலும் இருந்தது.

இந்த வருடம் ஞானாம்பிகா திரும்ப வந்துவிட்டது. நேற்று மாலை நண்பர்களுடன் டிபன் சாப்பிடச் சென்றிருந்தேன். [குங்குமம் பொறுப்பாசிரியர் வள்ளிதாசன் ஐம்பது ரூபாய் லஞ்ச் சாப்பிட்டுவிட்டுப் போட்டிருந்த பட்டியல் இங்கே. ]நல்ல கூட்டம். நல்ல ஏற்பாடு. நல்ல ருசி. டிரை ஃப்ரூட் அல்வாவும் ரவா தோசையும் காப்பியும் சகாய விலையில் ஜோராக இருந்தன. பத்து ரூபாய்க்குப் பல சிற்றுண்டிகள் கிடைக்கின்றன. ஆனால் எல்லாம் ஒவ்வொன்று. மங்களூர் போண்டா பத்து ரூபாய் என்று பார்த்துவிட்டு, ஒரு ப்ளேட் இத்தனை மலிவா என்று வியந்தபடி ஆர்டர் செய்தால், எலுமிச்சம்பழ அளவில் ஒரே ஒரு உருண்டை கொண்டுவந்து பேப்பர் ப்ளேட்டில் வைக்கிறார்கள். எனவே கவனமாக ஆர்டர் செய்யவேண்டும்.

சாப்பிட்டுவிட்டு வெளியே வருவோருக்கு வெற்றிலை, சீவல் வகையறாக்கள் வைத்திருக்கிறார்கள். மாமாக்களும் மாமிகளும் சந்தோஷமாக மென்றபடி கச்சேரி கேட்கப் போகிறார்கள். பக்கத்திலேயே வைக்கப்பட்டிருக்கும் ஒரு புக்லெட் பலர் கண்ணில் படவில்லை என்பதை கவனித்தேன். இத்தனைக்கும் இலவசம்.

Neighbourhood Music and Health Guide என்ற பெயரில் மொபைல் போன்களுடன் வழங்கப்படும் பயனாளர் கையேடு சைசில் குட்டியாக, குண்டாக, மழமழவென்று இருக்கிற இந்தப் புத்தகத்தில் சில சுவாரசியங்கள் இருக்கின்றன.  அரைகுறை கர்நாடக சங்கீத ரசிகர்கள், வித்வான் எதையோ ஒன்று ஆரம்பிக்க, இவர்கள் என்னமோ ஒரு ராகத்தை நினைத்துக்கொண்டு, அதுதான் இது என்று அக்கம்பக்கத்தில் ஆணித்தரமாக அடித்துப் பேசாதிருக்க வசதியாகச் சுமார் இரண்டாயிரம் கீர்த்தனைகள் என்ன ராகம், யார் இயற்றியது என்று வரிசையாகத் தந்திருக்கிறார்கள். ஆங்காங்கே நிறைய ஜோக்குகள் [ “Sorry sir no space inside for parking your car”, “why the entire space is empty Inside!”, “That is reserved for artists’s vehicles.” – போர்டில் ஜுபின் மேத்தா கச்சேரி], இசைத் துணுக்குகள், தகவல்கள் என்று ஒரு பாதி சங்கீதமாக இருக்கிறது.

நூலாசிரியர் டாக்டர் என்பதால் [டாக்டர் ஆர். சந்திரசேகரன்] இன்னொரு பாதியில் நிறைய மருத்துவக் குறிப்புகள். ஜலதோஷத்தில் ஆரம்பித்து பைபாஸ் சர்ஜரி வரை டாக்டருக்கு என்னென்ன தெரியுமோ எல்லாவற்றைப் பற்றியும் ஜோராக ஏகப்பட்ட தகவல்கள் கொடுத்திருக்கிறார். காப்பி நல்லதா கெட்டதா, பூண்டு சாப்பிடுவதால் என்ன பயன் [‘I said Iam on a garlic diet. So far I have lost 5 pounds and 12 friends’ ] கொலஸ்டிரால் குறைக்கும் வழிகள், நிறைய தண்ணீர் குடிக்கவேண்டியதன் அவசியம் இன்னபிற.

கச்சேரிகளுக்கு வருகிற அத்தனை பேரும் வியாதியஸ்தர்களா என்பதல்ல. இம்மாதிரியான வினோத காக்டெயில் புத்தகங்களை இம்மாதிரி இடங்களில் மட்டுமே காணமுடியும். கையடக்க அளவில் இருநூறு பக்கங்களுக்கு மேல் உள்ள புத்தகம் என்றாலும் விறுவிறுவென்று ஒரு மணிநேரத்தில் படித்துவிட முடிகிறது.

நாரத கான சபாவுக்குப் போனால் – என்னைப்போல் கச்சேரிக்காக அல்லாமல் கேண்டீனுக்காகவே என்றாலும் – மறக்காமல் இந்த இலவசப் புத்தகத்தைக் கேட்டு வாங்கிக்கொண்டு செல்லுங்கள். ரொம்ப உபயோகமான புஸ்தகம்.

7 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற