அடுத்தது என்ன?

மே 2006ல் தொடங்கியது. முழுதாக இரு வருடங்கள் ஓடிவிட்டன. ரிப்போர்ட்டரில் என்னுடைய ‘மாயவலை’ தற்சமயம் நிறைவடைந்ததை அடுத்து [தினத்தந்திக்கு அடுத்தபடி செய்திகளை முந்தித்தருபவருக்கு நன்றி.] இரண்டு கேள்விகளுக்கு தினசரி குறைந்தது பத்து முறையாவது பதிலெழுதிக்கொண்டிருக்கிறேன் / சொல்லிக்கொண்டிருக்கிறேன்.

முதல் கேள்வி, இது எப்போது நூலாக வரும்?

இதற்கான பதில் : வந்துவிட்டது அல்லது வராது என்பதுதான்.

உண்மையில் மாயவலையை ஒரே தொகுப்பு நூலாகக் கொண்டுவருவது என்பது நடைமுறை சாத்தியங்களைக் கடந்தது. சுமார் 1500 முதல் 1800 பக்கங்கள் வரை இது வரக்கூடும். நூலின் கட்டமைப்புக்குள் அடங்காத எண்ணிக்கை இது.

எனவே முழுத் தொகுப்பாக இது வருவதற்கான சாத்தியம் அநேகமாக இல்லை.

ஆனால் மாயவலையில் இடம்பெற்ற ஒவ்வொரு இயக்கம் பற்றிய அத்தியாயங்களும் தனித்தனி நூல்களாக வெளிவந்திருக்கின்றன. அல் காயிதா தொடங்கி தாலிபன் வரை ஒன்பது முக்கியமான இயக்கங்கள் குறித்து இத்தொடரில் விவாதித்திருக்கிறேன். ஒவ்வொன்றுக்கும் போதுமான அளவு அத்தியாயங்கள் அளித்து விரிவாகவே அறிமுகம் செய்திருப்பதாக நம்புகிறேன்.

எனவே இந்த ஒன்பது பகுதிகளையும் தனித்தனி நூல்களாகவே கொண்டுவரலாம் என்று முடிவு செய்து, அவ்வண்ணமே செய்திருக்கிறேன். நேற்றைக்கு நிறைவடைந்த தாலிபன் குறித்த பகுதி மட்டும் இப்போதுதான் அச்சுக்குச் சென்றுள்ளது. இன்னும் ஒரு மாதத்துக்குள் அதுவும் வந்துவிடும்.

மாயவலை தொடரில் இடம்பெற்று, நூல் வடிவம் பெற்றுள்ளவை இவை:

* அல் காயிதா
* ஹிஸ்புல்லா [லெபனான்] * ஈ.டி.ஏ. [ஸ்பெயின்] * லஷ்கர் ஏ தொய்பா [பாகிஸ்தான்] * ஓம் ஷின்ரிக்கியோ [ஜப்பான்] * ஜெமா இஸ்லாமியா [இந்தோனேஷியா] * மெடேலின் கார்ட்டல் [ கொலம்பிய போதைக் கடத்தல் குழு] * தாலிபன் [ஆப்கனிஸ்தான்]

ஹமாஸ் குறித்த என் பகுதிகளை மட்டும் நூலாக்கவில்லை. நான் ரிப்போர்ட்டரில் இதனை எழுதிக்கொண்டிருந்த அதே காலகட்டத்தில் என். சொக்கன் எழுதி கிழக்கு வெளியிட்ட ஹமாஸ் குறித்த புத்தகம் அதனளவில் சிறப்பாகவே இருக்கிறபடியால் என்னுடையதை நிறுத்திவைத்தேன்.

முதல் கேள்விக்கான பதில் இங்கு முற்றும். இரண்டாவது கேள்வி – அடுத்தது என்ன?

உண்மையில் இந்த இரண்டு வருடங்களாக இதற்காகப் படித்து, குறிப்பெடுத்து, பலருடன் விவாதித்து, வாரம் இரு அத்தியாயங்கள் எழுதிக்கொண்டே இருந்ததில் மிகவும் களைப்பாக உள்ளது. சிறிதுகாலம் இம்மாதிரியான கனரகத் தொடர்கள் ஏதும் எழுதாமலிருக்கலாம் என்று தோன்றுகிறது. கல்கி தொடரும் கூட புத்துணர்ச்சி கொள்வதற்காகவே.

இவ்வருடம் பத்திரிகைத் தொடர்களைச் சற்று நிறுத்திவைத்துவிட்டு திரைப்படம், தொலைக்காட்சி என்று மாற்றுப் பாதையில் எழுதிப்பார்க்கத் திட்டம். தொடராக அல்லாமல், நேரடிப் புத்தகங்களாக இரண்டு முக்கியமான விஷயங்களை எழுதவும் திட்டமிட்டு ஆய்வு செய்து வருகிறேன்.

விவரங்கள் விரைவில் இங்கே அல்லது இங்கே அல்லது இங்கேயே!

Buy Kindle EBooks

அச்சுப் புத்தகங்கள் வாங்க

புதியவை

இதுவரை

மின்னஞ்சலில் வாசிக்க

RSS Feeds

Links

Some of the links provided in this website are affiliate links.