பக்தி எனும் கொண்டாட்டம்

ஹரே கிருஷ்ணா இயக்கத்தில் இருக்கும் என் நண்பர் சுவாமி சுதாமா தாஸின் அழைப்பின்பேரில் பிரபுபாதா குறித்த டாகுமெண்டரி படம் ஒன்றைக் காண திருசூலம் பிவிஆருக்குப் போயிருந்தேன். [இந்தத் திரையரங்கைப் பல வருடங்களாகக் கட்டிக்கொண்டிருந்தது தெரியும். எப்போது திறந்தார்கள் என்று தெரியவில்லை. நன்றாகவே இருக்கிறது.]

பிரபுபாதா, தனது எழுபது வயதுவரை இந்தியாவில் வாழ்ந்து முடித்துவிட்டு அதன்பின் துறவறம் மேற்கொண்டு கிருஷ்ண பக்தி இயக்கத்தைப் பரப்ப அமெரிக்காவுக்குச் சென்றவர். அதன்பின் சுமார் பன்னிரண்டு ஆண்டுகள் உலகில் அவர் சுற்றாத ஊரே இல்லை.

பிரபுபாதாவைக் குறித்த இந்த ஆவணப்படம், பெரும்பாலும் அமெரிக்காவில் அவர் செய்தவற்றைச் சொல்கிறது. அறுபதுகளின் மத்தியில் அமெரிக்க இளைஞர்களிடையே மிதமிஞ்சியிருந்த விரக்தி உணர்வு, ஹிப்பி வாழ்க்கை முறை, இரைச்சல் இசை, போதைப் பழக்கம் போன்றவை உலக அளவில் செய்தியாகிக்கொண்டிருந்த சமயத்தில் ஹரே கிருஷ்ணா இயக்கத்தை அங்கே கொண்டு சென்றவர் பிரபுபாதா. எளிய சைவ உணவு, கிருஷ்ண நாம சங்கீர்த்தனம், நடனம் என்று அவர் காட்டிய மாற்றுப்பாதை ஹிப்பிகளுக்குப் பிடித்தது. பீட்டில்ஸ் இசைக்குழுவினர் மூலம் ஹரே கிருஷ்ண சங்கீதம் உலகம் முழுதும் கொண்டு செல்லப்பட்டது.

கீழைத் தத்துவங்கள் குறித்தும் ஹிந்து மதம் குறித்தும் அறிவதில் மேற்கத்தியர்களுக்கு இருந்த ஆர்வம் ஒருபுறம் என்றால், வறட்டு சித்தாந்தங்களின் பாதையில் ஏறிவிடாமல், பக்தி யோகமும் நாமசங்கீர்த்தனமுமே  இறைவனை நெருங்க எளிய வழி என்று சொன்னதுதான் ஹரே கிருஷ்ண இயக்கத்தின் வெற்றிக்குக் காரணம்.

பிரபுபாதாவின் முதல் தலைமுறை சீடர்களின் நேரடி அனுபவங்களும் அமெரிக்காவில் அன்று ஹரே கிருஷ்ணாவுக்கு எதிராகக் கொண்டு வரப் பட்ட வழக்கு விவகாரங்களைப் பற்றிய தெளிவான தகவல் தொகுப்பும் இந்த ஆவணப்படத்தின் மிக முக்கியமான அம்சங்கள்.

என்னைப் பொறுத்தவரை பக்தி உணர்வை ஒரு பெரும் கொண்டாட்டமாக்கியதே ஹரே கிருஷ்ணாவின் பெரும் சாதனை என்பேன். இன மொழி மதம் கடந்த ஒரு பேருணர்வாக அது திரண்டெழ இந்த இயக்கம் செய்தது போல் வேறொரு இயக்கம் செய்ததில்லை. [இதையேதான் முற்றிலும் எதிர்நிலையில் இருந்து ரஜனீஷ் செய்தார்]

சில நாள்களுக்கு முன்னர் என் உறவினர் ஒருவர் [அமெரிக்காவில் வசிப்பவர்] ஹரே கிருஷ்ண இயக்கத்தின் தேவை அங்கே எத்தனை இன்றியமையாததாக இருக்கிறது என்பதைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார். தொழில் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் புலம் பெயர்ந்து போய் நிரந்தரமாகத் தங்கிவிடுபவர்கள், காலப்போக்கில் கொஞ்சமாவது இந்திய வாசனையை மிச்சம் வைத்துக்கொள்ள ஹரே கிருஷ்ணா மட்டும்தான் இப்போது உதவுகிறது என்று சொன்னார்.

அவர் பிரசாத பட்சணங்களின் வாசனையைச் சொல்லியிருக்கமாட்டார் என்று நம்புகிறேன்.

Buy Kindle EBooks

அச்சுப் புத்தகங்கள் வாங்க

புதியவை

இதுவரை

மின்னஞ்சலில் வாசிக்க

RSS Feeds

Links